Aug 13, 2013

முஸ்லிம்களது தலைமைத்துவமும் இன்றைய முஸ்லிம் உலகும்…!

இன்று முஸ்லிம் உம்மத் உதுமானிய கிலாபா அழிக்கப்பட்டது முதல் 57 தலைமைத்துவங்களைத் தாங்கி நிற்கின்றது. 

ஒவ்வொரு தலைமைத்துவமும் தமது தேசிய எல்லைக்குள் தலைமைத்துவத்தை வழங்குவதுடன் அது இஸ்லாமிய தலைமைத்துவமாகவும் இல்லாதிருப்பது இன்னும் உம்மத்திற்கு பெரும் சுமையாகவும் குர்ஆன் சுன்னா அடிப்படையிலான ஷரீஆ அமுலாக்கப்படுவதில் பாரிய தடைக்கற்களாக இருப்பதுடன் மேற்கினது முகவர்களாக ஆட்சி செய்வதனை நாம் இன்று கண்கூடாகக் காணலாம். 

அதேவேளை, சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் ஆத்மீகத் தலைமை ஒருபுறம் “பத்வாக்களையும்” இன்னும் சில மார்க்க அடிப்படையிலான தலைமைத்து முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளும் அதேவேளை முஸ்லிம்களை ஏதோ ஒரு ஆத்மீக பிணைப்பால் இணைப்பதனையும் காணலாம். 

அதேநேரம் வாழ்வியல் விவகாரங்களை ஒழுங்குபடுத்தத் தேவையான தலைமைத்துவத்தை முஸ்லிம் அரசியல் தலைமைகள் “மத ஒதுக்கல் சிந்தனையை கொண்ட முதலாளித்துவ ஜனநாயக வழிமுறையில்” முன்னெடுப்பதனைக் காணலாம். இது இஸ்லாத்தில் ஒருபோதும் இல்லாத நடைமுறை மாத்திரமன்றி ஒரு ஆபத்தான போக்குமாகும். அதன் விளைவுகனை இன்று நாம் இலங்கையில் கண்கூடாக காணுகின்றோம்.

அதேவேளை ஒவ்வொரு தேசத்தின் எல்லைக்குள்ளும் இயங்கும் தஃவா அமைப்புக்களினது தலைமைகளும் தங்களது தஃவா இலக்கு குறித்த கொள்கையடிப்படையில் மேலும் பிரிந்து செயற்படுவதும் மற்றுமொரு துர்பாக்கிய நிலைக்கு முஸ்லிம் உம்மத்தை இட்டுச் செல்கிறது. இது இஸ்லாத்தின் எதிரிகளுக்கும், குப்பார்களுக்கும் மேலும் பலம்சேர்க்கிறதாக அமைகிறது.

இவ்வாறு தலைமைத்துவம் என்ற பெயரில் முஸ்லிம்கள் மென்மேலும் பிரிந்து பலவீனப்பட்ட நிலையில் குறுகிய வட்டத்திற்குள் தங்களது தலைமைத்துவ பணிகளை முன்னெடுப்பதனை நாம் இன்று காணக் கூடியதாக உள்ளது.

உண்மையில் இந்த துரதிஷ்டவசமான நிலைமைகளில் இருந்து முழுமையாக முஸ்லிம் உம்மத் மீட்சிபெற வேண்டுமாயின் “நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் நிறுவிய இஸ்லாமிய அரசின் வழிமுறையில் குலபாக்களின் ஊடாக உதுமானிய அரசு அழிக்கப்படும் வரை சுமார் 1300 வருடங்களுக்கு மேலாக உம்மத்தை வழிநடாத்திய இஸ்லாமிய தலைமைத்துவம் மீள நபி வழியில் உருவாகி அதன் மூலம் 57 தேசங்களும் ஒரு கலீபாவின் ஆளுகைக்குள் அதன் பிரதிநிதி களான முஸ்லிம் ஆளுநர்களின் ஊடாக தாவா முன்னெடுப்புக்களும் ஷரீஆப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் முன்னெடுக்கப்படும் போதுதான் நாம் உண்மையான நன்மையை முஸ்லிம் உம்மத்தில் காணலாம்.” இதன் மூலமே இஸ்லாத்தின் பொது எதிரியை எதிர்கொள்ளத் தேவையான பலம் மற்றும் மனப்பாங்கு எம்மத்தியில் உருவாகும். அதற்கான பலம் எமக்கு கிடைக்கும்!

இன்று இஸ்லாமிய தலைமைத்துவம் குடும்பத்தை வழிநடாத்துவது முதல் ஆட்சி செய்யும் வரை காணப்பட்டாலும் அதன் புரிதலில் உள்ள குழறுபடியினால் நாம் எமது பலத்தை இழந்துநிற்கின்றோம். 

ஆகவே, இன்று எமது கேடயமாகிய இஸ்லாத்தின் ஒரே தலைமையான கலீபாவின் மீள் உருவாக்கம் உலகில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை இனைறைய இலங்கை முஸ்லிம் சமூகத்தில் நாம் எதிர்நோக்கும் ஆத்மீக மற்றும் அரசியல் பிரச்சினைகளில் அவசியம் உணர கடமைப்பட்டுள்ளோம். 

அதேவேளை, சர்வதேச முஸ்லிம்களது விவகாரங்களில் இந்த இஸ்லாமியத் தலைமை இல்லாததனால் எத்தகைய இழிநிலையை நாம் சந்தித்து வருகிறோம் என்பதனை எமது கடந்த 13 நூற்றாண்டினது இஸ்லாமிய தலைமைகளது ஆத்மீக மற்றும் அரசியல் முன்னெடுப்பில் இருந்து பாடம் படிப்போம்! 

பொது இலக்கு பற்றி சிந்திப்போம்! ஆக்கபல தஃவாக்களை முன்னெடுப்போம்.

by Mohideen Ahamed Lebbe

No comments:

Post a Comment