Sep 3, 2015

ஹுனைன் யுத்தம்

காலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06

ஹுனைன் யுத்தம்

ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதாஸ் மலைக்கருகில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஹவாஸான் என்ற போர்க்குணம் படைத்த குலத்தவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இந்தப் பகுதியில் இவர்களின் கிளைக் குலத்தவர்கள் பரவி வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் மிகச் சிறந்த வில் வித்தையில் கெட்டிக்காரர்களும் கூட. இவர்கள் ஆரம்பம் முதலே, முஸ்லிம்களை நோக்கி எதிர்த் தாக்குதல் தொடுப்பதற்கு முயற்சி செய்து வந்தவர்கள். மக்கா வெற்றிக்குப் பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இந்தக் குலத்தவர்களது நடவடிக்கைகளுக்குப் பதில் நடவடிக்கை எடுக்க விரும்பினார்கள்.

எனவே, இந்தக் குலத்தவர்களுக்கு எதிரான இந்தப் போரில் கலந்து கொள்வதற்காக பத்தாயிரம் பேர் கொண்ட படை ஒன்று மதீனாவில் இருந்து வந்திறங்கியது. இன்னும் மக்காவில் இருந்து இரண்டாயிரம் படைவீரர்கள் சேர்ந்து கொள்ள, ஆக மொத்தம் 12 ஆயிரம் படைவீரர்களுடன் ஹுனைனை நோக்கி இஸ்லாமியப் படை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் நகர்ந்தது.

இந்தப் படையின் பல பிரிவுகளுக்கு பல தலைவர்கள் நியமிக்கப்பட்டார்கள். இதில் முஹாஜிர்களுக்குத் தலைவராக உமர் (ரழி) அவர்களும், அவ்ஸ் குலத்தைச் சேர்ந்த அஸீத் பின் ஹீஸைர் (ரழி) அவர்கள் கொடியை ஏந்திக் கொள்பவராகவும், சஅத் பின் இபாதா (ரழி) அவர்கள் கஸ்ரஜ் குலத்தவர்களுக்கும், இன்னும் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் பனூ சலீம் குலத்தவர்களுக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தலைமையில், ஹுனைன் பெருவெளியை, ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் 10 ஆம் நாள் அன்று அடைந்தார்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்களது தலைமையில் அனுப்பப்பட்ட படை முன்னணிப் படையாக அனுப்பப்பட்டது. எதிரிகளின் படையோ வெறும் நான்காயிரம் மட்டுமே இருந்தது. இதனைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள், நிச்சயம் நாம் வெற்றி பெற்று விடுவோம் என்ற உறுதியான நம்பிக்கைக்கு வந்து விட்டார்கள். ஆனால், இதற்கு முன் நடைபெற்ற பல போர்களில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த போதிலும், இறைவனின் உதவியினால் தான் நாம் அந்த வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடிந்தது என்ற நம்பிக்கைக்கு அவர்கள் வராமல், நாம் எண்ணிக்கையில் அதிமாக உள்ளதால் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீருவோம் என்ற தவறான முடிவுக்கு வந்ததன் காரணமாக, இறைவன் அங்கு சோதனையை அவர்களுக்கு ஏற்படுத்தினான். எளிதாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய வெற்றியை மிகவும் கடினமாக மாற்றிக் காட்டினான். இதனைத் தான் இறைமறைக்குர்ஆன் இவ்வாறு விளக்குகின்றது.

நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் பல போர்க்களங்களில் உதவி செய்திருக்கின்றான். (நினைவு கூறுங்கள்). ஆனால் ஹுனைன் (போர் நடந்த) அன்று. உங்களைப் பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவில்லை, (மிகவும்) பரந்த பூமி உங்களுக்கு (அப்போது) சுருக்கமாகி விட்டது. அன்றியும் நீங்கள் புறங்காட்டிப் பின்வாங்கலானீர்கள். பின்னர் அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், முஃமின்கள் மீதும் தன்னுடைய சாந்தியை இறக்கியருளினான். நீங்கள் பார்க்க முடியாப் படைகளையும் இறக்கி வைத்தான். (அதன் மூலம்) நிராகரிப்போரை வேதனைக்குள்ளாக்கினான் - இன்னும் இதுவே நிராகரிப்போரின் கூலியாகும். (9:25-26)

பனூ தக்கீஃப் மற்றும் ஹவாஸான் ஆகிய குலத்தவர்கள் பதுங்கி இருந்து கொண்டு தாக்குதலுக்குத் தயாராக இருந்த அவர்கள், காலித் பின் வலீத் (ரழி) அவர்களது தலைமையில் வரும் படைவீரர்கள் இவர்களது எல்லைக்குள் நுழைந்ததும், அம்பு மழையைப் பொழிய ஆரம்பித்தார்கள். நாம் வேரறுக்கப்பட்டு விட்டோம் என்று எண்ணுமளவுக்கு இறைநிராகரிப்பாளர்களின் தாக்குதல்கள் இருந்தன, இன்னும், இந்தத் தாக்குதல்களைச் சமாளிக்க  இயலாத முஸ்லிம்கள், எதிர்த்தாக்குதலைத் தொடுப்பதை விட்டு விட்டு விரண்டோட ஆரம்பித்தார்கள். குதிரைகளும், ஒட்டகங்களும் எந்தப் பக்கம் திரும்பினவோ, அந்தப் பக்கமாக கிடைத்த வழிகளை பயன்படுத்தி ஓட்டமெடுக்க ஆரம்பித்தன. எங்கும் மரணக் கூச்சல் ஆர்ப்பரித்தது. இன்னும் ஒரு சில முஸ்லிம் வீரர்கள் தான் தங்களது தலைமைக்குக் கட்டுப்பட்டு, நிலைகுலையாமல் தங்களுடைய தலைமைகளுடன் களத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஒட்டு மொத்த தளபதியாகச் சென்றிந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இப்பொழுது முஸ்லிம்களைப் பார்த்த அறைகூவல் விடுக்கலானார்கள் :

நிச்சயமாக சந்தேகமின்றி, நான் இறைத்தூதராவேன். நான் அப்துல் முத்தலிப் அவர்களின் மகனுமாவேன் என்று கூறி விட்டு,

உங்களது கண்களால் என்னைப் பாருங்கள், உங்களுக்கு முன்பாக நான் நின்று கொண்டிருக்கின்றேன், இன்னும் உறுதியாகவும், நிலைகுலையாமலும், இன்னும் (எதிரிகளைக் கண்டு) பயந்து ஓடாமலும்..!

அப்பாஸ் (ரழி) அவர்கள் பின்பு கூவி அழைக்கலானார்கள்..!

இறைநம்பிக்கையாளர்களே! எங்கே ஓடுகின்றீர்கள்? உங்களது தூதரின் பக்கம் திரும்பி வாருங்கள். வல்லமை மிக்க அல்லாஹ்வின் தூதர் உங்களை அழைக்கின்றார்! திரும்பி வாருங்கள்..! இன்னும் உங்களது தூதர் (ஸல்) பக்கம் வாருங்கள் என்று உரக்கக் கூவி அழைக்கலானார்கள்.

அப்பாஸ் (ரழி) அவர்களின் ஓங்கிய குரலோசையைச் செவிமடுத்த நபித்தோழர்கள் அனைவரும், ஆகா..! நாம் தவறு செய்து விட்டோமே..! என்று வருந்தியவர்களாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக மீண்டும் திரும்பி வந்தார்கள். இன்னும் அவர்கள் குரல் கொடுத்தவர்களாக..!

ஓ! அல்லாஹ்வின் தூதரவர்களே! உங்களது அழைப்பைக் கேட்டு நாங்கள் திரும்பி வந்து விட்டோம் என்று மறுமொழி கூறினார்கள்.

சிதறி ஓடிய நபித்தோழர்கள் இப்பொழுது, தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு, இழந்த சக்தியை மீண்டும் பெற்றவர்களாக எதிரிகளை நோக்கிப் பாய ஆரம்பித்தார்கள். இப்பொழுது எதிரிகள் நபித்தோழர்களின் தாக்குதல்களைச் சமாளிக்க இயலாமல், பின் வாங்கினார்கள். சிறிது நேரத்திற்குள்ளாக..! போர்க்களக் காட்சிகள் முற்றிலும் மாறி விட்டன.

காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் கூர்மையான வாள், எதிரிகளின் படைகளை குத்திக் கீறிக் கொண்டு சென்றதோடல்லாமல், எதிர் கொண்ட அத்தனை எதிரிகளையும் துவம்சம் செய்ய ஆரம்பித்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களது உரை மற்றும் இறைநம்பிக்கையின் மீது கொண்ட ஆவலில் பிறந்த உயிர்த் துடிப்பான சக்தியானது, இப்பொழுது இறைஉவப்புப் பெற்றுத் தரக் கூடிய, மரணத்தைச் சுவைத்துப் பார்ப்பதற்காக கொழுந்து விட்டெறிந்த ஆவலாக மாறியது, சிங்கத்தைப் போல எதிரிகளை எதிர்த்துப் போராடத் தூண்டியது. இந்தப் போரில் காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன. இறுதியாக முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது. காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான காயங்கள், ரணத்தைத் தராமல் வெற்றியின் களிப்பை அனுபவித்துக் கொண்டிருந்தன. இன்னும், தனது அபிமானமிக்க படைத்தளபதி காயத்தால் துவண்டு கிடப்பதை காண விரைந்தார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காலித் பின் வலீத் (ரழி) அவர்களது காயங்களைப் பார்க்க வந்ததும், அதுவே தனக்குக் கிடைத்த மிகப் பெரும் பாக்கியமாகக் கருதிய காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு, சந்தோஷம் கரையுடைத்துச் சென்றது. இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களது மலரிதழ்களிலிருந்து, எச்சிலை உமிழ்ந்து, காலித் பின் வலீத் (ரழி) அவர்களது காயங்களில் தடவி விட்டு, விரைந்து ஆறுவதற்கு பிரார்த்தித்தார்கள்.

ஹுனைன் போரில் வெற்றி பெற்ற பின்பு, இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் சிறிது காலம் அங்கே தங்கியிருந்து, காயம்பட்டவர்களுக்கு சிகிச்சையையும், ஓய்வும் எடுத்துக் கொண்டார்கள். இன்னும் தோற்று ஓடிய சில எதிரிகள் தாயிஃப் நகரத்தில் திரண்டு கொண்டிருப்பதாகச் செய்தியைக் கேள்விப்பட்டார்கள். தாயிஃப் நகரம் இரண்டு மலைகளுக்கிடையில் அமைந்த, விவசாய வளமிக்க மற்றும் குளிர்ச்சியான நகரமும் கூட. இங்குள்ள தண்ணீர் ஊற்றுக்களும், கனிவர்க்கமும், காய்கறி வர்க்கமும் பிரசித்தி பெற்றவை.

இந்த நகரம் தான் முந்தைய மக்கா வாழ்க்கையில் ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இஸ்லாத்தின் தூதை எடுத்து வைக்கச் சென்ற பொழுது, இஸ்லாத்தை இதமாக வரவேற்பதற்குப் பதிலாக, இறைத்தூதர் (ஸல்) அவர்களை சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கியதோடு, இரத்தம் சொட்டச் சொட்ட வெளியேற்றியது. இஸ்லாத்தைப் புறக்கணித்தது. படுகாயமடைந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்திற்குள் சென்று தஞ்சமடைந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு நேர்ந்த இந்தக் கொடுமைகளையும், இரத்தம் சொட்டச் சொட்ட மரநிழலில் அமர்ந்திருப்பதைக் கண்ட வானவர்கள், உங்களைத் துன்புறுத்திய இந்த மக்களை இந்த இரு மலைகளுக்கு இடையே வைத்து நாங்கள் நசுக்கி, அழித்து விடுகின்றோம் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்ட பொழுது, அதற்கு அனுமதி மறுத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், நான் மக்களைத் துன்புறுத்துவதற்காகவோ அல்லது அழித்தொழிப்பதற்காகவோ அனுப்பப்பட்ட தூதனல்ல, இன்றில்லா விட்டாலும் நாளை இவர்களது சந்ததியினராவது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளக் கூடுமல்லவா? என்று விளக்கமளித்தார்கள். அன்றைக்கு இரத்தம் சொட்டச் சொட்ட வெளியேற்றப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இன்றைக்கு அதே நகரத்தில் ஒரு மிகப் பெரிய படையின் தலைமைத் தளபதியாக உள்ளே நுழைகின்றார்கள். நுழைந்ததோடு மட்டுமல்லாது அன்றைய மிகப் பெரிய குலங்களாக விளங்கிய பனூ கவஸான் மற்றும் அவர்களது நட்புக் குலங்களுக்கு எதிராகவே படை நடத்தி வந்திருந்தார்கள். பனூ கவஸான்கள் முஸ்லிம்களின் மிகப் பெரிய படையைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, பனூ தக்கீப் குலத்தவர்கள் தங்களது கோட்டைக்குள் சென்று ஒளிந்து கொண்டார்கள்.

கோட்டையை முற்றுகையிட்ட முஸ்லிம்கள், இப்பொழுது காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் வழியாக.., எதிரிகளே...! எங்களை நேரில் வந்து சந்தியுங்கள்...!! என்று அறைகூவல் விட்டுக் கொண்டிருந்தார்கள். காலித் பின் வலீத் (ரழி) அவர்களோ சளைக்காது எதிரிகளை நோக்கி அறைகூவல் விட்டுக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களின் அறைகூவலை நேரில் வந்து சந்திக்கத் திராணியற்ற எதிரிகள் கோட்டைக்குள் பாதுகாப்பாக இருந்து கொண்டார்கள். இன்னும் கோட்டைக்குள் ஒரு வருடத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள், தண்ணீர் போன்றவற்றையும் அவர்கள் முன்பே சேகரித்தும் வைத்திருந்தார்கள். இதே நிலை தொடர்ந்து கொண்டிருந்த பொழுது, முற்றுகையைக் கைவிடுமாறு அபுபக்கர் (ரழி) அவர்கள் ஆலோசனை கூற, இறைத்தூதர் (ஸல்) அவர்களும் சம்மதித்த பின் முற்றுகையானது 18 நாட்களுக்குப் பின் கைவிடப்பட்டது. முற்றுகை கைவிடப்பட்ட சிறிது நாட்களுக்குள் பனூ கவாஸான் மற்றும் பனூ தக்கீப் குலத்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். முற்றுகையின் பொழுது, காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் காட்டிய வீரம், மற்றும் கொண்ட கொள்கையில் உறுதி, அற்பணிப்பு ஆகிய அனைத்தும் இணைந்து இஸ்லாத்தினை மேலோங்கச் செய்ய வேண்டும் என்ற அவரது உறுதியை வெளிப்படுத்திக் காட்டியது. சந்தேகமில்லாமல் ஒவ்வொரு தளபதிக்கும் இந்த பேரார்வம் இருக்க வேண்டியது அவசியமும், இன்னும் இது தான் தலைமைக்கே உரிய பண்புமாகும்.

பனூ கவஸா என்பது பனூ முஸ்தலக் என்ற குலத்தின் ஒரு கிளையினராவர். இந்தக் குலத்தவர்கள் ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு வாக்கில் இஸ்லாத்தினை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிரதிநிதி ஒருவரை அனுப்பி, அந்த மக்களிடம் ஜகாத் என்ற ஏழை வரியை வசூலித்து வரும்படி அனுப்பி வைத்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து பிரதிநிதிகளின் குழு ஒன்று வருவதை அறிந்து, அந்தக் குலத்தலைவர்கள் தங்களது இருப்பிடத்தை விட்டு வெளிக்கிளம்பி, புறநகர்ப் பகுதிக்கு வந்து வரக் கூடிய தலைவர்களை வரவேற்கக் காத்திருந்தார்கள். பிரதிநிதிகள் நகரை நெருங்க, அவர்களை எதிர்கொண்டழைப்பதற்க்காக தலைவர்கள் வருவதைத் தவறாகப் புரிந்து கொண்ட பிரதிநிதிகள், அவர்கள் தங்களைத் தாக்கத் தான் வருகின்றார்கள் என நினைத்து, பயந்தவர்களாக மதீனாவிற்கே மீண்டும் திரும்பி வந்து விடுகின்றார்கள். இன்னும் பனூ முஸ்தலக் குலத்தவர்கள் ஜகாத் தர மறுத்து விட்டார்கள் என்ற செய்தியை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரதிநிதிகள் கூறியவுடன், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பேரதிர்ச்சி அடைந்தார்கள். மேலும், இது விஷயமாக அவர்கள் மீது போர் தொடுப்பதற்கு முன்பு, காலித் பின் வலீத் (ரழி) தலைமையில் ஒரு குழுவை அனுப்பி உண்மை நிலவரத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விரும்பியதோடல்லாமல், காலித் பில் வலீத் (ரழி) தலைமையில் ஒரு குழுவையும் அனுப்பி வைத்தார்கள். இக்குழுவுக்கு காலித் பின் வலீத் (ரழி) அவர்களைத் தேர்ந்தெடுத்ததன் காரணமென்னவெனில், அவர்களின் தொலைநோக்குப் பார்வை, அறிவு மற்றும் நிரம்பிய பல தகுதிகள் தான் காரணமாகும் என்பதில் சந்தேகமில்லை.

இன்னும் அந்த மக்களைச் சந்திக்குமிடத்து எந்தவித உணர்ச்சிகளுக்கும் இடங்கொடாமல், நிலைமையை நன்கு அவதானித்து நடந்து கொள்ளும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்கள். இன்னும் பொறுமையும், சகிப்புத் தன்மையும் தான் இந்த நேரத்தில் அதிகம் தேவைப்படக் கூடிய நற்பண்புகளாகும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் பனூ முஸ்தலக் குலத்தவர்களின் இருப்பிடத்தை இரவின் நடுப்பகுதியில் அடைந்தார்கள். நகரின் நிலவரத்தை சரியாகக் கணிப்பிட வேண்டும் என்று நினைத்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், தனது தோழர் ஒருவரை மாறுவேடம் அணியச் செய்து நகருக்குள் அனுப்பி வைத்தார்கள். மாறுவேடம் அணிந்து நகருக்குள் சென்ற அந்த மனிதர் திரும்பி வந்து, நிச்சயமாக அந்த மக்கள் முஸ்லிம்கள் தான். அவர்கள் அதிகாலைத் தொழுகையை பள்ளிவாசலில் நிறைவேற்றுவதைக் கண்டேன், இன்னும் அவர்கள் குறைவான மக்கள் தொகையினராகத் தான் இருக்கின்றார்கள் என்றும் கூறினார். இதனைக் கேட்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் சந்தோஷமடைந்தவர்களாக, அவர்களது நல வாழ்வுக்காகவும், மறுமைக்காகவும் பிரார்த்தித்தார்கள்.

அதிகாலை நேரம் சற்று வெளிச்சம் பரவியதும் தானே நகருக்குள் சென்று, நகரின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், ஜகாத் கொடுக்க மறுத்ததன் காரணத்தை அவர்களிடம் வினவினார்கள். அப்பொழுது, நடந்த உண்மை விபரத்தை அந்தத் தலைவர்கள் விளக்கினார்கள். தாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து வந்த பிரதிநிதிகளை எதிர்கொண்டு வரவழைக்க நகரின் வெளிப்பகுதிக்கு வந்ததாகவும், நாங்கள் வருவதைப் பார்த்த அவர்கள் தாக்குதல் நடத்தத் தான் வருகின்றோம் என்று தவறாகப் புரிந்து கொண்டு, திரும்பி வந்து விட்டதாகவும் விளக்கமளித்தார்கள்.

பனூ முஸ்தலக் தலைவர்கள் தந்த விளக்கத்தைக் கேட்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இன்னும் அந்த மக்களின் மார்க்க அடிப்படை அறிவு மற்றும் இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களைப் பேணுவதில் அவர்கள் காட்டிய ஆர்வம் ஆகிய அனைத்தைப் பற்றியும் அறிந்து கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், திருப்தியும், சந்தோஷமும் அடைந்தார்கள்.

மதீனா திரும்பியதும் நடந்த விபரங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் விளக்கிய காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், அவர்கள் எந்த குற்றச்சாட்டுக்கும் உரித்தானவர்கள் அல்ல என்பதையும், ஜகாத் கொடுப்பதில் அவர்கள் ஆர்வமுள்ளவர்கள் தான் என்பதையும் விளக்கினார்கள். நாம் அனுப்பிய முந்தைய பிரதிநிதிகள் தான், நடந்த சம்பவங்களைப் பற்றி நமக்கு தெளிவான தகவல்களைத் தராமல் மாறுபட்ட தகவல்களைத் தந்திருக்கின்றார்கள் என்றும் கூறினார்கள். அப்பொழுது, இந்த நிகழ்ச்சியின் பொருட்டு அல்லாஹ் கீழ்க்கண்ட வசனத்தை இறக்கி அருளினான் :

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப்படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (49:6)

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், பனூ முஸ்தலக் குலத்தவர்கள் ஜகாத் தர மறுக்கின்றார்கள் என்ற தவறான செய்தியைக் கேள்விப்பட்டு அவர்கள் மீது போர் முஸ்தீபுகள் செய்யப்பட்;டன, பின் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தலைமையில் சென்ற படை இதற்கான சரியான தீர்வைக் கொண்டு வந்தது, பிரச்னையை மிகவும் இலகுவாகத் தீர்த்து விட்டும் வந்தது. இன்னும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களை அனுப்பி வைக்கும் பொழுது, தனது தளபதிக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்தனுப்பிய அறிவுரையும் கவனிக்கத்தக்கது. இந்த அறிவுரையானது காலித் பின் வலீத் (ரழி) அவர்களை பொறுமையாகவும், நிதானமாகவும் நடவடிக்கையை எடுக்கத் துணை புரிந்ததோடல்லாமல், அவரது தூர நோக்கு மற்றும் பிரச்னையைத் தீர்த்து வைக்கக் கூடிய பேராற்றல் ஆகியவற்றையும் வெளிப்படுத்திக் காட்டியது, இறைவனுக்கு மாறு செய்து விட்டார்களே என்று எண்ணி அவர்கள் மீது கடும்  போரைத் திணக்காது நிலைமைச் சீர்தூக்கிப் பார்க்க வைத்தது. மிகப் பெரியதொரு போர் தவிர்க்கப்பட்டதோடல்லாமல், விலை மதிக்க முடியாத உயிர்கள் மற்றும் பொருட் சேதங்களும் தவிர்க்கப்பட்டன. இதே போன்றதொரு நிகழ்வு பனூ கஸீமா குலத்தவர்களிடமும் நடந்தது.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் சென்ற இடமெல்லாம் வெற்றிக் கொடி நாட்டி விட்டு வந்தார்கள். அவரது அறிவு, துணிவு, பெருமை யாவும் இப்பொழுது முஸ்லிம்களை பெருமை கொள்ளச் செய்தது. அவரது தலைமையின் கீழ் பணியாற்றுவது முஸ்லிம்களுக்கு தன்னம்பிக்கையை அளித்தது, மன உறுதியையும் அளித்தது. அவர் சென்ற இடமெல்லாம் வெற்றியைத் தவிர வேறெதனையும் பெற்றுத் திரும்பியதில்லை. அவர் சென்ற இடமெல்லாம் இஸ்லாமியக் கொடி வானுயரப் பறக்க விடப்பட்டது. இஸ்லாத்தின்  பெருமை நிலைநாட்டப்பட்டது. மிகப் பெரிய சாம்ராஜ்யங்களாக ரோமும், பாரசீகமும் அவரது வீரத்தின் முன் மண்டியிட்டு நின்றன. நிச்சயமாக, காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் வீரமும், தீரமும் மெச்சத்தக்க ஒன்று தான்.

                                                 பகுதி - 05 / பகுதி - 07

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

No comments:

Post a Comment