காஸா மீதான தாக்குதல்கள் 6 வது தினமாகவும் தொடர்கின்றன. இதுவரை 100இற்கும் மேற்பட்ட நிராயுதபாணியான பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இம்முறையும் சிவிலியன்களைத் தாக்கி பலஸ்தீன போராட்டத்தின் உயிர்ப்பை இல்லாமல் செய்யும் பாணியிலான யுத்தமொன்றைத் தான் நெதன்யாகு தொடுத்து வருகிறார்.
அதேவேளை 2008> 2009 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் காஸா மீது இஸ்ரேல் நடாத்திய எந்த யுத்தத்திலும் ஹமாஸின் தளங்களை இலக்கு வைத்து தாக்குவதாக டெல்அவீவ் பிதற்றிக் கொண்டாலும் கூட மேற்சொன்ன ஹமாஸின் ஆயுதக் கிடங்குகளையோ அல்லது இராணுவப் பயிற்றுவிப்புத் தளங்களையோ இஸ்ரேலிய இராணுவம் தாக்கவில்லை.
அவர்களால் அவ்வாறு தாக்கியழிக்கவும் முடியாது. தற்போது இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டு வரும் ; “Operation Protective Edge”என்ற பெயரில் இடம் பெறும் காஸா மீதான தாக்குதல்களை ஆரம்பிக்கும் போதும் “Hamas will pay the price” (ஹமாஸ் இதற்கான விலையை கொடுக்கும்) என நெதன்யாகு குறிப்பிட்டாலும் இது வரை ஹமாஸின் எந்த இராணுவத் தளங்களையும் தாக்கியதாகவோ அல்லது வீரர்களை கொலை செய்தாகவோ தகவல்கள் இல்லை. வெறும் சிவிலியன்களைக் கொலை செய்யும் இராஜந்திரத்தைத்தான் டெல்அவீவ் பயன்படுத்துகின்றது.
ஏன் இஸ்ரேல் காஸாவை இலக்கு வைக்கிறது?
பொதுவாக ஒரு யுத்தத்திற்கோ அல்லது வன்முறைப் பிரயோகத்திற்கோ இரண்டு இலக்குகள் இருக்கின்றன என பிரபல அரசியல் ஆய்வாளர் மர்வின் பிஷாரா குறிப்பிடுகிறார். அதில் முதலாவது குறுகிய கால இலக்குகள். இவை இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் குறைந்தவை.
ஆனால் தனது நீண்ட திட்டத்திற்கு மக்களாதரவை பெற்றுத் தரக்கூடியவை. மற்றையது நீண்ட இராஜதந்திர இலக்குகள். இவை அரசியல் ரீதியில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை அதேநேரம் மக்களின் கவனக் குவிப்பை பெற்று நிற்கும் அம்சமல்ல.
தற்போது இடம்பெறும் இஸ்ரேலின் சிவிலியன்களை இலக்கு வைத்து தாக்கும் ஆகாய மார்க்க தாக்குதல்களை ஆழமான உற்று நோக்கும் போது மர்வின் பிஷாரா சொல்லிக் காட்டும் இரண்டு வகையான இலக்குகளையும் அடையாளப்படுத்தலாம்.
தற்போது இஸ்ரேல் காஸாவைத் தாக்குவதற்கு தீர்மானித்ததன் குறுகிய கால இலக்குகள் கீழ்வருமாறு :
1. மூன்று கிழமைக்கு முன்னர் இஸ்ரேலின் ஜெரூஸலம் பகுதியைச் சேர்ந்த 3இளைஞர்களை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்நிகழ்வு இஸ்ரேலினுள் பாரிய அமளிதுமளியை ஏற்படுத்தியது. நெதன்யாகு தலைமையிலான அரசு ஒரு கூட்டரசாங்கம் என்பதால் அரசில் அங்கம் வகிக்கும் ஏனைய தீவிர சியோனிஸ கட்சிகள் மக்களின் ஆதங்கங்களை தங்களது சுய அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்துவதற்கு ஏற்ற சந்தர்ப்பமாக இதனைக் கருதினர்.
எனவே இஸ்ரேலிய இளைஞர்களுக்கு நடைபெற்ற கொலைக்கு பழிவாங்காத போது கூட்டரசாங்கத்தை தாங்கள் பழிவாங்கவும் தயாராக இருக்கிறோம் என அக்கட்சிகள் தெரிவித்தன. தீவிர சியோனிஸ கட்சிகளின் அக்கோரிக்கைள் மக்களிடத்தில் பாரிய வரவேற்பை பெறவே 'ஹமாஸ்' தான் இஸ்ரேலிய இளைஞர்களை கொன்றொழித்தது என்ற போலிக் குற்றச்சாட்டில் காஸாவைத் தாக்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டது. அப்போது தான் இன்னும் தனது கூட்டரசாங்கத்தை பலப்படுத்தலாம் என நெதன்யாகு சிந்திக்கிறார்.
2. இரண்டாவது புதிய எகிப்திய அரசின் தன்மீதான விசுவாசத் தன்மையினை பரீட்சித்துப் பார்த்துக் கொள்வது. தற்போது இடம்பெறும் காஸா மீதான தாக்குதல்களின் பிரதான நோக்கங்களில் ஒன்று இதுவாகும் என எகிப்திய அரசியல் ஆய்வாளர் பஹ்மி ஹூவைதி குறிப்பிடுகிறார்.
கிட்டிய எதிர்காலத்தில் பிராந்தியத்தில் இஸ்ரேலிய அரசு மேற்கொள்ளப் போகும் அனைத்து விதமான முன்நகர்வுகளுக்கும் எகிப்திய ஆதரவின் தயார் நிலையை பரீட்சித்துக் கொள்வது முக்கியம். இந்த வகையில் தனக்கு எந்த சந்தர்ப்பத்திலும்எப்போதும் உதவி செய்வதற்கு எகிப்திய அரசு தயாரகத்தான் இருக்கிறது என்ற பச்சைக் கொடியை கைரோ நெதன்யாகுவிட்கு காட்டி விட்டதனைத்தான் சமீபத்திய காஸா மீதான தாக்குதல்களின் போதான எகிப்திய அரசின் ஊடக அறிக்கைகள் காட்டி நிற்கின்றன.
மேற்கூறப்பட்டவை காஸா மீதான தாக்குதல்களை தொடுப்பதற்கு நெதன்யாகு தீர்மானித்ததன் பின்புலத்தில் தொழிற்பட்ட நேரடிக் காரணங்கள். இவை இராஜந்திர ரீதியில் பாரிய முக்கியத்துவம் பெற்றவை அல்ல.
காஸா மீதான தாக்குதல்களின் நீண்ட தூர மற்றும் இராஜதந்திர ரீதியான இலக்குகள் கீழ்வருமாறு :
1. சமீபத்தின் இஸ்ரேலின் இருப்புக்கே சவால் விட்ட ஹமாஸிற்கும் - பதாஹ்விற்கும் இடையிலான சமாதான உடன்படிக்கையை உடைத்து நொறுக்குவது. இந்தக் காரணத்திற்காகத் தான் மேற்கு நாடுகளும் காஸா மீதான தாக்குதல்களை மேற்கொள்வதற்கு இஸ்ரேலிய அரசுக்கு பச்சைக் கொடியைக் காண்பித்தது.
இதனுடாக ஹமாஸை ஒரு துருவத்திலும் பதாஹ்வை மறுதுருவத்திலும் தனித்து இயங்க விடுவது. இறுதியாக அவ்வாறு பதாஹ் தனிமைப்படும் பட்சத்தில் இஸ்ரேலுடன் செல்லமாக விளையாடும் போது அப்பாஸ் சொல்லிக் காட்டும்'நாங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்வோம்' என்ற வார்த்தையை இனியும் மொழியாமல் செய்வது.
மூன்றாவது நபரான அமெரிக்கா சமாதானப் பேச்சுவார்த்தை என்ற அடிப்படையில் ஹமாஸை ஓரங்கட்டி விட்டு அப்பாஸின் தனியுரிமை பலஸ்தீனத் தலைமைத்துவத்தை நிலைப்படுத்துவது. மேலும் வரும் சில வருடங்களுக்கு'ஹமாஸ்-பதாஹ் கூட்டரசாங்கம்' என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் செய்வது.
2. அரபுலகம் பயங்கர குழப்ப நிலைக்குல் தள்ளப்பட்டுள்ள தருணமிது. எனவே ஹமாஸின் ஆயுத பலத்தை குறைப்பதற்கும் பிராந்திய தனிமைப்படுத்தலையும் மேற்கொள்வதற்கு சிறந்த தருணமாக தறபோதைய அரபுலக சூழ்நிலைகளை இஸ்ரேல் கருதுகிறது. ஏற்கனவே ஹமாஸை எகிப்திய அரசு 'தீவிரவாத அமைப்பு'என பிரகடனம் செய்துள்ள அதே வேளை ஹமாஸிற்கு அரசியல் ரீதியான ஆதரவளிக்கும் நிலையில் எகிப்திய இஃவான்களும் இல்லை. எனவேசந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஹமாஸைப் பலவீனப்படுத்தி காஸா அரசிலிருந்து தூக்கியெறிவது.
நெதன்யாகு இலக்கை அடைவாரா ?
நெதன்யாகு உட்பட அவரது கூட்டுப் படை திகைப்படைய ஆரம்பித்துள்ளன. ஓரிரு தினங்களுக்கு முன்னர் பிரபல்யமான 'அல்குத்ஸ் அல்அரபி” பத்திரிகையின் முன்னால் பிரதம ஆசிரியரான அப்துல் பாரி அல் அத்வான் நெதன்யாகுவை கதிகலங்கச் செய்த 3 முக்கிய அம்சங்களைச் சுட்டிக்காட்டுகிறார்.
இம்மூன்று அம்சங்களும் சர்வதேச மீடியாக்களில் பாரிய கவனக் குவிப்புக்கு உட்படுத்தப்படாவிட்டாலும் கூட இஸ்ரேலிய இராணுவக் கட்டமைப்பின் திட்டங்களையே மீளவரைவதற்கு இஸ்ரேலிய இராணுவ ஜெனரல்களை நிர்ப்பந்தித்துள்ளது.
1. முதலாவது முறையாக டெல்அவீவ் நகரத்தின் உள்ளத்தை தொடும் அளவுக்கு நீண்ட தூரம் கொண்ட ஏவுகணைகளை ஹமாஸ் ஏவிவுள்ளமை. அதிலும் குறிப்பாக, டெல்அவீவின் பென்கூறியன் விமான நிலையம் இந்த ஏவுகணை தாக்குதல்களால் பல மணிநேரம் மூடப்பட்டிருந்தது.
பயணிகளின் பாதுகாப்பு கருதி டெல்அவீவிற்கு பறப்பதற்கு சில விமான சேவைகள் மறுப்பு தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது. ஹமாஸிய ஏவுகணைகளின் புதிய பாய்ச்சல் இஸ்ரேலிய இராணுவத்தில் உளவியலில் பாரிய அச்ச அலைகளை உருவாக்கிவிட்டுள்ளது.
2. ஹமாஸின் ஐந்து படைவீரர்கள் கடல் வழியாக பயணம் செய்து இஸ்ரேலின் அஸ்கலான் பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமொன்றை தாக்கியமை. இதில் பாரிய உயிர் சேதங்கள் எதுவும் இஸ்ரேலிய இராணுவச் சிப்பாய்களுக்கு ஏற்படாவிட்டாலும் ஹமாஸின் புதிய தாக்குதல் அணுகுமுறைகளை “The Shocking Attempt” என இஸ்ரேலிய ஊடகங்கள் விபரிக்கின்றன.
அதே வேளை காஸாப் பகுதிக்கு சமீபமாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த யுத்த தாங்கியொன்றை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதில் அதிலிருந்த 3 இராணுவ வீரர்களும் பாரிய காயத்திற்கு உட்பட்டுள்ளனர். இத்தாக்குதலை ஆதாரம் காட்டி இஸ்ரேலிய இராணுவச் சிப்பாய்கள் காஸாவிற்குல் நில மார்க்கமாக நுழைவதனை பலரும் கண்டிக்கின்றனர்.
மேற்சொன்ன இரண்டு காரணங்களின் விளைவாக இஸ்ரேலின் குடியேற்ற திட்டங்களுக்கும் நில ஆக்கிரமிப்புச் செயற்திட்டங்களுக்கும் எதிரானவர்களது தொகை இஸ்ரேலிய மக்கள் வட்டாரத்தில் அதிகரித்த வண்ணமிருக்கிறது. தற்போது காஸாவைத் தாக்கிக் கொண்டிருக்கும் தினங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட அனைத்துக் கருத்துக் கணிப்புக்களும் நெதன்யாகு வீணாக இஸ்ரேலை காட்டிக் கொடுக்கப் போகிறார் என்பதே அதிகமானவர்களது கருத்தாக இருந்தன.
போரின் இறுதி முடிவு எப்படி அமையும் ?
கடந்த ஒரு தசாப்த காலமாக நடைபெற்ற ஹமாஸிற்கும் - இஸ்ரேலிய இராணுவத்திற்கும் இடையிலான யுத்தங்களைப் பொருத்தவரை இறுதி வெற்றியானது போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை வைத்து தீர்மானிக்கப்படுவதாக எப்போதும் இருந்ததில்லை.
மாறாக இறுதியில் நடைபெறும் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் யார் மீது யார் ஆதிக்கம் செலுத்துகின்றார் ? உடன்படிக்கையில் யாரது நிபந்தனைகளை யார் ஏற்றுக் கொள்கின்றார்? மற்றும் சர்வதேச தளத்திலும் இராஜதந்திர தளத்திலும் யாரின் வலுச் சமநிலை அதிகரித்துள்ளது? என்பதனைப் பொறுத்தே போரின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. அப்படித்தான் இஸ்ரேலும் ஹமாஸூம் அதனை நோக்குகின்றது. சர்வதேசமும் அப்படித்தான் அதனைக் கணிப்பிடுகிறது.
இந்தப் பின்புலத்தில் 2012 வருடம் இடம்பெற்ற இஸ்ரேலுக்கும் ஹமாஸூக்கும் இடையிலான யுத்தத்தின் பின்னர் எகிப்தின் மத்தியஸ்தத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை ஹமாஸிற்கு இராஜதந்திர ரீதியாக பாரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தன. ஹமாஸ் விதித்த அத்தனை நிபந்தனைகளையும் இஸ்ரேல் அங்கீகரித்து யுத்த நிறுத்தத்திற்கு சம்மதித்தது.
இஸ்ரேலை அப்படியே தனது கூண்டுக்குல் கட்டிப் போடும் அளவுக்கு இறுக்கமானதாக ஹமாஸின் நிபந்தனைகள் காணப்பட்டன. எனவேதான் சில மத்திய கிழக்கு விற்பன்னர்களின் (உதாரணமாக அல்ஜஸீராவின் மார்வின் பிஷாரா) கருத்துப்படி தற்போது நடைபெறும் நெதன்யாகுவின் காஸா மீதான தாக்குதல்களின் ஒரு நோக்கம் ஹமாஸை பலவீனப்படுத்தி தனக்கு சார்பான முறையில் 2012 ஆண்டு எழுதப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீளவும் வரைவதாகும் என்கிறார்.
ஆனால் நெதன்யாகுவின் சிந்தனையில் உலாவந்த கற்பனைகளுக்கு மாற்றமாகவே கள நிலவரங்கள் தென்படுகின்றன. அதாவது ஹமாஸின் மீது கடுமையான நிபந்தனைகளை விதிப்பதற்கு நெதன்யாகு விரும்பினாலும் கூட ஹமாஸை கட்டுப்படுத்தும் வலுச் சமநிலை கொண்ட ஒரு நாடு மத்தியஸ்த்தம் வகிப்பதும் அதனுடாக ஹமாஸ் தானாகவே வந்து யுத்த நிறுத்தத்தை பிரகடனம் செய்வதும் இன்றியமையாதது.
மறுபுறத்தில் 'தான் எந்த விதத்திலும் யுத்த நிறுத்தத்திற்கு தயாராக இல்லை. எத்தனை நாட்களைக் கொண்ட நீண்ட போராட்டத்திற்கும் தயாரகவே இருக்கிறோம்'என அறிவித்துள்ளது. அத்துடன் ஹமாஸிற்கும் இஸ்ரேலிற்கும் இடைத்தரகராக நிற்கும் அளவுக்கு எந்த அரபு நாடும் இல்லை. 2012 வது ஆண்டு முஹம்மத் முர்ஸி அத்தகைய வலுவான பணியைச் செய்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிலவேளை தற்போது யுத்த நிறுத்த உடன்படிக்கையொன்று இடம்பெறுமானால் நிச்சயம் அது ஹமாஸின் பிராந்திய வலுச்சமநிலையை பலவீனப்படுத்துவதற்கு மாற்றமாக அதனை அதகரிக்கச் செய்யலாம் என்பதே அரசியல் ஆய்வாளர்களின் ஆரூடம்.
அதேவேளை அவ்வாறுதான் ஹமாஸிற்கும் இஸ்ரேலுக்கும் மத்தியிலான யுத்த நிறுத்த உடன்படிக்கையொன்றுக்கு எகிப்து அல்லது வேறொரு நாடு நடுநிலை வகிக்கும் என்றிருந்தாலும் ஹமாஸின் நிபந்தனைகளையே இஸ்ரேல் ஏற்க வேண்டியிருக்கும் என்பது தெளிவு.
குறிப்பாக நடுத் தரகராக எகிப்து செயற்பட்டால் ஹமாஸிற்கும் - ஸீஸியின் அரசுக்கும் இடையிலான முறுகல் நிலை ஓரளவு தணிவது போன்ற தோற்றப்பாடு எழலாம். இது ஹமாஸைப் பொருத்தவரை வெற்றியே. அவ்வாறில்லாமல் வோறொரு அரபு நாடு மத்தியஸ்தம் வகித்தால் அவர்களாலும் ஹமாஸின் நிபந்தனைகளை புறக்கணிக்க முடியாது. மொத்ததில் யுத்த நிறுத்த உடன்படிக்கை என்று வந்தாலும் கூட அது ஹமாஸிற்கு வாய்ப்பானதாகவே அமையும்.
காஸாவும் அரபுலகமும் :
இறுதியாக இப்படியொரு குறிப்பையும் குறிப்பிட வேண்டும். அதாவது ஹமாஸின் அரசியல் துறை பொறுப்பாளர் காலித் மிஷ்அல் 'நாங்கள் எந்த அரபு நாட்டுத் தலைவரிடம் கையேந்த மாட்டோம்” என குறிப்பிட்டிருந்தார். காஸா விடயத்தில் கட்டாரைத் தவிர பொதுவாக ஏனைய அரபு நாடுகள் மௌனம் காப்பது யதார்த்தம்.
அதற்கான பிரதான நியாயம் அந்நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கிறது என்பது மட்டுமல்ல. மாற்றமாக வெறும் 15 இலட்சம் மக்கள் 150 சதுர கிலோ மீற்றர் பரப்பில் வாழ்ந்து கொண்டு 1967 ஆம் ஆண்டு முழு அரபு நாடுகளும் இணைந்து வீழ்த்த முடியாதிருந்த இஸ்ரேலுடன் மோதுகிறது என்பதாகும்.
ஹமாஸை அரபுகள் எதிர்ப்பது அவர்களின் 'தலைகுனிவின்' வெளிப்பாடு என்றும் சொல்லலாம். காஸா மக்களும் ஹமாஸூம் இஸ்ரேலுக்குள் மட்டும் தங்களது ரொக்கெட்டுகளை அனுப்பவில்லை. மறுபுறத்தில் அவர்களது ஒவ்வொரு ரொக்கெட்டுகளும் அரபுகளின் உளவியலையும் தாக்கும் வலிமை வாய்ந்தவை. எனவேதான் ஹமாஸை எப்படியாவது மடக்கிப் போடுவதற்கு அரபுத் தேசங்கள் நினைக்கின்றன.
ஸகி பவ்ஸ் (நளீமி)
நன்றி
engalthesam.lk
No comments:
Post a Comment