Jan 25, 2013

அல்லாஹ்வின் தீனை அனைத்து தீன்களுக்கும் மேலானதாக மிகைக்கச் செய்தல்


அல்லாஹ்வின் தீனை அனைத்து தீன்களுக்கும் மேலானதாக மிகைக்கச் செய்தல்

هُوَ ٱلَّذِىٓ أَرْسَلَ رَسُولَهُۥ بِٱلْهُدَىٰ وَدِينِ ٱلْحَقِّ لِيُظْهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦ وَلَوْ كَرِهَ ٱلْمُشْرِكُونَ


அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)
(9:33)

உலகில் உள்ள அனைத்து கொள்கைகள், கோட்பாடுகள், மார்க்கங்கள், மதங்கள், வழிமுறைகள் என்ன பெயர் வைத்தாலும் சரி, மக்களால் பின்பற்றப் படுபவை இவை அனைத்தையும் நீக்கி, வழித்து துடைத்து விட்டு, இஸ்லாம் எனும் அல்லாஹ் பொருந்திகொண்ட மார்க்கத்தை, வழிமுறையை நிலை நாட்டுவதே நபி (ஸல்) அவர்களின் பணி என்று அல்லாஹ் கூறுகிறான்.

இங்கு 'மார்க்கம்' - தீன் எனும் வார்த்தையை வெறும் வணக்கமாக, சாஷ்டாங்கம் செய்வதையும், பூஜிப்பதையும், வழிபடுவதையும் தான் குறிக்கும் என்று யாராவது அர்த்தப் படுத்தினால், ஒன்று அவருக்கு சரியான அரபு மொழி பற்றிய அறிவில்லை, அடுத்து, அல்லாஹ்வின் பரந்து விரிந்த சக்தியின் மீதும், அவனது தீன் (உலகின், மறுமையின்) அனைத்துக்கும் வழிகாட்டி என்பதிலும் நம்பிக்கையில்லை என்றுதான் பொருள்.
குர்ஆனுக்கு விளக்கம் தேடும் போது, அந்த குர்ஆனிலேயே விளக்கம் (வேறு இடத்தில்) இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். உதாரணமாக, வுழு முறிவது சம்பந்தமாக வரும் 'மஸ்ஸ' எனும் சொல்லுக்கு இரு கருத்துக்கள் இருக்கின்றன. ஒன்று தொடுதல், மற்றது இச்சையோடு மனைவியை / ஒரு பெண்ணை தொடுதல். குர்ஆன் பெண்ணைத் தொட்டால் வுழு செய்யுமாறு சொல்கிறது. இங்குள்ள தொடுதல் என்பதை சில அறிஞர் வெறுமனே தொடுதல் என்று விளங்கினர். சிலர், அது இச்சையோடு (உறவு கொள்ளும் நோக்கோடு) தொடுதல் என்று விளங்கினார்கள்.

இரண்டாமவர்கள் சொன்ன விளக்கம், குர்ஆனின் பிறிதொரு இடத்தில், அதுவும் பெண்ணை தொடும் விடயமாக அல்லாஹ் பாவித்துள்ள அதே சொல், இச்சையோடு உறவு கொள்ளும் நோக்கோடு தொடுதல் எனும் கருத்திலேயே பாவிக்கப் பட்டுள்ளது என்பதாகும். அதே சொல், மர்யம் (அலை) அவர்கள் கேட்பதாக வருகிறது, " நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்") என்று கூறினார்" -(19:19)

இவ்வாறு வானவர் கூறிய போது, அவர்,
" அதற்கு அவர் (மர்யம்), "எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?" என்று கூறினார். " (10:20)
மேற்கண்ட வசனத்தில், பாவித்த சொல்லும் அதே சொல் தான். எனவே, ஒரு ஆடவன் இச்சையோடு தொடுவதையே இது தெளிவாக காட்டுகிறது. இதுவே ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தும் ஆகும். (நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை முத்தமிட்ட பின் தொழுகைக்கு சென்ற ஹதீஸ் பதியப் பட்டுள்ளது இந்த சட்டத் தீர்ப்புக்கு இன்னொரு ஆதாரம் ஆகும்)

இந்தவகையில், நாங்கள் ஆராய எடுத்துள்ள குர்ஆன் வசனத்தில், எல்லா விடயங்களும் தெளிவாக இருக்கின்றன. ஒரே ஒரு சொல் தான் அங்கும் சில மயக்கங்களை ஏற்படுத்துகிறது. அது 'தீன்' என்ற சொல். அதற்கு சிலர் மார்க்கம், மதம் என்று விளக்கம் கொடுப்பதால், இந்த மேலோங்கச்செய்யும் பணி வெறுமனே மார்க்கத்தை மற்ற மார்க்கங்கள், மதங்களை விட மேலோங்கச் செய்ய என்று சுருக்கி விட்டார்கள். எனவே தான் ஏகத்துவத்தை எத்தி வைத்து விட்டால் மட்டும் போதுமானது என்றும் வாதம் செய்கிறார்கள்.
இனி, நான் மேலே சொன்ன அடிப்படையில், அல்லாஹ் தனது குர்ஆனில் இந்த வார்த்தையை எந்த கருத்தில் பாவித்துள்ளான் என்று பார்த்தால், பிரச்சனை தீர்ந்து விடும்.
بِٱلْهُدَىٰ وَدِينِ ٱلْحَقِّ لِيُظْهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِ
அல் ஹுதா என்றால் நேர்வழி, 'தீனுல் ஹக்' என்றால் சத்திய தீன் - இதை சத்திய மார்க்கம் என்று சொல்லி தமிழில் மொழிபெயர்த்தாலும் அது, அந்த கருத்துச் செறிவு மிக்க வார்த்தையின் சரியான பொருளை ஒரு போதும் தரமாட்டாது. இந்த தீன் எனும் வார்த்தைக்கு அல்லாஹ் கொடுக்கும் கருத்து மிகவும் பரந்தது.
சூரா யுசுபில் அல்லாஹ் யூசுப் நபி (அலை) அவர்கள் தமது தம்பி புன்யாமீனை பிடித்து வைத்துக் கொண்ட சம்பவத்தை கூறுகிறான். அங்கே அங்குள்ள மன்னனது சட்டம் என்ற என்ற விடயத்தை விளக்க 'தீன்' என்ற சொல்லை பாவிக்கிறான். இங்கு தீன் = சட்டம் (அரச சட்டம்)
فِى دِينِ ٱلْمَلِكِ
"ஆகவே அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னின் பொதி(யைச் சோதி)க்கு முன்னே, அவர்களுடைய கொதிகளை (சோதிக்க) ஆரம்பித்தார்; பின்பு அதனை தம்(சொந்த) சகோதரனின் பொதியிலிருந்து வெளிப்படுத்தினார்; இவ்வாறாக யூஸுஃபுக்காக நாம் ஓர் உபாயம் செய்து கொடுத்தோம்; அல்லாஹ் நாடினாலன்றி, அவர் தம் சகோதரனை எடுத்துக் கொள்ள அரசரின் சட்டப்படி இயலாதிருந்தார் - நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகின்றோம்; கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!" (12:76)

இங்கு அல்லாஹ் அதே வார்த்தையை, அதையும் குறிப்பாக ஒரு நபியோடு சம்பந்தப் படுத்தி சொல்லியிருப்பது யாராலும் மறுக்க முடியாத அளவு இந்த சொல்லுக்கான கருத்தை வலுப்படுத்துகிறது.
இப்போது இந்த கருத்தை வைத்துக்கொண்டு இந்த வசனத்தை பாருங்கள்.
"அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் (வழிமுறை, சட்டங்கள் என்பனவற்றுடன்) அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் (வழிமுறைகளையும், சட்டங்களையும்) இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)(9:33)

அரபு மொழி புரிபவர்கள் இதை அழகாக விளங்க கூடியதாக இருக்கும் இன்ஷா அல்லாஹ். இன்னுமொரு வசனத்தை பாருங்கள்:

وَقَـٰتِلُوهُمْ حَتَّىٰ لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ ٱلدِّينُ لِلَّـهِ ۖ فَإِنِ ٱنتَهَوْا۟ فَلَا عُدْوَٰنَ إِلَّا عَلَى ٱلظَّـٰلِمِينَ
" ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் (சட்டம், வழிமுறை) என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்;. ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது." (2:193)

இன்னுமொரு வசனத்தில்,
وَلَا تُؤْمِنُوٓا۟ إِلَّا لِمَن تَبِعَ دِينَكُمْ قُلْ إِنَّ ٱلْهُدَىٰ هُدَى ٱللَّـهِ
""உங்கள் மார்க்கத்தைப் (வழிமுறையை, சட்டங்களை) பின்பற்றுவோரைத் தவிர (வேறு எவரையும்) நம்பாதீர்கள்" (என்றும் கூறுகின்றனர். நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக நேர்வழியென்பது அல்லாஹ்வின் வழியே ஆகும்;." (3:73)

எனிவே, 'தீன்' எனும் இந்த சொல் மார்க்கம், வழிமுறை, சட்டங்கள் என்ற மூன்று விடயத்தையும் பிரதானமாக உள்ளடக்கி இருப்பதை குர்ஆனிலேயே நாம் காணலாம். குர்ஆனை விட குர்ஆனுக்கு வேறு யார் விளக்கம் தரக்கூடியவர் இருக்கிறார்கள்?

இந்த தீனை மேலோங்கச் செய்வது என்றால், மார்க்கத்தை (மதம் என்ற கருத்தில் மட்டும்) மேலோங்கசெய்வது மட்டும் தான் என்று நினைப்பது, அதை பரப்புவது, அல்லாஹ் நபிக்கு (ஸல்) கொடுத்த பாரிய பொறுப்பை தட்டிக்கழித்து தனக்கு சாதகமான விடயங்களுக்குள் மட்டும் அல்லாஹ்வின் மார்க்கத்தை சுருக்கிக் கொள்ள முயற்சிப்பதே ஆகும். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

No comments:

Post a Comment