May 4, 2014

உயிர்களை பணயம் வைத்து குழந்தை பெற்றெடுக்கும் நைஜீரிய பெண்மணிகள்

ஏப்ரல் 8 ஆம் தேதி “allafrica.com” என்னும் இணையதளம் “நைஜீரிய பெண்கள் குழந்தை பெற்றெடுக்க தங்கள் உயிரை விடுகின்றனர்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது”. அதில் நைஜீரியாவில் அதிகப்படியான பிரசவ மரணம் ஏற்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இது நிகேச்சி என்னும் ஒன்பது மாத கர்ப்பிணி பெண்ணின் கதையிலிருந்து தொடங்குகிறது. இந்த பெண் தன்னுடைய பிரசவத்திற்கு தகுந்த சிகிட்சைக்கான காலதாமதத்தின் விளைவாக தன்னுடைய குழந்தையையும் பறிகொடுத்து, மிகுந்த உதிரக்கசிவினால் இறந்து போனார்.அக்காலதாமதமானது இருபத்தைந்து கிலோமீட்டர் தூரமுள்ள மருத்துவமனையை அடைய, மூன்று மணிநேர பயணம் மேற்கொண்டதால் ஏற்பட்டதாகும். பின்னர் மருத்துவர்களின் பற்றாக்குறையால் ஆறு மணிநேரம் காத்துக்கிடந்தார். மேலும் போதிய படுக்கைகள் இல்லாத காரணத்தால் அவரை உட்பிரிவு பகுதியில் சேர்த்து சிகிட்சை அளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இச்செய்தியை எழுதியவர் “நைஜீரியாவில் கருவுறுதல் என்பது ஏறக்குறைய தற்கொலைக்கு முயற்சி செய்வது போன்றதாகும்” என்று கருத்து தெரிவித்தார்.
உலக சுகாதார நிறுவனம் 2012 ஆம் ஆண்டு “Trends in Maternal Mortality” எனும் வெளியீட்டில் Maternal Mortality Rate(MMR), நைஜீரியாவில் 1,00,000 குழந்தைகள் உயிருடன் பிறப்பதற்கு 630 தாய்மார்கள் பிரசவகாலத்தில் இறக்கின்றனர் என்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்நாடு பிரசவ மரணம் அதிகமாக ஏற்படுவதில் உலகின் இரண்டாவது இடத்தில் உள்ளது. இவ்வாறிருந்தும் நைஜீரிய அரசானது இதை ஒரு மிக முக்கிய பொதுசுகாதார பிரச்சினையாக கருதி இதற்கு தீர்வுகாண முன் வரவில்லை.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், யமன் போன்ற பல்வேறு முஸ்லிம் நாடுகளிலும் நைஜீரியாவை போன்று மருத்துவமனைகளில் தகுந்த உபகரணத்தின் தட்டுப்பாடு மற்றும் தொழிலாளர் பற்றாக்குறையால் பிரசவநேர மரணங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நைஜீரியாவில்  Lagos State Civil Society Partnership மற்றும் இதர அமைப்புகளும் நாட்டில் ஆரம்ப சுகாதார மையங்களை தொடர்பு கொள்வது மற்றும் அதன் தரம் குறித்து 2013 ல் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில், பல மையங்களில் பிரசவங்கள் இன்னும் மெழுகுவர்த்தி அல்லது சிமிழ் விளக்கின் வெளிச்சத்தில் தான் நடைபெறுகிறது என்று கூறுகிறது. சில நேரங்களில் ஊழியர்கள் தங்களது சொந்த பணத்தை செலவு செய்து மின்சாரம் கிடைக்க செய்கின்றனர். மேலும் பல சுகாதார மையங்களின் மருத்துவர் மற்றும் நோயாளிகளின் விகிதமானது, 1 – க்கு 1653 என்ற விகிதத்தில் இருக்கின்றது. எகிப்திய அஸ்ஸூட் பல்கலைக்கழக மகப்பேறு பிரிவின் ஒரு விரிவுரையாளர், “நாம் குணப்படுத்த முடியாத நோய்களினால் பெண்கள் மரணிக்கவில்லை; மாறாக சமூகம் அவர்களது உயிர்களை காப்பாற்றவேண்டியது இன்றியமையாதது என்னும் முடிவை எடுக்காமல் இருப்பதே அதற்கான காரணம்” என்று கூறினார்.
 ஏப்ரல் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று பொருளாதார நிபுணர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியை(GDP) மறுபரிசீலனை செய்ததில் நைஜீரியாவிற்கு உலக பொருளாதாரத்தில் இருபத்தியாறாவது இடத்தை அளித்து  ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக அறிவித்தது; அது வருடந்தோறும் 7% வளர்ச்சி அடைந்து வருகிறதாம். நைஜீரியா ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யக்கூடிய நாடாக திகழ்கிறது; உலகின் பத்தாவது மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் திகழ்கிறது; மேலும் எண்ணெய் நிறுவனமான BP-ன் படி எரிவாயு கொண்ட நாடுகளில் உலகில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. OPEC  இதன் பெட்ரோலிய ஏற்றுமதியின் அளவை 94.64 பில்லியன் டாலர்கள் என மதிப்பீடு செய்துள்ளது; இதன்மூலம் இந்நாடு கடந்த ஐம்பது ஆண்டுகளில் 600 பில்லியன் டாலர்களுக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது. இவை அனைத்துமிருந்தும் இதன் நொறுங்கிப்போன சுகாதார அமைப்பிற்கு கூடுதலாக உலக வங்கி நைஜீரியாவை உலகில் அதிகமான மிகவும் ஏழைகளை கொண்ட ஐந்து நாடுகளின் பட்டியலில், மற்றொரு அதிகமான பொருளாதார வளர்ச்சியுடைய நாடான இந்தியாவுடன் சேர்த்துள்ளது.  மேலும் அப்பட்டியலில் நைஜீரியாவில் 70% மக்கள் நாளொன்றுக்கு 1.25 டாலர்களுக்கு கீழ் சம்பாதிக்கும் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளதாக கூறியுள்ளது.
இவையனைத்தும் GDP மற்றும் முதலாளித்துவ நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, தங்களது சமூகத்தில் வாழும் சாதாரண குடிமக்களின் வாழ்க்கை தரத்திற்கு முற்றிலும் இனைப்பற்றதாக உள்ளதை காட்டுகிறது. இந்த முதலாளித்துவ அமைப்பில் சொத்துகளின் வளர்ச்சியை செல்வந்தர்கள் மட்டுமே அனுபவிக்க முடியும் என்பதையும், வெகுஜன மக்கள் கடுமையான ஏழ்மை நிலையில் வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பதையும், வளங்களை சமூகத்தினர் அனைவருக்கும் நியாயமான முறையில் பங்கிடாமல் சிலர் மட்டுமே அனுபவிக்கும் முறைகேடான பொருளாதார கொள்கைகளினால் மக்களுக்கு கிடைக்கும் பொது சேவைகளானது மிகவும் அவமானமான நிலையில் உள்ளதையும் காட்டுகிறது. மேலும்  முஸ்லிம் நாடுகளில் அமர்த்தப்படும் இஸ்லாம் அல்லாத அரசாங்கங்கள்,  மக்களின் தேவைகளை பூர்த்திசெய்வதற்கு முன்னுரிமை கொடுக்காமல், ஆட்சியாளர்கள் தங்களது சொத்துக்களை அதிகப்படுத்துவதில் மட்டுமே தொடர்ந்து அக்கறை காட்டி வருகின்றது. இதற்கும் மேலாக அவர்கள் மக்களின் மீது நடைமுறைப்படுத்தும் குஃப்ரிய அமைப்பானது, மக்களின் விவகாரங்களை கவனிப்பதிலும் சமூகத்தின் வளங்களை நிர்வகிப்பதிலும் தகுதியற்று கிடப்பதை  சந்தேகமில்லாமல் உணர்த்துகிறது. மேலும் அங்கு ஊழல் என்பது அரசியலிலும் நிர்வாக அமைப்பிலும் தொற்றுநோயைப்போல் வியாபித்துள்ளது.
இத்தகைய அதிகப்படியான பிரசவநேர மரணத்தை சரிசெய்ய மனித உயிரின் மதிப்பை அறிந்த, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை முன்னுரிமையாக கொண்ட ஓர் ஆட்சியமைப்பின் மூலம் நிர்வகிப்பது இன்றைக்கு கட்டாய தேவையாகும். அந்த அரசின் சாதனையை GDP ன் வளர்ச்சி அல்லது கட்டிடங்களின் உயரத்தை கொண்டு கணக்கிடாமல்;  நீதி, சம உரிமை,  குடிமக்களிடம் அது ஏற்படுத்தும் மன அமைதி, அவர்களை எந்த அளவிற்கு சிறப்பாக பார்த்துக்கொள்கிறது என்பதை வைத்து கணக்கிடக்கூடியதாக இருக்கவேண்டும்.அத்தகைய ஆட்சியமைப்பானது கிலாஃபா ஆட்சி மட்டுமே ஆகும்; அதன் ஆட்சியாளர் மக்களின் பாதுகாவலர் மற்றும் மக்களின் சேவகராகராவார். இதைத்தான் நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறியுள்ளார்கள்:-
كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، الإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ
“நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளாவீர், மற்றும் ஒவ்வொருவரும் உங்களின் பொறுப்பை பற்றி விசாரிக்கப்படுவீர்கள், இமாமானவர் மக்கள் மீது பொறுப்பாளியாக உள்ளார்; மேலும் அவருடைய பொறுப்பு பற்றி அவர் விசாரிக்கப்படுவார்…” (புகாரி)
வரலாற்றில் கிலாஃபத்தின் ஆட்சிகாலத்தில் பொருளாதார வளர்ச்சியும் செல்வ செழிப்பும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு கிடைக்கும் பொதுசேவைகளின் தரமும் உயர்ந்ததாக இருந்தது. உதாரணமாக உமர் இப்னு அப்துல் அஜீஸ்(ரஹ்) அவர்களின் கிலாஃபத்தின் போது வட ஆப்பிரிக்காவில் வறுமை முற்றிலுமாக துடைக்கப்பட்டது.  அல்லாஹ் வழங்கிய ஆட்சியமைப்பான கிலாஃபத்தில், அதன் அமீர்களான கலீஃபாக்கள் உலகமே பொறாமை கொள்ளும் அளவிற்கு மக்களுக்கு சேவைபுரிய சிறந்த மருத்துவமனைகள் மற்றும் பள்ளிக்கூடங்களை போட்டி போட்டு நிறுவினர்; கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க நடமாடும் மருத்துவ மையங்களையும் ஏற்படுத்தினர்.
உலகளாவிய மருத்துவ நிபுணரான டாக்டர் சாம் லெஃப், தனது “From Witchcraft to World Health” என்னும் புத்தகத்தில் அப்பாஸிய கிலாஃபத்தை பற்றி குறிப்பிடுகையில்:-
“ஒவ்வொரு நகரமும் தனது சொந்த மருத்துவமனையை கொண்டிருந்தது. பக்தாதில் மட்டும் தாராளமாக அரசு பைத்துல்மாலின் துணையுடன் அனைத்து வசதிகளை கொண்ட நன்கு நிர்வகிக்கப்பட்ட அறுபதுமருத்துவமனைகள் இருந்தது. இவைகளில் சிகிட்சைகள் முற்றிலும் இலவசமாக அளிக்கப்பட்டது. இதுபோன்ற சேவைகளே தற்போதைய நவநாகரீக மருத்துவமனைகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது.
 இஸ்லாமிய சட்டங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு தங்களது அமைப்பையும் சமூகத்தையும் நிறுவியதன் வாயிலாக இது போன்ற பலன்களை மனித சமுதாயம் அனுபவித்தது. எனவே முஸ்லிம் உலகில் மீண்டும் பரிபூரண முறையில் கிலாஃபத்தை நிறுவுவதன் மூலமே இதுபோன்ற பலன்கள் மீண்டும் மக்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.


Sources sindhanai.org

No comments:

Post a Comment