Sep 27, 2013

இஸ்லாத்தின் தூண்(களான முக்கியக் கடமை)கள் குறித்துக் கேட்டறிதல்.


10. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவசியமற்ற) சில விஷயங்கள் குறித்துக் கேள்வி கேட்கக்கூடாதென தடை விதிக்கப்பட்டிருந்தோம். எனவே, (இந்தத் தடையை அறிந்திராத) கிராமவாசிகளில் (புத்திசாலியான) ஒருவர் வந்து நபியவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்; நாங்களும் அதைச் செவியுற வேண்டும் என்பது எங்கள் ஆசையாக இருந்தது. அவ்வாறே (ஒரு நாள்) கிராமவாசிகளில் ஒருவர் வந்து, முஹம்மதே! உங்கள் தூதர் ஒருவர் எங்களிடம் வந்து, அல்லாஹ் உங்களை (மனித இனம் முழுமைக்கும்) தூதராக அனுப்பியுள்ளான் என்று நீங்கள் கூறுவதாக எங்களிடம் சொன்னாரே (அது உண்மையா)?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் உண்மைதான்" என்று கூறினார்கள்.
அந்தக் கிராமவாசி, வானத்தைப் படைத்தவன் யார்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்" என்று பதிலளித்தார்கள். பூமியைப் படைத்தவன் யார்?" என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்" என்றார்கள். இந்த மலைகளை நட்டுவைத்து அதிலுள்ளவற்றை உருவாக்கியவன் யார்?" என்று கிராமவாசி கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்" என்றார்கள். அவர், அப்படியானால், வானத்தைப் படைத்து, பூமியையும் படைத்து. இந்த மலைகளை நட்டும்வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் உங்களைத் தூதராக அனுப்பினானா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள்,ஆம்" என்று சொன்னார்கள்.
அவர் இரவிலும் பகலிலும் (நாளொன்றுக்கு) ஐவேளைத் தொழுகைகள் எங்கள்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளன என்று உங்கள் தூதர் கூறினாரே (அது உண்மையா)?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், உண்மைதான்" என்றார்கள். உங்களைத் தூதராக அனுப்பி வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் உங்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டானா?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம்" என்றார்கள்.
தொடர்ந்து அவர், நாங்கள் எங்கள் செல்வங்களில் இருந்து ஸகாத் வழங்குவது எங்கள்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று உங்கள் தூதர் கூறினாரே!" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,உண்மைதான்" என்றார்கள். உங்களைத் தூதராக அனுப்பி வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் இவ்வாறு உங்களுக்குக் கட்டளையிட்டானா?" என்று அந்தக் கிராமவாசி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ஆம்" என்றார்கள். அவர், ஒவ்வோர் ஆண்டும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது எங்கள்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று உங்கள் தூதர் கூறினாரே?" என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், உண்மைதான்" என்றார்கள். உங்களைத் தூதராக அனுப்பிவைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் இவ்வாறு உங்களுக்குக் கட்டளையிட்டானா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள்,ஆம்" என்றார்கள். மேலும் உங்கள் தூதர் எங்களில் வசதிபடைத்தோர் இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று கூறினாரே?" என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், உண்மைதான்"என்றார்கள்.
பிறகு அந்தக் கிராமவாசி, உங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! இவற்றைவிட நான் அதிகமாக்கவுமாட்டேன்; இவற்றிலிருந்து (எதையும்) குறைக்கவும் மாட்டேன்" என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் நிச்சயமாக சொர்க்கம் செல்வார்" என்று கூறினார்கள்.

11. ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) 

அவர்கள்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவசியமற்ற) சில விஷயங்கள் தொடர்பாகக் கேள்வி கேட்கக்கூடாதென நாங்கள் குர்ஆன் மூலம் தடை விதிக்கப்பெற்றிருந்தோம்" என்று கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸைப் போன்றே தொடர்ந்து அறிவித்தார்கள். 

ஸஹீஹ் முஸ்லிம்

No comments:

Post a Comment