Aug 28, 2013

உடல் உறுப்புகளை தானம் செய்வது பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது

உடல் உறுப்புகளின் தானம் என்பது  உயிருடன் இருக்கும்போது செய்தல் மற்றும் இறந்தபின்  செய்தல் என்று இரு வகைப்படும்.
உயிருடன் இருக்கும் போது தானம் செய்தல்
உயிருடன் இருக்கும்போது சில உடல் உறுப்புகளை தானம் செய்ய நிபந்தனைகளுடன் இஸ்லாம் அனுமதியளிக்கிறது. இஸ்லாமிய கண்ணோட்டத்தில் உயிருடன் இருக்கும்போது தானம் செய்பவர்  தன்னுடைய உடலுக்கு முழு உரிமையாளர் ஆவார். ஒருவருடைய கண், காது, கை போன்ற உடல் உறுப்புகள் இன்னொருவரால் சிதைக்கப்படவோ அல்லது அகற்றப்படவோ செய்தால் அதற்கான ஷரியத் சட்டத்தை நாம் அறிந்தே வைத்துள்ளோம். கண்ணுக்கு கண் — பல்லுக்கு பல் அல்லது இழப்பீட்டுத் தொகை பெற்றுக்கொள்ளுதல் அல்லது அந்த நபரை முழுமையாக மன்னித்து விடுதல் போன்ற விருப்பத் தேர்வை எடுத்துக்கொள்ள பாதிக்கப்பட்டவருக்கு இஸ்லாம் முழு அனுமதி வழங்கியுள்ளது. இதிலிருந்து உயிருடன் இருக்கும்போது  முழு உடலுக்கும் அவரே உரிமையாளர் என்பதை இஸ்லாம் சுட்டிக்காட்டுகிறது. எனவே ஒருவர் உயிருடன் இருக்கும்போது தன்னுடைய சில உடல் உறுப்புகளை தானம் செய்வதில்  தடை இல்லை என்றாலும் சில உறுப்புகளை தானம் செய்ய ஷரியத் அனுமதிக்கவில்லை என்பதையும்  விளங்கிக்கொள்ள வேண்டும்.
உயிருடன் இருக்கும்போது உறுப்புகளை தானம் செய்பவர் பேண வேண்டிய விதிமுறைகள்
உறுப்புகளை தானம் செய்பவரின் உறுப்புகள் அகற்றப்படும்போது அவருடைய  உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய  எந்த செயலையும் அனுமதிக்கமுடியாது. எனவே இருதயம், நுரையீரல், கல்லீரல் போன்ற உறுப்புகளை தானம் செய்ய இயலாது. இதுபோன்ற மரணம் ஏற்படுதல் தொடர்பான எந்த உறுப்புகளையும் தானம் செய்ய அனுமதியில்லை. அதைப்போன்று ஒருவர் இரத்ததானம் செய்யும்போது குறிப்பிட்ட அளவைவிட அதிகப்படியான இரத்தத்தை தானம் செய்வது கூடாது. பலகீனமான நிலையில் உள்ள ஒருவர் இரத்ததானம் செய்வதின் மூலமோ, உறுப்புகளை தானமாக கொடுப்பதன்மூலமோ அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனில் அவர் தானம் கொடுப்பது தடை செய்யப்பட்டதாகும்.
وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ
நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள்.      (அந்நிஸா : 29)
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:-
وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ، عَذَّبَهُ اللهُ بِهِ فِي نَارِ جَهَنَّمَ……
…எவர் தன்னை எந்த பொருளைக்கொண்டு கொலை செய்துகொள்கிறாரோ அந்த பொருளைக்கொண்டே நரக நெருப்பில் அல்லாஹ்  அவரை  வேதனை செய்வான்.                                                       (முஸ்லிம்)
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:-
مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ، فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ، فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ، فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا
மலையின் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவர் கூராயுதத்தை  தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.                          (அபூ ஹுரைரா(ரலி), புகாரி)
தனக்குத்தானே மரணம் ஏற்படும் விதமான செயலை ஒருவர் அனுமதிப்பதும் கொலையிலேயே அடங்கும். இஸ்லாத்தில் தற்கொலை மிகப்பெரிய பாவச்செயல் என்பதால் உறுப்புகளை தானம் செய்ய நேர்ந்தால் மரணம் சம்பவிக்கும் என்று அறிய வந்தால் உறுப்புகளை தானம் செய்ய அனுமதியில்லை. மேலும் உயிருடன் இருக்கும்போது   தன்னுடைய விதைப்பை, கருவகம்   ஆகியவற்றை ஒருபோதும் தானம் செய்ய அனுமதியில்லை. அது உயிருக்கு ஆபத்து விளைவிக்காவிட்டலும் சரியே. குழந்தை உருவாகும் பாக்கியத்தை இழந்து விடும் செயலை மேற்கொள்ள இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. நபி صلى الله عليه وسلم அவர்கள் இதை தடை செய்துள்ளார்கள்.
كُنَّا نَغْزُو مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَيْسَ مَعَنَا نِسَاءٌ، فَقُلْنَا: أَلاَ نَخْتَصِي؟ فَنَهَانَا عَنْ ذَلِكَ
எங்களுடன் துணைவியர்  எவரும்   இல்லாத  நிலையில் நபி  صلى الله عليه وسلمஅவர்களுடன் நாங்கள் ஒரு போரில் கலந்து     கொண்டிருந்தோம். எனவே நபி صلى الله عليه وسلمஅவர்களிடம்நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து)க் கொள்ளலாமா?என்று கேட்டோம். அதற்கு அவர்கள் அப்படி செய்யவேண்டாமென்று எங்களைத் தடுத்தார்கள்.                      (புகாரி)
விந்து உற்பத்திக்கு  ஒரு விதைப்பை போதுமானது என்பதால், ஆண்மை நீக்கம்  ஏற்படாது என்ற நிலையில் இரண்டு விதைப்பைகளில் ஒன்றை தானம் செய்யலாம். அதன் மூலம் விந்து உற்பத்திக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று வாதிடுபவர்களின் கூற்று முற்றிலும் இஸ்லாத்திற்கு விரோதமானதாகும்.  ஏனெனில் இவை குழந்தைகள்  உருவாக தேவைப்படும் உயிரணுக்கள் உற்பத்தியாகும் ஆலைகளாக திகழ்கின்றன. மரபுரீதியாக ஒருவரின் குணாதிசயங்கள், உருவ அமைப்பு  போன்றவை உயிரணுக்கள் உற்பத்தியாகும் மூலத்திலிருந்தே நிர்ணயிக்கப்படுகின்றன. எனவே உயிரியல் அடிப்படையில் தானம் செய்தவரே  தந்தை என்ற நிலைக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே  ஷரியத் அடிப்படையில் பார்க்கும்போது உறவு முறையை தீர்மானிப்பதில் சிக்கல்களை தோற்றுவிக்கிறது.
 நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:-   
مَنِ انْتَسَبَ إِلَى غَيْرِ أَبِيهِ أَوْ تَوَلَّى غَيْرَ مَوَالِيهِ، فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ
எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோஎவர் தம்  உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக்கொள்கிறாரோஅவர்கள்மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய,மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும் !                                                                                           (இப்னுமாஜா)
مَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ، وَهُوَ يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبِيهِ، فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ
யார் தம் தந்தை அல்லாத ஒருவரை அவர் தம் தந்தை அல்ல என்று தெரிந்து கொண்டே தந்தை என்று கூறுவாரோ அவர் மீது சொர்க்கம் தடை செய்யப்பட்டதாகிவிடும்என்று நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்.                (புகாரி, முஸ்லிம்)
பெற்றோரை தீர்மானிப்பதில் ஏற்படும் இத்தகைய  சிக்கல்களை அனுமதிக்க இயலாது என்பதாலும் தன்னுடைய தந்தையல்லாத ஒருவரை தந்தையாக ஏற்றுக்கொள்ள இயலாது என்பதாலும் விதைப்பை, கருவகம்  போன்றவற்றை  தானம் செய்வதும் தானமாக பெற்றுக்கொள்வதும் ஹராமாகிவிடுகிறது. மேற்கூறியவைகளில் அடங்காத கண்,  கை, ஒரு சிறுநீரகம் போன்றவற்றை உயிருடன் இருக்கும்போது தானம் செய்வதில் இஸ்லாமிய மார்க்க அடிப்படையில்  தடை இல்லை.
மரணத்திற்கு பின் உடல் உறுப்புகளை தானம் செய்தல்
மரணத்திற்கு பிறகு உடல் உறுப்புகளையோ அல்லது மருத்துவ ஆராய்ச்சிக்காக முழு உடலையோ  தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி இல்லை. ஏனெனில் உயிருடன் இருக்கும்போது உறுப்புகளை தானம் செய்வதை மரணத்திற்குப்பின் தானம் செய்வதோடு ஒருபோதும் ஒப்பிட முடியாது. ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவரே அந்த உடலுக்கு முழு உரிமையாளர் ஆவார். ஆனால் ஷரியத் அடிப்படையில்  மரணத்திற்குப்பின்  அவருக்கு அந்த உடல் உரிமையில்லை. அதேபோன்று மற்றெவரும் அந்த உடலுக்கு உரிமை கொண்டாட முடியாது. அந்த உடலை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யவேண்டியதுதான் அவர்களின் பொறுப்பே தவிர, அந்த உடலுக்கு யாரும் உரிமையாளர் ஆக முடியாது. எனவே மரணித்தவரின் உடல் உறுப்புகளையோ அல்லது முழு உடலையோ தானம் செய்யும் உரிமையை யாரும் பெறமுடியாது.
முஸ்லிம் ஒருவர் உயிருடன் இருக்கும்போது தன்னுடைய சொத்துக்களை மரணத்திற்கு பின் முழுமையாக தானமாக கொடுத்துவிடவேண்டும் என்று வசிய்யத் செய்ய அனுமதியில்லை. மூன்றில் ஒரு பங்கு சொத்துக்களையே  அவ்வாறு செய்ய இயலும். அப்படியே அவர் வசிய்யத் செய்திருந்தாலும்  அவருடைய விருப்பத்திற்கு மாற்றமாக இஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தின் அடிப்படையிலேயே பாகப்பிரிவினை செய்யப்படும். மரணித்தவர் உயில் எழுதி இருந்தாலும் அதன் அடிப்படையில்   தீர்ப்பளிக்கப்படமாட்டாது. அதேபோன்று வாரிசுதாரர்கள் அவரின் சொத்துக்களைதான்   இஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தின் அடிப்படையில் அடைந்து கொள்ளமுடியுமே தவிர அவருடைய உடலுக்கு உரிமைபெற்றவராகி தங்களுடைய விருப்பம்போல் எதுவும் செய்து விட முடியாது.
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:-
كَسْرُ عَظْمِ الْمَيِّتِ، كَكَسْرِهِ حَيًّا
   மரணித்து விட்டவரின் உடல் எலும்பை முறிப்பது அவர் உயிருடனிருக்கையில் (எலும்பை) முறிப்பது போலாகும்.
                                                                                     (அபூதாவூது,அஹ்மது, இப்னு மாஜா)
لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ فَتُحْرِقَ ثِيَابَهُ، فَتَخْلُصَ إِلَى جِلْدِهِ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ
உங்களில் ஒருவர்ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து அவரது சருமம்வரை சென்றடைதல் என்பது, கப்று மீது அவர் உட்காருவதைவிட அவருக்குச் சிறந்ததாகும்                          (அபூஹுரைரா(ரலி), முஸ்லிம்)
நபி صلى الله عليه وسلم  அவர்கள் கபுறின்மீது அமர்ந்திருந்தவரைப்பார்த்து கூறினார்கள்:- 
انْزِلْ مِنَ الْقَبْرِ لَا تُؤْذِي صَاحِبَ الْقَبْرِ
கபுறிலிருந்து இறங்குங்கள்;  கபுறுவாசிக்கு தீங்கு செய்யாதீர்கள்.  (அஹ்மத்)
மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து மரணித்தவரை எவ்வாறு கண்ணியப்படுத்தவேண்டும் என்பதை விளங்கிக்கொள்ளலாம். மரணித்தவரின் எலும்புகளை முறிப்பது,  உயிருடன் இருக்கும்போது அவரின் எலும்புகளை முறிப்பது போன்றாகும் என்பதிலிருந்து மரணித்தவரின் உடலை அறுப்பதற்கு அனுமதி இல்லை என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
எனவே கண் தானம், பிரேத பரிசோதனை போன்றவற்றிற்காக உடலை அறுப்பதற்கு அனுமதியில்லை என்றிருக்க மரணத்தவரின் உடல் உறுப்புகளையும் முழு உடலையும் தானம் செய்ய எவ்வித அனுமதியும் இல்லை. போஸ்ட்மார்ட்டம்(பிரேத பரிசோதனை)  செய்யாமல் இருந்தால் குற்றங்களை கண்டறியமுடியாது என்பதால்  பிரேத பரிசோதனைக்காக மரணித்தவரின்  உடலை அறுப்பதும், தலையை உடைப்பதும் தவறில்லை என்பதாக சிலர் வாதிடுகின்றனர். இஸ்லாத்தில் ஒரு செயல் கூடுமா அல்லது கூடாதா  என்பதற்கு  அதனால் கிடைக்கும் பயன்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்க நமக்கு அனுமதியில்லை. ஒரு விஷயம் தடுக்கப்பட்டிருந்தால் அதை செய்ய முஸ்லிம்களுக்கு அனுமதியே கிடையாது. மரணித்தவரின் உடலில் சிறு கீறலைக்கூட  ஏற்படுத்த அனுமதியில்லை என்றிருக்க இத்தகைய செயலை எவ்வாறு அனுமதிக்க முடியும்? உயிருடன் இருப்பவரை முழு உடல் பரிசோதனை மூலம் ஆராய்ச்சி செய்யும் முறைகள் மேம்பாடு அடைந்து கொண்டிருக்க, மரணித்தவரின் உடலை அறுக்காமல் ஆராய்ச்சி செய்து உண்மை நிலையை கண்டறியும்  முறையை மேம்படுத்த இயலாதா?  இத்தகைய மருத்துவ ஆராய்ச்சிகள் மேற்கொள்வதைப்பற்றி  சிந்திக்காமல் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட பிரேத பரிசோதனையை ஏன் ஊக்குவிக்க வேண்டும்?
نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النُّهْبَى وَالمُثْلَةِ
    கொள்ளையடிப்பதையும்> ஒருவரின் அங்கங்களைச் சிதைப்பதையும் நபி صلى الله عليه وسلم  அவர்கள் தடை செய்தார்கள். 
(அப்துல்லாஹ் இப்னு யஸீத்(ரலி), புகாரி)
உயிருடன் இருப்பவரின் அங்கங்களை சிதைப்பதும், மைய்யித்தை  கெட்ட எண்ணத்துடன் சிதைப்பதும்தான் தவறு; மரணித்தவரின் அங்கங்களை உறுப்புகள் தானத்திற்காகவும்  ஆராய்ச்சிக்காகவும்  சிதைப்பது குற்றமாகாது என்ற வாதம் முற்றிலும் தவறாகும். உயிருடன் இருப்பவர்களின் அங்கங்களை சிதைப்பதை இஸ்லாம் தடுப்பது போன்று மரணித்தவர்களின் உடல்களை சிதைப்பதை இஸ்லாம் தடுக்கிறது. நல்ல காரியங்களுக்காக மைய்யித்தை சிதைப்பது தவறில்லை என்பது இஸ்லாத்திற்கு முற்றிலும் விரோதமானதாகும். மைய்யித்தை காபிர்கள் அருவருப்பாகவும் கண்ணியக் குறைவுடனும் பாவிப்பது  போலல்லாமல் முஸ்லிம்கள் அதை கண்ணியமாகவும் அமானிதமாகவும் கையாள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. முஸ்லிம் நாடுகளில் இவற்றை அனுமதித்து  நடைமுறைப்படுத்தியும் வருகிறார்களே! அவ்வாறிருக்க நாமும் ஷரிய்யத்தில் சற்று விட்டுக் கொடுத்தால் என்ன? என்று கூறுவதும் அடிப்படையற்றதாகும். இஸ்லாத்தை முழுமையாக விட்டுக்கொடுத்து குப்ரை நடைமுறைப்படுத்துபவர்களுக்கு இதெல்லாம் ஒரு சாதாரண விசயமே. மேலும் அறிஞர்கள் இதில் கருத்துவேறுபாடு கொண்டுள்ளார்கள் என்று கூறி  தகுதியற்ற அறிஞர்களின் அரைகுறை ஆராய்ச்சியினை முஸ்லிம்களாகிய நாம் ஒருபோதும் பின்பற்ற இயலாது..
ஒருவருக்கு வாழ்வளிக்க  நாம் நிர்பந்திக்கப்படுவதால் இறந்தவரின் கண்களை தானம் செய்வதில் என்ன தவறு என்ற கேள்வியும்  அர்த்தமற்றதாகும். இதயம், நுரையீரல், கல்லீரல் சிறுநீரகம் போன்ற உறுப்புகள் இல்லாமல் ஒருவர் உயிர் வாழ முடியாது. ஆனால் கண் இல்லாமல் உயிர் வாழமுடியும். எனவே கண்தானம் பெற்றவர் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காகவோ அல்லது நாம் இறந்தாலும் நம் கண்களாவது இந்த உலகை சிலகாலம் பார்த்துக்கொண்டிருக்கட்டுமே என்ற மடமையான ஆசைக்காகவோ ஷரிய்யத்திற்கு மாற்றமாக நடந்துகொள்ள நமக்கு அனுமதியில்லை.
இதிலிருந்து மரணத்திற்கு பிறகு உடல் உறுப்புகளையோ அல்லது மருத்துவ ஆராய்ச்சிக்காக முழு உடலையோ  தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்பதை தெளிவாக அறிய முடிகிறது. முஸ்லிம்களில் யாராவது  மரணத்திற்கு பின் தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு  வசிய்யத் செய்திருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கோ அல்லது உரிமை பெற்றவருக்கோ அதை நிறைவேற்றிவைக்க அனுமதியில்லை. ஏனெனில் ஷரியத்திற்கு மாற்றமான வசிய்யத் செல்லுபடியாகாது என்பதால் அதை நிறைவேற்றிவைப்பவர்  குற்றம் இழைத்தவராகிவிடுகிறார். மரணித்தவர் மட்டும் முஸ்லிமாக இருந்து அவருடைய பெற்றோர்,மனைவி, பிள்ளைகள், குடும்பத்தார்கள்  காபிர்களாக இருந்தால் அவரின் உறுப்புகளையோ முழு உடலையோ  குடும்ப விருப்பப்படி தானமாகக் கொடுக்க முஸ்லிம்கள் இடமளிக்கக் கூடாது. சில சந்தர்ப்பங்களில்  இஸ்லாத்தின் அடிப்படையில் செயல்படமுடியாமல்  குப்ர் சட்டங்கள் நம்மை நிர்பந்திப்பதால் அவர் உயிருடன் இருக்கும்போதே சட்ட ரீதியான சிக்கல்கள் ஏற்படாமல் முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவேண்டியதும் அவசியமாகிறது. இஸ்லாத்தைப் பொறுத்தவரை முஸ்லிமுக்கு காபிர் வாரிசாக முடியாது என்பதையும் நினைவில் கொண்டு நாம் செயலாற்றவேண்டும்.
                                                                                                                                       [பாலஸ்தீன அறிஞர் அப்துல் கதீம் ஸல்லூம் (ரஹ்) அவர்கள் அரபியில் எழுதிய – Islamic Verdict on:  Cloning - Human organ transplantation – Abortion-Test tube Babies - Life support   systems – Life and death -  حكم الشرع في : *الاستنساخ * نقل الأعضاء * الإجهاض * أطفال الأنابيب *     أجهزة الإنعاش الطبية * الحياة والموت        என்ற  நூலில் கொடுக்கப்பட்ட விளக்கங்களைக் கொண்டு இக்கட்டுரை தொகுக்கப்பட்டது]

No comments:

Post a Comment