காமத்திபுரா பெண் விடுதலையின் கௌரவச் சின்னமா !?

 
( இது 16/11/2011 இல் ' குமுதம் ' இதழில் வந்த ஒரு நேரடி ரிபோர்டின் சுருக்கம்.

வல்லரசாகும் தகுதிக்கான தராதரங்களில் இந்தியா மேற்கின் முதலாளித்துவ சித்தாந்த தரத்திலும் அதிலிருந்து உதிக்கும் சிந்தனை தரத்திலும் எவ்வகையிலும் குறைந்ததல்ல என்பதை உணர்ந்து கொள்ள இந்த விடயங்கள் சிறந்த உதாரணமாகும் .
 
                                                 குடி குடியை கெடுக்கும் என்பார்கள் வரி வருமானத்துக்காக அதை குடியிருக்கவும் விட்டிருப்பார்கள் ! சாதிப் பூசல் நாட்டைக் கெடுக்கும் என்பார்கள் சாதி , மத ,பேதங்களில் இருந்துதான் ஆதிக்க அரசியலுக்கு கடிவாளம் போடுவார்கள் ! 
 
                             அதிகாரத்தின் மாற்றமோ அதிகாரிகளின் மாற்றமோ காலத்தின் தேவையல்ல .அவர்களின் தலையில் ஏறி அமர்ந்து சாவகாசமாக அவர்களை இயக்கும் முதலாளித்துவ சித்தாந்தம் மாற்றப்படாத வரை உருப்படியாக எதுவும் நடக்கப் போவதில்லை . இன்று காமாத்திபுரா எப்படி இருக்கிறது என எனக்குத் தெரியாது. ஆனால் நேரு முதல் மோடி வரை இந்தியா அப்படியே தான் இருக்கிறது என்பது மட்டும் உண்மை. ஏன் முழு உலகமே இத்தகு சுயநலப் பேய்களின் பிடியில் தான் இருக்கிறது. அது செவ்வாய்க்கு ராக்கெட் விட்டாலும் சரியே !) 


இந்தியாவின் மும்பாயின் மையப்பகுதியில் இருக்கும் ஒரு சின்ன தெருதான் இந்த காமத்திபுரா. ஆனால் அதைச் சுற்றி இருக்கும் பல தெருக்களில் குடிசைத் தொழில் போல் விபச்சாரம் வியாபாரமாக நடைபெறுகிறது . இருந்தாலும் இந்த காமத்திபுரா மட்டுமே இதற்கு விசேடமாக அடையாள படுத்தப் படுகிறது . 1795 இல் கட்டுமானப் பணிகளுக்காக ஆந்திராவில் இருந்து அழைத்து வரப்பட்ட கூலித் தொழிலாளிகள் வாழ்ந்த பகுதியே இந்த காமத்திபுரா.


ஹிந்தி மொழியில் 'காம் வாலி ' என்றால் வேலைக்காரி என்று அர்த்தம் .அந்த அடிப்படையிலேயே இத்தகு பெயர் அப்பகுதிக்கு ஏற்பட்டுள்ளது . பிற்பாடு 1880 இல் பிரிட்டிஷ் ஆட்சியில் அந்தப்பகுதி இராணுவ பாதுகாப்பு வளையமாக்கப் பட்டிருந்தது . அன்று காலனித்துவ சிப்பாயின் காமவெறி தீர்க்க இங்கிருந்த பெண்கள் தள்ளப்பட்டார்கள் . அவர்கள் சுதந்திரம் என்ற போலிப்பெயரோடு வெளியேறியபின் அவர்களின் இடத்தை நவ காலனித்துவத்தின் கைக்கூலிகளான இந்தியப் பணக்காரர்கள் பிடித்துக் கொண்டதால் வேறுவழியின்றி அந்தப் பெண்கள் அதே தொழிலை தொடர்ந்தார்கள் . 


அந்த இடத்தில் இருந்து கொஞ்ச தூரம் சென்றால் ' காங்கிரஸ் ஹவுஸ் ' என்ற தெரு உள்ளது . இங்கிருக்கும் விபச்சார விடுதிகள் 'காஸ்ட்லியானவை' இங்குதான் கடத்தி வரப்படும் பெண்கள் விற்கப் படுகிறார்கள் .'மேக்ஸிமம்' பயன்படுதப்பட்டதன் பின்னர் 'லோக்கல்' விடுதிகளுக்கு விட்கப்படுவார்கலாம் !


இன்னும் ஒரு சகிக்க முடியாத கொடுமை இந்த 'காமத்திபுராவில் ' இருந்து சில நிமிட தூரத்தில் 'பீலா ஹவுஸ் ' எனும் தெருவுக்குள் நுழைந்தால் இளம் பெண்களோடு சிறுமிகளும் நின்று அழைப்பு விடுப்பார்களாம் ! ஒரு தெருவில் பாதிவரை விபச்சார விடுதிகளும் மீதி குடும்பங்களும் வாழும் குடியிருப்புகள் என வினோதமான பகுதியாக இந்த காமத்திபுரா இருக்கின்றது ." மும்பை குடும்பப் பெண்களை காக்கும் காவல் தெய்வங்களாக காமத்திபுரா பெண்கள் இருப்பதாக ஒரு ஒரு போலீஸ்காரர் பெருமை வேறு பேசிக் கொள்கிறாராம் ! காரணம் அப்படி இல்லா விட்டால் பாலியல் கிரைம் மும்பாயில் பன்மடங்காகி விடுமாம் !? 


கிடைத்த தகவல்களின் படி இப்படியான பல பகுதிகள் இந்தியாவில் இருக்கின்றது . மலாலாவுக்காக குரல் கொடுக்கும் பெண்ணுரிமை அமைப்புகளின் பார்வையில் இது பெண் விடுதலையை காட்டி நிற்கும் கௌரவமான சுய தொழில் போலத்தான் தெரிகின்றதோ !?

நன்றி
ஹந்தக் களம்