இது ஜனநாயகத்தின் கோவிலாம் !குட்டிக் கடவுள்கள் அடிக்கடி இங்கே கூத்தாட்டமும் வைத்துக் கொள்ளும் ! இது அவசியம் போல் காட்டப் படும் குட்டிச் சுவர் .இதில் சந்தனம் நுழைந்தாலும் சாக்கடையை பெரும்பாலும் சுமக்க வேண்டும் .கொள்கைக் 'கன்று' களாய் இங்கு சென்றவர்கள் கூட மலம் உண்ணும் பக்குவத்தில் மாற்றப் படுவர் ! மக்களால் ,மக்களுக்கு மக்களுக்காக எனும் மதிமயக்கும் தந்திரத்தால் வேலிபோட்ட இந்த மாக்களின் பண்ணையில் காளை மாடுகளும் அடிக்கடி வார்த்தை ஜாலங்களால் கன்று போட்டு பால் கொடுக்கும் !
பேட்டை ரவுடிகளும் இதனுள் பொழுது போக்க போலிஸ் பந்தோபஸ்து கொடுக்கும் ! நடிக ,நடிகைகள் நிஜத்திலும் இங்கிருந்து நடிக்கலாம் ! இனவாத ,நிறவாத ,மதவாத ,சாதிவாத பேய்கள் தம் இரத்தம் குடிக்கும் கசாப்புத் தீர்மானங்களை எடுப்பது அதிகமாக இங்குதான் ! பெரும்பான்மை சாட்டில் சிறுபான்மை உரிமைகள் புதைகுழி இடப்படுவதும் இங்குதான் !
பகல் கொள்ளைக்காரன் சமூக சேவகனாக பதவிப் பிரமாணம் பெறுவதும் இங்குதான் ! இதனுள் நுழைய பரம ஏழையிடம் பிச்சை கேட்டுப் பல் இளிப்பான் பரம்பரைப் பணக்காரன் ! பிச்சைக்காரன் இங்கு சென்று கோடீ ஸ் வரன் ஆகலாம் ! பதில் தெரிந்தால் சொல்லவும் . இது எந்த இடம் !?
No comments:
Post a Comment