நாகரீகம் (Hadarah) என்பதற்கும் பொருளியல் முன்னேற்றம் ; (Madaniyyah) என்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. நாகரீகம் என்பது வாழ்க்கையைப் பற்றிய அனைத்து சிந்தனைகளையும் உள்ளடக்கியதாகும். ஆனால் பொருளியல் முன்னேற்றம் என்பது வாழ்வியல் நடவடிக்கைகளில் பயன்படுத்தும் புலன் உணர்வுக்கு உட்பட்ட (Sensed Objects) பொருட்களின் தொகுப்பு ஆகும். நாகரீகம், வாழ்க்கையைப் பற்றிய குறிப்பிட்ட கண்ணோட்டத்தின் அடிப்படையில் உருவான சிந்தனையாக இருப்பதுடன், பொருளியல் முன்னேற்றம் குறிப்பிட்ட ஒன்றாகவோ அல்லது பொதுவானதாகவோ இருக்கலாம். ஆகவே, நாகரீகத்தின் படைப்பான உருவச்சிலைகள் போன்றன குறிப்பானவைகளாக இருக்கும் அதே வேளையில் அறிவியலாலும், (Science) அதன் முன்னேற்றத்தாலும், தொழிற்துறைகளாலும், அதன் பரிணாம வளர்ச்சியினாலும் உற்பத்தியாகும் பொருளியல் படைப்புகள் பொதுவானவைகள். மேலும் அவை குறிப்பிட்ட சமுதாயத்திற்கோ அல்லது நாட்டுக்கோ மட்டும் சொந்தமானவைகள் அல்ல. மாறாக அவை தொழிற்துறைகள், விஞ்ஞானம் ஆகியவற்றைப் போன்று பொதுவானவைகளாகும் (universal).
நாகரீகத்திற்கும், பொருளியல் முன்னேற்றத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டினை நாம் எப்பொழுதும் கவனிக்க வேண்டும். மேலும் நாகரீகத்தின் விளைவாக ஏற்படும் பொருளியல் முன்னேற்ற அம்சங்களுக்கும், அறிவியல் மற்றும் தொழிற்சாலைகளால் உருவாகும் பொருளியல் முன்னேற்ற அம்சங்களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டினையும் நிச்சயமாக நாம் கவனிக்க வேண்டும். பொருளியல் முன்னேற்றத்தினால் உருவான ஒரு பொருளை நாம் ஆராயும்போது அதற்கும் நாகரீகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டினை அறிந்திட இது அவசியமாகிறது. அறிவியல் மூலமாகவும், தொழிற்துறையாலும் விளைந்த மேற்கத்திய பொருட்களை பயன்படுத்துவது தொடர்பாக எவ்வித தடையுமில்லை. எனினும் எக்காரணத்தைக் கொண்டும் மேற்கத்திய நாகரீகத்தின் விளைவாக உருவான பொருட்களை நாம் ஏற்றுக்கொள்ளவே கூடாது. ஏனெனில் மேற்கத்திய நாகரீகத்தை ஏற்றுக் கொள்வதற்கு நமக்கு அனுமதியில்லை. இதற்கு காரணம் அந்த நாகரீகம் நிறுவப்பட்டிருக்கும் அடித்தளத்தின் முதற்படியோடும், வாழ்க்கையைப் பற்றிய அதன் கண்ணோட்டத்தோடும், மனிதனின் மகிழ்ச்சி தொடர்பாக அதன் அர்த்தத்தோடும் இஸ்லாம் முற்றாக முரண்பட்டு நிற்கிறது.
மார்க்கத்தை வாழ்வியலிலிருந்து பிரிக்கும் கொள்கையிலிருந்து மேற்கத்திய நாகரீகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் வாழ்வியல் விவகாரங்களில் மார்க்கம் ஆதிக்கம் செலுத்துவதை அது மறுக்கிறது. எனவே அரசியலிலிருந்து மார்க்கத்தை அது பிரித்து வைத்திருக்கிறது. வாழ்க்கையிலிருந்து மார்க்கத்தை பிரித்து, வாழ்வியல் விவகாரங்களில் அதன் பங்களிப்பை மறுப்பவர்களுக்கு இந்த பிரிவினை இயல்பான ஒன்றாக இருக்கக்கூடும். இந்த அடித்தளத்தில்தான் அதன் வாழ்வியலும், வாழ்வியல் செயலாக்க அமைப்புகளும் (System of life) நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நாகரீகம், மனிதனின் முழு வாழ்க்கையையும், உலக பயன்களை மட்டும் தேடி அடைந்து கொள்ளும் செயல்பாட்டுத் தளமாக கருதுகிறது. எனவே வாழ்க்கையின் செயல்பாடுகளுக்கு அதன் அளவுகோள் ஆதாயமேயாகும். ஆகையால் ஆதாயத்தின் அடிப்படையிலேயே அதன் வாழ்வியல் செயலாக்க அமைப்புகளும் (System of life - Nidam) அதன் நாகரீகமும் நிர்மானிக்கப்பட்டிருக்கின்றன. அதன் செயலாக்க அமைப்புகளிலும் நாகரீகத்திலும் உலக பயன்கள்தான் முக்கியமான சிந்தனையாகவும் (Thoughts) வெளிப்படையான அம்சமாகவும் திகழ்கின்றன. இது ஏனெனில் வாழ்க்கையை உலக பயன்கள் அடிப்படையில்தான் அது விளக்குகிறது. அவர்களுடைய பார்வையில் மகிழ்ச்சி என்பது அதிகபட்சமான புலன் இன்பத்தை மனிதனுக்கு கொடுக்கக்கூடியதாகவும், அதனை அடையும் சாதனங்களை பெற்றுக் கொள்வதாகவும், இருக்கிறது. இதனடிப்படையில் உலக பயன்களை அறுவடை செய்ய வேண்டும் என்ற ஆசையின் மீது மேற்கத்திய நாகரீகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. உலக பயன்களைத் தவிர வேறு எந்த ஒன்றுக்கும் அங்கீகாரமோ அல்லது பரிசீலனையோ கொடுப்பதற்கு முகாந்திரமே இல்லாத விதத்தில் அதன் வாழ்வியல் செயலாக்க அமைப்புகளின் அளவுகோள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே ஆன்மீக விவகாரம் தனிமனித அளவில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. சமூக கட்டமைப்பில் அதற்கு எந்த தலையீடும் கிடையாது. கிருஸ்தவ தேவ ஆலயத்திற்குள்ளும் அதன் மதகுருமார்களின் கைகளுக்குள்ளும் ஆன்மீக விவகாரங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. இதன் முடிவாக மேற்கத்திய நாகரீகத்தின் எந்தவிதமான ஒழுக்க மாண்புகளோ அல்லது ஆன்மீக மற்றும் மனித பண்புகளோ கிடையாது. மாறாக பொருளியல்வாத அடிப்படை மட்டுமே இருக்கிறது. இதன் காரணமாக மனிதநேய நடவடிக்கைகள் அரசிடமிருந்து பிரிக்கப்பட்டு செஞ்சிலுவை சங்கம், மிஷனரிகள் போன்ற சமூக அமைப்புகளிடத்தில் தஞ்சம் புகுந்துவிட்டன. பொருளியல்வாத அடிப்படையிலுள்ள உலக பயன்கள் நீங்களாக மற்ற அனைத்து மாண்புகளும் வாழ்க்கையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. இவ்வாறான வாழ்வியல் சிந்தனைகளைக் கொண்டதாகவே மேற்கத்திய நாகரீகம் இருக்கிறது.
இஸ்லாமிய நாகரீகத்தைப் பொருத்தவரை அது மேற்கத்திய நாகரீகம் கட்டமைக்கப்பட்டுள்ள அடிப்படைக்கு முற்றிலும் முரண்பட்ட அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் வாழ்வியல் கண்ணோட்டமும், மகிழ்ச்சி பற்றி அது கொண்டிருக்கும் அர்த்தமும் மேற்கத்திய நாகரீகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அல்லாஹ்(சுபு)வின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலும் அவன்(சுபு) பிரபஞ்சம், வாழ்வு, மனிதன் ஆகியவற்றிற்கு ஒரு செயலாக்க அமைப்பை ((Nidam- System) அமைத்திருக்கின்றான் என்ற நம்பிக்கை மீதும் இஸ்லாமிய நாகரீகம் நிறுவப்பட்டுள்ளது. அவன்(சுபு) மனித குலத்திற்கு இஸ்லாம் என்ற ஒரே மார்க்கத்துடன், முஹம்மது(ஸல்) அவர்களை அனுப்பி இருக்கிறான். இதற்கு பொருள் என்னவென்றால், அல்லாஹ்(சுபு) மீதும் அவனுடைய (சுபு) மலக்குகள் மீதும், அவனுடைய(சுபு)வேதத்தின் மீதும் அவனுடைய(சுபு) தூதர்கள் மீதும், மறுமைநாள் மற்றும் அல்களா வல்கத்ர் ஆகியவற்றின் மீதும் உள்ள நம்பிக்கையை உள்ளடக்கிய இஸ்லாமிய அகீதாவின் மீதுதான் இஸ்லாமிய நாகரீகம் நிறுவப்பட்டுள்ளது என்பதாகும். ஆகவே, அகீதாதான் நாகரீகத்தின் அடித்தளமாக இருப்பதால் ஆன்மீக அடிப்படை மீது அதன் நாகரீகம் அமைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய நாகரீகத்தில் வாழ்க்கை முறை என்பது இஸ்லாமிய அகீதாவிலிருந்து பிறக்கும் இஸ்லாமிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அகீதாவின் மீதுதான் வாழ்க்கை மற்றும் அதன் செயல்பாடு ஆகிய இரண்டும் நிர்மானிக்கப்பட்டிருக்கின்றன. ஆன்மாவையும் (Spirit) இயற்பொருட்களையும் (Matter) ஒன்று கலக்கக்கூடியதாக இஸ்லாமிய தத்துவம் இருக்கிறது. அதாவது அஹ்காம் ஷரிஆவினால் மனிதனின் செயல்பாடுகள் வழிநடத்தப்படும் இந்த வழிமுறைதான் வாழ்க்கையின் அடிப்படையாக விளங்குகிறது. அதே வேளையில் மனிதனின் செயல்பாடுகள் பொருளியல் அடிப்படையில் இருக்கும் நிலையில் அவன் செயல்பாடுகளை ஹராம் ஹலால் அடிப்படையில் மேற்கொள்ளும்போது அல்லாஹ்(சுபு)வுடன் அவனுக்கு இருக்கும் தொடர்பை அவன் கவனத்தில் கொள்வதுதான் ஆன்மா (Spirit - RUH) எனப்படுகிறது. இதன் மூலம்; ஆன்மாவையும் இயற்பொருட்களையும் ஒன்று கலக்கும் செயல் ஏற்படுகிறது. இதன்படி, அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகள் முஸ்லிம்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறன. அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக தன் செயல்பாடுகளை மேற்கொள்ளும் ஒரு முஸ்லிமுடைய இறுதி லட்சியம் அல்லாஹ்(சுபு)வின் உவப்பை எய்துவதே அல்லாமல் உலக பயன்களாக இருக்க முடியாது. எனினும், செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது உடனடியாக தேடப்படுவது பொருளியல் பயனாக இருக்கலாம். அது செயல்களுக்கு ஏற்ப மாறுபடும். வர்த்தகத்திலோ அல்லது வியாபாரத்திலோ ஈடுபட்டிருக்கும் ஒருவரின் எண்ணம் இலாபம் ஈட்ட வேண்டும் என்ற பொருளியல் பயனாக இருக்கலாம். எனினும் அவருடைய வியாபாரம் பொருளியல் பயன் (Meterialistic) சார்ந்த செயல்பாடாக இருந்தாலும்கூட அல்லாஹ்(சுபு)வின் உவப்பை எய்திடும் பொருட்டு அவனுடைய(சுபு) ஏவல் விலக்கல் கட்டளைகள் மூலமாக அவனுடன்(சுபு) அவருக்குள்ள தொடர்பை உணர்ந்து கொள்ளும் விதமாக அவர் அதில் இயக்கப்படுகிறார். அதே வேளையில் அந்த செயல்பாட்டை மேற்கொள்வதன் மூலம் அவர் அடைந்து கொள்ள எண்ணிய இலாபம் பொருளியல் பயனாக இருக்கிறது.
தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் போன்ற ஆன்மீகம் சார்ந்த பயனாகவும் அது இருக்கலாம். உண்மையை கடைபிடித்து நேர்மையாக இருத்தல், நன்றி உணர்வை வெளிப்படுத்துதல் போன்ற ஒழுக்க மாண்புகள் சார்ந்த பயனாகவும் இருக்கலாம். நீரில் மூழ்க இருக்கும் ஒருவரை காப்பாற்றுதல் அல்லது ஏழைகளுக்கு உதவுதல் போன்ற மனித நேயம் சார்ந்த பயனாகவும் இருக்கலாம். மனிதன் தன் செயல்பாட்டை மேற்கொள்ளும்போது இந்த பயன்களை கவனத்தில் கொண்டு அவைகளை அடைய எண்ணுகிறான். எனினும், மனிதனின் செயல்பாடுகளுக்கு பின்னணியிலிருந்து அவனை இயக்கும் ஆற்றல் இந்த பயன்களாகவோ, அவன் நோக்கமாக கொண்ட இறுதி இலட்சியமாகவோ அவை இருப்பதில்லை. அவை செயல்பாட்டின் பலன்களாக இருப்பதுடன் அவை செயல்பாட்டின் தன்மைக்கு ஏற்ப மாறுபடுகின்றன.
மகிழ்ச்சி என்பது அல்லாஹ்(சுபு)வின் உவப்பை எய்துவதேயன்றி மனிதன் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் இல்லை. ஒருவன் தன்னுடைய வாழ்வை பாதுகாத்துக் கொள்வதற்காக உடல்சார்ந்த தேவைகளையும் (Organic Needs) உள்ளார்ந்த உணர்வுகளின் விருப்பங்களையும் (Instinctual Desise) நிறைவு செய்து கொள்வது அவசியமான விதிமுறையாக இருக்கிறது. ஆனால், இவைகளை நிறைவு செய்து கொள்வது மட்டும் மகிழ்ச்சிக்கு உத்திரவாதம் அளிக்காது. இங்கு தொகுத்துக் கூற விரும்பும் சுருக்கமான கருத்து யாதெனில்: வாழ்வியல் பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் இதுதான். இந்த கண்ணோட்டம்தான் இஸ்லாமிய நாகரீகத்தின் அடிப்படை. ஒவ்வொரு அம்சத்திலும் மேற்கத்திய நாகரீகம் இஸ்லாமிய நாகரீகத்திலிருந்து முரண்படுகிறது என்பது தெளிவாக விஷயம். இஸ்லாமிய நாகரீகத்தின் விளைவாக உருவாகும் பொருளியல் முன்னேற்றத்தின் அடிப்படையிலுள்ள குறிப்பிட்ட பொருட்கள் இஸ்லாத்திற்கு மட்டும் பிரத்தியோகமாக உரியவை. அவை மேற்கத்திய நாகரீகத்தின் விளைவாக உருவாகும் பொருளியல் முன்னேற்ற அடிப்படையிலுள்ள பொருட்களோடு முரண்படுவதாக இருக்கின்றன. உதாரணமாக ஒரு நிழற்படம் (Photograph) என்பது பொருளியல் முன்னேற்றத்தின் விளைவாக உருவான பொருளாகும். (Madaniyya Objects) ஒரு பெண்ணின் உடல் அழகை வெளிப்படுத்தும் நிர்வான நிழற்படத்தை மேற்கத்திய நாகரீகம் ஒரு கலை அம்சமாக கருதுகிறது. அந்த நிழற்படம் மேற்கத்திய நாகரீகத்தின் விளைவாக உருவாகிய பொருளியல் முன்னேற்றத்தின் குறிப்பிட்ட பொருளாக இருக்கிறது. மேலும் அது பெண்கள் குறித்த அதன் வாழ்க்கை கண்ணோட்டமாகவும் இருக்கிறது. ஆகவே மேற்கத்திய சமூகத்தைச் சார்ந்த ஒரு மனிதன் அதை கலை அம்சமாக கருதுகிறான். அதில் பெருமை பாராட்டுகிறான். எனினும், இந்த பொருள் இஸ்லாமிய நாகரீகத்திற்கும், பெண்களின் கௌரவம் என்று கருதி எவைகளை பாதுகாக்க வேண்டும் என்று இஸ்லாம் கருதுகிறதோ அத்தகைய சிந்தனைகளுக்கும் முரண்படுகிறது. இதன் முடிவாக இத்தகைய நிழற்படங்கள் தடை செய்யப்பட வேண்டும். ஏனெனில் அவை பாலியல் வேட்கையை தூண்டக்கூடியதாக இருக்கின்றன. இதன் விளைவாக சமூகத்தின் ஒழுக்க மாண்புகள் தளர்ந்து போவதற்கு இவை உடனடி காரணங்களாக இருக்கின்றன. இது போலவே வீடு என்பது மற்றொரு பொருளியல் முன்னேற்றம் சார்ந்த பொருளாக இருக்கிறது. ஒரு முஸ்லிம் தனக்கு வீடு கட்ட எண்ணும் போது வெளியில் இருப்பவர்களுக்கு வீட்டினுள் இருக்கும் பெண்கள் தெரியாத வகையில் வீட்டின் அமைப்பு இருக்க வேண்டும் என்பதில் அவர் கவனம் செலுத்துவார். இதனடிப்படையில் ஒரு முஸ்லிம் வீட்டைச் சுற்றி மதில் சுவர் எழுப்புகிறார். ஆனால் மேற்கத்தியர்கள் இதில் கவனம் செலுத்துவதில்லை. மேற்கத்திய நாகரீகத்தின் அடிப்படையில் உருவான பொருளியல் முன்னேற்றம் சார்ந்த அனைத்து பொருட்களுக்கும் இது பொருந்தும். உதாரணமாக உருவ சிலைகளை கூறலாம். இது போலவே நிராகரிப்பவர்களின் பிரத்தியோகமான ஆடைகளை அணிவது முஸ்லிம்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் அவைகள் வாழ்க்கையைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தைப் பெற்றிருக்கின்றன. எனினும் இதர ஆடைகளை அணிவதற்கு தடையில்லை. உதாரணமாக, தேவைக்காக அணியும் ஆடைகள் அழகூட்டும் ஆடைகள். இவைகளில் குஃப்ர் அம்சங்கள் இல்லையெனில் அவற்றை அணியலாம். அவைகள் பொதுவான பொருட்களாகும். அவற்றை உபயோகிப்பதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி உண்டு.
அறிவியல் மற்றும் தொழிற்துறைகள் மூலமாக உருவாக்கப்பட்ட பரிசோதனை கூட உபகரணங்கள், மருத்துவத்துறை மற்றும் தொழிற்துறை கருவிகள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகிய பொருளியல் முன்னேற்றம் சார்ந்த பொருட்கள் பொதுவானவைகளாகும். நாகரீகத்தின் விளைவாக உருவாகாததும், அதனோடு தொடர்பு இல்லாததுமான இத்தகைய பொருட்களின் உபயோகத்திற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி உண்டு.
இன்றைய உலகை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் மேற்கத்திய நாகரீகத்தை மேலோட்டமாக பார்வையிட்டால் மனிதனின் மன அமைதிக்கு அதனால் உத்திரவாதம் அளிக்க முடியாது என்பது தெளிவாக விளங்கும். இதற்கு மாற்றமாக மனித சமூகத்தில் ஆழமாக இடம்பெற்றுள்ள துன்பத்திற்கும் துயரத்திற்கும் அதுவே காரணமாகவும் இருக்கிறது. வாழ்வியலிலிருந்து மார்க்கத்தைப் பிரிப்பதை அடிப்படையாக ஏற்றுள்ள இந்த நாகரீகம், மனிதனின் இயற்கை தன்மைக்கு முரண்படுகிறது. ஆகவே சமூகத்தில் ஆன்மீக விஷயங்களுக்கு அது முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வாழ்க்கையை உலக இலாபங்களின் தொகுப்பாக அது கருதுகிறது. உலக இலாபங்களை அடைவதுதான் மனிதர்களுக்கிடையிலுள்ள உறவின் அடிப்படையாக அது கருதுகிறது. எனவே, ஓயாத துன்பத்தையும் மனப்போராட்டங்களையும் அது உருவாக்குகின்றது. வாழ்வின் அடிப்படையாக உலக இலாபங்கள் கருதப்படும்வரை இயல்பாகவே அதற்கான போராட்டமும் கூடுதலாகவே இருப்பதுடன் இங்கே மனிதர்கள் மத்தியில் உறவைப்பேணுவதற்கு வலிமையை பிரயோகிக்கவேண்டிய நிலையும் இயல்பாகவே காணப்படும். எனவே இந்த நாகரீகத்தை பின்பற்றுகிறவர்களுக்கு காலனியாதிக்க சிந்தனை ஏற்படுவது இயல்பான விஷயமாகும். ஏனெனில் வாழ்க்கையின் அடிப்படையாக உலக பயன்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன. அங்கு எந்த வகையான ஒழுக்க மாண்புகளுக்கும் இடம் கிடையாது. ஆகையால், ஆன்மீக மாண்புகள் உதாசீனப்படுத்தப்பட்ட அதே வழியில் அனைத்து ஒழுக்க மாண்புகளும் அந்த சமூகத்தில் மங்கிப்போவது இயற்கையான நிகழ்வுதான். எனவே அங்கு போட்டி, போராட்டம், ஆக்கிரமிப்பு, காலனியாதிக்கம் ஆகியவற்றின் மீது வாழ்வு நிறுவப்பட்டுள்ளது. மக்களிடம் ஆன்மீக நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக ஓயாத மனப்போராட்டம் ஏற்பட்டுவிட்டது. இதனால் உலகம் முழுவதிலும் பரவலாக தீமை விளைந்திருப்பது மேற்கத்திய நாகரீகம் ஏற்படுத்தியிருக்கின்ற தீய விளைவுகளாக இருக்கின்றன. இதனால் மனித சமூகம் கடும் கோபமுற்று குற்றம் சாட்டும் வகையில் இன்று நிலைமை இருக்கிறது. உலகில் இந்த நாகரீகம் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதின் காரணமாக அழிவை கொண்டுவரும் பல விளைவுகளை நோக்கி மனித சமூகம் சென்று கொண்டிருக்கிறது. முடிவாக மனித வர்க்கத்தின் செயல்பாட்டிற்கு இன்று மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு வரை உலகில் ஆதிக்கம் பெற்றிருந்த இஸ்லாமிய நாகரீகத்தை ஆய்வு செய்யும் பட்சத்தில், அது காலனி ஆதிக்க கொள்கையை ஒருபோதும் கொண்டதாக இருக்கவில்லை. உண்மையில் இஸ்லாத்தின் கொள்கைக்கு காலனி ஆதிக்கம் அந்நியமானது. ஏனெனில் முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் எந்தவித வேறுபாடும் அது காட்டுவதில்லை. எனவே, அதன் நெடிய ஆட்சிகாலம் முழுவதும் தங்களை அதனிடம் ஒப்படைத்துக் கொண்ட மக்கள் அனைவருக்கும் நீதத்தை பெற்றுத் தந்திருக்கிறது. இது ஏனெனில், ஆன்மீக அடிப்படை மீது கட்டமைக்கப்பட்டுள்ள நாகரீகமாக அது இருக்கிறது என்பதுதான். பொருளியல், ஆன்மீகம், ஒழுக்க மாண்புகள் மற்றும் மனித நேயம் ஆகிய அனைத்து மதிப்பீடுகளையும் அது நிறைவு செய்கிறது. வாழ்வியலில் அகீதாவிற்கு உச்சகட்டமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளினால் வாழ்க்கை கட்டுப்படுத்தப்படுகின்றது. மகிழ்ச்சி என்பது முற்றிலும் அல்லாஹ்(சுபு)வின் உவப்பை அடைந்து கொள்வதுதான் என இஸ்லாம் கருதுகிறது. கடந்த காலங்கள் போல மறுமுறையும் இஸ்லாமிய நாகரீகம் ஆதிக்கம் செலுத்தும் பட்சத்தில் இன்று உலகம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்கும் என்பதற்கு உத்திரவாதம் உண்டு. மேலும் மனித வர்க்கம் முழுமைக்கும் அது நன்மையை பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.