Showing posts with label செவ்விந்திய தலைவன். Show all posts
Showing posts with label செவ்விந்திய தலைவன். Show all posts

Sep 16, 2015

கௌரவக் காட்டு மிராண்டிகளுக்கு செவ்விந்திய தலைவன் 'சியாட்டலின் ' அறிவுரை!

கிறிஸ்டோபர் கொலம்பஸ் கி .பி 1492 ஆம் ஆண்டு அமெரிக்கக் கண்டத்தின் ஹிஸ்பானியோலா தீவில் வந்து இறங்கியதோ ,அமெரிக்கோ வெஸ்புஸி பின் அமெரிக்காவை கண்டு பிடித்ததோ பற்றிய செய்திகளை சொல்லும் அளவு அங்கிருந்த சுதேசிகளான செவ்விந்திய சமூகத்துக்கு நிகழ்ந்த அநீதம் மிக்க இனத்துடைப்பு வரலாறு பெரிதாக பேசப்படுவதில்லை .

தங்களை நாகரீகம் மிக்கவர்களாக போற்றிக் கொள்ளும் மேற்குலகு ஒரு அப்பட்டமான மனித வேட்டையின் இரத்தச் சுவடுகள் மீதுதான் அமெரிக்கா எனும் ஏகாதிபத்திய நாகரீகத்தை வடிவமைத்துள்ளது.என்ற உண்மை புரியப்பட கீழ்வரும் வரலாற்று சம்பவம் சிறந்த ஆதாரமாகிறது .

நிர்ப்பந்த சமரசம் எனும் அடிமைத்துவ அரசியல் மீது கவர்ச்சிகரமான ஈர்ப்பை ஏற்படுத்தி தனது நன்மைகளையும் ,இலாபங்களையும் அடைவதே முதலாளித்துவ பொறிமுறை. இந்த சுயநலவாதம் தான் இன்றும் கூட உலகை ஆளும் சாபக்கேடாகும் .ஒரு சித்தாந்த மாற்றத்தை உலகம் அவசியம் வேண்டி நிற்கிறது .அதை உணர்த்துகிறான் ஒரு செவ்விந்திய தலைவன் 'சியாட்டல் 'எனும் அமெரிக்க சுதேசி !

கி ,பி 1853 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பிராங்ளின் பியர்ஸ் என்பவர் தனது உயர் குடி ஆதிக்க குடிமக்களால் சுதேசிகளான செவ்விந்தியர் படும் துன்பங்களை கண்டு கவலை கொள்கிறார் ! ஆடு நனையும் போது அழும் ஓநாய் போல நிலைமையை வெறுமனே பார்த்துக் கொண்டிராமல் ஒரு கௌரவமான ஓநாயாக ஒரு தீர்வுத் திட்டத்தை கடிதம் மூலம் செவ்விந்திய தலைவனான 'சியாட்டலுக்கு 'அனுப்பி வைக்கிறார் .

அற்புதமான அந்த சமரச அழைப்பின் தீர்ப்பு இதுதான் ." நீங்கள் உங்கள் நிலங்களை வெள்ளையர்களுக்கு விற்று விட்டு சென்று விடுங்கள்" ! என்பதே அந்த தீர்ப்பாக இருந்தது . இன்னொரு புறத்தால் இதை ஒரு மிரட்டலாக கூட சொல்ல முடியும் . இராணுவ தொழில் நுட்பம் ,ஆயுத வலிமை போன்றவற்றில் அனுபவம் இல்லாத அந்த செவ்விந்தியர்கள் இந்த நிர்ப்பந்த சமரசத்தில் வேறு வழியின்றி உடன்பட்டுப் போகிறார்கள் .

பதில் கடிதத்தை அனுப்பும் முன் அந்த சமூகத்தின் தலைவனான 'சியாட்டல்' தன் மக்கள் முன் ஒரு வரலாற்று பிரசித்தம் மிக்க உரையை நிகழ்த்துகிறான் .அந்த உரையின் பகுதிகள் சில இதோ !

"வொசிங்க்டனில் வாழும் வெள்ளையர்களின் தலைவர் எமது நிலங்களை பணம் கொடுத்து வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் , அத்துடன் எம்முடனான (சுரண்டல் ) நட்பையும் அவர் வெளிப்படுத்தி உள்ளார் . அவரின் வேண்டுகோளின் பக்கம் எமது கவனத்தை திருப்பி உள்ளோம் .

 "எமது நிலத்தை நாம் விற்காவிடின் ,அவர்கள் ஆயுத பலத்தால் அதை அபகரிப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எனினும் நீலநிற வானத்தையும் வளமான நிலத்தையும் பணம் கொடுத்து வாங்க முடியுமா !?இதனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை !?

" காற்றின் தூய்மையும் , நீரின் குளிர்மையும் எம்ம்முடையதல்ல .அவ்வாறாயின் அதனை எவ்வாறு விலை கொடுத்து வாங்க முடியும் !?..........

இப்படி இயற்கையை வர்ணித்து அற்புதமாக ஒரு நீண்ட உரையை தொடுத்து விட்டு பதில் கடிதம் அனுப்புகிறார் அதில் இவ்வாறும் கூறுகிறார் ."

... எதோ ஒரு காரணத்தால் வெள்ளையர்களை இங்கு அழைத்து வந்து எம்மை வெற்றி கொண்டு அவர்களது ஆதிக்கத்தை பரப்பிட இடமளித்த இறைவனின் வல்லமையால் நீங்களும் அழிவுறக் கூடும் !

மனிதனின் விதி தீர்மானிக்கப் படுவது இன்னும் பரம இரகசியமாகவே உள்ளது ." இந்த உரையும் ,பதில் கடிதமும் தாங்களே நாகரீகத்தின் உச்சத்தில் உள்ளோம் என்று மார்தட்டிக் கொள்ளும் கௌரவக் காட்டுமிராண்டிகள் குறித்த ஒரு தெளிவான விளக்கமாகவே உள்ளது .


நன்றி
ஹந்தக் களம்