Sep 8, 2015

வியட்நாம் போரின் போது நடந்த கொடூரம்


 
வியட்நாம் போர் (Vietnam War), அல்லது இரண்டாவது இந்தோ சீனப் போர் 1965 இலிருந்து ஏப்ரல் 30, 1975 வரை இடம்பெற்ற போரைக் குறிக்கும். சிலவேளைகளில் 1959 முதல் 1975 வரை இடம்பெற்ற நிகழ்வுகளை வியட்நாம் பிரச்சினை (Vietnam Conflict) என்று குறிப்பிடுவர். இப்போரானது வட வியட்நாம் க்கும் ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவுடன் வியட்நாம் குடியரசு (தென் வியட்நாம்) கும் இடையில் இடம்பெற்றது. வட வியட்நாமின் முழு வெற்றியுடன் இப்போர் முடிவடைந்தது. முடிவில் தென் வியட்நாம் கலைக்கப்பட்டு அமெரிக்கப் படைகள் பின்வாங்கின. வியட்நாம் ஒன்றுபட்டது.

மொத்தமாக 1.4 மில்லியன் இராணுவத்தினர் இப்போரின் போது கொல்லப்பட்டனர். இதில் 6 விழுக்காட்டினர் அமெரிக்கராவார். இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 முதல் 5.1 மில்லியன் ஆவார். ஏப்ரல் 30, 1975 இல், தென் வியட்நாமின் தலைநகரம் சாய்கோன் கம்யூனிஸ்டுகளிடம் வீழ்ந்ததில் போர் முடிவுக்கு வந்தது.

கடந்த நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய யுத்தங்களுள் ஒன்று வியட்நாம் போர். ஏழை மண்ணில் வல்லரசுகள் மோதிக்கொண்ட இந்த யுத்தத்தின்போது அமெரிக்கப்படை நிகழ்த்திய கொடூரமான படுகொலை குறித்த விவரங்கள்...

அமெரிக்கப் போர் வரலாற்றில் வழக்கமான ஓர் ஆண்டு. வியட்நாமுக்கோ தேசத்தின் ஆன்மாவை உலுக்கிவிட்டுச் சென்ற ஆண்டு. கம்யூனிஸ வடக்கு வியட்நாமும், அமெரிக்க ஆதரவுடனான தெற்கு வியட்நாமும் கடுமையாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்த நேரம். மூன்றாண்டுகளுக்கும் மேலாக நீடித்திருந்த போரில் அமெரிக்கா நுழைந்து ஓராண்டு மட்டுமே ஆகியிருந்தது.
 
வியட்நாமின் புவியியில் அமைப்பு அமெரிக்கப் படைகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. கரடு முரடான பாதைகளையும், ஆபத்தான முள்புதர்களையும் கடந்து செல்ல முடியாமல் அமெரிக்க வீரர்கள் சிரமப்பட்டனர். இதற்கு மத்தியில், வடக்கு வியட்நாமின் வியட் காங் படைகள் அவ்வப்போது கண்ணிவெடித் தாக்குதலை நடத்தி அமெரிக்க வீரர்களைக் கொன்றன. போரை நிறுத்திவிட்டுத் திரும்பி வரும்படி, அமெரிக்காவிலேயே போராட்டங்கள் நடந்தன. விரக்தியின் உச்சத்துக்கே சென்றிருந்தது அமெரிக்கப்படை.
 
1968-ம் ஆண்டு மார்ச் மாதம். கண்ணிவெடித் தாக்குதல் நடத்தும் வியட்காங் படையைச் சேர்ந்தவர்கள் சோன் மை என்ற கிராமத்தில் ஒளிந்திருப்பதாக அமெரிக்கப் படைகளுக்குத் தகவல் கிடைத்தது. சோன் மை என்பது வடக்கு வியட்நாமுக்கும் தெற்கு வியட்நாமுக்கும் இடைப்பட்ட கடலோரப் பகுதியில் அமைந்துள்ளது.
 
காலை 7 மணிக்கு முன்னர் மக்கள் அனைவரும் சந்தைகளுக்குச் சென்று விடுவார்கள் என்றும், அதன் பிறகு கிராமங்களில் இருப்பவர்கள் அனைவரும் வியட்காங் படை வீரர்களாகத்தான் இருக்க வேண்டும் என்றும் அமெரிக்கப்படைக்குக் கூறப்பட்டிருந்தது.
 
காலை 7 மணிக்குப் பிறகு ஊரையே அழித்துவிடவேண்டும் என்று படைப் பிரிவுத் தளபதி எர்னெஸ்ட் மேடினா உத்தரவிட்டார். பெண்கள், குழந்தைகள், ஏன் சிறு விலங்குகளைக் கூட உயிருடன் விட்டுவிடக்கூடாது என்று கூறினார். யாரெல்லாம் தப்பியோடுகிறார்களோ, யாரெல்லாம் மறைந்திருக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் எதிரிகள்தான் என்று அமெரிக்கப்படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
 
பல குழுக்களாகப் பிரிந்து சென்று சோன் மை கிராமத்தைச் சுற்றி வளைக்கத் திட்டமிடப்பட்டது. அமெரிக்காவின் முதலாவது படைப் பிரிவு ஹெலிகாப்டர்கள் மூலம் தாக்குதலைத் தொடங்கியது. எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை. நெல் வயல் வழியாக முன்னேறி வந்த படை வீரர்கள் கேள்வி ஏதுமின்றி அப்பாவிகள் சிலரைச் சுட்டுக் கொன்றனர். வான் வழியாகவும், பீரங்கிகள் மூலமாகவும் தாக்குதல் நடத்தப்பட்டது.
 
காலை 7.30 மணி... சோன் மை கிராத்தில் உள்ள மை லாய் என்ற பகுதி. சந்தைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த மக்கள் பூச்சிகளைப் போலச் சுட்டுத் தள்ளப்பட்டனர். வீடுகள் கொளுத்தப்பட்டன. கோயிலில் மண்டியிட்டு பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்த குழந்தைகளும், பெண்களும் துப்பாக்கிகளுக்கு இரையாகினர். கர்ப்பிணிகளையும் அமெரிக்கப்படை விட்டுவிடவில்லை.
 
சுமார் 80 பேர் பாசனக் கால்வாய்களில் தள்ளிவிடப்பட்டு பின்னர் துப்பாக்கிகளால் சுடப்பட்டனர்.குழந்தைகளை மார்பில் அணைத்தபடியே பல பெண்கள் இறந்து போயிருந்தனர். இரண்டு நாள்களில் மொத்தக் கிராமமும் அழிக்கப்பட்டது. 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
 
இப்படியொரு சம்பவம் நடந்ததே ஓராண்டுவரை வெளியுலகுக்குத் தெரியவில்லை. அமெரிக்கப் படை அதிகாரிகள் சிலரால் 1969-ம் ஆண்டு இந்தச் சம்பவம் அம்பலமானபோது உலகமே அதிர்ச்சிக்குள்ளானது. பெயரளவுக்கே ராணுவ விசாரணை நடந்தது. படுகொலையை முன்னின்று நடத்திய வில்லியம் கேலிக்கு மட்டும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவரும் 3 ஆண்டு வீட்டுக் காவலுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.
 
உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய வியட்நாம் போரின் மிகக் கொடூரமான அத்தியாயம், அமெரிக்காவின் மனசாட்சிக்கு மட்டும் இறுதிவரை யுத்த நடவடிக்கையாகவே புலப்பட்டது.
 
நன்றி
Puthuthiyathalamari
Wiki Tamil


No comments:

Post a Comment