Sep 13, 2015

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இறுதி வாழ்வு

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இறுதி வாழ்வு, 12 ரபிய்யுல் அவ்வல்
அபூபக்ர் (ரழி) வரலாறு - பகுதி 10


ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஹஜ்ஜத்துல் விதா என்ற இறுதி ஹஜ்ஜை நிறைவேற்றியதன் பின்னால், மதீனா திரும்பிய நாளில் இருந்து, அதாவது ஸஃபர் மாதம் இறுதி அல்லது ரபிய்யுல் அவ்வல் மாதத்தின் ஆரம்ப நாட்களில் இருந்து சுகவீனத்திற்கு ஆளானார்கள். அதுவே அவர்களது இறுதி வாழ்வுக்கான ஆரம்பமாகவும் இருந்தது.

ஒருநாள் நடுஇரவின் பொழுது தனது அடிமையான அபூ முவைஹபா அவர்களையும் அழைத்துக் கொண்டு ஜன்னத்துல் பக்கியை நோக்கிச் சென்ற இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இறைவனின் கட்டளைப்படி அங்கே அடக்கமாகி இருக்கின்ற தனது உறவினர்களுக்காகவும் மற்றும் தனது தோழர்களுக்காகவும் பிரார்த்தனை செய்தார்கள்.

ஜன்னத்துல் பக்கீயின் மத்தியில் நின்று கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள்,

மண்ணறைவாசிகளே..! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டுமாக..! இங்கே உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைக் காட்டிலும் உங்களது நிலை மிகவும் மேலானது. சோதனைகள் இருளின் ஒரு பகுதியைப் போன்று வந்து கொண்டிருக்கின்றன.

அதன் பின்பு தனது அடிமையான முவைஹபா அவர்களின் பக்கம் திரும்பிய இறைத்தூதர் (ஸல்)அவர்கள்,

இந்த உலகத்தின் முடிவில்லாத வாழ்வும் அதன் வளங்களின் திறவுகோள்கள் ஒரு கையிலும், இன்னும் சுவனம் இன்னுமொரு கையிலும் எனக்கு வழங்கப்பட்டு, இவற்றிற்கிடையே எனது விருப்பம் முன்வைக்கப்பட்டுள்ளது. நான் எனது இறைவனின் சங்கையான முகத்தையும், சுவனத்தையும் தேர்வு செய்து விட்டேன் என்றார்கள்.

அபூ முவைஹபா அவர்களோ..! இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! இந்த உலக வாழ்க்கையையும், அதன் வளங்களையும் பெற்றுக் கொள்ளுங்களேன் என்றார்கள்..!

இல்லை..! இல்லை..! நான் எனது இறைவனின் சங்கையான முகத்தையும், சுவனத்தையும் தேர்வு செய்து விட்டேன் என்றார்கள்.

அதன் பின் அங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களுக்காக தொழுது விட்டு, அவர்களுக்காகப் பிரார்த்தனையும் செய்து விட்டுத் திரும்பினார்கள்.

வீட்டிற்குத் திரும்பி வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அங்கு ஆயிஷா (ரலி) அவர்களுக்கு தலைவலி கண்டிருக்கக் கண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் தலைவலி ஆரம்பமாகியது.

ஆயிஷாவே..! எனக்கும் தலைவலி வேதனை எடுக்கின்றது..! என்று கூறினார்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள். அப்பொழுது ஆரம்பித்த தலைவலி நேரம் செல்லச் செல்ல உயர்ந்து கொண்டே சென்றது.

இந்த அளவு வேதனையிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தனது மனைவிமார்களிடம் செல்லக் கூடிய நாட் கணக்கின் படி தவறாது, ஒவ்வொருவரது இல்லத்திற்கும் சென்று வந்தார்கள்.

இப்பொழுது, வேதனையின் உச்சத்தில் இருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தனது மனைவிமார்கள் அனைவரையும் அழைத்து, தனது இறுதிக் காலத்தை ஆயிஷா (ரலி) அவர்களது இல்லத்தில் தங்கிக் கொள்ள அனுமதி கேட்டார்கள். அவர்களும் சம்மதம் தெரிவித்து விடவே, அலி (ரலி) அவர்களது தோளில் ஒரு கையையும், ஃபழ்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களது தோளில் ஒரு கையையும் போட்டுக் கொண்டு, ஆயிஷா (ரலி) அவர்களது வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.

தலைவலியிலிருந்து சற்று நிவாரணம் பெற தலையில் சிறு துண்டை வைத்து கட்டப்பட்டது, இருந்தும் மிகவும் பலவீனமான நிலைக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். எனவே, நடக்க இயலாத அவர்களது பாதங்கள், தரையில் இழுபட்டுக் கொண்டிருந்த நிலையிலேயே ஆயிஷா (ரலி) அவர்களது இல்லம் வந்து சேர்ந்தார்கள்.

சுகவீனமுற்றிருந்த இந்த நிலையிலேயே ஒருநாள், பள்ளிவாசலுக்கு வருகை தந்திருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், மிம்பரில் அமர்ந்தவாறு உஹதுப் போரில் இறந்து போன தனது தோழர்களுக்காக பிரார்த்தனை புரிந்தார்கள்.

பின் அங்கு கூடியிருந்த மக்களிடம் உரையாற்ற ஆரம்பித்தார்கள் :

இறைவன் தனது அடிமைகளில் ஒருவரிடம் இந்த உலக வாழ்க்கையின் வளங்கள், இன்னும் அவனிடம் மீளுதல் இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யும்படிக் கூறினான், அந்த அடியான், தனது இறைவனிடம் மீளுவதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார் என்று கூறினார்கள்.

தனது உற்ற தோழர், ஆருயிர் நண்பர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருவதனங்களில் இருந்து வந்த அந்த வார்த்தையின், அர்த்தப் பொருள் என்ன என்பதை சொல்லாமலேயே விளங்கிக் கொண்ட அபுபக்கர் (ரலி) அவர்களின் கன்னங்களில் இருந்து நீர் முத்துக்கள் உருண்டோடிக் கொண்டிருந்தன.

இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! நாங்கள் எங்களைத் தங்களுக்காக அற்பணம் செய்யக் காத்திருக்கின்றோம், இன்னும் எங்களது பெற்றோர்களையும் கூட..! என்றார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்.

தோழரே..! உங்களை நீங்கள் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

பின்பு, இந்தப் பள்ளிக்குள் மக்கள் நுழைவதற்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கின்ற அனைத்து வழிப் பாதைகளையும் அடைத்து விடுங்கள், அபுபக்கர் (ரலி) அவர்களது வீட்டிலிருந்து வருகின்ற பாதையைத் தவிர என்று கூறினார்கள். அபுபக்கர் அவர்களை விட உதவிகரமாக இருந்த ஒருவரை நான் அறியமாட்டேன் என்றும் கூறினார்கள்.

எனக்கு உற்ற தோழர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படிப் பணிக்கப்பட்டால், நான் அபுபக்கர் அவர்களைத் தான் தேர்ந்தெடுப்பேன் என்றார்கள். இந்தத் தோழமையும், சகோதரத்துவமும் இறைநம்பிக்கையினால் விளைந்ததுவாகும், இவை யாவும் இறைவன் நம்மை ஒன்று கூட்டும் நாள் வரைத் தொடர வேண்டும் என்றும் பிரார்த்தித்தார்கள்.

அதன் பின் முஹாஜிர்களை நோக்கி, முஹாஜிர்களே..! அன்ஸார்கள் செய்திருக்கின்ற உதவிகளை எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள், அவர்களது உதவிக்கு நீங்கள் கடன் பட்டுள்ளீர்கள் என்ற பொருள்பட கூறினார்கள்.

பின்பு இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு நோயின் கடுமை அதிகமாகியது. எனவே, அபுபக்கர் (ரலி) அவர்களையே தொழுகையை முன்னின்று நடத்துமாறு கேட்டுக் கொண்டார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, எனது தந்தை இளகிய மனம் படைத்தவர், திருமறைக் குர்ஆனை ஓதும் போது அவருக்கு அழுகை வந்து விடும். எனவே, பின் நிற்பவர்கள் திருமறைக்குர்ஆனை சரியாகச் செவி மடுக்க முடியாது, எனவே, அவருக்குப் பதில் வேறு ஒருவரை நியமியுங்கள் என்று கூறினார்கள். ஆனால், ஆயிஷா (ரலி) அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், மீண்டும் அபுபக்கர் (ரலி) அவர்களையே தொழ வைக்கும்படி ஏவினார்கள். மீண்டும் ஆயிஷா (ரலி) அவர்கள் வலியுறுத்தியும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்களையே தொழ வைக்கும்படி உத்தரவிட்டார்கள்.

அப்பொழுதிலிருந்து, வியாழன் இரவுத் தொழுகையிலிருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்து நோய்வாய்ப்பட்ட காலத்தில் இருந்து மரணமாகும் வரைக்கும் 17 நேரத் தொழுகைகளை இமாமாக முன்னின்று அபுபக்கர் (ரலி) அவர்கள் நடத்தியுள்ளார்கள்.

ஞாயிற்றுக் கிழமை காலையில் தனது அறையில் இருந்து வெளியில் வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலையில் துண்டு கட்டப்பட்டிருந்தது. அப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்களது தலைமையில் தனது தோழர்கள் கூட்டுத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருப்பதைக் கண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது. அவர்கள் முன்னோக்கி வரவும், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு தோழர்கள் வழி விட்டு ஒதுங்கினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வருவதை அறிந்து கொண்ட அபுபக்கர் (ரலி) தனது தலைமை தாங்கி தொழுகை நடத்திக் கொண்டிருப்பதில் இருந்து பின்வாங்கி, இறைத்தூதர் (ஸல்) அவர்களை இமாமாக முன்னிறுத்த முயன்ற பொழுது, தடுத்து நிறுத்திய இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அபுபக்கர் (ரலி) அவர்களையே தொழுகையை முன்னின்று நடத்துமாறு பணித்தார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களின் வலது பக்கத்தில் அமர்ந்தவாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றினார்கள்.

அந்தத் தொழுகை நடந்து முடிந்த பின், உயர்ந்த தொணியில் பள்ளியை விட்டும் வெளியில் கேட்கும் அளவுக்கு அதிக அளவு சப்தத்துடன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்கள் முன் உரையாற்றினார்கள்.

எனது மக்களே..! நெருப்பு மூட்டப்பட்டு விட்டது, சோதனைகள் இருளின் ஒருபகுதியைப் போல வந்து கொண்டிருக்கின்றன.

அண்ணல் நபி (ஸல்) மேலும் நவின்றார்கள்:-

'அனைவரையும் விட அதிகமாக எவருடைய செலவத்திற்கும் நட்புக்கும் நான் கடமைப்பட்டிருக்கின்றேனே அவர் அப10பக்ரு (ரலி) அவர்களாவார். நான் உலகின் என் சமுதாயத்தவரிலிருந்து எவராவது ஒருவரை என் நண்பனாக ஆக்கிக் கொள்ள முடியுமென்றால் அப10பக்ரையே எடுத்துக் கொள்வேன். ஆனால் இஸ்லாத்தின் உறவே நட்புக்கு போதுமானதாகும்.

ஆம்! செவி சாயுங்கள்! உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயங்கள் தம் இறைத்தூதர்கள் மற்றும் பெரியார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். இதோ பாருங்கள். நீங்கள் அத்தகைய நடத்தைளை மேற்கொள்ளக் கூடாது. நான் உங்களை அதனை விட்டும் தடுத்துவிட்டுச் செல்கின்றேன்".

மேலும் கூறினார்கள்:

'ஹலால், ஹராம் (ஆகுமானது, தடுக்கப்பட்டது) என்னும் கட்டளைகளை (நானே பிறப்பித்ததாக்க் கருதி என்னுடன் இணைத்தப் பேசாதீர்கள். இறைவன் அகுமாக்கியுள்ளவற்றையே நான் ஆகுமாக்கியுள்ளேன். அவன் தடை செய்தவற்றையே நான் தடை செய்துள்ளேன்."

நோய் வாய்ப்பட்ட இதே நிலையில் ஒருநாள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தாரை நோக்கி கூறினார்கள்:

'இறைத்தூதரின் மகளான ஃபாத்திமாவே! இறைத்தூதரின் அத்தையான சபிய்யாவே! இறைவனிடம் உங்களுக்குப் பயன்படும் எந்த நற்செயலாது செய்து கொள்ளுங்கள். நான் உங்களை இறைவனின் தண்டனையிலிருந்து காப்பாற்றிட முடியாது."

ஒருநாள் நோயின் கடுமை அதிகமாக இருந்தது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் முகத்தில் போர் வையைப் போட்டுக் கொள்வார்கள். பிறகு எடுத்து விடுவார்கள். இந்த நிலையில் ஆயிஷா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருநாவிலிருந்து பின்வரும் சொற்களைச் செவியுற்றார்கள்.

'யதர்களின் மீதும் கிறஸ்தவர்களின் மீதும் இறைவனின் சாபமுண்டாகட்டும்! அவர்கள் தங்கள் இறைத்தூதர்களின் மண்ணறைகளை வணக்கஸ்தளங்களாக்கின் கொண்டார்கள்."

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் எப்போதோ ஒரு முறை சில பொற்காசுகளைக் கொடுத்து வைத்திருந்தார்கள். அந்த அமைதியற்ற நிலையிலேயே ஒருமுறை, 'ஆயிஷாவே! அந்தப் பொற்காசுகள் எங்கே?" என்று வினவினார்கள். 'முஹம்மத் இறைவனின் பரிபாலிக்கும் ஆற்றலைக் குறித்து ஐயங்கள் கொண்டவனாக, அவனைச் சந்திப்பது விருப்பத்தக்கதா? உடனே அந்தப் பொற்காசுகளை இறைவழியில் தருமம் செய்து விடு!" என்று ஆணையிட்டார்கள்.


பேரருளானை நோக்கி...

நோய் சில வேளைகளில் அதிகரிப்பதும் சில வேளைகளில் குறைவதுமாக இருந்தது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வாழ்வின் இறுதிநாளான திங்கட்கிழமையன்று காலையில் அவர்கள் நோய் சற்று தளர்ந்ததாகத் தென்பட்டது. ஆனால் நேரம் செல்லச் செல்ல அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி மூர்ச்சையானார்கள்.

இந்த நிலையில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருநாவிலிருந்து, 'அல்லாஹ் எவர்கள் மீது தன் அருளைப் பொழிந்தானோ அவர்களுடன்" என்னும் சொற்களை அடிக்கடி வெளிப்பட்ட வண்ணமிருந்தன. சிலவேளை, 'இறைவா! நீயே உயர்ந்த நண்பன்!" என்று கூறியவண்ணமிருந்தார்கள். சில வேளைகளில் 'இப்போது வேறு எவருமில்லை. அந்த உயர்ந்த நண்பனே தேவை!" என்று கூறிய வண்ணமிருந்தார்கள், இவ்வாறெல்லாம் பிரார்த்தித்த வண்ணம் இருந்தார்கள. பின்னர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புனித ஆத்மா பிரிந்தது.

அல்லாஹம்ம ஸல்லி அலா முஹம்மதின் வபாரிக்க வஸல்லம்

அல்லாஹ்வே, முஹம்மத் மீது அருள் வளம் பொழிவாயாக! அவருக்கு சாந்தி வழங்குவாயாக!

ஹிஜ்ரி 11-ல் ரபிய்யுல் அவ்வல் மாதத்தில் பொருமானார் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள். மரணித்த நாள் திங்கட் கிழமை ஆகும்.

அடுத்த நாள் அவர்களின் உடல் குளிப்பாட்டி கபனிடப்பட்டது. மாலை நேரத்திற்குள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருவுடல் அவர்கள் மரணித்த அதே அறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

'நீரும் மரணிப்பவரே! அவர்களும் மரணிக்கக் கூடியவர்களே!" (39 : 30)

(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்" என்று கூறுவார்கள்.( 2:156).



(இன்ஷா அல்லாஹ் தொடரும்)  

No comments:

Post a Comment