ஈடிணையற்ற இறைவா!

(மூலம்: ஆயத்துல் குர்ஸி /அல் குர்ஆன்: 2:255)
அல்லாஹ்!
ஊனுருகி, உடல் குறுகி,
உயிரொடுங்கி, உளம் நடுங்கி,
வணங்கிட ஒருவன்...
அவனைத் தவிர யாருமில்லை !

உயிர்த்திருக்கும் அவன்
என்றும் நிலைத்திருப்பவன்;
உணர்வுகளில் நித்தம்
மிகைத்திருப்பவன்!

சிறு துயிலோ
மடியோ
மதியழிக்கும் மயக்கமோ;
சுணக்கமோ
சுயமிழக்கும் சோம்பலோ
அவனை அணுகா!

வானங்களில், பூமியினில்
வளி மண்டல நிரப்பிடத்தில்
விண்வெளியில், வெற்றிடத்தில்
சிந்தைக்கு எட்டாத
அண்ட சராசரத்தில்
உள்ளவை யாவும்
உரியன அவனுக்கே!

அவன் ...
ஆட்சி அதிகாரத்தில்
அகிலம் காக்கும் ஆளுமையில்
படைப்பதில், பரிபாலிப்பதில்
விதிப்பதில், கொடுப்பதில்
காப்பதில், கற்பிப்பதில்
அவன் அனுமதியின்றி
பரிந்துரை செய்வோர்
பாருலகில், வேறுலகில் யாருளரோ?

ஒவ்வோர் உயிரும்
உருவாகு முன்னரும்
உயிர் வாழ்ந்த பின்னரும்
இரண்டின்
இடைப்பட்ட
எல்லா அசைவிலும்
யாவையுமறிந்த
ஞானமிக்கவன்

கணித்தறிந்துவிட முடியாத
அவன் தன்
அளப்பரிய ஞானத்திலிருந்து
அணுவளவேனும் யாரும்
அவன் நாட்டமின்றி
அறிந்திடல் இயலாது!

எப்பரிமாணம் கொண்டும்
எடுத்தியம்பிட இயலாத
எல்லைகளுள் அடங்காத
இறையாசனம்
வானங்களுக்கும் பூமிக்குமாய்
வியாபித்திருப்பதாகும்!

வானங்களும் பூமியும்
அவ்விரண்டினையும்
இன்னும்
எவருக்கும் எட்டாத
ஏகாந்த இருப்புகளையும்
எடுத்தாள்வது
எம்மிறையாம் அவனுக்கு
யாதொரு பொருட்டுமில்லை
எந்தவொரு சிரமமுமில்லை

அவன் ...
கற்பனைகளுக்கோ
காட்சிகளுக்கோ எட்டா
உயர்ந்தவன்;
கணக்கீடுகளுக்குள்ளோ குறிப்பேடுகளுக்குள்ளோ அடங்காப்
புகழுக்குரிய அவன்...
மாண்பு மிக்கவன்!

-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்