Jul 18, 2014

“ஹமாஸ்” ஈரானிய அஜண்டாவில் கட்டுண்டுள்ளதா?



by: Abu Khadeejah

நம்மில் பலரிற்கு ஒரு குழப்பம் உண்டு. பலஸ்தீனத்தில் போராடும் இஸ்லாமிய குழுக்களின் பெயர்கள் தொடர்பில் அவை எழுகின்றன. அல்-கஸ்ஸாம் படையணி, இஸ்லாமிக் ஜிஹாத், ஜுன்த்-அல்லாஹ், அல்-அக்ஸா பிரிக்கேட், அல்-குத்ஸ் பிரிகேட் இவையெல்லாம் ஹமாஸினுடையதா அல்லத தனியானவையா அவை என்பதே அந்தக் குழப்பம். இது பற்றிய சில புரிதல்களை இந்த பதிவின் ஊடாக ஆரம்பிப்போம். ஹமாஸ் எனும் இயக்கம் தன்னை மூன்று பிரிவுகளாக வகுத்துள்ளது. அதன் அரசியல் பிரிவை நாம் யாவரும் அறிவோம். அது போலவே அதன் இராணுவ பிரிவில் (இஸ்ஸத்தீன் அல்-கஸ்ஸாம்) சில தளபதிகளையும் நாம் அறிந்திருக்கலாம். அவர்களது உளவு மற்றும் வேவுத்தாக்குதல் பிரிவை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இஸ்ரேலின் மொஸாட்டும், ஸின்-பெட்டும் கூட தலையை பிய்க்கும் விடயம் இது. சொல்லப்போனால் ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவர்கள் பலரிற்கு கூட அதன் உளவுப்பிரிவு பற்றி துல்லியமாக எதுவுமே தெரியாது. இங்கு நாம் ஹமாஸின் கட்டமைப்பு பற்றி பேசவில்லை. மாறாக அவர்களது செயற்தளங்கள் பற்றியே பேச விளைகின்றோம்.

ஹமாஸ் காஸாவின் விடுதலைக்காக போராடும் இரண்டு இன்திபாதாக்களை செய்த மக்கள் இயக்கம். ஸியோனிஸ்ட்களின் அட்டூழியங்களை எதிர்க்கும் அதற்கு பதிலடி கொடுக்கும் உறுதி மிக்க அமைப்பு. அதே நேரம் தனது ஆளுகைக்குள் வேறு அமைப்புக்கள் செயற்படுவதை அது விரும்புவதில்லை. (வட இலங்கையில் விடுதலைப்புலிகளைப் போல). மாற்று அமைப்பு தலைவர்களை அதன் தளபதிகளை ஹமாஸ் கொலை செய்த வரலாறுகள் உண்டு. அதன் அறுவடையை இப்போது அவர்கள் அனுபவிக்கிறார்கள் என்பது வேறு விடயம். ஹமாஸின் கறுப்பு பக்கங்கள் பற்றி பேசுவது அல்ல இந்த பதிவின் நோக்கம்.

ஹமாஸ் தனது இராணுவ செயற்பாட்டிற்கு பெரிதும் ஹிஸ்புல்லாக்களை சார்ந்து நிற்க வேண்டிய தேவைகள் உள்ளன. இதற்கு பூகோள எல்லைகள் முதற்காரணியாக இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை ஹிஸ்புல்லாஹ்வும் நன்றாகவே பயன்படுத்தி வருகிறது. ஈரானிய அரசியல் பூகோள நலன்களிற்கான நகர்வுகளின் அடிப்படையிலேயே இவர்களது உதவி காஸாவிற்கு கிடைக்கிறது. இன்று நடக்கும் சண்டைகள் வரை ஹிஸ்புல்லாஹ் போராளிகளினால் வழங்கப்பம் ஆயுதங்கள், இராணுவ தொழில்நுட்ப அறிவுகள், சில நேரங்களில் தோழமை சூட்டாதரவு என அது ஹிஸ்புல்லாஹ்வின் கட்டுக்குள் இறுகியுள்ளது. காஸாவின் விடுதலைக்காக ஐ.எஸ். எனும் இஸ்லாமிய கிலாபாவின் படைகளை அழைக்க முடியாத அரசியல் நிர்ப்பந்தங்கள் நிறைந்த நிலையில் அது செயற்படும் கட்டாய நிலை உள்ளது. இதனால் ஹமாஸை ஸலபி சிந்தனைசார் அமைப்புக்கள் இதுவும் SHIA-க்களின் அமைப்பு என இலகுவாக சுட்ட வகைசெய்து விடுகிறது.

மேற்கு கரையிலும் காஸாவிலும் சமகால செயற்பாடுகளை மேற்கொண்டு வந்த ஹமாஸிற்கு ஒரு கட்டத்தில் மேற்குக்கரையை முற்றியும் இழக்கும் நிலை உருவாகியது. பல ஹமாஸின் தோழர்கள் அல்-பதாஃவினரால் கொலை செய்யப்பட்டனர். தடுத்து வைக்கப்பட்டனர். காஸாவை தங்கள் தளமாக மாற்றிக்கொண்ட ஹமாஸ் தன்னை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியமைத்ததில் வெற்றி கண்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதல் திறன், ஆட்பலம் போன்ற பல இராணுவக்காரணிகளினால் இப்போது ஹமாஸிற்கு தனியாக போராட முடியாத நிலை உருவாகியுள்ளது. அதனால் ஏனைய போராட்டக்குழுக்களிற்கான வாயிலை ஆது சில வருடங்களாகவே திறந்து விட்டுள்ளது. இதனை நன்கு பயன்படுத்திக்கொண்ட ஏனைய போராளிக்குழுக்கள் இப்போது காஸாவின் சில பகுதிகளை தம் வசப்படுத்தி யூத அரசிற்கு எதிரான தாக்குதல்களை முன்னேடுத்து வருகின்றன.

இந்த புறநிலை களங்களிலேயே நாம் காஸாவின் இஸ்ரேலிற்கு எதிரான போராட்டத்தை நோக்குவது சரியாக அமையும். பல ஏனைய குழுக்களின் தாக்குதல்களைக் கூட ஹமாஸ் அவர்கள் செய்தது என செய்தி வெளியிடுவதில்லை. அவையும் தனது போராளிகளினால் செய்யப்பட்டது போன்ற மாயையை மெல்ல அனுமதிக்கிறது ஹமாஸ்.

ஹனபி, சாபி போன்ற பல மத்ஹப்புகள் சார்ந்த போராளிகளையும், இஃஹ்வானிய கொள்கைகளை சுமந்த போராளிகளையும் ஹமாஸ் தன்னகத்தே கொண்டுள்ளது. இஸ்லாமிய ஆட்சி, இஸ்லமிய எமிரேட்ஸ், இஸ்லாமிய கிலாபா என்றெல்லாம் ஹமாஸ் பேசியதே கிடையாது. பலஸ்தீன மண்ணின் விடுதலைக்கான, ஸியோனியஸ சக்திகளின் தாக்குதல்களிற்கு எதிரான ஒரு போராட்டக் குழுவாகவே அது தன்னை வெளிப்படுத்தி வருகிறது. மார்க்கம் சார்ந்த கொள்கைகள், பொருளாதாரம் சார்ந்த கொள்கைகள் என்றேல்லாம் ஹமாஸ் தன்னை தனித்துவமாக அடையாளப்படுத்தியதில்லை.

பலஸ்தீன் மீதான யூத குடியேற்றங்களை தடுப்பதுடன் அது தன்னை மட்டுப்படுத்திக்கொள்ள முனைகிறது. அல்-அக்ஸா (அல்-குத்ஸ்) மீட்பு போராட்டம் என்பதனை தனது கொள்கைரீதியான திட்டமாக கொண்டுள்ள போதிலும் அதற்கான வலிதான இராணுவ செயற்பாடுகள் பற்றி அது எந்த முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ளவில்லை. மண்ணின் விடுதலைக்கான மக்கள் இயக்கமாக அது தன்னை அடையாளப்படுத்தியதில் கணிசமான வெற்றியைக்கண்டுள்ளது. இதன் சர்வதேச உறவுகள் குறித்த கொள்கைகளும் ஒரு பக்கம் சாராத அதன் நலன்களிற்கு ஏற்ப மாறக்கூடிய செயற்திட்டத்தையும் அரசியல் நிகழ்ச்சி நிரலையும் கொண்டுள்ளது.

ஹமாஸ் பற்றிய பிரமாண்டமான மித்க்கள், மாயைகள், கனவுகள் என்பன தவறான அடித்தளங்களாகும். இஸ்லாமிய மார்க்க சட்ட வரையறைகளினுள் போராடும் ஒரு தேசிய அல்லது மண் விடுதலைக்கான இயக்கம் எனும் எல்லைகளிற்குள் அதனை பார்ப்பதே சிறந்தது. இதன் ஊடாக ஹமாஸினால் மட்டும் தான் காஸாவையும் பிலஸ்தீனையும் மீட்கவும் காப்பாற்றவும் முடியும் எனும் தவறான கற்பிதங்களை அகற்றிவிட முடியும்.

இன்சாஅல்லாஹ் எதிர்வரும் நாட்களில் ஏனைய அமைப்புக்களின் சித்தாந்த செயற்பாடுகள் பற்றிப்பார்ப்போம். ....

No comments:

Post a Comment