Sep 16, 2013

ஆல்கஹால் கலந்துள்ள வாசனைத் திரவியங்களை பயன்படுத்துவது கூடுமா?

வாசனைத் திரவியங்களில் பெரும்பாலானவை ஆல்கஹால் கலந்து செய்யப்படுபவையாக இருக்கின்றன. ஆல்கஹால், முக்கியமான கரைப்பானாகவும், எளிதில் ஆவியாகவும், காற்றில் இலகுவாக கலக்கவும், இன்னும் சில பயன்பாடுகளின் அடிப்படையில் வாசனைத்திரவியங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆல்கஹால் என்பது அறியப்பட்ட போதைப்பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். இஸ்லாம் போதைப்பொருள்களை முழுமையாக தடை செய்திருக்கும் நிலையில், ஆல்கஹால் கலக்கப்பட்ட வாசனைத்திரவியங்களை பயன்படுத்துவது கூடுமா என்ற கேள்விக்கு விடை காண்பது அவசியமாகும்.

போதையூட்டக்கூடிய ஆல்கஹாலுக்கு என்ன சட்டமோ, அதே சட்டம்தான் ஆல்கஹால் கலக்கப்பட்ட வாசனைத் திரவியங்களுக்கும் பொருந்தும் என்பதற்கு சான்றுகள் உள்ளன.

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:-

كُلُّ مُسْكِرٍ خَمْرٌ، وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ

போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும்.

(இப்னுஉமர்(ரலி), முஸ்லிம்)

مَا أَسْكَرَ كَثِيرُهُ، فَقَلِيلُهُ حَرَامٌ

போதை தரக்கூடிய பொருள் அதிகமாக இருந்தாலும், சிறிய அளவில் இருந்தாலும் அது ஹராமாகும்.

(ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி),திர்மிதீ)

இதிலிருந்து போதையூட்டக்கூடிய பொருட்களில் ஒன்றான திரவ வடிவிலுள்ள மது (ஆல்கஹால்) அதிக அளவில் இருந்தாலும் அல்லது சிறிய அளவில் இருந்தாலும் ஹராம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

அத்தர் போன்ற வாசனைத் திரவியங்களில் சிறிய அளவில் ஆல்கஹால் இடம் பெற்றிருந்தாலும், அதுவும் போதை தரக்கூடிய ஆல்கஹாலில் அடங்கும் என்பதை தஹ்கீகுல் மனாத் – (تحقيق المناط – establishing the reality) என்னும் யதார்த்தத்தை நிலைநாட்டுதல் என்ற ஷரியா அம்சத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

لَعَنَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الخَمْرِ عَشَرَةً: عَاصِرَهَا، وَمُعْتَصِرَهَا، وَشَارِبَهَا، وَحَامِلَهَا، وَالمَحْمُولَةُ إِلَيْهِ، وَسَاقِيَهَا، وَبَائِعَهَا، وَآكِلَ ثَمَنِهَا، وَالمُشْتَرِي لَهَا، وَالمُشْتَرَاةُ لَهُ

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் ‘خمر – மது’ (போதைப் பொருட்கள், சாராயம், ஆல்கஹால் …) சம்பந்தமாக 10 பேர்களை சபித்துள்ளார்கள். 1) மதுவை காய்ச்சுபவர், 2) அதை காய்ச்சுவதற்கு உதவுபவர், 3)அதை குடிப்பவர், 4) அதை புகட்டுபவர், 5) அதை சுமந்து செல்பவர், 6) அதை சுமந்து செல்ல ஏற்பாடு செய்பவர், 7) அதை விற்பனை செய்பவர், 8) அதை வாங்குபவர், 9) அதை வெகுமதியாக கொடுப்பவர், 10) அதை விற்ற பணத்தில் உண்பவர். (அனஸ் (ரலி) நூல்: திர்மிதி)

முஸ்ததரகுல் ஹாகிம் என்ற ஹதீஸ் கிரந்தத்தில் அல்லாஹ் மதுவை சபித்துள்ளான் என்று வந்துள்ளது.

ஆல்கஹால் கலக்கப்பட்ட திரவங்களை யாரேனும் குடித்தால் அவருக்கு போதை ஏற்படும் என்பதாக இத்தகைய துறை சார்ந்த வல்லுனர்கள் கூறுகின்றார்கள். போதைப்பொருட்களுக்கு அடிமையான சிலர் இத்தகைய திரவங்களையும், ஆல்கஹால் கலக்கப்பட்ட வாசனைத் திரவியங்களையும் போதைக்காக பயன்படுத்துவதையும் அறிய முடிகிறது.

எனவே தான் நபி صلى الله عليه وسلم இது போன்ற போதையூட்டும் பொருட்கள் அனைத்தையும் குறித்து எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

كُلُّ مُسْكِرٍ خَمْرٌ، وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ

போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும். .

(இப்னுஉமர்(ரலி), முஸ்லிம்)

எனவே போதையூட்டக்கூடிய ஆல்கஹாலுக்கு என்ன சட்டமோ, அதே சட்டம்தான் ஆல்கஹால் கலக்கப்பட்ட வாசனைத் திரவியங்களுக்கும் பொருந்தும் என்பதால், இத்தகைய வாசனைத் திரவியங்களை பயன்படுத்துவதும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.

(இஸ்லாமிய அறிஞர் ஷேய்க் அத்தா இப்னு கலீல் அபூ ரஸ்தா அவர்கள் அளித்த பதிலின் தமிழாக்கம் )

SINDHANAI.ORG

No comments:

Post a Comment