Sep 4, 2015

காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் உரை

காலித் பின் வலீத் (ரலி) பகுதி - 10


காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்கள் :

என்னருமை உயிர் தியாகிகளே..!

இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்..! மிகவும் நினைவு கூறத் தக்க நாள்..! இந்த நாளில் நமது இறைநம்பிக்கை சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது, அதற்கான பயிற்சி நம் முன் காத்திருக்கின்றது. எனவே, இன்றைய இந்த தினத்தில் நமது முரட்டுத்தனம், பாரம்பரியப் பெருமைகள், தனிப்பட்ட நபரின் சுயநலத்திற்காக பாடுபடுதல் அல்லது பிறர் நம்மைப் புகழ வேண்டும் என்பது போன்ற இஸ்லாத்திற்கு விரோதமான அனைத்தையும் தூக்கி எறிந்து விடுங்கள்.

என்னருமை  உயிர் தியாகிகளே..!

அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு போரிடுங்கள். இன்றைக்கு நம்முடைய படைக்கு மிகப் பெரும் தளபதிகள் பலர் பொறுப்பேற்றிருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் நன்னம்பிக்கையாளர்களும், இன்னும் நம்பத்தகுந்தவர்களாகவும், அதனை விட நீங்களும் நானும் அவர்களது உத்தரவிற்குக் கட்டுப்பட்டு நடக்கும் தகுதிபடைத்தவர்களாகவும் இருக்கின்றார்கள். இன்றைய தினம் நீங்கள் என்னுடைய பொறுப்பின் கீழ், என்னுடைய உத்தரவுக்குக் கீழ்படிந்து நடக்கக் கூடிய படைவீரர்களாக, என்னுடைய தலைமையின் கீழ் திரண்டிருக்கின்றீர்கள். இஸ்லாத்தின் பெருமையை நிலைநாட்டவும், இஸ்லாம் வெற்றி பெற்றிடவும் இப்பொழுது நாம் உயிர்த்தியாகம் ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு போர்க்களத்தில் நுழைய இருக்கின்றோம். நமக்கு உதவவும், நம்மைப் பாதுகாக்கவும் அல்லாஹ் ஒருவனே போதுமானவன்..!

என்ற உரையை நிகழ்த்தி முடித்ததும், இரண்டு படைகளும் மோதுவதற்குத் தயாராக யர்முக் ஆற்றின் கரையில் சந்தித்துக் கொண்டன.

காலித் பின் வலீத் (ரழி) அவர்களைப் பார்த்த ரோமப் படைத்தளபதி மஹன் கொக்கரிக்க ஆரம்பித்தான்.

வறுமையும், ஏழ்மையும், உடுத்த உடை கூட இல்லாத நிலைமையும் தான் உங்களை இங்கு வரத் தூண்டி இருக்கும் என்று நினைக்கின்றேன். நீங்கள் விரும்பினால் உங்கள் ஒவ்வொருவருக்கும் பத்து தினார்களையும் இன்னும் விலையுயர்ந்த உடைகளையும், நல்ல உணவுகளையும் தருகின்றேன். பெற்றுக் கொண்டு இடத்தைக் காலி செய்து விட்டுச் செல்லுங்கள். இன்னும் அடுத்த வருடமும் கூட உங்களுக்கு இது போன்றே தரத் தயாராக இருக்கின்றேன். நீங்கள் இங்கு வந்து தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை, நானே உங்களிடத்திற்கு அனுப்பி வைக்கின்றேன் என்று ஏளனமாகக் கூறினான்.

ரோமப் படைத்தளபதி மஹனின் இந்த ஏளனம் மற்றும் திமிர்ப் பேச்சை செவிமடுத்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்..!

மஹன்....?! கவனமாகக் கேட்டுக் கொள். நாங்கள் வந்த நோக்கத்தை நீ தவறாக எடை போட்டு விட்டாய்..! நாங்கள் எதிரியின் இரத்தத்தைக் குடித்து தாக சாந்தி அடைந்த கொள்ளத் துடிப்பவர்கள். அதிலும் ரோமர்கள் இரத்தங்கள் மிகவும் ருசியாக இருக்கும் என்பதையும் கேள்விப்பட்டோம், அதனைச் சுவைத்துப் பார்க்கவே இங்கு வந்தோம் என்று உரத்துக் கூறினார்.

இதனைக் கூறிக் கொண்டே தனது குதிரையைக் காற்றில் பறக்க விட்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், அல்லாஹு அக்பர் என உரத்து முழங்கி இஸ்லாத்தின் கொடியை உயர்த்திப் பிடித்தார், அத்துடன் எதிரியைத் தாக்க ஆரம்பிக்குமாறு முஸ்லிம்களுக்கு உத்தரவும் பறந்தது. ஏற்கனவே, வெற்றி அல்லது வீர மரணம் என்று களம் புகுந்திருந்த முஸ்லிம்கள், உத்தரவு கிடைத்ததும் தான் தாமதம், தங்களது நோக்கத்திற்கு செயல் வடிவம் கொடுக்க ஆரம்பித்தார்கள்..!

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தனது தோழர்களைப் பார்த்து உரக்க முழங்க ஆரம்பித்தார்.

எனது தோழர்களே..! சுவனத்தின் தென்றல் காற்று இதமாக வீசுவதை நீங்கள் உணரவில்லையா..! அதன் குளிர்ச்சி உங்களை மகிழ்விக்கக் காத்திருப்பதை நீங்கள் அறியவில்லையா..! வெற்றியும், நற்பேறுகளும் காத்திருக்கின்றன..! ம்...! முன்னேறுங்கள்..! என்று தனது தோழர்களுக்கு ஊக்க மருந்து கொடுக்க ஆரம்பித்தார்.

சுவனத்துச் சோலைகளின் அழகையும், வனப்பையும் திருமறைக் குர்ஆன் வசனங்களின் மூலம் ஏற்கனவே மனக் கண்களால் தரிசித்து வைத்திருந்த முஸ்லிம்கள், அதனை நித்தியமாக அடைந்து கொள்வதற்கு இப்பொழுது முழு முயற்சியை மேற்கொண்டார்கள். அதற்கு உத்வேகமளித்தது தளபதி காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் உணர்ச்சி மிக்க உரை.

வீரத்தின் விளை நிலங்கள் இப்பொழுது கூலிக்கு மாறடிக்கும் கூட்டத்தினரை பதம் பார்க்க ஆரம்பித்தார்கள். எங்கும் குழப்பமும், மரண ஓலங்களும் ஒலித்திட என்ன செய்வதென்றே தெரியாது ரோமப் படைகள் விழி பிதுங்க ஆரம்பித்தன. உணர்ச்சி மிக்க உரையை நிகழ்த்தி விட்டு, தானும் அந்த உயரிய அந்தஸ்தை அடைய வேண்டுமே என்ற நோக்கத்தை மனதில் தேக்கி வைத்திருந்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், தனது நோக்கத்தை செயலில் அடைந்து காட்ட அவரும் வலது பக்கமாக இருந்து எதிரிகளை ஊடறுத்துக் கொண்டு எதிரிகளின் மையப் பகுதிக்கே சென்று விட்டார். அத்துடன் மின்னலென வீசப்பட்ட அவரது வாள் வீச்சு, எதிரிகளின் தோல்விக்கு முடிவுரை எழுத ஆரம்பித்தது.

முதல் நாள் போரில் ரோமர்கள் தங்களது கூலிப் பட்டாளத்தில் ஒரு லட்சத்து இருபதாயிரம் வீரர்களை  இழந்திருந்தார்கள்.

யர்முக் போர்க்களத்தின் முக்கியக் காட்சிகள் சில..!


வீர மரணம் அடைந்து அந்த சுவனத்துத் தென்றலை முகர்ந்து பார்த்து விட வேண்டும் என்ற துடிப்பு யர்முக் போர்க்களத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு முஸ்லிம் வீரரிடத்திலும் காணப்பட்டது. அவர்களது அந்த ஆசையை ஏற்கனவே காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் வீர உரை கிளறி விட்டிருந்தது.

ஒரு வீரர் அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரழி) அவர்களிடத்தில் வருகின்றார்..!

அபூ உபைதா அவர்களே..! இன்று நடக்கக் கூடிய போரில் நான் வீர மரணமடைய வேண்டும் என்ற ஆசை என்னை மேலிடுகின்றது. அவ்வாறு நான் வீர மரணமடைந்து விட்டால், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நான் என்ன கூற வேண்டும் என்பதைக் கூறுங்களேன் என்று வினவி நின்றார்.

கண்ணியமிக்க, புகழுக்குரியோனாகிய அல்லாஹ்..! இந்தப் போர்ப் புலிகளுக்கு, வீரத்தியாகிகளுக்கு வாக்களித்ததை நிறைவேற்றி விட்டான் என்று கூறுங்கள் என்று பதில் கூறினார் அபூ உபைதா (ரழி) அவர்கள்.

அபூ உபைதா (ரழி) அவர்களின் இந்தப் பதிலைக் கேட்ட, இக்ரிமா என்ற அந்தத் தோழர், அபூ உபைதா (ரழி) அவர்களே..! நான் இஸ்லாத்தினை எனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளுமுன் இறைநிராகரிப்பாளர்களின் கூடாரத்தில் இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராகக் கலந்து கொண்ட போர்களில் கூட நான் புறமுதுகிட்டு ஓடாதவன். இன்றைக்கு சுவனம் என்னை அழைக்கும் பொழுது நான் திரும்பியா ஓடி விடுவேன்..! இல்லை இல்லை..! என்று கூறியவாறே..! எனது தோழர்களே..! என்னைப் பின்பற்றி வாருங்கள் என்று கூவியவாறே..! தனது தோழர்களை அழைத்துக் கொண்டு எதிரிகளை ஊடறுத்துக் கொண்டு வாளைச் சுழற்றிக் கொண்டே சென்றார். சற்று நேரத்திற்கெல்லாம் எதிரியின் வாள் இக்ரிமா (ரழி) அவர்களைப் பதம் பார்க்க, சுவனத்தின் சுகந்தத்தை.., அவர் அடைய நினைத்த அந்த குளிர்ச்சியான சோலைகளுக்குள் நுழைந்து விட்டார்.

போர் உக்கிரமமான முறையில் நடந்து கொண்டிருந்தது. இரவும் தொடர்ந்து நீடித்தது. காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் எதிரியின் முகாமிற்குள்ளேயே நுழைந்து, ரோமப் படைத்தளபதியின் கூடாரத்திற்குள் நுழைந்து விட்டார். இப்பொழுது எதிரிகள் உயிர் தப்பினால் போதுமென்று ஓட ஆரம்பித்திருந்தனர். இரவு நடந்த போரில் எதிரிகளை விரட்டி விரட்டி, அவர்களது தலைகளை முஸ்லிம்கள் கொய்தனர். முஸ்லிம்களில் பலருக்கும் கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது.



                                                      பகுதி - 09 / பகுதி - 11


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

No comments:

Post a Comment