Jul 18, 2014

காஸா மீதான இஸ்ரேலிய போர் குற்றங்கள்...!

 

காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல் அதன் இரண்டாவது வாரத்தில் நுழைந்திருக்கையில், அந்த அட்டூழியங்கள் மீது மேலும் மேலும் ஆதாரங்கள் வெளி வந்து கொண்டிருப்பது, உலகெங்கிலும் சீற்றத்தின் பரந்தளவிலான வெளிப்பாடுகளை உருவாக்கி வருகிறது.

ஐரோப்பா மற்றும் வடக்கு அமெரிக்காவின் பல போராட்டங்கள்,ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும் கூட, காசாவிற்கு எதிரான ஒருதலைபட்சமான "யுத்தத்தின்" குற்றகரமான குணாம்சத்தை மக்கள் அதிகளவில் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பிரதிபலிக்கின்றன.

ஜூலை 7இல் காசா மீது இடைவிடாத விமான தாக்குதல்கள் தொடங்கியதில் இருந்து, காசா பகுதியின் மீது இஸ்ரேல் 1,300க்கும் மேற்பட்ட குண்டுவீச்சு மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி உள்ளது, அதாவது ஒரு நாளின்24 மணி நேரத்தில் சராசரியாக ஒவ்வொரு ஒன்பது நிமிடத்திற்கும் ஒரு பாரிய குண்டு வெடிப்பாகும்.

எகிப்திய ஆட்சியால் முன்வைக்கப்பட்ட ஒரு போர்நிறுத்த பரிந்துரையைப் பரிசீலிக்க செவ்வாயன்று காலை இஸ்ரேலின் பாதுகாப்பு குழு ஒன்றுகூட இருப்பதாக செய்திகள் வெளியானதற்கு இடையே, இந்த தாக்குதல் சிறிதும் குறைக்கப்படவில்லை என்பதோடு, இஸ்ரேலிய துருப்புகளும் டாங்கிகளும் சாத்தியமான ஒரு தரைவழி படையெடுப்புக்காக காசா எல்லையோரங்களில் நிறுத்தப்பட்டு இருந்தன.

ஹமாஸ் மற்றும் இதர பாலஸ்தீன குழுக்களும் 900க்கும் அதிகமான ராக்கெட்டுக்களை வீசியுள்ளன, ஆனால் ஏற்பட்ட சேதங்களைப் பொறுத்த வரையில் ஒப்பிடுவதற்கு அங்கே ஒன்றும் இருக்கவில்லை. அந்த ராக்கெட்டுக்கள் மிக பழமையாகவும் மற்றும் இலக்கின்றியும் செலுத்தப்பட்டு இருந்ததோடு, பெரும்பாலும் திறந்தவெளியையே தாக்கி இருந்தன; அதில் இஸ்ரேலியர் ஒருவர் கூட கொல்லப்படவில்லை. பூமியில் அதிக மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதிகளில் ஒன்றான, அதாவது ஒவ்வொரு சதுர மைலுக்கும் 10,000கும் மேல் மக்கள் வாழும் காசாவில் விழுந்த இஸ்ரேலின் ஒவ்வொரு குண்டும், ஏவுகணையும் ஏதாவதொரு மனித வசிப்பிடங்களைக் குறி வைத்திருக்கிறது.

திங்களன்று இக்கட்டுரை எழுதப்படுகையில் காசாவில் பாலஸ்தீனியர்களின் இறப்பு எண்ணிக்கை 185க்கும் மேலாக இருந்தது. இந்த பரந்த பெரும்பான்மையினர் எந்தவொரு பாலஸ்தீன ஆயுதமேந்திய குழுக்களின் போராளிகள் அல்ல, அப்பாவி பொதுமக்கள் ஆவார்கள், மேலும் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையாக குறைந்தபட்சம் 50 குழந்தைகளும் இதில் உள்ளடங்குவார்கள். குறைந்தபட்சம் 1,200க்கும் மேலான காசாவாசிகள் காயமடைந்துள்ளனர்.

சமீபத்திய காசா தாக்குதல் தொடங்கியதற்குப் பின்னர், இஸ்ரேல் இராணுவமும் அதன் முதல் பலியாக மேற்கு கரையில் ஒருவர் கொல்லப்பட்டதை அறிவித்திருந்தது. மேற்கு கரையின் தெற்கு பகுதியில் உள்ள சாமுவா கிராமத்தில் 21 வயதான முனிர் அஹ்மத் ஹாம்டான் அல்-பதாரின் என்ற ஒரு பாலஸ்தீனியர், சிப்பாய்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.காசா யுத்தத்திற்கு எதிரானதும், இஸ்ரேலிய கார்கள் மீது கல்வீச்சை உட்கொண்டிருந்ததுமான, ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டதே அவரது"குற்றமாக" இருந்தது.

பாலஸ்தீன அகதிகளுக்கு உதவும், காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண வேலைகள் அமைப்பின் கமிஷனர் ஜெனரல் பிறீ கிராஹென்புஹல் (Pierre Krähenbühl) திங்களன்று பத்திரிகைகளுக்கு தெரிவிக்கையில், காசா பகுதியில் வன்முறை தீவிரமடைந்திருப்பது குறித்தும் மற்றும் பாலஸ்தீன அகதிகள் உட்பட அது பொதுமக்களின் வாழ்வை மற்றும் ஸ்தூலப் பொருட்களின் எண்ணிக்கையை நாசமாக்கி வருவது குறித்தும் அவர் "ஆழமாக கவலை கொண்டிருப்பதாகவும்,எச்சரிக்கை அடைந்திருப்பதாகவும்" தெரிவித்தார்.

“சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு முரணாக, பொதுமக்களுக்கு எதிராகவோ மற்றும் பொதுமக்களின் உள்கட்டமைப்பிற்கு எதிராகவோ அல்லது அதற்கு ஆபத்து விளைவிக்கும் விதத்திலோ தாக்குதல்கள் நடத்துவதை முடிவுக்குக் கொண்டு வருமாறு,"அவர் இஸ்ரேலுக்கு அழைப்புவிடுத்தார்.

சர்வதேச சட்டத்தின் கீழ் யுத்த குற்றங்களாக கருதப்படும் பல தொடர்ச்சியான கொடூர சம்பவங்கள் செய்திகளில் வெளி வந்துள்ளன.பின்வரும் உண்மைகள், இஸ்ரேலிலும் உட்பட, உலக ஊடகங்களில் பரந்தளவில் வெளியானவை ஆகும்:

· வடக்கு காசாவின், ஜபாலியாவில் ஊனமுற்றவர்கள் மறுவாழ்வு மையத்தின் மீது இஸ்ரேல் குண்டுவீசியது, அதில் ஒரு செவிலியர் மற்றும் மூன்று ஊனமுற்றோர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டார்கள். ஏனையவர்கள் அந்த குண்டு வெடிப்பில் கடுமையாக தீக்காயங்களுக்கு உள்ளானார்கள். பெய்ட் லாஹியாவில் ஊனமுற்றவர்களின் வசிப்பிடத்தின் மீது நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் மேலும் இருவர் கொல்லப்பட்டார்கள், நான்கு பேர் காயமடைந்தார்கள்.

· ஒரு உணவுவிடுதியில் உலக கோப்பை அரையிறுதி கால் பந்தாட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த எட்டு பாலஸ்தீனியர்கள் ஒரு இஸ்ரேலிய விமான தாக்குதலில் கொல்லப்பட்டார்கள். அந்த உணவுவிடுதி, குறிப்பாக முஸ்லீம்கள் பகல் முழுதும் நோன்பிருந்து இருட்டிய பின்னர் சாப்பிடும் ரம்ழானின் போது, மாலை நேரத்தில் உள்ளூர் மக்கள் ஒன்று கூடுவதற்குரிய இடமாக நன்கறியப்பட்டதாகும்.

· பெய்ட் ஹனோனில் ஹமாத் குடும்பத்தின் ஐந்து அங்கத்தவர்களைக் கொன்றும், மற்றும் 8 முதல் 13 வயது வரையிலான ஆறு குழந்தைகள் உட்பட காவாரா குடும்பத்தின் எட்டு அங்கத்தவர்களைக் கொன்றும், மற்றும் காசாவின் தலைமை பொலிஸ் அதிகாரியைக் கொல்லும் ஒரு முயற்சியில் அதிர்ச்சியூட்டும் வகையில் அல்-தாய்ஷ் குடும்பத்தின் 17 உறுப்பினர்களைக் கொன்றும், இஸ்ரேலிய யுத்த விமானங்கள் மீண்டும் மீண்டும் ஹமாஸின் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அதிகாரிகளின் குடும்பங்களை இலக்கில் இருத்தி வந்துள்ளது.

· காசா நகரின் எல் வாஃபா மறுவாழ்வு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பாஸ்மான் அலாஷி கொடுத்த தகவலின்படி, வெள்ளியன்று தனித்தனியாக ஐந்து முறை அந்த மருத்துவமனையை இஸ்ரேலிய விமானங்கள் தாக்கின. அந்த தாக்குதல்கள் மருத்துவமனையின் 30நோயாளிகளுக்கு வினியோகிக்கப்படும் மேல்மாடி தண்ணீர் தொட்டிகளைச் சிதைத்திருந்தது.

· ஜெனிவா தீர்மானங்களை மீறி, இஸ்ரேல் வேண்டுமென்றே காசாவின் அப்பாவி மக்களைக் குறி வைத்து வருகின்றது என்பதற்கு தெளிவான ஆதாரமாக, விமான தாக்குதல்களில் 1,000க்கும் மேற்பட்ட தனிநபர்களின் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது கடுமையாக சேதப்படுத்தப்பட்டு உள்ளன.

· இதற்கும் மேலாக காசாவிற்குள் மருந்து பொருட்கள் கொண்டு செல்வதைத் தடுக்கும் விதத்தில், இஸ்ரேல் மற்றும் எகிப்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கையால் விமானத் தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் மேற்கொண்டும் ஆபத்திற்கு உள்ளாகி உள்ளனர்.ஏற்கனவே பல மருத்துவமனைகள் குறைந்தளவிலான அடிப்படை மருந்து பொருட்களோடு ஓடிக் கொண்டிருக்கின்றன என்பதோடு,இன்னும் 10 நாட்களுக்கு குண்டுவீச்சு தொடர்ந்தால் பேரழிவாக போய் முடியுமென்று மருத்துவர்களும், மருத்துவ சேவை பணியாளர்களும் தெரிவித்தனர். இஸ்ரேலிய-எகிப்திய முற்றுகையானது, எரிவாயு இல்லாத பகுதிகளில் அவசியமான அவசர சேவைகளை வழங்க முடியாதபடிக்கு, ஆம்புலன்சுகளுக்கான எரிபொருள் வினியோகங்களையும் பாதித்துள்ளது.

· மத்திய காசாவில் அல்-நுஷ்ரத்தின் ஒரு மசூதி, சனியன்று இரவு நள்ளிரவு வேட்டைகளில் அழிக்கப்பட்டது, ஒட்டுமொத்த குடும்பங்களையும் அடியோடு அழிக்கும் அபாயத்தோடு, பெரும் எண்ணிக்கையில் பாலஸ்தீனியர்கள் ஒன்றுகூடும் கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட இதுபோன்ற டஜன் கணக்கான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.

· ஜூலை 9 அன்று, மிகத் தெளிவாக "தொலைக்காட்சி" என்று பெரிய சிவப்பு எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த காரை பாலஸ்தீன இதழாளர் ஹமீத் ஷெஹாப் ஓட்டிச் சென்று கொண்டிருக்கையில், ஒரு இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலினால் அவர் அங்கே எரிந்து சாம்பலானார். ஷெஹாப் உள்ளூர் பத்திரிகை நிறுவனமான மீடியா24க்காக வேலை செய்து வந்தவராவார். “காசா பகுதி மீதான கூட்டு தண்டனையின் கொடூரங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குற்றங்களைக் காட்டி பாலஸ்தீன இதழாளர்களை அதைரியப்படுத்துவதற்கான திட்டமிட்ட மற்றும் வேண்டுமென்றே செய்யப்பட்ட" ஒரு நடவடிக்கையாக இந்த படுகொலையை பாலஸ்தீன இதழாளர்களின் கூட்டமைப்பு கண்டனம் செய்தது.

காசாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் மஹ்மொத் தஹீர்அல் ஜஜீராவிற்கு கூறுகையில், “மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் மீதான தாக்குதல்கள் மிகத் தெளிவாக ஒரு சர்வதேச சட்டமீறலாகும். சுகாதார மையங்களை மோதலில் இருந்து விலக்கி வைக்குமாறு உலக சுகாதார அமைப்பு அனைத்து கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறது," என்றார்.

பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதை நோக்கமாக கொண்டவை என்று இஸ்ரேலிய ஆட்சி குறிப்பிடும் சில நடவடிக்கைகளே கூட, சர்வதேச சட்டங்களின் கீழ் யுத்த குற்றமாக வருகின்றன. சான்றாக,ஜூலை 13இல், உடனடியாக ஒரு பெரிய இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதால் மக்களை வெளியேறுமாறு எச்சரித்து வடக்கு காசாவில் ஆயிரக் கணக்கான துண்டறிக்கைகளை இஸ்ரேலிய இராணுவம் வீசியது. அதன் காரணமாக சுமார் 17,000 மக்கள் வெளியேறினார்கள், இது அவர்களின் உயிர் வாழ்க்கை மீதான பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் கொண்டு அப்பாவி மக்களை வேண்டுமென்றே இடம் பெயர்த்ததாக இருந்தது.

காசாவின் பொதுமக்களை இலக்காக வைத்து அவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்களை மூடிமறைக்க இஸ்ரேலிய அதிகாரிகள்,உயர்மட்டத்திலிருந்தும் கூட, எந்தவொரு முயற்சியும் செய்யவில்லை.ஞாயிறன்று அமெரிக்க தொலைக்காட்சி வலையமைப்பான ABCஆல் நேர்காணல் செய்யப்பட்ட பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தனியாஹூ,அவரது சொந்த குற்றங்களுக்கு ஹமாஸைக் குற்றஞ்சாட்ட முனைந்தார்,அவர் தெளிவற்ற விதத்தில்: “யார் மசூதிகளுக்குள் ஒளிந்திருப்பது? ஹமாஸ்.யார் மருத்துவமனைகளுக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பது?ஹமாஸ்.

யார் மக்கள் வசிப்பிடங்களிலோ அல்லது சிறார் பள்ளிகளுக்கு அருகிலோ இராணுவ மையங்களை அமைத்திருப்பது? ஹமாஸ். ஹமாஸ் காசாவின் மக்களை ஒரு மனித கேடயங்களாக பயன்படுத்தி வருகிறது என்பதோடு அது காசா மக்களுக்கு பேரழிவுகளையும் கொண்டு வந்து கொண்டிருக்கிறது," என்றார்.

முற்றிலுமாக அந்த சொற்களோடு, முரண்பட்ட விதத்தில், மசூதிகள்,மருத்துவமனைகள், மக்கள் வசிப்பிடங்கள் மற்றும் சிறார் பள்ளிக்கூடங்களை திட்டமிட்டு இலக்கில் வைத்ததை நெத்தனியாஹூ ஒப்புக் கொள்கிறார். இந்த ஒளிநாடாவே ஒரு யுத்த குற்ற தீர்ப்பாணயத்திற்கு ஆதாரமாக வைக்கப்பட வேண்டும்.

இஸ்ரேலிய பத்திரிகைகளிலேயே கூட, காசாவில் நடத்தப்பட்டு வருகிற அட்டூழியங்களின் அளவுகளின் மீது அங்கே ஒரு அதிருப்திகரமான விவாதங்கள் நிலவுகின்றன. “காசாவில் இஸ்ரேல் யுத்த குற்றங்களை நிகழ்த்தி வருகிறதா?" என்ற தலைப்பில் Ha’aretzஇல் வெளியான மிக கவனமான வார்த்தைகளைக் கொண்ட ஒரு கட்டுரை, இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் நடவடிக்கைளை விரிவாக ஆராய்ந்த பின்னர், அதன் முடிவுரையில், கவனமாக "ஆமாம்" என்று குறிப்பிட்டிருந்தது.

அந்த கருத்துரை குறிப்பிடுகையில், “அது வெறுமனே, தடை செய்யப்பட்டதான, மக்களைத் திட்டமிட்டு இலக்கில் வைத்தல் என்பது மட்டுமல்ல என்பதை மனதில் கொள்ளுங்கள். தாக்குதல்கள் அதன் இயல்பிலேயே இராணுவ இலக்குகளோடு சேர்ந்து, பொதுமக்களையோ அல்லது பொதுமக்களின் பொருட்களையோ கண்மூடித்தனமாக தாக்கினால்,அதுவும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்... காசாவில் எந்த மாதிரியான சூழ்நிலைகளில் அந்த பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை எடுத்துக்காட்டும் சில அறிக்கைகளோடு சேர்ந்து, அங்கே பாதிக்கப்பட்டிருப்பவர்களில் பலர் அப்பாவி பொதுமக்கள் என்பதை புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுவதானது, இஸ்ரேல் தவிர்த்திருக்க வேண்டிய,அவற்றில் சில ஒருவேளை யுத்த குற்றங்களாகவும் வரையறை செய்யப்பட்டிருக்கக்கூடிய, சில நடவடிக்கைகளை நடத்தியுள்ளதற்கான சாத்தியக்கூறுகளை உயர்த்துகிறது.

'துல்லியமின்மையால்' அல்லது'தவறுதலாக' நடந்ததென்ற வாதங்களின் அடிப்படையில் அவற்றை விட்டுவிட முடியாதளவிற்கு அந்த விடயங்களின் எண்ணிக்கை மிகவும் சிக்கலானதாக இருக்கிறது," என்று குறிப்பிட்டது.

உலக கோப்பை உணவு விடுதி குண்டுவீச்சு மற்றும் ஹமாஸ் அதிகாரிகளின் ஒட்டுமொத்த குடும்பங்களை அழிப்பது உட்பட மேலே குறிப்பிட்ட பல சம்பவங்களை மேற்கோளிட்டுக் காட்டி அக்கட்டுரை தொடர்கையில், அது ஒரு குறிப்பிட்ட கேள்வியை முன்வைத்தது: “அங்கே வசித்த பல பொதுமக்களைக் கொன்ற ஒரு தாக்குதலான, IDF இராணுவ பிரிவு தளபதியின் வீட்டின் மீதான ஒரு தாக்குதலைக் குறித்து இஸ்ரேல் என்ன கூறும்? அதுபோன்றவொரு நடவடிக்கை சட்டவிரோதமானதென்றால், பின்னர் காசாவில் என்ன செய்யப்பட்டு வருகிறது," என்று கேள்வி எழுப்பியது.

Khaibar Thalam

No comments:

Post a Comment