Mar 2, 2013

செத்துப் போன கிளிக்கு சிங்காரித்து என்ன பயன் ?

மூன்று தசாப்த இனவாத யுத்தத்தின் முற்றுப்புள்ளியை முல்லைத்தீவின் நந்திக்கடல் களப்பில் இட்டதன் பின்னர் ஒரு தொடர்ச்சியான விசாரணைக்கான அழுத்தத்தை ஐநாவின் மனித உரிமை கமிஷன் இலங்கை அரசு மீது இட்டுக்கொண்டு வருகின்றது .

ஆனால் இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை அரச படைகள் நடந்து கொண்ட விதம் சரியா தவறா ? என்றவிடயம் ஒரு பக்கம் இருக்க யுத்தக் குற்றம் என்ற தூண்டிலில் சர்வதேச சட்டம் என்ற இரையை இட்டு, விரும்பியோ அல்லது விரும்பாமலோ அதை விழுங்க வைத்து விசாரணை எனும் ஆப்படித்து தீர்ப்பு எனும் சதிக்கு விதி என்ற பெயரிட்டு விடுவதா ? அல்லது ஆதார அச்சப்படுத்தல் மூலம் ஒரு இராஜ தந்திர கட்டுப்பாட்டில் இலங்கை அரசை கொண்டு வந்து ஒரு நாகரீக அடிமைத்துவ உழைப்பை இலங்கை அரசிடமிருந்து ஐ .நா சபை எதிர்பார்க்கிறதா ? இந்தக் கேள்விகள் சிலருக்கு அர்த்தமற்றதாக இருக்கலாம் ஆனால் ஐ .நா .சபையை பற்றி நீங்கள் புரிந்து கொள்ள இப்படி இரு வினாக்களை கேட்டுவிட்டே விடயத்துக்கு வரவேண்டியுள்ளது .

சுருக்கமாக சொன்னால் யாருக்காகவோ ஒரு குறித்த 'அசைன்மெண்டை ' நிறைவேற்ற துள்ளியமான திட்டங்களோடு ஐ .நா சபை துடிக்கின்றது என்பதுதான் நான் சொல்லவரும் உண்மை . அந்தவகையில் யார் இந்த ஐ .நா சபை ? எனும் வினாவுக்கு நீங்கள் விடையை தெரிந்து கொண்டால் இந்த ஐ .நாவின் விசாரணை என்ற வண்ட வாளம் உண்மை என்ற தண்டவாளத்தில் ஏறி விடும் .

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் சர்வதேச அமைதிக்காக அமைக்கப் பட்ட பொது நிறுவனம் என்பது தான் அனேகமாக எல்லோரும் அறிந்தது .ஆனால் நீதி ,நியாயம் என்ற போர்வையினில் அநீதி மறைக்கப்பட்ட அதன் அதர்ம வடிவம் பற்றி உலகம் ஏமாந்து போனது என்பது புரிந்தும் புரியப்படாத ஒரு உண்மையாகும் .

' ஹிட்லர் ' அழிந்தாலும் 'ஹிட்லரிசத்தை கூட்டாக வாழவைப்போம் ' என்ற ஏகாதிபத்திய விதியை கௌரவ தோற்றத்தில் சர்வதேச மயப்படுத்தல் என்பதற்கு துணை போனதுதான் ஐ .நா இதுவரை செய்துள்ளது . அந்த வகையில் இந்த ஐ .நா. சபைக்கு நான் கொடுக்கும் வரைவிலக்கணம் இது தான் .

'ஏகாதிபத்திய அதர்மத்தில் உலகை பங்காளியாக்கி அநியாயத்தை ,நியாய வடிவத்தில் காட்சிப்படுத்தி சந்தர்ப்பத்துக்கு ஏற்றால் போல் சம்பவங்களை தனக்கு சாதகமாக காட்டி தனக்கான இலாபங்களை அறுவடை செய்ய ஏகாதிபத்தியத்தால் அமைக்கப் பட்ட ஒரு சர்வதேச நிறுவனம் ஐ .நா .சபை ' என்று கூற முடியும் .

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் வல்லரசு கோட்பாடு வலுப்பெற்ற நிலையில் இந்த ஐ .நாவை மீறிய சக்திகளாக நேட்டோ ,மற்றும் வார்சோ ஒப்பந்தங்கள் பனிப்போரின் கொடும் பிடிக்குள் உலகை ஆட்டுவித்த போது 'வீட்டோ 'என்ற மகுடித்தாளத்தில் ஆடி வல்லரசுகளின் பெட்டிப்பாம்பாக அடங்கி விடுதல் என்பது தான் ஐ.நாவின் வரலாறு . அதாவது ஊருக்கு உபதேசம் என்பதும் அது சிலருக்கில்லை என்பதே ! அந்த வகையில் கொள்கையளவில் ஐ .நா .சபை கையாலாகாத தோல்வி நிறுவன வடிவம் .

அணு ஆயுதங்கள் , இரசாயன ஆயுதங்கள் , பயலோஜிகள் ஆயுதங்கள் என வகை தொகையற்று சிலர் தயாரிப்பார்கள் பரீட்சிப்பார்கள் ,பயன் படுத்துவார்கள் ! இன்னும் சிலர் அது பற்றி மூச்சு விடவும் கூடாது !? தடை நிபந்தனைகள், குற்றங்கள் யாருக்காக பிரயோகிக்க வேண்டும் என்பதைக்கூட இந்த வல்லரசுகளே தீர்மானிக்குமாம் !

முதலாளித்துவம் , கம்யூனிசம் என்ற இரு கொடும் பேய்களின் பொண்டாட்டியாய் இந்த ஐ .நா பணியாற்றினாலும் அதன் உண்மையான விசுவாசம் என்னவோ இந்த முதலாளித்துவத்தோடு தான் ! இந்த உண்மை உலகத்திற்கு தெளிவாக தெரிந்தது கம்பியூனிசத்தின் வீழ்ச்சியின் பின்னர் தான் .

அந்த வகையில் யுத்தக் குற்றம் ,மனித உரிமை மீறல் என்பன உலகில் இலங்கையில் மட்டுமா கண்ணுக்கு தெரிந்த விடயம் !? வியட்நாமில் , பலஸ்தீனில் ,ஆப்கானில் ,ஈராக்கில் ,ஏன் மியன்மாரில் ,இந்தியாவில் என நீண்டு செல்லும் பட்டியலில் இலங்கை குறிப்பாக குறிவைக்கப் பட்டுள்ளது தமிழர் நலனுக்காக என்று யாரும் நினைத்தால் அப்படியான ஏமாளிகள் கணக்கில் ஐ .நா .சபை இன்னும் உயிர் வாழ்கின்றது .

No comments:

Post a Comment