Oct 28, 2011

கேணல் கடாபி: ஒரு சரித்திரத்தின் சரிவு

M.ஷாமில் முஹம்மட்
1942 ஆம் ஆண்டு ஜூன், 7ஆம் திகதி பிறந்த கடாபி தனது வாலிப பருவத்தில் இராணுவத்தில் இணைந்தார். அன்றைய லிபிய மன்னரான முஹம்மத் இத்ரீஸ் அஸ்ஸனூஸி என்பவர் சிகிச்சைக்காக துருக்கி சென்றிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 1969 ஆம் ஆண்டு தனது 27 வது வயதில் இராணுவ சதிப் புரட்சி மூலம் லிபியாவின் ஆட்சியை கைப்பற்றினார்.
இவரின் காலத்தில் ரஷிய சோசலிஷம் களந்த அரபு இனத் தேசியவாதத்தை முழங்கியவரான எகிப்திய ஜனாதிபதி -இவரும் இராணுவ சதிப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியவர் – கமால் அப்துல நாசரின் பரந்த அரபு தேசியவாதத்தினால் அல்லது ”நாசரிஷம்” என்று அழைக்கப்பட்ட சோசலிஷமும் அரபு தேசியவாதமும் களந்த கோட்பாட்டால் தாக்கமுற்ற கடாபி முஸ்லிம் அரபு உலகில் மேற்கின் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை கமால் அப்துல் நாசரின் வழிநின்று தானும் கடுமையாக எதிர்த்தார்.
கடாபி லிபியாவின் நிர்வாகத்தை கைப்பற்றி சில மாதங்களில் இவருக்கு எதிரான மற்றுமொரு புரட்சியை லிபியாவில் இவர் முறியடித்தார் என்று சொல்லப்படுகின்றது அதை தொடர்ந்து , நாட்டின் முக்கிய நிர்வாகம் முழுவதும் தனக்கு நன்கு விசுவாசமான உறவினர்களை கொண்டு கட்டியமைத்தார். இதன்போது தான் உருவாக்கிய மிகவும் பரந்த பாரிய புலனாய்வு அமைப்பின் ஊடக தினமும் லிபிய மக்களை கண்காணித்து வந்தார்.
கடாபி லிபியாவை இராணுவ சதிப் புரட்சி மூலம் கைப்பற்றும்போது இருந்த மோசமான பொருளாதார நிலையிலிருந்து லிபியாவை மீட்டார் பொருளாதார முறைமையில் பலமாற்றங்களை அறிவித்தார். தனது சோஷலிச அரபு தேசியவாத மற்றும் ஆபிரிக்க தேசியவாத தத்துவத்தை விளக்கும் The Green Book எனும் புத்தகத்தை 1975 ஆம் ஆண்டு எழுதினார். அதில் ”மூன்றாவது சர்வதேச தத்துவம்” என்ற தத்துவம் ஒன்றை முன்வைத்தார் அதுதான் நாட்டின் யாப்பு என்றும் கூறும் அளவுக்கு சென்றது . நாட்டில் எண்ணெய் அகழ்வு மற்றும் ஏற்றுமதியில் ஈடுபடும் நிறுவங்கள பெரும்தொகையை லிபிய மக்களுக்கு வழங்க வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்றார். நாட்டின் பொருளாதரத்தை டொலரை புறம்தள்ளி தங்கத்தை மையமாக கொண்டதாக மாற்றும் நடவடிக்கையில் இறங்கினார் .
லிபியாவின் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு பதிலாக அவர்களை முதலீடுகளின் பங்குதாரர்கள் என அறிவித்தார், பிற்காலத்தில் பல இலவச திட்டங்களை அறிவித்து லிபியாவின் மக்கள் அனைவருக்கும் இலவச சுகாதாரம் , மருத்துவம் , இலவச கல்வி , இலவச மின்சாரம், வட்டியற்ற கடன், வாகன கொடுப்பனவு அதாவது லிபிய நபர் ஒருவர் வாகனம் ஒன்றை வாங்க நினைத்தால் அதற்கு 50 % கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் , திருமணம் முடித்தால் வாழ்க்கை செலவுக்கான பெரும்தொகை பணம் வழங்கப்படும் என்றும் பல பெருளாதார திட்டங்களை அறிவித்தார். லிபியாவை கடனற்ற நாடாக நிர்வகித்தார். தன்னை லிபிய மக்களுக்கு ஒரு சிறந்த சகோதரனாக அறிவித்தார். பலஸ்தீன மக்களின் எழுச்சிக்கு தனது முழு ஆதரவை வழங்கினார். அதேபோன்று கஷ்மீர் மக்களின் விடுதலைப் போராடத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். ஆரம்ப காலத்தில் இஸ்ரேலுடனான போரில் தான் நேரடியாக பங்குபற்றினார், இவைகள் மூலம் கடாபி லிபியாவை தனது சர்வாதிகார ஆட்சியின் பிடியில் தொடந்து வைத்திருக்க முடியும் என்று கருதினார். லிபியாவை 42 ஆண்டுகள் சர்வாதிகாரப் பிடியில்வைத்து அரபு நாடுகளில் நீண்ட காலம் சர்வாதிகார ஆட்சி நடத்திய நபர் என்ற பெருமையையையும் பெற்றார்.
இதன்போது கடாபி தன்னையறியாமலே மிக பாரிய வரலாலற்று தவறு ஒன்றை தொடர்ந்து செய்துவந்தார் . அவர் இஸ்லாமிய கோட்பாடுகள் சிலவற்றில் தனது விருப்பபடி மாற்றங்கள் செய்யுமாறு போதித்தார். இவர் கொண்டிருந்த சோஷலிச அரபு தேசியவாதத்தின் விளைவாகவே அது வெளிப்பட்டது. அல் குர்ஆனிலிருந்து சில வசனங்களை நீக்கவேண்டும் என்றார் அல் குர்ஆனில் அதிகமாக வரும் குல்- கூறுவீராக – என்ற சொற்களை நீக்கவேண்டும் . அந்த சொற்கள் முஹம்மதிற்கு மட்டும் உரியது. இப்பொழுது அந்த சொற்கள் தேவையற்றவை என்றார் . ஹிஜாப் அறியாமைக்கால பழக்கம் என்றார் , இஸ்லாமிய அடிப்படைகளில் ஒன்றான ஹதீஸ்களை அவசியமற்றவை நம்மிக்கை கொள்ள தகுதியற்றவை என்றார். இவற்றை எதிர்த்த வாலிபர்களை படுகொலை செய்தார்.
1978 ஆம் ஆண்டு சில வாலிபர்கள் கடாபியை அணுகி அவரின் தவறுகளை சுட்டிக்காட்டி அவரை மீண்டும் இஸ்லாத்தை நோக்கி அழைக்க துணிவாக சென்றனர். கடாபியுடன் அவர்கள் நான்கு மணித்தியாலங்கள் அவரின் தவறுகளை சுட்டிக்காட்டி அவரின் பெரும் தவறுகளை அவருக்கு உணர்த்தமுயற்சித்தனர் ஆனால் கடாபி கடும் சீற்றம் கொண்டார் தன்னிடம் தவறுகளை துணிவுடன் எடுத்துரைத்த 13 வாலிபர்களையும் அவர்களின் பொறியியல் பல்கலை கழக வளாகத்தில் தூக்கிலிட்டு கொலைசெய்யுமாறு வீர தீர கட்டளை பிறப்பித்தார். இவர்களில் ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற இஸ்லாமிய சர்வதேச அமைப்பை சேர்ந்த வாலிபர்களும் இருந்தனர். பிடித்து வரப்பட இந்த 13 வாலிபர்களும் அவர்களின் சக மாணவர்கள் , ஆசிரியர்கள் , குடும்பத்தினர் முன்நிலையில் தூக்கியிலிடப்பட்டனர். அவர்களில் ஒருவர் சஹீத்தாகாத நிலையில் மீண்டும் தூக்கில் போடப்பட்டு அவரின் மகனின் முன்நிலையில் இராணுவவாகனம் ஒன்றில் கட்டப்பட்டு வீதிகளில் இழுத்து செல்லப்பட்டார். அந்த கொல்லப்பட்ட நபரின் மகனுக்கு தற்போது 28 வயது என்பது குறிப்பிடத்தக்கது. கடாபி தனது 42 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியின் போது படுகொலை செய்தவர்களின் உறவுகள்தான் தற்போது கடாபிக்கு எதிராக போராடியவர்கள்.
கடாபி தன்னை எதிர்க்கும் எவரையும் உயிருடன் இருக்க அனுமதிக்கவில்லை. தனது எதிரிகளை மட்டுமல்ல தமக்கு எதிராக முனுமுக்கும் எந்த நபரையும் அவர் சிறைப்பிடித்து வதைமுகாமில் வதைக்க தயங்கவில்லை கைது செய்யப்படுபவர்கள் எந்த விதமான நீதி விசாரணையும் இன்றி படுகொலை செய்யப்படுவது லிபியாவில் சாதாரண செய்தி என்ற நிலை நீண்ட காலமாகவேன் தொடர்ந்தது. லிபிய மக்கள் இவர் எழுதிய ”பசுமை புரட்சி” உட்பட மற்றைய அனைத்து நூல்களும் லிபியாவின் குப்பை என கூறத் தொடங்கினர் இதனால் நூற்றுக் கணக்கானவர்கள் வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டனர். படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் பிராந்தியத்தில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி குறிப்பாக துனீசியாவினதும் எகிப்தினதும் மக்கள் எழுச்சியின் தாக்கம் லிபியாவை இலகுவாக தாக்கத் தொடங்கியது. துனீசியா மக்கள் எழுச்சி அதை தொடர்ந்த உலகை உலுக்கி நிற்கும் எகிப்திய மக்கள் எழுச்சி என்று தொடரான மக்கள் எழுச்சி போராட்டங்கள் லிபியாவில் போராட்ட அணிகளை உருவாக்கியது.
ஈராக்கின் முன்னாள் சர்வாதிகாரி சதாம் ஹுசைன் அமெரிக்க படைகளால் பிடிக்கப்பட்ட 6 வது நாள், கடாபி தனது பாரிய ஆயுத களஞ்சியங்களை அழித்துவிடுவதாக தெரிவித்து அதனை சர்வதேச நாடுகள் ஆய்வு நடத்தவும் அனுமதித்துடன் அமெரிக்காவின்” பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு” முழு ஆதரவையும் கடாபி தெரிவித்தார். கடாபி 2003 ஆம் ஆண்டில் அணு ஆயுத திட்டத்தை கைவிட்டார். விளைவு 2003 ஆம் ஆண்டில் மேற்கு லிபியா மீதான பொருளாதார தடையை நீக்கியது. கடந்த 7 ஆண்டுகளாக லிபியா மேற்குடன் வர்த்தக உறவை வலுவாக ஏற்படுத்தியது. இதன்போது லிபியாவின் எண்ணெய் கிணருகளை கொண்டுள்ள பகுதிகளில் அரைநிர்வாண , முழு நிர்வாண விடுதிகள் உருவாக்க பட்டமை லிபிய மக்கள் தமது சமூக நீதிக்கு விரோதமாக பார்க்கத்தொடங்கினர்.
லிபியாவை பொறுத்த வரையில் இராணுவத்தின் ஒரு சாரரும் கடாபியின் கூலி படையான ‘மக்கள் இராணுவமும்’ மக்களை கொன்று குவித்தது கடாபி மிகவும் கொடுரமானவர் என்பதற்கு கடந்த 1996 ஆம் ஆண்டிலும் தலைநகரான திரிபோலியில் அமைந்துள்ள அபூ சலீம் சிறைச்சாலையில் ஒரு இரவில் 1200 கைதிகளை எந்தவித கருணையும் இன்றி படுகொலை செய்தமையை குறிப்பிடலாம் இதுவரையும் பல ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளானர் அது பற்றிய தகவல் இனிவெளிவரும். லிபியாவில் பல நூற்றுகணக்கான இஸ்லாமிய புத்திஜீவிகள பல்கலை கழகங்களிலும் ஆய்வு மையங்களிலும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், கடாபியை மிக தெளிவான அல்லாஹ்வின் எதிரியாக லிபிய மக்கள் பார்கின்றனர். இங்கு ஆர்பாட்டங்களில் ஈடுபடும் பல கோத்திரங்களை இணைக்கும் இயக்கமாக ‘மாற்றத்துக்கான லிபிய இஸ்லாமிய இயக்கம்’ பார்க்க படுகின்றது. இந்த இயக்கம் சணூசி என்ற இம்மாமால் சூடான் ,மற்றும் லிபியாவில் இஸ்லாமிய அரசியல் , மற்றும் ஆன்மீக சிந்தனைகளை போதிக்கும் முகமாக 1836 ஆம் ஆண்டு மக்காவில் உருவாக்கப்பட்டது தற்போது இயங்கும் இஸ்லாமிய இயக்கங்கள் பல சணூசி இயக்க சிந்தனையும் தற்கால இயக்கங்களுடைய சிந்தனை போக்கையும் கொண்டுள்ளதாக பார்க்கபடுகின்றது.
லிபிய மக்களின் உள்ளங்களில் இஸ்லாம் நிறைந்துள்ளது. அவர்கள் எப்போதும் அதன் பால் கவரப்பட்டவர்களாகவே உள்ளனர் ஆனால் கடாபிக்கு எதிராக நடைபெற்ற போரை வழிநடத்தியது மேற்கு ஏகாதிபத்தியம்தான் அவர்களின் ஆதரவுடன்தான் கடாபி அகற்றப்பட்டுள்ளார். இதை இரண்டு வகையாக பார்க்கமுடியும் ஒன்று ஏகாதிபத்தியம் தனது இலக்குகளை லிபியாவிலும் பிராந்தியத்திலும் அடைந்துகொள்ள இஸ்லாமிய போராளிகளை ஒன்றிணைத்து பயன்படுத்தியுள்ளது . அதேபோன்று இஸ்லாமிய சக்தி தமக்கு முன்னிருந்த மிகப்பாரிய தடையை தகர்க்க ஏகாதிபத்தியத்தை பயன்படுத்திகொண்டது.
தற்போது லிபியா சர்வதேச வியாபார மாபியாக்களினதும் , சர்வதேச புலனாய்வு பயங்கரவாதிகளினதும் சத்திர சிகிச்சைகளமாக மாறியுள்ள நிலையைத்தான் தற்போது பார்க்கின்றோம் துனிசியா எகிப்து போன்ற நாடுகளில் மேற்கின் மேலாதிக்க நகர்வுகள் புறம்பானதாகவும் லிபியாவில் ஆப்கான ஈராக் , பாகிஸ்தான் மாதிரிகளிலும் அமைய வாய்ப்புள்ளது போன்று தெரிகின்றது. எதையும் உடனடியாக தீர்மானமாக கூறமுடியாவிட்டாலும் எகிப்தை போன்று அதன் அளவுக்காவது பார்க்க முடியாதுள்ளது. கடாபி ஒரு கொடிய சரித்திரத்தின் சரிவு, லிபியா: ஒரு புதிய வரலாற்றின் ஆரம்பம் மட்டுமே .
Sources From ourummah.org

No comments:

Post a Comment