ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு நாளை சுதந்திர தினமாக கொண்டாடுகின்றன . ஆனால் சுதந்திரம் என்ற இவர்களது பார்வையில் அப்பட்டமான போலித்தனமே தெரிகின்றது . தம்மை ஆண்டு வந்த காலனித்துவ அடக்குமுறையில் இருந்தோ ,அல்லது சர்வாதிகாரமான மேலாதிக்கத்தில் இருந்தோ கிடைக்கும் விடுதலையே சுதந்திரம் என்பதாக பொதுவாக குறிப்பிடப் படுகின்றது .
ஆனால் நிகழ் காலத்தில் சுதந்திர தினம் என குறிப்பிடப் படுவது காலனித்துவம் என்ற நேரடி அடிமை வடிவத்தில் இருந்து நாகரீகமான நவ காலனித்துவ மறைமுக அடிமைத்தன வடிவத்துள் உத்தியோக பூர்வமாக அழைத்துச் சென்ற நாளையே ஆகும் .ஒரு பிரத்தியோக கொடியையும் , அதற்கொரு கீதத்தையும் அமைத்து அதன்கீழ் அணிவகுத்து நின்று தேசப்பற்றை தெய்வீக அம்சமாக்கி எமது என்ற போர்வையில் யாருக்காகவோ வாழ்ந்து விட்டுப் போவதே சுதந்திரம் என எம்மீது திணிக்கப் பட்டதுதான் உண்மையான நிலை ஆகும் .
எமது அதிகார அரசியலுக்கான யாப்புக்களும் ,கொள்கைகளும் யாரால் வடிவமைத்து தரப்பட்டவை ? எமது சமூக ,கல்வி ,கலாச்சார சூழல் யாரால் வடிவமைத்து தரப்பட்டுள்ளது ? என்ற வினாக்கள் எம்மால் தொடுக்கப் பட்டால் அதன் பின்னால் சர்வதேச அரசியலின் ஓர் ஏகாதிபத்திய உருவத்தை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும் . அப்படிப் பார்த்தால் எமது சுதந்திரமான இயக்கம் இன்றும் கூட கட்டுப்படுத்தப் பட்டேயுள்ளது .அந்த வகையில் ' வேஸ்டாக ' ஒரு நாளை பக்தி மயமாக பூஜிக்க வைக்கப்பட்டுள்ளோம் . அது சிலநேரம் எட்டி நின்று ஆதிக்கம் செய்யும் முன்னாள் எஜமானர்களை நினைவு கூர்வதாக கூட இருக்கலாம் .
தெற்காசியாவை பொருத்தவரை போர்த்துக்கேயர் ,ஒல்லாந்தர் , ஆங்கிலேயர் என்று கைமாறிய ஆதிக்க வரிசையில் இறுதியாக ஆங்கிலேயரிடம் இருந்து கிடைக்கப் பெற்றதே சுதந்திரம் என்பதாக சொல்லப் படுகின்றது . இத்தகு சுதந்திரத்தை பெற நடத்திய இறுதிக்கட்ட சம்பவங்களில் 'SIR ' பட்டம் பெற்ற தேச பிதாக்கள் அவர்களுக்கு 'SIR ' பட்டம் கொடுத்த 'SIR களை ' நாட்டை விட்டு வெளியேறு என்று 'வளர்த்த கடா மார்பில் பாயும்' தனத்தில் சவால் விட்டதில் இருந்தே இறுதிக்கட்ட சூட்டை அடைந்தது .
எவர்களை விரட்ட இந்த தேசப்பற்றாளர்கள் போராட்டத்தை தொடங்கினார்களோ , அவர்களிடம் கற்ற கல்வியும் வழிமுறைகளுமே இவர்களுக்கும் தெரிந்திருந்தது . அதுவே நவகாலனித்துவத்தை 'வெள்ளைக் ' காரன் இலகுவாக 'சாதிக்க ' காரணமாக அமைந்தது . ஏற்கனவே பிரித்தாளும் கொள்கையின் கீழ் மதங்களாக , இனங்களாக , குலங்களாக , கோத்திரங்களாக ......இப்படி பல்வேறு பிரிவினைகளை வைத்தே ஆண்டு வந்தவன் அதே நிலையோடே தான் வளர்த்த கடாக்களிடம் விட்டுச் சென்றான் .
அவர்களும் மதச்சார்பின்மை எனும் அதே மதத்தை அரசியலாக்கினார்கள் . அதன்படி தேசியம் எனும் எல்லைகளோடு மனிதர்கள் சிறைவைக்கப்பட்டார்கள் . ஜனநாயகம் எனும் கடவுளிடம் மண்டியிடவும் சொன்னார்கள் .நம்மால் ,நமக்கு ,நமக்காக என்ற நப்பாசையின் கீழ் விடிவுள்ளதாக கூறினார்கள் . ஆனால் நடந்தது என்ன ? இவர்கள் தமது எஜமானர்களின் வளச் சுரண்டல்களுக்கு வெளிநாட்டு வருமானம், சர்வதேச உறவு போன்ற பெயர்களால் நியாயம் கூறினார்கள். எமது என்ற பெயரில் இருந்த இடுப்புக் கச்சைக்குக் கூட 'டெக்ஸ்' அடித்து எம்மை வறுமைக்குள் வாழ விட்டார்கள் . போதாக் குறைக்கு சர்வதேசக் கடன் எனும் பெயரில் எமது தலைகளுக்காகவும் பிரித்துத் தந்தார்கள் .
சுதந்திரம் என்ற பெயரில் அடிமைத்துவத்தின் இன்னொரு வடிவத்தில் புகுத்தப் பட்டுள்ளோம் என்பதுதான் உண்மை . தொடரும் இந்த கொத்தடிமை சாசனத்தின் வருடாந்த நினைவு கூறலே இந்த சுதந்திர தினம் என்றால் புரிந்து கொள்ளாமல் ' மழை பெய்தாலும் சேற்றிலேதான் புரள்வேன் எனும் எருமை மாட்டுத் தனத்தோடு அணி திரள்பவர்கள் திரளத்தான் செய்கிறார்கள்.
உண்மையான சுதந்திர தினம் என்பது மனிதன் மனிதனில் அடிமைப்படுதலில் ஏற்பட முடியாது. அது சுயநலம் மிக்கதாகவும் , குறைபாடுள்ளதாகவும் தான் இருக்கும் . ஜப்பானின் காருக்கு இந்தியா 'கட்லோக் ' தயாரிக்க முடியுமா ? இறைவனால் படைக்கப் பட்ட மனிதனுக்கு மனிதனே வழிகாட்ட முடியுமா ? இந்த சிந்தனையின் முடிவில் தான் ஒருவனின் உண்மையான சுதந்திர தினம் தீர்மானிக்கப் படும் என்பதே எனது தாழ்மையான கருத்தாகும் .
No comments:
Post a Comment