Sep 14, 2015

ஈராக் மீதான படையெடுப்பு

ஈராக் மீதான படையெடுப்பு
அபூபக்ர் (ரழி) வரலாறு - பகுதி 19

பொய்த்தூதர்களை ஒரு வழியாக அடக்கி விட்டதன் பின்பு, இப்பொழுது கலீபா அபுபக்கர் (ரலி) அவர்கள், ஈராக்கின் தனது கவனத்தைத் திசை திருப்பினார்கள். இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மிகப் பெரும் எதிரிகளாக விளங்கிய பைஸாந்தியம் மற்றும் பெர்ஸியப் படைகள் முஸ்லிம்களின் ஆட்சிப் பிரதேசத்திற்கு அதிகமான அச்சுறுத்தல்களைத் தந்து கொண்டிருந்தன. பல்வேறு அரச அலுவல்களுக்கு இடையேயும் கலீபா அவர்கள் எவ்வளவு தூரம் இந்த ஈராக் விவகாரத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்தி வந்தார்கள் என்பதைக் கீழ்க்கண்ட சம்பவத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

ஒருநாள் ஒரு நபித்தோழர் தனது குலத்தவர்களில் சிலரைப் பற்றிய பிரச்னையை விவாதிப்பதற்காக அபுபக்கர் (ரலி) அவர்களிடம் வந்தார். இந்த விவகாரத்தைக் கேட்டு அதில் கலீபா அவர்களின் இறுதி முடிவை எதிர்பார்த்திருந்த அவரை நோக்கி, ''இஸ்லாத்தையும், அதனைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்ற முஸ்லிம்களையும் அழித்தொழிப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருக்கும், இரண்டு எதிரிகளைப் பற்றி நான் இங்கு சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது, இந்த அற்பப் பிரச்னையைக் கொண்டு வந்து, எனது கவனத்தைத் திசை திருப்பப் பார்க்கின்றீர்களே.. இது நியாயமா?"" என்று கூறினார்கள்.

ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டின் பொழுது இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளுமாறு பல்வேறு நாட்டு அரசர்களுக்கு அழைப்பு மடல்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவ்வாறானதொரு மடலை ஏந்திக் கொண்டு பெர்ஸியாவின் மன்னர் குஷ்ரூ பர்வேஸ் அவர்களைச் சந்தித்து வழங்குவதற்காக, அப்துல்லா பின் ஹ{தைபா (ரலி) என்ற தோழர் சென்றார். அந்த மடலில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது :

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன். பெர்ஸியாவின் மன்னரான கிஸ்ரா அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் அவர்கள் எழுதிக் கொள்ளும் மடல். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் இன்னும் நேர்வழியைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு இறைவனுடைய ஆசி உண்டாவதாக! அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவனுக்கு இணை துணை ஏதும் இல்லை, முஹம்மத் அத்தகைய இறைவனின் தூதராகவும், அடிமையாகவும் இருக்கின்றார். நான் அல்லாஹ்வின் தூதுத்துவத்தை உங்களுக்கு தெரிவித்து (இஸ்லாத்தின் பால்) அழைப்பு விடுக்கின்றேன், (இத்தகைய பணிக்காகவே) முழு உலக மக்களுக்கும் தூதராக அல்லாஹ் என்னை அனுப்பி வைத்துள்ளான். இந்தப் பூமியில் வசிப்பவர்களின் உள்ளங்களில் இறைவனது அச்சத்தை ஊட்டவும், நிராகரிப்பில் வாழ்கின்ற மக்களுக்கு சத்தியத்தை விளங்கப்படுத்தவுமே என்னை இறைவன் தூதராக அனுப்பி வைத்துள்ளான். (எனவே) இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் மற்றும் அதன் மூலம் நீங்கள் சாந்தியைப் பெற்றுக் கொள்வீர்கள். அதனை நிராகரிப்பீர்கள் என்று சொன்னால், நெருப்பை வணங்கிய குற்றத்திற்காக நீங்கள் பொறுப்பாளியாக (குற்றம் சுமத்தப்பட்டு குற்றவாளியாக மறுமை நாளில்) ஆக்கப்படுவீர்கள்"".

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிய இந்த சத்திய அழைப்பு மடலை பார்த்த மாத்திரத்தில் அதனைக் கிழித்தெறிந்த மன்னர் குஷ்ரூ, யமனின் கவர்னராக இருந்த பதான் என்பவருக்கு ஒரு மடலை எழுதினார். அதில், ஹிஜாஸ் க்கு இரண்டு குதிரை வீரர்களை அனுப்பி, இந்தக் கடிதத்தை எழுதி எனக்கு அனுப்பி வைத்த மனிதரை என்னிடம் அனுப்பி வைக்கும்படி உத்தரவிட்டிருந்தார். மன்னர் குஷ்ரூ வின் கடிதத்தைப் பார்த்த யமனின் கவர்னர் பதான், பாபூயா என்பவரையும், பெர்ஷிய வீரனான கர்கரா என்பவரையும் அனுப்பி, அவர்களிடம் ஒரு மடலையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அனுப்பி வைத்தார். அந்தக் கடிதத்தில் இந்தக் கடிதத்தைக் கொண்டு வரும் தூதர்களுடன் சென்று, மன்னர் குஷ்ரூ அவர்களைச் சென்று சந்திக்கும்படிக் கூறி தெரிவித்திருந்தார். இந்தத் தூதர்கள் இருவரும், தாயிஃப் நகர் வழியாக மதீனாவுக்கு வந்து கொண்டிந்தார்கள். இவர்களது வருகையின் நோக்கம் முழு அரேபியாவுக்கும் இப்பொழுது தெளிவாகத் தெரிந்திருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன் நின்று கொண்டிருந்த பாபுயா, மன்னர்களின் மன்னரான கிஷ்ரா அவர்கள், உங்களை மன்னரது சமூகத்திற்கு அழைத்து வரும்படி யமனின் கவர்னருக்கு இட்ட உத்தரவின் பேரில் நாங்கள் இங்கு வந்துள்ளோம் என்று கூறினார். அந்தக் கடிதத்தில், மேன்மைமிகு எங்களது மன்னரது கட்டளையை ஏற்று நீங்கள் எனது தூதுவர்களுடன் மன்னரது அவைக்கு வருவீர்கள் என்று சொன்னால், எங்களது மன்னர் உங்களை அரசராக ஆக்குவதற்கு பரிந்துரைக்க முடியுமாக இருக்கும் என்பதை வாய்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், யமன் தேசத்து இளவரசனான நான் உங்களையும், உங்களது நாட்டையும் இல்லாமலாக்கி விடுவேன் என்பதனையும் நீங்கள் அறிவீர்கள் என்றும் அந்தக் கடிதத்தில் எச்சரிக்கப்பட்டிருந்தது. நன்றாக முகச்சவரம் செய்து, இன்னும் மீசையை பெரிதாக வளர்த்திருந்த அந்தத் தூதுவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள இயலாத நிலையில் அவர்களை நோக்கிப் பார்வையை வீசிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ''நான் உங்கள் மீது இரக்கப்படுகின்றேன்"" என்று கூறி விட்டு, யாருடைய உத்தரவின் பேரில் உங்களது முகங்கள் இவ்வாறு வெறுமையாக உள்ளன என்று கேட்டார்கள். ''எங்களது இரட்சகரான மன்னர் கிஷ்ரா"" என்று அவர்களிடம் பதில் வந்தது. இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ''மீசையை மழித்துக் கொள்ளுங்கள், தாடியை வளர விடுங்கள்"" என்று அவர்களைப் பார்த்துக் கூறி விட்டு, இன்றைய பொழுதை இங்கேயே நீங்கள் கழித்து விட்டு, நாளை மீண்டும் வந்து என்னைப் பாருங்கள் என்று கூறி விட்டுச் சென்றார்கள்.

மறுநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை குஷ்ருவின் தூதுவர்கள் சந்திக்க வந்த பொழுது, உங்களது மன்னாதி மன்னர் அவரது மகனால் இன்ன இரவில் கொல்லப்பட்டு விட்டார். கொலைகாரனான உங்களது மன்னனிடம் நீங்கள் சென்று, என்னுடைய நம்பிக்கையான இஸ்லாமும், என்னுடைய அதிகாரமும் விரைவில் உங்களது பூமியையும், உலகத்தின் கடைசி முனையையும் அது அடையும் என்று தெரிவியுங்கள் என்று கூறினார்கள். இன்னும், நீங்கள் இஸ்லாத்தைத் தழுவினீர்கள் என்று சொன்னால், உங்களது ஆட்சிப் பிரதேசங்களுக்கு உங்களையே ஆட்சியாளர்களாக நியமிப்போம் என்றும் அவர்களிடம் தெரிவியுங்கள். அந்தத் தூதுவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை விட்டும் பிரிந்து செல்லும் பொழுது, ஒரு இளவரசர் ஒருவர் அன்பளிப்பாக அளித்த தங்கத்தினாலான இடுப்பில் அணியக் கூடிய வார்ப்பட்டை ஒன்றை அவர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பரிசாக அளித்தார்கள். இன்னும் இவர்கள் யமனின் கவர்னரைச் சென்று சந்தித்த பொழுது, நடந்த அத்தனை விபரங்களையும் தெரிவித்ததோடு, ''உண்மையில் அவர் ஒரு இறைவனது தூதராகவே இருக்கக் கூடும்"" என்றும் தெரிவித்தார்கள். அடுத்த சில நாட்களில், மன்னர் படுகொலைக்கு ஆளான செய்தி யமனை வந்தடைந்தது. அத்துடன், அரேபியாவின் விவகாரத்தில் எந்த விதத்திலும் தலையீடு செய்ய வேண்டாம் என்றும் யமனின் ஆட்சியாளருக்கு அறிவுறுத்தலும் வந்தடைந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறப்பெய்வதற்கு முன்னர், பதான் மற்றும் யமனில் வாழ்ந்த பெர்ஸியர்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்;டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெர்ஸியாவின் மன்னர் குஷ்ரு அவர்கள் படுகொலை செய்யப்பட்டதன் பின்பு, ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதில் போட்டா போட்டி நிலவியது. இதில் 12 அல்லது 13 நபர்கள் போட்டியிட்டதில், அவர்களுள் பெண்களும் இருந்தனர். நாடெங்கும் அரசியல் ஸ்திரத்தன்மை நிலவியது. முதலாவது கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்களது காலத்தில், ஈராக் பிரதேசத்தை பெர்ஸியாவின் கவர்னர் ஹெர்மூஸ் அவர்ள் ஆண்டு கொண்டிருந்தார். இவர் அரேபிய மக்கள் மீது தீராத தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டுமிருந்தார். எனவே,அரபுக்களும் அவரை வெறுத்தனர்.

எனவே, அபுபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்பு, ஈராக் பகுதியில் வாழும் முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்குண்டான ஏற்பாடுகளைத் துவங்க ஆரம்பித்தார்கள். இருப்பினும், நாடெங்கும் கிளர்ந்தெழுந்திருந்த பொய்த் தூதுவர்களை அடக்குவதற்கு அவர் முன்னுரிமை கொடுத்ததன் காரணமாக, ஈராக் மீது படையெடுப்பு நடத்துவதற்குண்டான சாத்தியக் கூறுகள் குறைவாக இருந்தன.

இந்த நிலையில், மதனா (ரலி) என்ற நபித்தோழர், இந்தப் பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக முன் வந்ததோடல்லாமல், தனது குலத்தவர்களுக்கு தன்னை அமீராக நியமிக்கும்பட்சத்தில், எல்லைக் கோட்டுப் பகுதியில் இருந்து வரும் தொல்லைகளுக்கு எதிராக தான் போராடத் தயாராக இருப்பதாகவும் கலீபா அவர்களிடம் தெரிவித்தார். மதனா (ரலி) அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதன் பின்பு, மதனா (ரலி) அவர்கள் ஈராக் சென்று போர் செய்ததோடல்லாமல், பெர்ஸியர்களின் வலிமை ஆகியவற்றைக் கணித்ததோடு, அவர்களது தொந்தரவுகளை சற்று மட்டுப்படுத்தியும் வைத்திருந்தார்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)  
 

No comments:

Post a Comment