பெண்கள் தொழில் செய்தல் இஸ்லாம் கூறும் அடிப்படைகள்

1. பெண்களின் இயல்பு பாதுகாக்கப்படல் வேண்டும்

பெண்கள் எந்த விவகாரத்தில் ஈடுபடுவதாக இருந்தாலும் அவர்களுக்கே உரிய இயல்பு பாதுகாக்கப்படல் வேண்டும் பெண்மைக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படக் கூடாது. மட்டுமல்ல அவர்களுக்கே உரிய இயல்பு, அவர்களின் சுபாவம், அவர்களின் தன்மைக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாது என்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கே உரிய தனியான இயல்பு, அவர்களின் சுபாவம், அவர்களின் தன்மை என்பன பாதுகாக்கப்பட வேண்டும். இது இஸ்லாம் கூறும் முதலாவது அடிப்படை.

2. வீடு என்ற சாம்ராஜ்யத்தின் நிர்வாகம் பாதிக்கப்படக்கூடாது

இஸ்லாம் வலியுறுத்தும் மற்றுமொரு மிக முக்கியமான விடயம்தான், வீடு என்பது பெண்களின் ராஜ்ஜியம் என்பதாகும். அந்த ராஜ்ஜியத்தின் தலைவியாக இருப்பவள் பெண். ஆணின் துணைவியாக, குழந்தைகளின் தாயாக, வீடு என்ற சாம்ராஜ்ஜியத்தின் சொந்தக்காரியாக, நிருவாகியாக இருப்பது பெண்ணே. எனவே, வீடு என்ற சாம்ராஜ்யத்தின் நிர்வாகம், பரிபாலனம் பாதிக்கப்படாமல் இருப்பது மிக முக்கியம்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நீண்ட ஒரு ஹதீஸிலே சொன்னார்கள்:

'நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள். உங்கள் ஒவ்வொருவரின் பொறுப்புக்கள் பற்றியும் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்...”
தொடர்ந்து கூறினார்கள்,

'ஒரு பெண் தன்னுடைய கணவனது வீட்டில் பொறுப்புதாரியாக இருக்கிறாள். அவளுடைய பொறுப்புகள் பற்றி நிச்சயமாக அவள் விசாரிக்கப்படுவாள்.' (அல்புகாரி, முஸ்லிம்)

எனவே, மறுமையில் வீட்டு விவகாரம், வீட்டின் நிர்வாகம், அதன் பரிபாலனம் பற்றி ஆணை விட பெண் விசாரிக்கப்படுவாள் என்பது மிக முக்கியமானது.

3. மார்க்கம், குடும்பம், சமூகம் பாதிக்கப்படக் கூடாது

இஸ்லாத்தை குடும்பம் சார்ந்த மார்க்கம் என்பார்கள். இஸ்லாம் குதூகலமான, சந்தோஷமான, மனநிம்மதிமிக்க குடும்பங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்ட ஒரு மார்க்கம். அதனை அடுத்ததாக இஸ்லாத்தை சமூகம் சார்ந்த மார்க்கம் என்றும் வர்ணிப்பார்கள். உண்மையில் இவ்விரண்டும் இணைந்த ஒரு பரிபூரணமான மார்க்கம்தான் இஸ்லாம். இந்த இரண்டையும் முறையாகக் கையாள்வது ஒரு பெண்ணின் பொறுப்பாகும்.

No comments:

Post a Comment