Jul 9, 2014

இஸ்ரேல் – காசா எல்லையில் யுத்த ஏற்பாடுகள்!




காசா – இஸ்ரேலிய எல்லை பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் இருந்து தாக்குதல்கள் பெரிய அளவில் தொடங்கிவிட்டன.
காசா பகுதியில் இருந்து ஹமாஸ் இயக்கம் நேற்று (திங்கட்கிழமை) ஒரு இரவில் மட்டும் 80 ராக்கெட்டுக்களை இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஏவியது . இன்று காலையில் இருந்து மதிய நேரத்துக்குள் 110 ராக்கெட்டுகள் இஸ்ரேலின் பகுதிக்குள் வெவ்வேறு இடங்களில் வந்து விழுந்தன.
இதிலிருந்து ஹமாஸ் இயக்கம் தாக்குதல்களை மேலும் தீவிரமாக்க உள்ளது என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல்கள் ஒரு மினி யுத்தமாக மாறத் தொடங்கியுள்ளன.

இஸ்ரேலிய பிரதமர் பென்யாமின் நெதன்யாஹூ, ஹமாஸ் இயக்கத்துக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு இன்று காலை உத்தரவு கொடுத்துள்ளார். காசா பகுதியில் ஹமாஸ் இயக்கம் மீது நடத்தப்படும் ராணுவ நடவடிக்கைக்கு இஸ்ரேலிய ராணுவம் வைத்துள்ள பெயர் – ஆபரேஷன் சாலிட் ராக் (Operation Solid Rock)!

40,000 ரிசர்வ் ராணுவ வீரர்களை இஸ்ரேலிய – காசா எல்லைப் பகுதிக்கு அனுப்பி வைக்கும் உத்தரவு, இன்று மதியம் பிரதமர் அலுவலகத்தில் இருந்து இஸ்ரேலிய ராணுவ தலைமையகத்துக்கு போய் சேர்ந்தது. அதையடுத்து எல்லைப் பகுதயில் ராணுவம் குவிக்கப்படும் வேலைகள் துரித கதியில் நடப்பதாக தெரியவருகிறது.

காசா பகுதியில் இருந்து ஹமாஸ் நடத்தும் ராக்கெட் தாக்குதல்கள் நேற்றுடன் 4-வது தொடர்ச்சியான வாரமாக தொடர்கின்றன. ஆனால், நேற்றும் இன்றும்தான் அதிகளவில் ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன.
காசா எல்லையில் இருந்து 40 கி.மீ. தொலைவுக்குள் உள்ள அனைத்து இஸ்ரேலிய நகரங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நகரங்கள் அனைத்திலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, யுத்த சூழ்நிலை காணப்படுகிறது.

ஹமாஸ் ஏவும் ராக்கெட்டுகள் அதிகபட்சம் 40 கி.மீ. தொலைவு வரை சென்று விழக்கூடியவை என்பதால், அந்த ஏரியாவுக்குள் உள்ள இஸ்ரேலிய நகரங்கள், மற்றும் கிராமங்கள் அனைத்திலும் பொதுமக்கள் பாவனைக்காக பங்கர்கள் (பதுங்கு குழிகள்) அமைக்கப்படும் வேலைகள் துரிதகதியில் நடைபெற தொடங்கியுள்ளன.

இந்த 40 கி.மீ. ஏரியாவுக்குள் வரும் ஆஷ்டொட் துறைமுகத்தில் இருந்து அனைத்து கப்பல்களும் இன்று வெளியேற்றப்பட்டு விட்டன. அதையடுத்து, துறைமுக ஆபரேஷன் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
பிரதான போக்குவரத்து பாதைகள் மூடப்பட்டுள்ளன. ஆஷ்கெல்டன் – ஸ்டெரொட் இடையிலான ரயில்வே பாதை மூடப்பட்டு, ரயில் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டு விட்டது.

ஆஷ்கெல்டன் நகரில் இருந்து டெல்-அவிவ் வரை செல்லும் நெடுஞ்சாலையும், எல்லையில் இருந்து 40 கி.மீ. தொலைவுவரை மூடப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

மொத்தத்தில், யுத்தம் தொடங்கப்படுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் இஸ்ரேலிய – காசா எல்லை அருகே செய்யப்படுகின்றன.

KhaibarThalam

No comments:

Post a Comment