ஒரு ஆறாத காயமாய் ஆகிவிட்ட அந்த அக்டோபர் 1990 களின் நினைவுகள் எப்போதும் என் விழி ஓரத்தில் ஒரு துளி கண்ணீரை விட்டுச் செல்வது தவிர்க்க முடியாதது .கலீல் ஜிப்ரான் போல் அந்த ஆழமான சோகத்தை ஒரு கவிதையில் வடித்து விடும் புலமை எனக்கில்லை . அந்த இரண்டு மணிநேரம் ..... பிறந்து வளர்ந்து உணர்வுகளோடு உறவாடிய அந்த பூமியை விட்டும் சென்று விட வேண்டுமாம் ....
அந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு நடந்த அந்த சம்பவங்கள் என்னை விட்டு விலக மறுத்தன .நிர்ப்பந்த வெளியேற்றம் மூலம் கிடைத்த அகதி அந்தஸ்து போல விடாப்பிடியாக இருந்தது ! ஒரு தேசிய விடுதலை என்ற சுய அழிவு வன்முறை அரசியல் பலரது அர்த்தமற்ற தியாகங்களில் சிலரது சுயநலத்துக்காக பயன்பாட்டுப் போனது .இந்த விடயத்தை ஒரு சராசரி மனிதனாக இருந்து என்னால் பார்க்க முடியாது ஏனென்றால் நான் முஸ்லிம் .
"தாயின் மடியில் ஆடும் கால்கள் துள்ளி ஓடி வரும் பூவின் விரல்கள் குதிரை மீட்ட பயணம் தொடங்கி விடும் .... ஏங்கிடும் துவக்கு வீழ்ந்திடும் முன்னே புதுக்கரங்கள் அதை ஏற்கும் ..." என்ற விடுதலைப் புலிகளின் பாடல் போலவே 'ஹிட் அண்ட் ரன்னில் ' தொடங்கிய சிறுபிள்ளைதனமான இராணுவக் கலாச்சாரம் பக்தி பூர்வமாக அவர்களால் கட்டி வளர்க்கப் பட்டது .காட்டும் இலக்கை நோக்கி கண் மண் தெரியாமல் சுட்டால் ஈழம் கிடைத்துவிடும் ! என்ற அர்த்தமற்ற நம்பிக்கையில் சிறுவர் போராளிகள் முதல் பலர் களமிறக்கப் பட்டிருந்தனர் .
அலறி மாளிகை முதல் செங்கோட்டை வரை மட்டுமல்ல பாகிஸ்தான் முதல் வாசிங்டன் வரை இந்த சூடான இரத்தத்தில் சுகம் கண்டனர் ! இஸ்ரேல் முதல் சீனாவரை இந்த படுகொலை வியாபாரத்துக்கு பங்காளி ஆகினர். எதிலும் இலாபம் என்ற முதலாளித்துவ 'மாபியா ' அரசியலில் மனித உயிர்கள் முழு உலகத்தைப் போலவே இலங்கையிலும் மதிப்பிழந்து போனது ஆச்சரியமில்லைதான் .அர்த்தமற்ற இந்த அயோக்கியத் தனத்தில் வலுக்கட்டாயமாக முஸ்லீம் உம்மத்தும் முடிச்சுப் போடப்பட்டது .
'துவக்கு துவக்கு துவக்குப் போரை துவக்கு துவக்கு ..' என அரசியல் மேடைகளில் தூபமிட்டவர்கள் 'பார்லிமென்ட் பொலிடிக்ஸில் ' பக்குவமாய் 'பொசிசன் ' எடுத்துக் கொண்டனர் ! இந்த ஏமாற்றம் கண்டு நீண்டு வளர்ந்த துரோகிகள் 'லிஸ்டோடு' கொலைக் கலாச்சாரம் கொடிகட்டிப் பறந்தது . 'இவர்களை மண்டையில் போடுவதால் தமிழீழத் தாய் புன்சிரிப்பாள் ' என்ற புது மொழியோடு 'சோனியை '(முஸ்லிமை ) GUN பொயிண்டில் இம்சிப்பதால் தமிழீழத் தாய் பேரானந்தம் அடைவாள் !? என்ற வரிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டது மிகப் புதுமையானது !
'கேட்டது தமிழ் ஈழம் கிடைத்தது ஜப்பான் JEEP ! ' என துரையப்பாவுக்கு சொன்ன தமிழ் போராளிகளும் ,அந்த முதலாளித்துவ சதுரங்கத்தில் 'சோசலிசத்' தமிழ் ஈழம் ! என பொய்க்கால் குதிரை ஓட்டிய தோழர்களும் , நேற்று இவர்களால் ' கிளைமோர் ' வைக்கப் பட்ட ஆமிக்காரன் 'டிபென்டரில் ' வந்து SCOT கொடுக்க இன்று ஜப்பான் கார்களில் போவதும் ,போதாக் குறைக்கு ஆட்சிக் கதிரைக்காக அடிபுடிப் படுவதும் . துரோகத்தின் வரைவிலக்கணம் பற்றி மீண்டும் இவர்களுக்கு சந்ததியாரும் , உரும்பிராய் சிவகுமாரனும் வந்து வகுப்பெடுக்க வேண்டும் போல்தான் இருக்கிறது .ஆனால் இவர்களால் பலவந்தமாக சொந்தமண்ணில் இருந்து விரட்டப்பட்ட நான் மட்டும் அன்றிலிருந்து இன்று வரை விடாப்பிடியாக முஸ்லிமாகவே இருக்கிறேன்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்...)
http://khandaqkalam.blogspot.ae/2013/09/part-01.html?spref=fb
No comments:
Post a Comment