May 26, 2014

பித்ஆவும் இன்றை முஸ்லிம் உம்மாவும்!



இன்று எம்மத்தியில் பித்ஆ பற்றிய பார்வை அவசியம் தேவை என்ற நிலைப்பாடு உள்ளது. ஆனால் அதன் எல்லைப்பரப்பை மிகவும் குறுகிய வட்டத்தினுள் வைத்துப் பார்க்கும் போக்கும் சக முஸ்லிம்களை நோக்கி மிகத் தீவிரமான பத்வாக்களை அள்ளிவீசும் மனப்பாங்கும் நிறைந்துள்ள ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

நிச்சயமாக இஸ்லாத்தில் ஏற்படுத்தப்படும் அனைத்து புதியவைகளும் வழிகேடுகள் அவை நரகத்திற்கு இட்டுச்செல்பவைதான். ஆனால் இன்றைய ஏகத்துவப் பிரச்சாரம் எனும் எல்லைப்பரப்பையும் அவர்கள் முன்வைக்கும் பித்ஆ பற்றிய பரப்பையும் பார்க்கும் போது அது மிகக் குறுகிய சிந்தனையாகவும் பிரச்சாரமாகவும் உள்ளது.

இன்று பித்ஆபற்றிய பார்வை தனிநபரது வணக்க வழிபாடு மற்றும் சில சம்பிரதாய நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு பரவலாக வியாக்கியானம் செய்யப்பட்டுவருகின்றது. ஆனால் இன்றைய உலக ஒழுங்கில் “மனிதனது பொதுவாழ்வு எவ்வாறு அமையவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையை விட்டுவிலகி மனிதச் சிந்தனைகளால் உருவாக்கப்பட்ட செயலாக்க அமைப்பினைக் கொண்ட வாழ்க்கை முறை காணப்படுகிறது.” உதாரணமாக மேற்கினது “மதஒதுக்கல் சிந்தனையை ( Secularism)அடிப்படையாக கொண்ட சமூக பொருளாதார முறைமை, மன்னராட்சி, தேசியவாதம் (Nationalism), ஜனநாயகம் (Demoracy) என்பவற்றை கோடிட்டுக்காட்டலாம். 

இன்று நபி (ஸல்) அவர்கள் நிறுவிய இஸ்லாமிய அரசு இல்லாத உலகில் முஸ்லிம்கள் பல்வேறு தலைமையினால் ஆட்சிசெய்யப்படுகிறார்கள். இவர்களை ஆட்சிசெய்யும் முறையான சவூதி மற்றும் ஜோர்தான் போன்ற நாடுகளில் காணப்படும் “மன்னராட்சியும்” பாகிஸ்தான், பங்களாதேஸ் மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் காணப்படும் “ஜனநாயக ஆட்சியும்” இஸ்லாத்திற்கு புதியவை; அன்னியமானவை என்பதனை உணரவேண்டும்.

ஆனால் இன்றை மிம்பர்களில் இத்தகைய மிக ஆபத்தான நபிவழியல்லாத வாழ்வியல் முறைகள் பற்றி பேசப்படுவதாக தெரியவில்லை. ஏன்? இவைகளைப் பேசுவது அவசியம் இல்லையா? அல்லது இஸ்லாம் வெறுமனே தனிமனித வழிபாட்டை மாத்திரம் ஊக்குவித்து சமூகவாழ்வில் இஸ்லாம் எப்படிவேண்டுமானாலும் இருக்கமுடியும் எனும் அசமந்த போக்கு ஏற்படுத்தும் மற்றுமொரு பித்ஆ வழிமுறையா? பித்ஆபற்றிய சிந்தனைகளை நபிவழில் மீண்டும் ஒரு முறை முழுமையாக சீர்தூக்கிப்பார்க்க மாட்டார்களா?

No comments:

Post a Comment