Feb 23, 2014

ஷேக் தகியுதீன் நபஹானி(ரஹ்) அவர்கள் ஃபலஸ்தீனில் இருந்தபோது நடைபெற்ற முக்கிய சம்பவம்

 
காலனி ஆதிக்க பிரிட்டிஷ் தளபதியாக இருந்த க்ளப் பாஷா என்பவர் தன்னுடைய தூதர் ஒருவரை  ஷேக் தகியுதீன் நபஹானி (ரஹ்) அவர்களை வென்றெடுக்க அனுப்பிவைத்தான்.அப்போது நடைபெற்ற உரையாடலை அந்த தூதர் தன்னுடைய நண்பர் அபு காஜி(ஃபத்ஹி  சலீம்)அவர்களிடம் கூறியதை இங்கு தருகிறோம்.
 ஷேக் தகியுதின் நபஹானி(ரஹ்) அவர்களின் ஆபத்தை உணர்ந்த ஆங்கில தளபதி க்ளப் பாஷா என்னை ஒரு செய்தியுடன் அவர்களிடம் அனுப்பி வைத்தான்.அந்த செய்தியில், ஷேக் தகியுதின்(ரஹ்) அவர்களை புகழ்ந்தும், தங்களுடன் ஒத்துழைக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.மேலும் அவ்வாறு ஒத்துழைத்தால்  பிரிட்டிஷ் அரசு  மூலம் அவர் பெறக்கூடிய உலக ஆதாயங்களை குறித்தும் கூறப்பட்டிருந்தது.
அந்த தூதர் மேலும் கூறியதாவது:-ஷேக் தகியுதின் நபஹானி(ரஹ்) அவர்கள், அனைத்தும் உள்ளடங்குமா என்று என்னிடம் கேட்டார் …. ஆம்! என்று நான் பதிலளித்தேன்.
 
அப்போது ஷேக் தகியுதின் நபஹானி(ரஹ்) அவர்கள்  இவ்வாறு  கூறினார்கள்:-
 
ஆங்கிலேயர்கள்தான் நாங்கள் இந்த நிலைக்கு கீழிறங்க  காரணமானவர்கள்; அவர்கள்தான் ஒன்றாக இருந்த எங்கள் நிலப்பகுதியை  கூறுபோட்டு  தங்களின் ஏஜெண்டுகளை ஆட்சியாளர்களாக அமர்த்தியவர்கள்.”
 
அந்த தூதர் மேலும் கூறியதாவது:- ஷேக் அவர்கள் நீண்ட நேரம் என்னிடம் உரையாடினார்கள். அவை, என் வாழ்நாளில் இதுவரை கேட்காதவை. ஷேக் தகியுதின் நபஹானி(ரஹ்) அவர்கள் கூறிய விஷயங்கள் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.
ஷேக் தகியுதின் நபஹானி (ரஹ்) அவர்கள் தன்னுடைய பேச்சை  இவ்வாறு முடித்தார்கள்..
 
சகோதரரே! உம்மை  அனுப்பியவரிடம் இவ்வாறு கூறுங்கள்:- எனக்கு (வாழ்வதற்கு) ஆரஞ்சு பழத்தின் விதைகளும் ரொட்டித்துண்டின் துகள்களும் போதுமானது; இவை ஆங்கிலேயர்கள் கொடுக்கும் அனைத்து பொருட்களைவிட எனக்கு மேலானது.
 
அந்த தூதர் மேலும் கூறினார்:-  இந்த உரை என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஷேக் அவர்களின் மகத்துவத்தையும், அறிவையும் உம்மத்தின் மீது கொண்டுள்ள விசுவாசத்தையும் நேரில் கண்டு வியந்தேன்.
நான் க்ளப் பாஷாவிடம் திரும்பிசென்று  ஷேக் கூறியதை அப்படியே தெரிவித்தேன்.
 
ஷேக் தகியுதின் நபஹானி(ரஹ்)அவர்கள் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டார் என்பதை உணர்ந்து கொண்ட க்ளப் பாஷா, அவர்களை தீர்த்துக்  கட்டுவதற்காக ஒரு விருந்தை ஏற்பாடு செய்தான். அதற்கு அழைப்புவிடுக்க  என்னை ஏவினான்.. நான் இந்த சதித்திட்டத்தை ஷேக் அவர்களிடம் கூறினேன். அவர் அந்த விருந்தை புறக்கணித்தார். அதை நான் க்ளப் பாஷாவிடம் கூறியபோது, ஷேக் தகியுதின் நபஹானி(ரஹ்) அவர்கள்  அல்குத்ஸில் வாழ்ந்துகொண்டிருந்த வீட்டிலேயே வீட்டுக் காவலில் வைக்குமாறு  உத்தரவிட்டான். நான் ஷேக் அவர்களிடம்  கொண்ட நெருக்கத்தினால், ரகசியமாக தகவல்  கூறி வெளியேறுமாறு  பரிந்துரைத்தேன். மேலும் ஷேக் தகியுதின் நபஹானி (ரஹ்) அவர்களை சிரிய  எல்லையில் எனது காரில் கொண்டு  விட்டு வந்தேன்.
 
அபு காஜியிடம்  அந்த தூதர் தனது பெயரை மற்றவர்களிடம் கூற வேண்டாம் என்று கேட்டு கொண்டார்.எனக்கு அவர் கூறியதில் எந்த சந்தேகமும் கிடையாது என்று அபு காஜி என்னிடம் கூறினார்.
 
அல்லாஹ்வின் கருணை ஷேக் தகியுதின் நபஹானி(ரஹ்) அவர்கள் மீது உண்டாகட்டும்! அல்லாஹ்வின் மீது எந்த அளவிற்கு  பயபக்தியுடன் வாழ்ந்துள்ளார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்றாகும்.
 
    By Abdul Khaaliq ‘Abdoun