Showing posts with label சோமாலிய. Show all posts
Showing posts with label சோமாலிய. Show all posts

Jun 19, 2016

சோமாலிய சிறுமிக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலக ஓநாய்கள் - சினிமா விமர்சனம்

சினிமா எனும் கலை ஒரு வகையில் அரசியல் பிரச்சாரம் தான். ஹாலிவூட் திரைப்படங்கள், மேற்கத்திய அரசியலை உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உதவுகின்றன. தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் Eye in the Sky  எனும் திரைப்படம், அமெரிக்காவின் ட்ரோன் யுத்தத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின்றது.

தென்னாபிரிக்க டைரக்டர் Gavin Hood இந்தத் திரைப்படத்தை எடுத்துள்ளார். அவரும் அதில் ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படம் தென்னாபிரிக்காவில் படமாக்கப் பட்டாலும், ஒரு பிரிட்டிஷ் தயாரிப்பாக இருக்கலாம். 

எது எப்படி இருப்பினும், இந்தத்  திரைப்படத்தின் நோக்கம் அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல்களுக்கு பிரிட்டன் வக்காலத்து வாங்குவதாக உள்ளது.

இது தான் கதைச் சுருக்கம்: 

கென்யாவில் அல்ஷஹாப் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கதை நடக்கிறது. (அது சோமாலியாவாகவும் இருக்கலாம்) அங்கே ஒரு அமெரிக்க பிரஜையும், இரண்டு பிரிட்டிஷ் பிரஜைகளும் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டுகின்றனர். அதில் ஒருவர் மதம் மாறிய வெள்ளையின ஆங்கிலேய பெண்மணி, மற்றய இருவரும் சோமாலிய பூர்வீகம் கொண்ட இளைஞர்கள்.

கென்யா இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்து இயங்கும், பிரிட்டிஷ் படையினர், அவர்களை ட்ரோன் மூலம் தாக்கியழிக்க திட்டமிடுகின்றனர். சோமாலிய உளவாளிகளை வைத்து தகவல் திரட்டுகின்றனர். கமெரா பொருத்திய இயந்திரப் பறவைகளை பறக்க விட்டு மறைவிடங்களை கண்காணிக்கின்றனர்.

எதிர்பாராத விதமாக, சதித்திட்டம் தீட்டும் தீவிரவாத குழுவினர் தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகில் ஒரு சிறுமி இருக்கிறாள். அந்த வீட்டின் மதிலருகில், தெருவில் கடை போட்டு, பாண் (பிரெட்) விற்றுக் கொண்டிருக்கிறாள்.

ட்ரோன் தாக்குதலுக்கு தயாராகும் பிரிட்டிஷ் படை அதிகாரிகள், தமது நாட்டு அமைச்சர்கள் மட்டுமல்லாது, அமெரிக்க அமைச்சர்களையும் தொடர்பு கொண்டு அனுமதி கோருகின்றனர். "அமெரிக்க பிரஜையாக இருந்தாலும் அல்ஷஹாப் இயக்கத்தில் சேர்ந்து விட்டால் எங்கள் எதிரி..." என்று அமெரிக்க அமைச்சர் கூறுகின்றார்.

சோமாலிய உளவாளி இயக்கிக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறிய இயந்திர வண்டு ஒன்றில் வீடியோக் கமெரா பொருத்தப் பட்டுள்ளது. அதன் வீடியோவில் இருந்து, அல்ஷஹாப் உறுப்பினர்கள் அந்த வீட்டிற்குள் தற்கொலைத் தாக்குதலுக்கு திட்டமிடுவது தெரிய வருகின்றது. பிரிட்டிஷ் படை அதிகாரிகள், அதைக் காட்டி ட்ரோன் தாக்குதலை நியாயப் படுத்துகின்றனர்.

"தற்கொலைக் குண்டுதாரி வெளியே போனால் ஏராளமான பொது மக்களை கொல்லப் போகிறான். அதைத் தடுத்து நிறுத்தும் முயற்சியாக, ட்ரோன் தாக்குதலில் ஒரு சிறுமி கொல்லப் பட்டாலும் பரவாயில்லை" என்கின்றனர். அப்படி இருந்தும் பிரிட்டிஷ் அமைச்சர் அனுமதி தர மறுக்கிறார். "அல்ஷஹாப் தாக்குதலில் ஏராளமான  பொதுமக்கள் கொல்லப்  பட்டால், அது எமக்கு பிரச்சார  வெற்றி. அதே  நேரம், எமது ட்ரோன் தாக்குதலில் சிறுமி கொல்லப் பட்டால், அது அல்ஷஹாப் பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றி" என்று வினோதமான காரணம் ஒன்றைக்  கூறுகின்றார்.

கடைசியில் எப்படியோ, அமைச்சர்கள் அனைவரையும் ஒத்துக் கொள்ள வைத்து, மேலதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தாலும்,  ட்ரோன் விமானத்தை இயக்கிக் கொண்டிருக்கும் படைவீரர்கள் குண்டு வீசத் தயங்குகின்றனர். அதற்குக் காரணம் "அந்த இடத்தில் இருக்கும் அப்பாவி சிறுமியும் கொல்லப் பட்டு விடுவாள்"!

இதற்கிடையே, அவர்களது உத்தரவின் படி சிறுமியிடம் செல்லும் சோமாலிய உளவாளி, அவளிடம் இருந்த பாண் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு அனுப்பப் பார்க்கிறான். ஆனால், தற்செயலாக அந்த இடத்திற்கு வரும் அல்ஷஹாப் போராளிகள், அவன் "கென்யா இராணுவத்திற்கு காட்டிக் கொடுப்பவன்" என்பதை கண்டுபிடித்து விடுகின்றனர். அதனால் சிறுமியை காப்பாற்றும் திட்டம் பாழாகின்றது.

இருப்பினும், குண்டு வீச்சின் தாக்குதல் திறனை குறைக்கலாம் என திட்டமிடுகின்றனர். இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாது என்ற நிலையில், அல்ஷஹாப் சதிகாரர்கள் இருக்கும் வீட்டின் மீது ட்ரோன் குண்டு வீசுகின்றது. அந்தத் தாக்குதலில் படுகாயமுற்ற சிறுமி, மருத்துவமனையில் இறக்கிறாள். வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்தாலும், சம்பந்தப் பட்ட எல்லோரும் தாக்குதலில் பலியான சிறுமிக்காக அழுகிறார்கள்! அத்துடன் படம் முடிகின்றது.

படம் முழுவதும் ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, அரசுத் தலைவர்களும், இராணுவத் தளபதிகளும் மனம் இரங்குவது நம்பும் படியாக இல்லை. ட்ரோன் தாக்குதல்களில் குழந்தைகள் கொல்லப் பட்ட செய்திகளை கேள்விப் பட்டவர்களுக்கு, அது வெறும் பாசாங்கு. சினிமா எமக்குக் காட்டுவது உண்மையான கண்ணீர் அல்ல, அது நீலிக் கண்ணீர். ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை இது தான்.

அது சினிமாப் படம். நிஜ வாழ்வில் உலகம் எப்படி இருக்கின்றது? அமெரிக்க படையினர், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோமாலியா, யேமன் போன்ற பல நாடுகளில் இன்று வரைக்கும் ட்ரோன் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் வருவது போலில்லாமல், பல தாக்குதல்கள் இரவு நேரத்தில் நடக்கின்றன. இருட்டுக்குள் துல்லியமாகப் பார்க்கும் கமெரா பொருத்தப் பட்டாலும், ஆயுதபாணிகளுக்கும், பொது மக்களுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.

பெரும்பாலும் ஆயுதபாணி இயக்கங்களின் முக்கிய தலைவர்களை குறி வைத்துக் கொல்வதற்கு ட்ரோன்கள் பயன்படுகின்றன. எல்லா நேரத்திலும் உளவுத் தகவல்கள் சரியாக அமைந்து விடுவதில்லை. எல்லா நேரத்திலும் குண்டுகள் ஆயுதபாணிகளை மட்டும் கொல்வதில்லை. பொது மக்களின் வீடுகள் மீதும் குண்டுகள் போடப் பட்டுள்ளன. தெருவில் சென்ற பொதுமக்களும் கொல்லப் பட்டுள்ளனர். அதில் பிள்ளைகளும் அடங்குவார்கள். 

பொது மக்களின் இழப்புகளை ஏற்றுக் கொள்ளும் அமெரிக்க அரசு, ஒப்பீட்டளவில் மிகக் குறைவு என்று சொல்கின்றது. ஆனால், ட்ரோன் தாக்குதல் நடத்திய படையினர் தாம் அப்பாவிப் பொது மக்களை, அதிலும் குழந்தைகளையும் கொன்ற குற்றவுணர்ச்சி காரணமாக வருந்துகின்றனர். ஆனால், எல்லோரும் அப்படியான மனோபாவத்துடன் இருப்பதில்லை. 

"பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டி விட்டோம்" என்று குதூகலிப்பவர்கள் தான் அதிகம். குறிப்பாக, அரச மட்டத்தில் யாரும் வருந்துவதில்லை. பொதுமக்கள், குழந்தைகள் கொல்லப் பட்டதாக தகவல் வந்தாலும், தாங்கள் பயங்கரவாதிகளை மட்டுமே கொன்றோம் என்று சாதிப்பார்கள். சினிமாவில் காட்டுவது மாதிரி அவர்கள் யாரும் மனச்சாட்சியுடன் நடப்பதில்லை. பொதுமக்களின் உயிரிழப்புகள் குறித்து என்றைக்குமே கவலைப் பட்டதில்லை. 
 
 
Khaibar Thalam