Feb 21, 2011

கிலாபா - உம்மத்தின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்

கிலாபா - உம்மத்தின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்

இஸ்லாமிய கிலாபத் வீழ்த்தப்பட்டு 89 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் மீண்டும் முழுமையான இஸ்லாமிய வாழ்வு மலர கிலாபத்தை மீட்டெடுக்க வேண்டிய கடமையை நம் நினைவுகளில் புதுப்பித்து கொள்ள கடமைப்பட்டு இருக்கிறோம். 1924 ல் கிலாபத் வீழ்த்தப்பட்ட பிறகு முஸ்லீம் உம்மா அல்லாஹ்வை விட தங்கள் மேற்கத்திய முதலாளிகளை திருப்திபடுத்த நினைக்கும் மோசமான ஆட்சியாளர்களை பெற்றது என்றால் அது மிகையானதல்ல. இந்த அஸதுகள், முபாரக்குகள், ஜர்தாரிகள் போன்ற சர்வதிகாரிகள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மேலாதிக்கத்துக்கு குடை பிடித்து கொண்டிருப்பதால் இச்சமூகம் உலகியல் ரீதியாகவும் பின்னடைவை சந்தித்து கொண்டிருக்கின்றது.

உதாரணத்திற்கு

வறுமை - 2002 எக்கானமிஸ்ட் பத்திரிகை நடத்திய ஆய்வின் படி ஐந்தில் ஒரு அரபியர் ஒரு நாளைக்கு வெறும் 2 டாலருக்கும் கீழாகவே சம்பாதிக்கின்றனர்.

ஊழல் - ட்ரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் ஆய்வின் படி ஊழல் மலிந்துள்ள 10 நாடுகளில் 8 முஸ்லீம் நாடுகள்.

போர் - ஐ.நா சபை தகவல் படி தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஆப்கனில் 20 இலட்சம் பெண்கள் மற்றும் ஈராக்கில் 7 1/2 இலட்சம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்.

இச்சூழலை இஸ்லாம் இவ்வுலகில் ஆளும் கொள்கையாக இருந்த போது ஒப்பிட்டு பாருங்கள்

பொருளாதாரம் - இரண்டாம் உமர் என அழைக்கப்படும் உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களின் ஆட்சிகாலத்தில் ஜகாத்தை வாங்க தகுதியான ஆட்கள் இல்லாமல் கஜானா நிரம்பி வழிந்தது.

ஆட்சி - உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) ஆட்சிகாலத்தில் ஒரு மனிதர் தன் தனிப்பட்ட விவகாரங்களை ஆலோசிக்க வந்த போது அரசாங்க வரிப்பணத்தில் வாங்கிய எண்ணையில் எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்து தன் சொந்த விளக்கை ஏற்றும் அளவுக்கு அரசாங்க சொத்துக்களை அமானிதமாக கருதினார்.

பாதுகாப்பு : ஒரு பெண்ணின் ஹிஜாப் சேதப்படுத்தப்பட்ட போது அதற்காக அப்பாஸிய கலீபா முத்தஸிம் (ரஹ்) அப்பெண்ணின் கண்ணியம் காக்க ஒரு படையையே ஒன்று திரட்டினார்கள்.

சமூகத்தின் உண்மையான பிரச்னை - தலைமைத்துவமே

முஸ்லீம் உம்மாவின் நலனில் அக்கறை கொண்ட முஸ்லீம் சிந்தனையாளர்கள் சிலர் முஸ்லீம் நாடுகள் பொருளாதர வலிமை இல்லாததே முஸ்லீம் உம்மாவின் பிரச்னைக்கு காரணம் என நினைப்பது தவறு. ஏனென்றால் உலகின் இயற்கை வளங்களில் 60 சதவிகிதம் முஸ்லீம் நாடுகளிலேயே கிடைக்கின்றன. 54 முஸ்லீம் நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான் மாத்திரம் ப்ரான்ஸ் மற்றும் இங்கிலாத்தின் கூட்டு நிலப்பரப்பை கொண்டுள்ளது. உலகின் 6வது மிகப் பெரும் மனித வளமும் கொண்டுள்ளது. மேலும் பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, இந்தோனேஷியா, சிரியா, சவூதி அரேபியா மற்றும் மொராக்காவின் ராணுவ பலத்தை ஒன்றாக்கினால் ஈராக்கில் இருந்த அமெரிக்க படைகளை விட 20 மடங்கு அதிக ராணுவத்தை திரட்ட முடியும். எனவே முஸ்லீம் நாடுகளில் வளங்களில் பிரச்னை இல்லை. அவை பங்கிடுப்படுவதில் தான் பிரச்னை உள்ளது. இஸ்லாமிய அடிப்படையில் பங்கிடப்படாமல் மேற்கின் கட்டளை படி நடப்பதில் தான் பிரச்னை புதைந்துள்ளது.

எனவே பிரச்னை சமூக வளங்களில் அல்ல, மாறாக இஸ்லாத்தின் அடிப்படையிலான ஒருங்கிணைந்த தலைமை இல்லாததே பிரச்னையின் ஆணிவேராகும். நபி (ஸல்) பரிந்துரைத்த, நம்மை பாதுகாக்கும் கேடயம் இல்லாததே பிரச்னையாகும். அக்கேடயத்தை குறித்து முஸ்லீமில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீத் பின் வருமாறு பேசுகிறது :

"உங்களின் இமாம் (கலீபா) ஒரு கேடயம் ஆவார், அவரின் பின்னால் போராடுவதற்கும் உங்களை பாதுகாத்து கொள்வதற்கும்"

நம்மை படைத்த சர்வ வல்லமையுள்ள இறைவன் ஆட்சியதிகாரத்தில், மக்களின் பொருளாதர விவகாரங்கள், சமூக பிரச்னைகள் உள்ளிட்ட அனைத்திலும் குரான் மற்றும் சுன்னாவை கொண்டே தீர்ப்பளிக்க சொல்லியுள்ளான். இறைவனின் வேதத்தின் படி ஆட்சி செய்யாத முஸ்லீம் பெயர்தாங்கிகள் அல்லது நிராகரிப்பாளர்கள் குறித்து நாம் திருப்திபட்டு கொள்ள கூடிய மக்களாக இருந்தால் நம் நிலை பின் வரும் குரான் வசனம் குறிப்பதை போல் தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

நபியே ! அல்லாஹ் இறக்கி வைத்ததே கொண்டு அவர்களிடம் தீர்ப்பளிப்பீராக.அவர்களின் ஆசாபாசங்களை பின்பற்றினால் அவர்கள் இறைவன் இறக்கி வைத்ததிலிருந்து உங்களை திருப்பி விடக் கூடும் (திருக்குரான் 5:49 வசனத்தின் கருத்து)

கிலாபத்தை மீண்டும் நிலைநாட்டுவதின் மூலம் - நீதித்துறை, சமூக விவகாரங்கள், பொருளாதரம், குடும்ப விவகாரங்கள் இப்படி வாழ்வின் அத்துணை நிலைகளிலும் குரான் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் வழிகாட்டுதல் பெறக் கூடிய முழுமையான இஸ்லாமிய அரசை அமைப்பதின் மூலமே குப்ரின் ஆதிக்கம் மற்றும் பாதிப்பிலிருந்து விடுபட்டு முழுமையான இஸ்லாத்தை நம் வாழ்வில் கொண்டு வர முடியும் என்பது நிச்சயம். வல்ல இறைவன் அப்பாக்கியத்தை நம் வாழ்விலேயே காணும் பாக்கியத்தை அளிப்பானாக.

1 comment:

  1. படிக்க தெளிவு இல்லயாரன்ற டவுன்லோட் செய்து கொள்ளவும்....

    ReplyDelete