Sep 12, 2015

சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 2)

1940 செப்டம்பரில், ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய பாசிச நாடுகள் ஒன்றிணைந்து போர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டன. உலகம் முழுவதையும் மூவருமாக ஒன்றிணைந்து ஆக்கிரமிப்பதுதான் அவ்வொப்பந்தத்தின் ஒரே குறிக்கோள்.
 
1941 இல் உக்ரைனை பிடித்துவிட்டு, கீவ் நகருக்குள் நடத்திய போரில், 5 லட்சம் சோவியத் மக்களை கொன்று குவித்துவிட்டது ஜெர்மன் படை. அப்பாவி மக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டவுடன், மீதமுள்ளோர் ஜெர்மன் படைக்கு சேவை செய்ய அடிமைகளாக பிடித்து வைக்கப்பட்டனர். உக்ரைனின் தோல்வி, சோவியத்திற்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. நிலக்கரி, இரும்பு, எரிவாயு மற்றும் தாதுப்பொருட்கள் அனைத்தும் சோவியத்திலிருந்து ஜெர்மனியர்களால் திருடப்பட்டன. உக்ரைனை வீழ்த்திவிட்டு, ஜெர்மன் படைகள் அனைத்தும் சோவியத்தின் இதயமான மாஸ்கோவை நோக்கி முன்னேறின. ஜெர்மனியின் தாக்குதலை சோவியத் யூனியனால் நான்கு வாரங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாது என்று பிரிட்டனும் அமெரிக்காவும் நினைத்தன. இருப்பினும் போரில், சோவியத் உடனே தோற்றுவிடுவதை அவர்கள் விரும்பவில்லை. ஜெர்மனியும் சோவியத்தும் நீண்ட நாட்கள் சண்டையிட்டுக் கொண்டே இருந்தால்தான் இருவரும் மீளமுடியாத அழிவைச் சந்திப்பார்கள். அதனை பயன்படுத்தி உலக வல்லரசாகிவிடலாம் என்பது அமெரிக்காவின் கனவாக இருந்தது.

“ஜெர்மனி வெல்வது போலிருந்தால் சோவியத்திற்கும், சோவியத் வெல்வது போலிருந்தால் ஜெர்மனிக்கும் நாம் உதவ வேண்டும். அவ்வாறு செய்தால்தான், இருவரும் பெருமளவில் செத்துமடிவார்கள்”

என்று அமெரிக்க செனட்டர் ட்ரூமன் வெளிப்படையாகவே பேசினார் (இதே ட்ரூமன் தான் ரூசுவல்டின் மறைவுக்குப் பின்னர் அமெரிக்க அதிபராகி, பனிப்போருக்கு வித்திட்டவர்) அதேவேளையில்,

போருக்குப் பின்னால் பிரிட்டன் மீண்டும் உலகையே காலனியாக்கி மிகப்பெரிய சர்வாதிகார நாடாகிவிடுமோ என்கிற அச்சமும் அமெரிக்காவிற்கு இருந்தது. அதனாலேயே தனது கீழிருக்கும் காலனி நாடுகளை விடுதலை செய்யவேண்டுமென்று பிரிட்டனிடம் கூறியது
அமெரிக்கா.

இந்தோனேசியாவை விடுதலை செய்யச் சொல்லி, அதே நெருக்குதலை நெதர்லாந்துக்கும் கொடுத்தது அமெரிக்கா. இந்தியா, இந்தோனேசியா போன்ற முக்கியமான நாடுகளை எப்படியாவது பிடித்துவிடவேண்டுமென்று நினைத்திருந்தது அமெரிக்கா.
 
போருக்குப் போகலாமா? வேண்டாமா? என முடிவெடுப்பதற்கு முன்னாலேயே, போருக்குப் பின் ஒட்டுமொத்த உலகின் மீது அதிகாரம் செலுத்தப் போவது யார்? என்கிற போட்டி அமெரிக்காவிற்கும் பிரிட்டனிற்கும் உருவாகியது.

ஆனால், பிரிட்டன் மீது ஜெர்மன் நடத்திய வான்வழித்தாக்குதல்களால் லண்டன் மாநகர் உட்பட பிரிட்டனின் பலபகுதிகள் பெரும்சேதத்திற்கு உள்ளாகின. அதனால் பிரிட்டன் நிலைகுலைந்து போயிருந்தது. அச்சூழலினை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா. எப்படியாவது பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா போன்றே, தானும் ஒரு சாம்ராஜ்யத்தை அமைக்க வேண்டுமென்று விரும்பியது ஜப்பான். அதனால் உலக எண்ணை வளத்தில் பாதியளவிற்கு தன்னுள் வைத்திருந்த அமெரிக்கா, ஜப்பானுக்கு எண்ணை தரமறுத்தது. இந்தோனேசியா ஒரு எண்ணை வளமிக்க நாடென்பதால், அதனைப் பிடித்துவிட துடித்துக் கொண்டிருந்தது ஜப்பான். சீனா, மலேசியா, வியட்நாம், கம்போடியா, லாவோஸ் என ஒவ்வொன்றாக ஆக்கிரமித்துக் கொண்டே, 1941 ஜூலையில் இந்தோசீனாவிற்குள் நுழைந்து ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தது ஜப்பான். இந்தோனேசியாவில் எண்ணையைத் தவிர, ரப்பர் போன்ற இயற்கை வளங்கள் குவிந்து கிடப்பதையும் மனதில் வைத்தே முன்னேறியது ஜப்பான்.

Japanese_attack_on_Pearl_Harbor,_Hawaii
 
 
ஜப்பானுக்கு தடைபோடும் விதமாக, ஹவாய் அருகே பியர்ல் ஹார்பரில் தனது போர்க்கப்பல்களை நிறுத்தியிருந்தது அமெரிக்கா. உலகில் யாருமே எதிர்பாராத வண்ணம், 1941 டிசம்பர் 7 இல் பியர்ல் ஹார்பரில் அமெரிக்க கடற்தளத்தை கடுமையாக தாக்கியது ஜப்பான். 2500 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டதுடன், அமெரிக்காவை அக்கடற்தளத்தில் செயலிழக்கவும் செய்தது.
 
மறுநாளே, அமெரிக்காவும் பிரிட்டனும் ஜப்பானுக்கு எதிரான போரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தில், ஜெர்மனியும் அமெரிக்காவுக்கு எதிரான போரினை அறிவித்தது. ‘ஜப்பானை தோற்கடித்தால், வெறும் ஜப்பானை மட்டுமே வென்றதாக இருக்கும். ஆனால் ஜெர்மனியை வென்றால், உலகப்போரையே வென்றதாகிவிடும்’ என்று கருதிய ரூசுவல்ட், ஐரோப்பாவிலேயே கவனம் செலுத்தினார். ஜெர்மனியுடன் நேரடியாக போர்புரிவதை பெருமளவில் தவிர்த்திருந்தாலும், போரில் முன்னணியில் நிற்பது போன்ற தோற்றத்தை தருவதில் மட்டும் முனைப்புடன் செயல்பட்டது அமெரிக்கா.

இதனை நன்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஜப்பான், உலகின் ஆறில் ஒரு பங்கு நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு தொடர்ந்து கிழக்கே முன்னேறிக் கொண்டிருந்தது. தாய்லாந்து, மலேசியா, ஜாவா, போர்னியா, பிலிப்பைன்ஸ், ஹாங்காங், இந்தோனேசியா மற்றும் பர்மா வரை ஆக்கிரமித்தது. இவற்றில் பெரும்பாலான நாடுகளில், பிரிட்டன்-பிரான்சு-அமெரிக்கா போன்ற ஆதிக்க நாடுகளிலிருந்து தங்களை விடுவிக்க வந்தவர்கள் என்றே ஜப்பானியர்களை கருதி வரவேற்றார்கள். அதனால், ஆக்கிரமிப்பும் எளிதாகிப்போனது ஜப்பானுக்கு. இவற்றில் மிகப்பெரிய வெற்றியாக 1942 இல் சிங்கப்பூரில் பிரிட்டன் படைகளையே சரணடைய வைத்தது ஜப்பான்.

முற்றும்.

Thanks maattru

 

No comments:

Post a Comment