முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளான நோன்பு, ஹஜ் போன்றவற்றை தீர்மானிப்பதற்கு இஸ்லாம் பிறையை அளவுகோலாக்கியுள்ளது. அதேபோன்று பிறையை மையமாக வைத்து முடிவுசெய்யப்படும் சந்திர நாட்காட்டி மூலமாக ஸகாத் கணக்கீடு,இத்தா,போர் விலக்கப்பட்ட மாதங்கள் போன்றவற்றை தீர்மானிக்கவேண்டும் என்பதையும் இஸ்லாம் வரையறுத்திருக்கிறது.
يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ
(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்:“அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜை அறிவிப்பவையாகவும் உள்ளன. (அல் பகரா:189)
إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அல்லாஹ்வுடைய (பதிவுப்)புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். அதில் (துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய) நான்கு மாதங்கள் புனிதமானவையாகும். (அத்தவ்பா:36)
هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ مَا خَلَقَ اللَّهُ ذَلِكَ إِلَّا بِالْحَقِّ يُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ
அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசம், சந்திரனை ஒளிவுள்மாகவுளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(சந்திரனாகிய) அதற்கு மாறிமாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை.அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான். (யூனூஸ்:5)
முஸ்லிம்களின் நாட்காட்டி சந்திரனை அடிப்படையாகக்கொண்டே அமையவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. மேற்கண்ட வசனத்தில் சந்திரனை மனிதர்களுக்கான நாட்காட்டி என்பதாக அல்லாஹ் سبحانه وتعالىகூறுகிறான்.இன்று உலகை ஆதிக்கம் செலுத்தும் கிரிகோரியன் நாட்காட்டி(Gregorian calendar – Solar calendar) துல்லியமற்றதாகும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. கடந்த காலங்களில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டதிலிருந்து இதன் தரத்தை விளங்கிக் கொள்ளலாம்.தகவல் தொடர்பிற்காக முஸ்லிம்கள் இந்த நாட்காட்டியை பயன்படுத்துவது தவறில்லை என்றாலும் பிறையை அடிப்படையாகக்கொண்ட துல்லியமான சந்திர நாட்காட்டியின்(Lunar calendar) முக்கியத்துவத்தை முஸ்லிம்கள் அறியாமல் இருப்பது வருந்தத்தக்க விசயமாகும். மேற்கத்திய நாகரீகத்தின் மயக்கத்தின் காரணமாக முஸ்லிம் உலகு இஸ்லாமிய நாட்காட்டிக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. சில முஸ்லிம் நாடுகள் சந்திர நாட்காட்டியை பின்பற்றுவதாக கூறிக்கொண்டாலும்,அவர்கள் வடிவமைத்துள்ள நாட்காட்டிகள் தேசியவாத எல்லைக்கோட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பிராந்திய நாட்காட்டிகளாகும்.எனவே இவர்களின் ஹிஜ்ரா நாட்காட்டியில் ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் மத்தியிலான தேதியிலும் மாறுபாடு உள்ளது.மனித சமுதாயம் பின்பற்றமுடியாத இத்தகைய நாட்காட்டிகளால் கிரிகோரியன் நாட்காட்டியை போற்ற வேண்டிய நிலைக்கு இந்த உம்மத்தை இவர்கள் ஆளாக்கியுள்ளனர்.
இஸ்லாமிய வரலாற்றில் நடந்த மாபெரும் நிகழ்வான ஹிஜ்ரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஹிஜ்ரா நாட்காட்டியை உமர்(ரலி) அவர்கள் இந்த உம்மத்திற்கு நற்கொடையாக வழங்கினார்கள். இதன் காரணமாக இந்த உம்மத்தின் வரலாறு தொடர்ந்து பாதுகாக்கப்பட்டதோடு, சீரான ஒரே சமுதாயமாக இந்த உம்மா சுடர்விட்டு பிரகாசிக்கவும் வழிவகுத்தது.
ஆரம்ப காலத்தில் முஸ்லிம்கள் சந்திரனை மையமாக் கொண்டு மாதங்களை கணக்கிட்டு வந்தனர்.ஆனால் ஆண்டுகளின் கணக்கை,முன்பு மக்காவில் நடைமுறையில் இருந்துவந்த யானையாண்டு மூலமாக குறிப்பிட்டு வந்தார்கள்.கலீஃபா உமர்(ரலி) அவர்களின் காலத்தில் எழுந்த சில சிக்கல்களை தீர்த்து வைப்பதற்கு நாட்காட்டியை உருவாக்கவேண்டிய அவசியமான சூழல் ஏற்பட்டது. ஒரு மனிதர் இன்னொருவருவரிடம் ஷவ்வால் மாதத்தில் திரும்ப அளிப்பதாக கூறி கடன் வாங்கியிருந்தார். கடன் வாங்கியவர் அதை நிறைவேற்றாததால்,உமர்(ரலி) அவர்களிடம் இதுபற்றி முறையிடப்பட்டது. எந்த ஆண்டின் ஷவ்வால் மாதத்தில் கடனை திரும்ப அளிப்பதாக வாக்குறுதி கூறினீர்கள் என்பதாக உமர்(ரலி)அவர்கள் வினவியபோதுதான் இந்த பிரச்சனையின் ஆழம் உணரப்பட்டு இஸ்லாமிய நாட்காட்டி ஒன்றை உருவாக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மேலும் இஸ்லாமிய அரசான கிலா ஃபத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பாக்தாத் மாகாணத்திற்கு ஆளுநராக அபூமூஸா அல்அஷ்அரீ(ரலி) அவர்களை கலீபா உமர்(ரலி) அவர்கள் நியமித்திருந்தார்கள். அபூமூஸா அல்அஷ்அரீ(ரலி)அவர்கள், உமர்(ரலி) அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்கள்.அதில் உங்களிடமிருந்து வரும் கடிதங்களில் தேதிகள் இல்லாதாதால் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக முறையிட்டிருந்தார்கள். எனவே உமர்(ரலி)அவர்கள் இஸ்லாமிய நாட்காட்டியை உருவாக்குவது தொடர்பாக ஸஹாபாக்களை கலந்தாலோசித்தார்கள்.அப்போது ஸஹாபாக்களால் கூறப்பட்ட நான்கு ஆலோசனைகளும், நபி صلى الله عليه وسلم அவர்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டிருந்ததன.
فَلَمَّا جَمَعَ عَلَى ذَلِكَ قَالَ قَوْمٌ أَرِّخُوا لِلْمَوْلِدِ وَقَالَ قَائِلٌ لِلْمَبْعَثِ وَقَالَ قَائِلٌ مِنْ حِينِ خَرَجَ مُهَاجِرًا وَقَالَ قَائِلٌ مِنْ حِينِ تُوُفِّيَ
1) நபி صلى الله عليه وسلمஅவர்கள் பிறந்த ஆண்டு 2) இவ்வுலகைவிட்டு பிரிந்த ஆண்டு 3) நபியாக தேர்வு செய்யப்பட்ட ஆண்டு 4)ஹிஜ்ரா மேற்கொண்ட ஆண்டு (ஃபத்ஹுல் பாரி)..அலி(ரலி) அவர்கள் தெரிவித்த ஆலோசனையின்படி ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுகளின் கணக்கை துவங்குவது என்று இறுதியாக முடிவு செய்யப்பட்டது.
جَمَعَ عُمَرُ النَّاسَ فَسَأَلَهُمْ مِنْ أَيِّ يَوْمٍ يُكْتَبُ التَّارِيخُ؟ فَقَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ: «مِنْ يَوْمِ هَاجَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَرَكَ أَرْضَ الشِّرْكِ» فَفَعَلَهُ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ
உமர் (ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து ‘வருடத்தை எந்த நாளிலிருந்து துவங்கலாம்?’ என்று ஆலோசனை கேட்டார்கள். அப்போது அலீ(ரலி) அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் இணைவைப்பு பூமியை விட்டு ஹிஜ்ரா சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்’ என்றார்கள். அவ்வாறே உமர் (ரலி) அவர்கள் செய்தார்கள். (ஸயீத் பின் முஸய்யப் , ஹாகிம்)
مَا عَدُّوا مِنْ مَبْعَثِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلاَ مِنْ وَفَاتِهِ، مَا عَدُّوا إِلَّا مِنْ مَقْدَمِهِ المَدِينَةَ
மக்கள் (ஆண்டுக் கணக்கை) நபி صلى الله عليه وسلمஅவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்டதிலிருந்தோ அவர்களுடைய மறைவிலிருந்தோ கணக்கிடவில்லை; மதீனாவுக்கு(ஹிஜ்ரா செய்து) வந்ததிலிருந்தே கணக்கிட்டார்கள். (ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), புகாரி)
முஸ்லிம்களின் நாட்காட்டி ஹிஜ்ரா நடந்தேறிய ஆண்டிலிருந்து துவங்கவேண்டுமென்று உமர்(ரலி) அவர்களால் முடிவு செய்யப்பட்டதிலிருந்து ஹிஜ்ரத்தின் முக்கியத்துவத்தை நாம் விளங்கிக் கொள்ளலாம்.நபி صلى الله عليه وسلمஅவர்கள் மக்காவில் இஸ்லாத்தை நிலைநாட்ட உரிய ஆதரவு கிடைக்காததால் அதைச்சுற்றி வாழ்ந்த பல்வேறு கோத்திரத்தார்களிடம் இஸ்லாத்தை எடுத்துரைத்து ஆதரவு கோரினார்கள்.இக்கடின முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்காமல் பெரும் இன்னல்களை சந்தித்தார்கள். மதீனாவிலிருந்த வந்த அவ்ஸ்,கஸ்ரஜ் கோத்திரத்தார்களிடமிருந்து இஸ்லாமிய அரசை நிறுவ நபி صلى الله عليه وسلمஅவர்களுக்கு உதவி கிடைத்தது.எனவே நபிصلى الله عليه وسلمஅவர்கள் அதற்குரிய முன்னேற்பாடுகளுடன் ஹிஜ்ரா மேற்கொண்டு மதீனாவில் இஸ்லாமிய அரசை நிறுவினார்கள். எனவே இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட இந்த ஆண்டிலிருந்து இஸ்லாமிய ஆண்டை துவங்குமாறு உமர்(ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
நபி صلى الله عليه وسلمஅவர்கள் ஹிஜ்ரா மேற்கொண்டு ரபீவுல் அவ்வலில் தான் மதீனா வந்தடைந்தார்கள். ஆனால் ரபீவுல் அவ்வல் மாதத்தை வருடப்பிறப்பின் முதல் மாதமாக வைத்திருக்க வேண்டும். அறியாமைக் கால மக்கள் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தை வைத்திருந்ததாலும், ஹஜ்ஜை முடித்துவிட்டு ஹாஜிகள் அப்போதுதான் திரும்புவார்கள் என்பதாலும் முஹர்ரம் மாதத்தை முதல் மாதமாக்கலாம் என்று உஸ்மான்(ரலி) அவர்கள் கூறியதன் அடிப்படையில் உமர்(ரலி) அவர்கள், முஹர்ரம் மாதத்தை வருடத்தின் முதல் மாதமாகக்கொண்ட ஹிஜ்ரா நாட்காட்டியை ஏற்படுத்தினார்கள்
ثُمَّ قَالَ بِأَيِّ شَهْرٍ نَبْدَأُ فَقَالَ قَوْمٌ مِنْ رَجَبٍ وَقَالَ قَائِلٌ مِنْ رَمَضَانَ فَقَالَ عُثْمَانُ أَرِّخُوا الْمُحَرَّمَ فَإِنَّهُ شَهْرٌ حَرَامٌ وَهُوَ أَوَّلُ السَّنَةِ وَمُنْصَرَفُ النَّاسِ مِنَ الْحَجِّ
எந்த மாதத்தை முதல் மாதமாகக் கணக்கிடுவது என்றபோது, சிலர் ரஜப் என்றும் சிலர் ரமலான் என்றும் குறிப்பிட்டனர். உஸ்மான் (ரலி) அவர்கள் முஹர்ரம் என்று கூறினார்கள். ”ஏனெனில் இந்த மாதம் கண்ணியமிக்க மாதம் (போர் தடை செய்யப்பட்ட மாதம்) என்பதாலும் மக்கள் ஹஜ் செய்து விட்டு திரும்பும் போது வரும் முதல் மாதம் என்பதாலும் முஹர்ரம்” என்று குறிப்பிட்டார்கள். (ஃபத்ஹுல் பாரி)
முஸ்தஃபா கமால் பாஷா என்ற கைக்கூலியைக்கொண்டு ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டிருந்த முஸ்லிம்களை மேற்கத்திய காஃபிர்கள் சிதறடித்தனர்.இதன் காரணமாக தேசியவாத அடிப்படையில் முஸ்லிம் நாடுகள் தோற்றம் பெற்றன. ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக உலக முஸ்லிம்களின் ஒரேஅமீராக இருந்துவந்த கலீஃபாக்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட இஸ்லாமிய நாட்காட்டியை கிலாஃபத்தை வீழ்த்திய பிறகு (ஹிஜ்ரி 1342, ரஜப் 28) முஸ்தஃபா கமால் பாஷா முடக்கினான்.
தேசியவாத மயக்கத்தில் இந்த உம்மத்தை மூழ்கடித்த முஸ்லிம் ஆட்சியாளர்கள், இஸ்லாமிய நாட்காட்டியை பின்பற்ற இயலாத நாட்காட்டி என்ற அளவிற்கு உருமாற்றிவிட்டனர்.சில முஸ்லிம் நாடுகள் ஹிஜ்ரா நாட்காட்டியை பின்பற்றுவதாக கூறிக்கொண்டாலும்,அவர்கள் வடிவமைத்துள்ள நாட்காட்டி தேசியவாத எல்லைக்கோட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மண்டல நாட்காட்டிகள் ஆகும்.சர்வதேச நாட்காட்டி என்ற நிலையிலிருந்து தரம் தாழ்த்திய இவர்களின் சந்திர நாட்காட்டியில் ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் மத்தியிலான தேதியிலும் மாறுபாடு உள்ளது.மனித சமுதாயம் என்றுமே பின்பற்ற முடியாத இத்தகைய நாட்காட்டிகளால், இந்த முஸ்லிம் உம்மா ஒரே சமுதாயம் என்ற நிலையிலிருந்து கீழிறங்க வழிவகுத்துள்ளனர். இனி மீண்டும் வரவிருக்கின்ற முஸ்லிம்களின் ஒரே தலைமையான கிலாஃபா அரசால் மட்டுமே நம்முடைய முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஹிஜ்ரா நாட்காட்டிக்கு உயிரோட்டம் அளிக்க இயலும் என்பதில் ஐயமில்லை.
Sources : http://sindhanai.org/
No comments:
Post a Comment