May 21, 2011

இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் - பகுதி 07 (The Intellectual Leadership of Islam : Al - Qiyadatul Fikriyyatu Fil Islam)

ஆட்சிமுறையைப் பொருத்தவரை இஸ்லாமிய அரசின் அமைப்பு எட்டு தூண்களில் அமைக்கப்பட்டதாக இருந்தது. ஆட்சித்தலைவராக கலீஃபா விளங்கினார். கலீஃபாவின் ஆட்சித்துறை உதவியாளர் (Delecated Assistant-Mo’aawen Tafweedh), கலீஃபாவின் நிர்வாகத்துறை உதவியாளர் (Executive Assistant-Mo’aawen Tanfeedh) ஜிஹாதின் தலைவர் (Ameer of Jihad), ஆளுநர்கள் (Wulah), நீதிபதிகள் (QuDah), அரசுத்துறைகள் (State Departments) மற்றும் மக்கள் மன்றம் (Majlis al Ummah) ஆகியவை அவையாகும். முஸ்தபா கமால் என்ற காலனி ஆதிக்க காஃபிர் 1342 A.H. (கி.பி.1924) இஸ்லாமிய கிலாஃபா அரசை கலைக்கும் வரை முஸ்லிம்கள் கலீஃபா இன்றி இருந்ததில்லை. கிலாஃபா அரசு நீக்கப்படும் வரை தொடர்ந்து முஸ்லிம்களுக்கு கலீஃபா இருந்துகொண்டுதான் இருந்தார். ஒரு கலீஃபா மரணமடையும்போதோ அல்லது நீக்கப்படும்போதோ மற்றொரு கலீஃபா தேர்ந்தெடுக்கப்பட்டார். கிலாஃபா ஆட்சி நலிவுற்றிருந்த இருந்த காலகட்டத்தில்கூட இவ்வாறுதான் நிலை இருந்து வந்தது. இஸ்லாமிய அரசு என்பது கிலாஃபா அரசாக இருப்பதால், கலீஃபா இருக்கும் பட்சத்தில்தான் அது இஸ்லாமிய அரசாக கருதப்படும். ஆட்சியிலும், அரசுப்பணியிலும், கலீஃபாவின் உதவியாளர்கள் இஸ்லாமிய அரசின் அனைத்து காலங்களிலும் இருந்து வந்தனர். அவர்கள் உதவியாளர்களேதவிர அமைச்சர்கள் அல்ல(Wazirs). அப்பாஸிய கிலாஃபாவில் அவர்கள் அமைச்சர்கள் என்று அழைக்கப்பட்டாலும் உதவியாளர்களாகவே இருந்து வந்தார்கள். ஜனநாயக ஆட்சி முறையிலுள்ள அமைச்சர்கள் அந்தஸ்து அவர்களுக்கு அளிக்கப்படவில்லை, மாறாக கலீஃபாவின் அங்கீகாரம் பெற்றவர்களாக ஆட்சியிலும், அரசுப்பணிகளிலும் கலீஃபாவின் உதவியாளர்களாகவே அவர்கள் இருந்து வந்தார்கள். அதே வேளையில் அனைத்து அரசு அதிகாரங்களும் கலீஃபாவின் கைகளில் இருந்து வந்தது. ஆளுநர்களும், நீதிபதிகளும், அரசுத்துறைகளும் சந்தேகமின்றி இருந்து வந்தன. குஃப்பார்கள் இஸ்லாமிய பூமியை ஆக்கிரமிப்பு செய்த காலகட்டத்தில் முஸ்லிம்களின் அனைத்து விவகாரங்களும் நடைபெற்று வந்தமைக்கும், ஆளுநர்கள், நீதிபதிகள், அரசுத்துறைகள் அங்கு காணப்பட்டமைக்கும் ஆதாரம் எதுவும் தேவையில்லை. ஜிஹாத்தின் தலைவரைப் பொருத்தவரை, வெற்றி கொள்ள முடியாதது என்று உலகெங்கிலும் புகழ்பெற்ற இஸ்லாமிய சேனையின் தலைவர் என்ற அந்தஸ்தில் இராணுவ விவகாரங்களை அவர் கவனித்து வந்தார். மக்கள் மன்றம் என்ற மஜ்லிஸ் அல் உம்மாவைப் பொருத்தவரை, நேர்வழிகாட்டப்பட்ட கலீஃபாக்களின் காலத்திற்கு பின்பு அதன் அவசியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதற்கு காரணம் அது ஆட்சி அமைப்பின் ஒரு அம்சமாக இருந்ததே தவிர அதன் ஒரு தூணாக இருக்கவில்லை. ஆலோசனை கலத்தல் (Shurah) என்பது கலீபாஃவின் மீது மக்களுக்கு இருக்கின்ற ஒரு உரிமையாகும். எனவே அதை அவர் உதாசீனப்படுத்தினால், அவர் உதாசீனத்துக்கு ஆளாக நேரிடுமே ஒழிய ஆட்சிமுறை இஸ்லாமிய ஆட்சி முறையாகவே இருந்துவரும். இது ஏனெனில் இஸ்லாத்தில் ஆலோசித்தல் என்பது கருத்துக்களை பெறுவதற்குத்தானே தவிர ஆட்சி செய்வதற்கு அல்ல. ஜனநாயகத்தின் பாராளுமன்ற முறை இதற்கு நேர்மானது. ஆகவே இஸ்லாமிய ஆட்சிமுறை; நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பது இங்கே தெளிவாகிறது.

கலீஃபாவுக்கு பையத் கொடுப்பது என்பதைப் பொருத்தவரை ஒரு கேள்வி இங்கு எழக்கூடும். கிலாஃபா ஆட்சிமுறையில் பரம்பரை உரிமை வழிமுறை இல்லை என்பது நன்கு நிலை நிறுத்தப்பட்ட விஷயம். வேறு வகையில் கூறுவதெனில் மன்னராட்சி முறையில் இருப்பதைப் போன்று ஆட்சித் தலைமையை பரம்பரை உரிமை அடிப்படையில் அடைந்து கொள்ளும் வழிமுறை இஸ்லாத்தில் அமைக்கப்படவில்லை. மாறாக, முஸ்லிம் மக்களிடம் பையத் பெறுவதின் மூலம் அரசின் தலைமை பொறுப்பு பெற்றுக் கொள்ளப்படும். இந்த நிலை சில காலம் இருந்து வந்தது. அதன் பிறகு செல்வாக்கு பெற்ற மனிதர்களிடத்தில் (Ahle al Halli Wal Aqd) பையத் பெறும் முறையும், கிலாஃபத்தின் இறுதிகாலத்தில் இருந்தது போல் ஷேக் அல் இஸ்லாத்திடம் பையத் பெறும் முறையும் இருந்து வந்தது. இஸ்லாமிய கிலாஃபா அரசின் நெடிய வரலாற்றில் பையத் பெறாமல் எந்த கலீஃபாவும் நியமிக்கப்பட்டதில்லை என்ற நிலை இருந்து வந்தது. பையத் பெறாமல் பரம்பரை உரிமை மூலம் ஒரு கலீஃபா கூட நியமிக்கப்பட்டதாக எந்த ஒரு நிகழ்வும் நடந்ததாக அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த வழிமுறைக்கு ஆற்றல் பெறாமல், பையத் பெறும் முறை தவறாக பயன்படுத்தப்பட்டது. இவ்வாறாக, ஒரு கலீஃபா தன் மரணத்திற்கு முன்பாக தனது மகனுக்காகவோ, சகோதரனுக்காகவோ, உடன் பிறவா சகோதரனுக்காகவோ அல்லது எந்த ஒரு குடும்ப நபருக்காகவோ மக்களிடம் பையத் பெறுபவராக இருந்தார்கள். கலீஃபாவின் மரணத்திற்கு பின்பு அந்த நபர் பையத்தை புதுபித்துக் கொண்டார். இது பையத் பெறுவதை தவறாக பயன்படுத்துவதாக இருந்தாலும் பரம்பரை ஆட்சி முறையை சார்ந்தாகவோ அல்லது ஆட்சிக்கு தானாகவே வந்துவிடும் முறையாகவோ (Succession to the throne) இருக்கவில்லை. பாராளுமன்றமுறையிலோ அல்லது ஜனநாயக ஆட்சி முறையிலோ தேர்தல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு அரசு ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் வெற்றி பெற்றபோதும்கூட அவை தேர்தல்கள் என்றுதான் அழைக்கப்படுகிறதே தவிர நியமனம் என்று கருதப்படுவதில்லை என்பதற்கு இது நிகரானதாகும். மேற்கண்ட காரணங்களால், இஸ்லாமிய அரசின் அனைத்து கால கட்டத்திலும் இஸ்லாமிய ஆட்சி முறைதான் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை ஒருவர் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையின் செயல் ரீதியான வெற்றியைப் பொருத்தவரை, இரண்டு முக்கிய விஷயங்களின் அடிப்படையில் அது இணையற்றதாக விளங்கியது.

முதலாவதாக: மிகத் தாழ்ந்த அறிவாற்றலின் காரிருளில், தான்தோன்றித் தனமாக குலப்பெருமையும் கோத்திரப் பெருமையும் கொண்டவர்களாக, ரத்தம் சிந்தும் முரட்டுப் போர் புரியும் அறியாமையிலிருந்த அரபு மக்கள் அனைவரையும் இஸ்லாமிய சித்தாந்தம் அறிவாற்றல் எழுச்சிக்கு இட்டுச் சென்றது. இஸ்லாம் என்ற ஒளியின் பிரகாசத்தில் அவர்கள் மறுமலர்ச்சி அடைந்தார்கள். அவர்களிடம் ஏற்பட்ட இந்த உதயம் அரபு தேசத்துக்கு மட்டும் இல்லாது முழு உலகிலும் பரவியது. இஸ்லாம் என்ற ஒளியினை உலகெங்கிலும் எடுத்துச் செல்லும் மகத்தான பணியில் முஸ்லிம்கள் விரைந்து செயல்பட்டார்கள். பாரசீகத்தையும், ஈராக்கையும், சிரியாவின் நிலப்பரப்பையும், எகிப்து தேசத்தையும், வட ஆப்பிரிக்க நாடுகளையும் இஸ்லாமிய மயமாக்கும் செயல்பாங்கில் முஸ்லிம்கள் தங்களது கரங்களை நுழைத்தார்கள். இந்த தேசங்களிலுள்ள அனைத்து மக்களும் தங்களுக்கென்று மதத்தையும் தேசியத்தையும் மொழியையும் கலாச்சாரத்தையும், பண்பாடுகளையும், மரபுகளையும் பெற்றவர்களாக இருந்தார்கள். ஒவ்வொருவரும் மற்றவர்களிலிருந்து வேறுபட்டவர்களாகவே இருந்தார்கள். பாரசீகர்களின் தேசியம், சிரியாவின் ரோமர்களிடமிருந்தும், எகிப்து தேசத்தின் கோப்ட் (ஊழிவள) தேசியத்திலிருந்தும், வட ஆப்பிரிக்க நாகரீகமற்ற பழங்குடி சமுதாயத்திலிருந்தும் வேறுபட்டதாக இருந்தது. ஒருமுறை அவர்கள் இஸ்லாத்தின் நிழலில் வாழ்ந்து அதை புரிந்து கொண்டவுடன் அவர்கள் அனைவரும் அதை தழுவிக் கொண்டு விட்டார்கள். மேலும் ஒரே தேசத்தினராக முஸ்லிம் உம்மாவாக மாற்றமடைந்து விட்டார்கள். ஆகவே, இந்த மக்களையும் அவர்கள் தேசிய தன்மைகளையும் உருக வைத்து ஒன்றிணைத்து ஒரே சமுதாயமாக மாற்றிய இஸ்லாமிய அறிவார்ந்த தலைமை மகத்தானதும் ஈடு இணையற்றதுமாகும். அக்கால கட்டத்தின் போக்குவரத்து சாதனம் ஒட்டகமாகவும், தொலைதொடர்பு சாதனம் நாவின் பேச்சாகவும், எழுத்துக் கலை எழுதுகோளோடு மட்டும் நின்றிருந்த நிலையில்தான் இந்த மகத்தான சாதனை படைக்கப்பட்டது.

எனினும் அல்பத்ஹ்(வெற்றி) என்பது மக்களின் அறிவும் இயற்கை தன்மையும் அவர்களை எதன் பக்கம் வழிகாட்டுகிறதோ, அந்த வழியை அடைந்து கொள்வதற்கு தடைகளாக இருக்கும் பௌதீக தடைகளை அகற்றுவதாகவே இருந்தது. இதன் காரணமாக மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் இணைந்தார்கள். இதற்கு மாறாக, அநீதமான முறையில் ஆக்கிரமிப்பை செய்து வெற்றி கொள்ளப்படும் நாட்டவர்கள் வெற்றி கொண்டவர்களை அந்நியர்களாகவே கருதுவார்கள். உதாரணமாக, மேற்கத்திய ஆதிக்கவாதிகளால் கீழை நாடுகளில் நிறுவப்பட்ட காலனி ஆதிக்கம் எந்தவித பயனையும் விளைவிக்காமல் பல ஆண்டுகள் நீடித்தது. வஞ்சம் நிறைந்த மேற்கத்திய கலாச்சாரத்தின் ஆதிக்கம் இல்லாதபட்சத்தில், வெகு சடுதியில் அழியப் போகின்ற அதன் முகவர்களின் (யுபநவெ) அடக்குமுறை இல்லாதபட்சத்தில், கண் இமைக்கும் நேரத்திற்கு முன்பாகவே சித்தாந்தத்திலும் அதன் ஆட்சி முறையிலும் இஸ்லாம் மறுபிரவேசம் செய்துவிடும். ஆகவே பல்வேறு இன மக்களை ஒருங்கிணைத்து ஒன்றாக்கி இஸ்லாமிய உம்மாவாக, மாற்றிய இஸ்லாமிய அறிவார்ந்த தலைமை ஒப்பற்றதாகும். காலனி ஆதிக்கவாதிகள் விளைவிக்கும் நாசம், தீமை ஆகியவற்றையும் மீறி, கொள்கையை சிதைக்கவும் சிந்தனையில் நஞ்சு கலக்கவும் அவர்கள் தீட்டும் திட்டங்களையும் மீறி, இந்நாள்வரை இந்த மக்கள் முஸ்லிம்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். நியாயத்தீர்ப்பு நாள்வரை இந்த மக்கள் ஒரே இஸ்லாமிய உம்மாவாகவே நிலைத்திருப்பார்கள். இஸ்லாத்தில் இணைந்த மக்களோ அல்லது ஏதேனும் ஒரு இனக்குழுவோ இஸ்லாத்திலிருந்து வெளியேறிய நிகழ்வு இஸ்லாமிய வரலாற்றில் ஒருபோதும் நடந்தேறியதில்லை.

அந்தலுஸ் (Andalus - ஸ்பெயின்) முஸ்லிம்களைப் பொருத்தவரை அவர்கள் ரோமின் கிருஸ்தவ திருச்சபை நீதிமன்றத்தால் (Court of Inquisition) படுகொலை செய்யப்பட்டார்கள். கில்லோட்டின் (Guillotine) என்ற தலை வெட்டும் எந்திரங்களால் பல்லாயிரம் முஸ்லிம்கள் சிரம் துண்டிக்கப்பட்டு மாண்டு போனார்கள். நெருப்பு குண்டத்தில் இட்டு பொசுக்கப்பட்டார்கள். புகாரா, காகஸஸ், துர்கிஸ்தான் ஆகிய பகுதிகளைச் சார்ந்த முஸ்லிம்களும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்கள் அடைந்த அதே நாசகார அழிவையே சந்தித்தார்கள். இந்த மக்கள் இஸ்லாத்தைத் தழுவி ஒரே உம்மாவாக ஆகிய பிறகு தங்கள் அகீதாவை பாதுகாக்கும் விடயத்தில் சிரமத்தை சந்தித்த இந்த நிகழ்வு, இஸ்லாமிய அறிவார்ந்த தலைமை அடைந்த வெற்றியின் பரிமாணத்தையும், இஸ்லாமிய அரசு இஸ்லாத்தை நடைமுறைப்படுத்திய பாங்கையும் விளக்கமாக வர்ணிப்பதாக இருக்கிறது.


தொடரும்...

warmcall.blogspot.com

No comments:

Post a Comment