ஒரு சராசரி பாமர யாழ் முஸ்லிமின் குறிப்பிடத்தக்க வீரம் !ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி ' எனும் முஸ்லீம்களின் நினைவுகளில் இருந்து ....(PART 08)

கடந்த 12 அக்டோபர் 2013 அன்று நிஸ்தார் அஹமட் என்பவர் இறைவனடி சேர்ந்தார் ,நீர்கொழும்பை பிறப்பிடமாகவும் ,யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் வாழ்ந்திருந்த இவர் 1990 களில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முஸ்லீம் இனத்துடைப்பு எனும் கேவல அரசியலை செய்வதற்கு சற்று சில நாட்களுக்கு முன் 10 பிள்ளைகளுடன் கூடிய தன் குடும்ப சகிதம் இலங்கையின் தென்பகுதிக்கு புலம் பெயர்ந்தவர் .

இனவாத யுத்தத்தின் அருவருப்பான சின்னங்களில் ஒன்றான அகதி முத்திரை இவர் குடும்பத்துக்கும் கிடைத்தது .நிவாரணம் , உணவு முத்திரை ,அரைவயிற்று சோறு எனும் கசப்பான அனுபவங்களை இவர் குடும்பமும் தாராளமாகவே அனுபவித்தது .அர்த்தமற்ற ஒரு ஆயுதக் கலாசாரத்தின் விளைவு வட்டத்தில் இவர் குடும்பமும் மறுக்க முடியாத ஒரு அங்கமாகியது .

ஏறத்தாழ மூன்று தசாப்தங்களுக்கு மேல் வடபுல யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருந்த இவர் நெல்லியடி , குருநகர் , சோனகதெரு போன்ற பகுதிகளில் வாழ்ந்திருந்த பழுத்த அனுபவசாலி .கொடிய இனவாத யுத்தத்தின் மோசமான விளைவுகளை இவரும் ,இவர் குடும்பமும் சந்தித்திருந்த போதிலும் வடபுல யாழ்ப்பாணத்தோடு ஓர் இனம் புரியாத பற்றிருந்த காரணத்தினால் யுத்தம் சூடு பிடிக்க ஆரம்பித்தும் இறுதிவரை புலம் பெயராமல் இருந்தார் .

1990 களில் இரண்டாம் கட்ட நாசகாரம் ஈழ விடுதலை என்ற பெயரில் விடுதலைப் புலிகளால் பிரகடனப் படுத்தப் பட்டபோது ,இலங்கை விமானப் படையின் குண்டு வீச்சுக்கு இவரது வீடும் இலக்கானது. இதன் பின்னரே புலம் பெயரும் முடிவை எடுத்தார் .

தொழுகையை விடாப்பிடியாகவும் , இமாம் ஜமாத்துடனும் நிறைவேற்றும் இவரிடம் ,இவருக்கு புரிந்த விபரங்களின் அடிப்படையில் ஈழ விடுதலைப் போராட்டத்தை முற்றாகவே குறைகாண்பார் .அத்தோடு தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்களுடன் இணைந்திருந்த முஸ்லீம் இளைஞ்சர்களை கண்டு அர்த்தமற்ற அந்த முயற்சியை கைவிட்டு விடும்படி பணிப்பார் .அத்தோடு பல அந்நிய மனிதர்களை இஸ்லாத்தை தழுவ வைத்த உதாரணமும் இவருக்கு உண்டு .

இவர் PLOT இயக்கத்தை சேர்ந்த நிலந்தன் என்று அழைக்கப்பட்ட 'இக்பாலின் ' தாய் மாமன் . மேலும் விடுதலைப் புலிகளின் கப்டன் பாரூக் என அழைக்கப் பட்ட 'ஹனீபா ' எனும் அக்கரைப்பற்று இளைஞன் வரை அக்காலத்தில் இவரோடு பரிச்சயமானவர்கள் .இந்த இருவரது மரணங்களிலும் தனக்கு சந்தேகம் இருப்பதாக இவர் அடிக்கடி கூறுவார் . அத்தோடு யாழ்ப்பாணத்தில் EROS இயக்கத்தில் இருந்தவரும் ,பின்னர் இலங்கை இராணுவத்தின் 'கஜபா ரெஜிமென்டில்' இருந்து மர்மமான முறையில் மரணத்தை தழுவிய சித்தீக் இவரது கடையில் சிறு வயதில் இருந்தே பணியாற்றியுள்ளார் .

ஒருமுறை ஆயுதக் கொள்வனவுக்காக நிதி சேகரிப்பு நடவடிக்கை ஒன்று தொடர்பாக பாரூக் சோனக தெரு மக்களிடம் வந்த சந்தர்ப்பத்தில் இவர் பாரூக்கை தனியே அழைத்து "இது வீண் வேலை இது இஸ்லாமிய போராட்டம் அல்ல " என கூற மௌனமாக தலையை குனிந்தவாறு கேட்டுவிட்டு சென்றுள்ளான் பாரூக் .(பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகளோடு இணையச் சென்ற முஸ்லீம்களை நோக்கி பாரூக் இது இஸ்லாமிய போராட்டம் அல்ல நீங்கள் இதில் இணைய வேண்டாம் என இரகசியமாக புத்திமதி கூறியதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும் .)

அன்று விடுதலைப் புலிகளின் வட பிராந்திய தளபதியாக இருந்த கிட்டு வின் கட்டளையின் பிரகாரம் ஜெலீல் மாஸ்டரையும் , வெள்ளையனையும் மண்டையில் போட்டது (படுகொலை செய்தது ) இந்த பாரூக் தான் என்றவகையில் மிகக் கடுமையான விமர்சனம் இவருக்குண்டு .

ஆழ்ந்த படிப்பறிவோ ,மிகத் தெளிவான மார்க்க அறிவோ இல்லாத நிலையிலும் இரத்த வெறிபிடித்த இனவாத யுத்தத்தையும் அதன் கொடூரத்தையும் பாமர முஸ்லிமாக இருந்து இந்த நிஸ்தார் அஹமட் புரிந்திருந்தது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கின்றது .ஒரு சாதாரண ரொட்டிக்கடை முதலாளிக்கு ஈழப் போராட்டத்தில் இருந்த இத்தகு சராசரிப் பார்வை தட்டிக் கழித்து விட முடியாதது .

1987 அக்டோபர் மாதம் விடுதலைப் புலிகள் (IPKF) இந்திய அமைதிகாக்கும் படையுடன் தமது சண்டையை தொடங்கினர் .ஏறத்தாழ சிவிலியன்கள் புலிகள் என்ற எவ்வித பாகுபாடும் இன்றி ஏதோ பாகிஸ்தான் போடர் போல நினைத்து இந்திய அமைதிப் படை அட்டகாசமாக முன்னேறிக் கொண்டிருந்தது .
புதிய சோனக தெரு என அழைக்கப் பட்ட பொம்மை வெளிப் பகுதியில் கண்ணிவெடிகளைப் புதைத்து காத்திருந்தது ஒரு புலிகளின் அணி . வழமை போலவே அதிகாலை சுபஹுத் தொழுகைக்கு முன்னர் பள்ளிக்கு சென்ற இந்த நிஸ்தார் அஹமட் ஒரு துணிகரமான வேலையை செய்துள்ளார் . அது என்ன ?

குறித்த தாக்குதல் இடம்பெற்றாலும் இந்தியர்களின் முன்னேற்றத்தை தடுக்க முடியாது .ஆனால் அந்த சேதத்தின் மூலம் வெளியாகும் பழிவாங்கும் கோப உணர்வு அப்பகுதியில் வாழும் முஸ்லீம்கள் மீது காட்டப் பட்டால் விளைவு மிகவும் மோசமாக இருக்கும் என முடிவெடுத்தார்.

தனது மருமகன்களில் ஒருவரை அழைத்துக் கொண்டு கண்ணிவெடி புதைக்கப் பட்டுள்ள பகுதிக்கு விடியாத அந்த நேரத்தில் சென்று வயர்களை அறுத்து சுற்றி எடுத்துக் கொண்டு வந்து வீட்டில் பழைய பொருட்கள் போடும் அறைக்குள் போட்டு விட்டார் .

விடுதலைப் புலிகளால் நிலைமை புரியப்பட்டது நன்றாக விடிந்த பின்னர்தான் ஆகும் .அவர்கள் கோபத்தோடும் ஆவேசத்தோடும் யார் இதை செய்தது !? எனத் தேடியபோது சம்பந்தமே இல்லாதவர் போல் அங்கிருந்தார் .பின் அவரது வீட்டில் துணி உலர்த்தும் கொடி கட்டப் பட்டது இந்த வயர்களை வைத்தே என நகைச்சுவையாக கூறுவார் இந்த நிஸ்தார் அஹமட் !இத்தகு ஒரு சராசரி பாமர யாழ் முஸ்லிமின் தைரியம் நிச்சயமாக நினைவு கூறப்படவேண்டியதே .

No comments:

Post a Comment