May 17, 2014

வேர்களை தேடும் விழுது



வேர்களை தேடும் விழுது
மங்காப் பொன் மாநபியின் சமூகத்திற்கு
எனை அழைத்து செல்லுங்கள்
கொஞ்சம் உலகாயத மோகம் கலைந்து...
இதமாய் இதயத்தை வருடி விட
அந்த மாநபியின் சமூகத்துக்கு
எனை இட்டுச் செல்லுங்கள்.
 
எங்கே
எமது நபியின் குயில் பிலால்
பிலாலே !
உங்கள் சுருதி மாறா குரலெடுத்து
எனக்காக ஒரு முறை
அதான் சொல்லுங்களேன்.
 
காது இனிக்க இனிக்க
இப்னு மஸீதின்
கிராத் கேட்க வேண்டுமே
 
அஸ்ஸலாமு அலைக்கும்
ஹாரிதா இப்னு நுஃமான்
எங்கே உங்களது தாய் -
பெற்றவருக்கு பணிவிடை செய்து
சொர்க்கத்தில் குரான் ஓதும்
பாக்கியம் பெற்றவரல்லவா நீங்கள்
 
அபூ ஹீரைரா !
உங்களிடம் எனக்காக
புத்தம் புது ஹதீஸ்
ஒன்று இருக்கிறதா
 
அபுபக்கரே !
உங்கள் ஈமானின் ஒரு துளியை
தூவுங்களேன்
 
உமரே !
பகுத்தறிவின் ஆழத்தின்
நுணுக்கம் தெரிந்த அறிவு ஜீவியே !
எங்கிருந்து உங்களுக்கு இவ்வளவு திறமை
ஆச்சரியம் எனக்கில்லை
நீங்களெல்லாம்
முஹம்மது எனும் சுடரில்
பாடம் பயின்ற மேதைகள் அல்லவா
 
ஓ முஸைப் இப்னு உமைரா
எங்கே உங்களது எமன் தேசத்து
காலணி பட்டில் நெய்த சீமை சட்டை
சுகந்தம் வீசும் அத்தர் மணம்
ஈமானின் சுகம் கண்டு
இத்தனை செளகரியமும்
துறந்ததாய் சொன்னார்கள்
இத்தியாகத்தின் பாசறையில்
என்னையும் சேருங்களேன்
எனது ஈமான் தளும்பும் போதுகளில்
எங்கே ஹன்ழரா ?
 
உங்கள் கவலையில் எனக்கும்
இடம் உண்டா ?
 
முதல் இரவில் வியர்வை காயுமுன்னே
விடியலின் வெள்ளி மறையும் முன்னே
போர்களத்தில் குருதி சிந்திய
ஷாஹிதே ஹன்ழராவே
உங்கள் இளம் மனைவிக்கும்
 
அல்லாஹ் அருள் சொறியட்டும்
உஹது மலையே ! உஹது மலையே !
ஹம்ஸா அம்பு பட்டு சாய்ந்த போது
உன்னால் அசையாமல் இருக்க முடிந்ததா?
 
எனது அன்னை ஆயிஷாவை
கண் நிறைய காண வேண்டும்
சொர்க்கம் சொந்தமாகியும்
அழுது அழுது குரான் ஓதும்
 
என் அன்பு தாயே
பதினெட்டு தாண்டு முன்
துணை இழந்த இளமையே
உங்கள் ஈமானின் பலம் புதிரில்லை
எமக்கு புதிதுமில்லை
அபுபக்கரின் மகளல்லவா நீங்கள்..
 
எனது உம்மா கதீஜாவிடம்
என்னை இட்டு செல்லுங்கள்
எங்கள் நபிக்கு தோள் கொடுத்து
அல்லாஹ்வின் சலாம் ஏற்று
பாத்திமாவெனும் மாணிக்கத்தை
கருவில் சுமந்த
அந்த தூய ஆத்மா
என் உயிர் தாயின் மடியில்
ஒரு கணம் சாய வேண்டும்
அள்ளி கொடுக்க கை நீளும்
 
அன்னை ஜைனப் எங்கே ?
தாயே எனக்கும் பசிக்கிறது
அன்ன கரண்டி எடுத்து
நரகம் தீண்டாத அந்த விரல்களால்
கொஞ்சம் ஊட்டி விடுங்கள்ளேன்
 
ஸ அத் இப்னு முஆத் உடைய
மரண ஊர்வலத்தில்
எனக்கும் கலந்து கொள்ள
இடம் இருக்குமா
மலாயிக்காமார்களுடன் நடந்து செல்லும்
பாக்கியமேனும் கிட்டுமே
 
என் உயிர் நபியே ! யா ரசூலே !
உங்கள் சமூகத்தின்
இதமான வாழ்க்கைக்குள்
நானும் வருகிறேனே
கொஞ்சம் உறங்கி, நிறைய விழித்து
அழுது தொழுது
ஏழையாய், ஆனந்தமாய் வாழ
என் உயிர் மேலும் ஆளுமை
கொண்ட நபியே ! யா ரசூலே !
 
உங்கள் பாசறையில்
என்னையும்
அணைத்துக் கொள்ளுங்களேன்.
நீங்கள் கருணையின் ஊற்று
எனக்காக உங்கள் இரக்கத்தில் இன்ஷா அல்லாஹ் இடம் இருக்கும்...


நன்றி !...

No comments:

Post a Comment