Nov 9, 2011

எப்போது எழுவது? இஸ்லாமிய எதிர்ப்புகளுக்கு முடிவே கிடையாதா?

அபூ அய்யூப் முஹம்மது

இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தாக்குதல்கள் முஸ்லிம் சமூகத்துக்கு புதிய விடயமல்ல.ஏனெனில் சத்தியத்துக்கும்அசத்தியத்துக்கும் இடையிலான போராட்டங்கள் மறுமை நாள் வரையும் இருக்கும் என்பது இறைவன் வகுத்துள்ள வழி முறையாகும். இந்த எதிர்ப்புகளுக்கு எப்படி முகம் கொடுக்க வேண்டும் என்பதையும், இந்த வழிகாட்டலின் படி பதில் கொடுத்த முன்னோர்களின் வரலாறு என்ன என்பதையும் மீட்டிப் பார்ப்பது இன்றைய முஸ்லிம்கள் மீதுள்ள கடமையாகும்.

இஸ்லாத்தின் எதிரிகள் குறிப்பாக மேற்குலகம் இஸ்லாமிய சட்ட திட்டங்களையும் எமது நேசத்துக்குரிய தூதர் முஹம்மது (ஸல்)அவர்களையும் திட்டமிட்ட ரீதியில் காலத்துக்குக் காலம் அவமதித்து வருவது உலகறிந்த உண்மையாகும். இதன் தொடரில் (கடந்த வார இறுதியிலும் நேற்றும் 03-11-2011)பிரான்ஸில் எமது நேசத்துக்குரிய தூதர் முஹம்மது (ஸல்)அவர்களை நையாண்டி செய்து’ஷார்லி எப்தோ’( Charlie Hebdo) சஞ்சிகை செய்திகளை வெளியிட்டிருந்ததைக் கண்டோம்.

கடந்த பல வருடங்களாக மேற்குலகிலே நமக்குப் பழகிப்போன இஸ்லாத்துக்கெதிரான தொடர்ச்சியான தாக்குதல்களின் இன்னொரு வெளிப்பாடே இது. ஹிஜாபுக்கு எதிரான தாக்குதல்கள், நபிகள் நாயகம் (ஸல்)அவர்களை மிக மோசமாக சித்தரித்த கேலிச்சித்திரங்கள், அல் குர்ஆனைத் தடை செய்ய வேண்டும் என்ற கோஷங்களின் வரிசையில் இதுவும் ஒன்றாகும். இவை தான் மேற்குலக அரசியல் வாதிகளால் சகிப்புத்தன்மை,மிதவாதம் என சிலாகித்துப் பேசப்படும் விழுமியங்களின் நிஜமான முகங்களாகும்.

இது போன்ற தாக்குதல்கள் வரும் போது, முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் இதன்மூலம் என்ன நாடப்படுகிறது? இஸ்லாமிய ரீதியில் மிகச்சரியான பதிலை எப்படிக் கொடுப்பது? ஆகிய அம்சங்களை அறிந்து செயற்படுவது மிக அவசியமாகும்.

மேற்குலகின் மிக முக்கிய எதிர்ப்பார்ப்புகளில் ஒன்றாக ‘கருத்துச் சுதந்திரம் என்ற பெயரால் முஸ்லிம்களைக் கட்டாயப்படுத்தி, மேற்குலகின் பெருமானங்களையும் கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ள வைத்தல்’ என்ற விடயம் காணப்படுகின்றது.அதாவது அவமதித்தல் என்பதை நாம் விரும்பாதபோதிலும், கருத்துச்சுதந்திரம் என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டு, அவமதிப்பதும் நிந்திப்பதும் அடுத்தவரின் உரிமையாகும் என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாகும். இதற்கு அப்பால் சென்று, நாம் மிகவும் புனிதமாக மதிக்கின்ற அம்சங்கள் தான் நிந்திக்கப்பட்டாலும் அதனையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். இதனை ஒருபோதும் நாம் ஏற்க முடியாது என்பதற்கான நியாயங்களைப் பார்ப்போம்.

முதலாவது: இன்று மதச்சார்பற்றவர்களாலும், மற்றோராலும் இஸ்லாம் நிந்திக்கப்படுவது போன்று யாருடைய புனித நம்பிக்கைகளையும் விளையாட்டுத்தனமாகவேனும் அவமதிப்பதற்கு ஒரு போதும் இஸ்லாம் அனுமதித்ததில்லை.

இரண்டாவது: தீமையைத்தடுத்தல் தொடர்பாக நபிகள் நாயகம் (ஸல்)அவர்களைத் தொட்டும் வந்துள்ள மிகப் பிரபல்யமான ஹதீஸிலே தீமையானது கையாலோ நாவாலோ மாற்றப் படாத போது குறித்த தீமையை உள்ளத்தால் வெறுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள். இதன்படி தீமையை உள்ளத்தால் வெறுத்தல் என்ற ஈமானின் மிகப் பலவீனமான கட்டத்தையும் தாண்டி இஸ்லாத்தை நிந்திப்பதற்கு அனுமதிக்கின்ற வரம்பில்லாத கருத்துச் சுதந்திரத்தை ஏற்றுக் கொள்வது அடிப்படை ஈமானையே பாதிக்கின்ற விடயமாகும். இதனை ஏற்பது ஹராமாகும்.

மூன்றாவது: பேச்சுச் சுதந்திரம் என்ற மேற்குலக மாயை சமூகத்திலுள்ள அனேக அநீதிகளுக்கு காரணமாக அமைந்து விட்டதைக் காண முடிகிறது. ஐரோப்பாவிலே நபி ஈஸா (அலை)அவர்கள் கேலி செய்யப்படுவது ஒரு சாதாரண விடயமாகும். இத்தகைய அவதூறுகளை மேற்குலகம் குறிப்பாக கிறிஸ்தவர்கள் கண்டு கொள்வதில்லை. ஆயினும் மனித வரலாற்றில் மிகச்சிறந்த மாமனிதர்களான இவர்களையே கேலி செய்யும் அதே சமூகம் தங்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் போன்றோர் அவமதிக்கப்படும் போது கவலைப்படுகிறது. இப்படி ஒரு முரண்பாடான நிலைப்பாடு இவர்களிடம் காணப்படுகிறது.

இச்சமூகத்தைப் பொறுத்தவரையில் மட்டுப்படுத்தப்படாத பேச்சுச் சுதந்திரம் என்பது பிறரை அவமரியாதை செய்வதற்கான சுதந்திரமேயாகும். இவ்வாறான ஒரு சமூகத்தில் அமைதியோ சாந்தியோ நிலவ முடியாது. ஐரோப்பிய வரலாற்றை மீட்டிப் பார்க்கின்ற போது அவர்களால் சிறுபான்மை தொடர்பாக சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ள முடியவில்லை என்பது புலனாகின்றது. மாறாக கருத்துச் சுதந்திரம் என்ற உரிமையானது மற்றவர்களை அவமதித்து அவர்களை ஒடுக்கும் உரிமையாக புது வடிவம் எடுத்திருப்பதை ஐரோப்பாவின் புதிய வரலாற்றிலே காணலாம்.

காலத்துக்குக் காலம் முஸ்லிம்களை ஆத்திரமூட்டுவதற்கென்று பல கீழ்த்தரமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஆத்திரமூட்டலுக்கு எதிராக ஏதாவது வன்முறைகளில் முஸ்லிம்கள் ஈடுபடுவதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது.

அப்படியாயின் இது தொடர்பாக முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்; எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

1.இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் நலனைப் பாதுகாக்கின்ற கிலாபா அரசொன்று இல்லாத நிலமையில் இஸ்லாத்தின் கண்ணியத்தையும் முஸ்லிம்களின் நற்பெயரையும் காப்பது சாத்தியமில்லை என்பதை முஸ்லிம்கள் முதலில் உணர்ந்தாக வேண்டும்.

கிலாபா ஆட்சி இருந்த போது அல்லாஹ்வையும் அவனது தூதர் (ஸல்) அவர்களையும் கேலி செய்வதற்கு சகலரும் மிகவும் தயக்கம் காட்டியே வந்தனர் என்பதை வரலாறு நெடுகிலும் காணலாம். பின்வரும் வரலாற்று நிகழ்வு இதற்கு சிறந்த சான்றாகும்.

’1889ல் முஹமட்’ எனும் பெயரில் இஸ்லாத்துக் கெதிரான மேடை நாடகமொன்றை பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த கவிஞரும் நாடக ஆசிரியருமான ‘ஹென்றி த போர்னியர்’ என்பவர் எழுதினார்.1890 ஆம் ஆண்டில் உஸ்மானிய கிலாபத்தின் எதிர்ப்பைத் தொடர்ந்து பிரான்ஸின் பிரதம மந்திரி ‘சார்ல்ஸ் த பிரகினண்ட்’ இந்த நாடகத்தைத் தடை செய்தார்.

மேற்படி நாடகத்தின் ஒத்திகை அரங்கேறிக் கொண்டிருக்கும் போது துருக்கிய பத்திரிகை யொன்று பிரான்ஸ் பத்திரிகையொன்றை மேற் கோள் காட்டி ‘ஹென்றி த போர்னியர்’ரின் அடுத்த வெளியீடாக ’1989ல் முஹமட்’ எனும் நாடகம் வரப் போகின்றது என்ற செய்தியை மீள் பிரசுரம் செய்திருந்தது.

இந்த நாடகத்தின் மூலம் போர்னியர் தனது அறியாமையையும் காரணமில்லாமல் முஸ்லிம்கள் மீது வைத்துள்ள காழ்ப்புணர்ச்சியையும் பாரபட்சத்தையும் வெளிக்காட்டியிருந்தார்.

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் பிரான்ஸில் துருக்கியின் தூதுவராக இருந்த இஸ்ஸத் பாஷா விடம் முஹம்மது நபி(ஸல்)அவர்கள் மீதான தாக்குதலோ முஸ்லிம்களின் மதிப்புக்குரிய நம்பிக்கைகளோ இதில் உள்ளடக்கப்படவில்லை என்று உறுதிப்படுத்தியிருந்தது.

பாரசீகத்தில் இறந்தவர்கள் மீது இரங்கல் என்ற அடிப்படையில் நபி முஹம்மது(ஸல்) அவர்களும் ஷீஆக்களின் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களும் நாடகங்களில் சித்தரிக்கப் படுகிறார்களே என்ற வாதத்தை ‘போர்னியர்’ சுட்டிக்காட்டினார்.இதே வேளை அல்ஜீரியாவிலும் டியுனீஸயாவிலும் அவரது நாடகம் தடை செய்யப்படுவதை ஏற்றுக் கொண்டார். இருந்தாலும் இந்த வாதங்கள் யாவும் துருக்கிய நிர்வாகிகளைத் திருப்திப் படுத்துவதில் தோல்வி கண்டன.

இதனைத் தொடர்ந்து 1890 ஆம் ஆண்டில் பிரான்ஸின் பிரதம மந்திரி ‘சார்ல்ஸ் த பிரகினண்ட்’ இந்த நாடகம் வெளிவருவதை பிரான்ஸிலும் தடை செய்தார்.இந்தத் தடை கலீபா சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீதுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது..

இந்த மேடை நாடகத்தில் ஒரு பெண்ணுக்காகவும் கிரிஸ்த்தவ மதத்தின் மீது கொண்ட கால்ப்புணர்ச்சி காரணமாகவும் முஹம்மது(ஸல்) அவர்கள் தற்கொலை செய்து கொண்டார் என சித்தரிக்கப்பட்டிருந்தது. இது நிச்சியமாக முஸ்லிம்களைக் கடுமையாகப் பாதிக்கின்ற விடயம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்த இஸ்லாமிய எதிர்ப்பு மேடை நாடகத்தை முதலில் எதிர்க்கும் போது துருக்கிய தூதுவரோ கலீபாவோ நாடகத்தைப் பார்த்ததட்கு எந்த ஆதாரமும் இல்லை.குறைந்த பட்சம் படித்து அறிந்திருப்பார்கள்.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் ‘பிரான்ஸ் அரசின் சரணடைதல்’ துருக்கிய கிலாபத்தின் அழுத்தத்தின் காரணமாகவே நடை பெற்றது என்பதாகும்.

இந்த அழுத்தத்தின் காரணமாக சரணடைதல் என்ற விடயம் நம்பக் கூடியதாக இருக்கின்றது என்பதை ,மார்டினோ’ என்பவர் அக்கால அரசியல் நிலைமையோடு ஒப்பிட்டுக் கருத்துக் கூறியுள்ளார். அதாவது 1889ம் ஆண்டு ஜெர்மன் பேரரசர் இரண்டாம் வில்லியம் இஸ்தனபூல் மற்றும் கிட்டிய கிழக்கில் தனது பயணத்தை மேற்கொண்டிருந்த வேளையில் பிரான்ஸ் செய்கின்ற எந்தச் செயலும் துருக்கி ஜெர்மனியோடு கரம் கோர்க்க வழி செய்து விடக்கூடாது என்பதில் பிரான்சுக்கு பேரச்சம் இருந்தது. மேலும் பிரான்சுக்கும் வட ஆபிரிக்காவின் அதிகமான முஸ்லிம்களுக்கும் இடையிலான தொடர்பும் இந்த சரணடைவுக்கு அழுத்தம் கொடுத்த காரணியாக இருந்தது என்பதற்கு மிகுந்த இடம் பாடு உள்ளது.

இந்த வரலாற்றுச் சம்பவத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.

முதலாவது: இஸ்லாத்துக்கெதிரான எந்தச் செயலையும் தட்டிக் கேட்டல் இஸ்லாமிய ஆட்சியில் இருப்போரின் பணியாகும்.

இரண்டாவது: எதிரிகளுக்கு அழுத்தம் கொடுக்கின்ற அளவுக்கு பலம் பொறுந்தியதாக இஸ்லாமிய ஆட்சி இருப்பது அவசியம்.

மூன்றாவது: உஸ்மானிய சாம்ராஜ்யம் அதன் இறுதிக் கட்டத்தில் பல வகையிலம் பலவீனமான நிலையில் இருந்தது என்றிருந்தாலும் கிலாபத்தும் கலீபாவும் செய்ய வேண்டிய விடயங்கள் ஆட்சியாளர்களுக்கு நன்கு பரிட்சயமாக இருந்தன.

நான்காவது: இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் காக்கின்ற பணி கலீபா மூலம் முன்னெடுக்கப்படுவது இஸ்லாமிய அடிப்படை என்பதும் இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் நிறை வேற்றப்பட்ட கடமை என்பதையும் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

இன்று அலைகள் போன்று தொடராகவும் இரகசியமாகவும் பரகசியமாகவும் தொடுக்கப்படுகின்ற சிந்தனா ரீதியான, இராணுவ ரீதியான தாக்குதல்களுக்கு முஸ்லிம்கள் கிலாபா ஆட்சியின் மூலம் பதில் அளிப்பதே நிரத்தரத் தீர்வாகும். முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் காக்கக் கூடிய கலீபாவை முஸ்லிம்கள் ஏற்படுத்தாமல் மேற்கொள்கின்ற எந்தப் பணியும் நிரந்தரத் தீர்வாக இருக்காது என்பதை முஸ்லிம்கள் உணர்ந்து செயற்பட இன்றே முன் வரவேண்டும்.

மேற்குலக தலைவர்களைப பொறுத்தவரையில் சுரண்டலையும் ஆக்கிரமிப்பையும் ஊக்குவிக்கின்ற ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றை தமது விழுமியங்கள் எனக் கூறிக்கோண்டு எல்லா நிலையிலும் அவற்றைக் காப்பதற்காக பாடுபடுகின்றார்கள். எமது அருமை நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் கண்ணியத்தையும் இஸ்லாத்தின் பெருமையையும் பாதுகாப்பதற்காக குரல் கொடுக்க வேண்டிய எமது ஆட்சியாளர்களோ முஸ்லிம் தலைவர்களோ தங்களது நலனுக்காக மட்டும் குரல் கொடுத்து விட்டு மௌனமாகி விடுகின்றனர். நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் கண்ணியத்தையும் இஸ்லாத்தின் பெருமையையும் பாதுகாப்பதற்காக குரல் கொடுக்க வேண்டிய எமது ஆட்சியாளர்கள் எங்கே?என்ற கேள்விக்கு விடை காண முடியாமல் முஸ்லிம்களாகிய நாம் பல ஆண்டுகளைக் கடந்து விட்டோம்.

ஆகவே இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாக்கின்ற ஒரு கிலாபாவை மீண்டும் நிலைநாட்டுவதற்கான முயற்சிகளில் முழு ஆர்வத்துடன் முஸ்லிம்கள் கலந்து கொள்ள வேண்டும். இது போன்ற இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான புதிய தாக்குதல்கள் வரும் போதெல்லாம் கிலாபாவை நிலைநாட்டுவதற்கான எமது முயற்சிகளைப் பல மடங்காகப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

2. இறைத்தூதர்களையே மதிக்காத ஒரு சமூகத்திலே எந்த ஒரு சாதாரன மனிதனுக்கும் மரியாதை கிட்டும் என எதிர்பார்க்க முடியாது. இதன் காரணமாகவே மேற்குலகிலே குற்றச் செயல்கள் மலிந்த, பாதுகாப்பும் அமைதியும் இல்லாத ஒரு சூழல் உருவாகியுள்ளது என்ற யதார்த்த நிலையை விவாதங்கள, கலந்துரையாடல்கள, கட்டுரைகள, வெகுஜன தொடர்பு சாதனங்கள் மூலம் வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டும். தேவையேற்பட்டால் வீதிகளில் இறங்கி எதிர்ப்பு ஊர்வலங்களில் கலந்து கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

3. இச்சந்தர்ப்பத்தில் முஹம்மது (ஸல்)அவர்களின் உண்மைத்தன்மை என்ன என்பது பற்றி அதிகமானோர் கேள்விகளை எழுப்புவார்கள்;. முஸ்லிம்களாகிய நாம் இதனை நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி படைப்புகளிலே மிகச் சிறந்தவரும் மிக அழகிய உதாரண புருஷருமான முஹம்மது (ஸல்)அவர்கள் பற்றிய அறிவை உலக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களுக் கெதிரான கேலிச் சித்திரத்தை மேற்குலக அரசியல் வாதிகளும் வெகுஜன தொடர்பு சாதனங்களும் ஆதரித்தது போன்று இந்தப் புதிய அவமதிப்பையும் மேறகுலகு ஆதரிக்கலாம். எவ்வாறான நிலை ஏற்பட்ட போதிலும் முஸ்லிம்கள் அனைவரும் இந்த அவமதிப்பை வன்மையாகக் கண்டிப்பதோடு நபிகள் நாயகம் ஸல் அவர்களையும் இஸ்லாத்தையும் ஆழமாகவும் தூய்மையாகவும் நேசிக்கிறோம்; என்பதற்கு அல்லாஹ்வின் முன் சான்று பகர இச்சந்தர்ப்பத்தை ஆர்வத்துடன் பயன்படுத்த முன்வர வேண்டும்.

அல்லாஹ் (சுபு)கூறுகிறான்:

61:14 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا أَنصَارَ اللَّهِ كَمَا قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ لِلْحَوَارِيِّينَ مَنْ أَنصَارِي إِلَى اللَّهِ ۖ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ اللَّهِ ۖ فَآمَنَت طَّائِفَةٌ مِّن بَنِي إِسْرَائِيلَ وَكَفَرَت طَّائِفَةٌ ۖ فَأَيَّدْنَا الَّذِينَ آمَنُوا عَلَىٰ عَدُوِّهِمْ فَأَصْبَحُوا ظَاهِرِينَ

61:14. ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி ‘அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?’ எனக் கேட்க சீடர்கள், ‘நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்’ என்று கூறியதுபோல் நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் – எனினும் இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது; பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது; ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் – அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.


சத்தியத்தை சத்தியமாக விளங்கி அதனைத் துயரவும் அசத்தியத்தை அசத்தியமாக விளங்கி அதனைத் தவிர்ந்து கொள்ளவும் அல்லாஹ் எமக்கு அருள்பாளிப்பானாக!

sources from ourummah.org

No comments:

Post a Comment