ஓமர் முக்தாரின் போராட்டமும் ஈழப் போராட்டமும் ஒரு ஒப்பீடு ....


ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி ' எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து (PART 09)

“ஓமர் முக்தார்” முசோலினியின் ஃபாசிச காலனியாதிக்க வெறியில் சீரழிந்த லிபியா நாட்டின் ‘முஸ்லீம் ’ போராளிதான் ஓமர் முக்தார். ஓமர் சுமார் 20 ஆண்டுகள் இத்தாலிய ஆதிக்க வெறியைச் சமாளித்து எதிர்த்து நின்று, 1931ல் ஒரு போரில் காயம்பட்டு, இத்தாலிய ராணுவத்தினால் கைது செய்யப்பட்டு, பழி சுமத்தப்பட்டு அவரது மக்களுக்கு முன்பாகவே தூக்கிலிடப்பட்டார்.

வியட்நாம் போரில் அமெரிக்கா உணர்ந்தது போல் இங்கு பெரும்படை கொண்ட இத்தாலி அரசு, சிறு கூட்டமாய் இருப்பினும் சொந்த மண்ணை விட்டுக்கொடுக்கக் கூடாதென்ற உணர்வில் உந்தப்பட்ட போராளிகளின் கொரில்லாப் போர்முறையைச் சமாளிக்க முடியாமல் திணறியது முசோலினியின் பாசிச இராணுவம் .

ஓமரின் புத்திசாலித்தனம், வீரம், நாட்டின் நிலப்பரப்பு பற்றிய தேர்ந்த அறிவு ஆகியவற்றின்முன் இத்தாலியின் மிகப்பெரிய ராணுவமும் நவீனத் தளவாடங்களும் ஒன்றும் செய்ய முடியவில்லை . அதனால் ஒவ்வொரு முறை அடிவாங்கும்போதும் லிபிய மக்களை அநியாயமாகச் சித்திரவதை செய்து வெறியைத் தணித்துக்கொள்கின்றனர் ஜெனரல் க்ரேசியானி தலைமையிலான இத்தாலியினர்.

அதுமட்டுமன்றி அப்பாவி மக்களைக் கூட்டம் கூட்டமாக அகதி முகாம்களென்ற பெயரில் சிறைப்படுத்தித் துன்புறுத்துகின்றனர். அதில் பெரும்பகுதி மக்கள் இறக்கின்றனர். ஓமர் தூக்கிலிடப்பட்டாலும் அம்மக்கள் தொடர்ந்தும் போராடினார்கள் . விடுதலை பற்றிய அவர்களது தெரிவு நவகாலனித்துவ மனித அடிமைத்துவத்தின் மறுபிரவேசம் என்பது புரியாமல் அம்மக்கள் இருந்தார்கள் என்பது இஸ்லாத்தை முன்னிறுத்தி ஆராயும் போது 'ஹைலைட்டாகும் ' முக்கிய விடயம் .

மன்னர் முறை முடியாட்சி மமதைகளுக்கு பின்னாலும் , முஸ்தபா கமால் அதாதூர்கின் துருப்பிடித்த தேசிய நஞ்சுக் கோட்பாட்டின் பின்னாலும் உடைந்து அணிதிரண்ட இஸ்லாமிய உம்மத்தின் தவறான நடத்தையின் பொதுப் போக்கிலே ஒமர் முக்தாரின் விடுதலைப் போர் உள்ளடங்கி விடுவதை 1981 களில் திரைப்படமாக அந்த வரலாறு பார்க்கக் கிடைத்த போது என்னாலும் உணர முடியாதிருந்தது .

கொடிய இனவாத யுத்தம் சூடு பிடித்த ஆரம்பப் பொழுதுகளில் தான் இந்த ஓமர் முக்தார் விடுதலைப் போரின் உதாரண வீரனாக வடபுல யாழ்ப்பாணத்தில் அறிமுகமானார் .சிந்தனை வீழ்ச்சியின் உச்சத்திலும் எஞ்சி நின்ற மார்க்கத்தின் எச்சங்களிலும் நின்று பார்க்கும் போது சுதந்திரம் தொடர்பாகவும் , ஜிஹாத் தொடர்பாகவும் தவறான வரைவிலக்கணம் அன்று எனக்குள் பதிந்ததும் தவிர்க்க முடியாதது.

இருந்தும் அன்று எனக்குத் தெரிந்த வகையில் ஈழப் போராட்டத்தோடு ,லிபிய சுதந்திரப் போரை ஒப்பிட்ட போது ஒரு அதீத தூய்மை இழப்பை ஈழ விடுதலைப் பாதை அடைந்திருப்பதை அன்றே கணித்தேன் . கல்வியங்காட்டில் TELO வின் சிறீ சபாரத்தினம் சுடப்பட்டு 'டயர்' போடப்பட்டபோதும் , PLOT மென்டிஸ் கொடூரமாக சிறைப் படுகொலை செய்யப்பட்ட போதும் சில முடிவுகளை என் உள்மனது எடுத்துக் கொண்டது .

அதுவரை ஜெனரல் கிரசியாணியாக தெரிந்த லலித் அத்துலத் முதலி விடுதலைப் புலிகளின் கிட்டு வாக மாறிப்போக , முசோலினி போல் தெரிந்த ஜே .ஆர் .ஜெயவர்தன ,வேலுப்பிள்ளை பிரபாகரனாக மாறிப்போனார் . ஆதிக்க வெறி என்பதன் அப்பட்ட வடிவங்களாக இவர்கள் இருந்தாலும் தமிழர்களால் இன்றும் ஒரு உயர்ந்த அந்தஸ்தில் வைத்து இவர்கள் பார்க்கப் படுவது ஆச்சரியமானது .

குறைந்தளவு போராளிகள் , பலம் வாய்ந்த எதிரி மக்கள் இழப்பை தவிர்க்க சண்டைக் களங்களை மக்கள் இல்லாத பாலைவனங்களையும் , மலைப்பாங்கான பகுதிகளையும் நோக்கி இழுத்துச் சென்ற ஓமர் முக்தாரின் போரியல் யுக்தி என்பவற்றுக்கு முன்னால் விடுதலைப் புலிகள் செய்த சமர்கள் ,தாக்குதல்கள் ஒரு பாரிய தவறை கொண்டியங்கியதை என்னால் காணக்கூடியதாக இருந்தது .

மக்களே புலிகள் ,புலிகளே மக்கள் ! என்ற பார்வையின் கீழ் 'பொசிசன்' எடுத்து பதுங்கித் தாக்கும் ஒரு 'டூல் ' ஆக தமிழர்கள் மாறிப்போக ,மறுபக்கம் சிவிலியன் என்ற கரிசனை இல்லாத இலங்கை இராணுவம் தாக்குதல்களை தொடுத்தது ! 'இழப்புகள் எமக்கு புதியவை அல்ல ' என்ற வீர வசனத்தோடு பிணக் குவியல்கள் வீடியோ நாடாக்களாக நிதி சேகரிப்புக்காக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செயப்பட்டது .முல்லியவலையின் இறுதிச் சமர்வரை வேலுப்பிள்ளை பிரபாகரனின் யுத்த பிரபுத்துவம் மரணத்தின் பின்னும் இன்றுவரை சாதித்த ஒரே சரித்திரம் இதுதானாகும்.

ஓமர் முக்தாரின் ஒரே பார்வை தனது போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்ற வேண்டும் என்பதே ஆகும் . ஜெனரல் கிரசியாணி போராளிகளை ஒரு திசையை நோக்கி தாக்குதல் வியூகத்தில் விரட்டிச்சென்ற போது கூட அவருக்கு இரண்டு முடிவுகள் இருந்தன. 1. துனீசியா ,அல்ஜீரியா ,எகிப்து போன்ற பகுதிகளை நோக்கி தப்பிச் செல்வது .2. சாகும் வரை சண்டையிடுவது . இதில் இரண்டாவது முடிவிலேயே ஓமர் முக்தார் இருந்தார் . ஏறத்தாழ 2000 போராளிகளை பறிகொடுத்தாலும் இத்தாலிய அதிகாரம் அற்ற லிபியாவை நோக்கி மக்கள் நகர வேண்டும் என்பதே அவரது கனவு ஆகும் . அவரது தன் தளபதிகளுக்கான இறுதிக் கட்டளையும் இதுவாகத்தான் இருந்தது .

கொல்லப்படும்வரை தாக்குதல் என்ற முடிவோடு கால்களை கட்டியவர்களாக வெறுமையான பாலை நிலத்தில் இத்தாலிய டாங்கிகளுக்கு முன் வெறும் 'ரைபிள்களோடு 'சண்டையிட்ட காரணமும் இதுதான் . போராளிகள் மரணிக்கலாம் போராட்டம் மரணிக்கக் கூடாது . அந்த வகையில் ஓமர் முக்தார் தூக்கில் இடப்பட்டதும் அவரது கனவு நிதர்சனமானது . ஈழ விடுதலைப் போரில் 'கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதுதான் மிச்சம் .

No comments:

Post a Comment