'கிலாஃபா' விடயத்தில் சமரசம் செய்ய முஸ்லிம்கள் ஒரு கனமும் சம்மதிக்க மாட்டார்கள் பகுதி - 02

 
 
1. கிலாஃபா என்பது இஸ்லாத்தின் அதிமுக்கிய கடமைகளில் ஒன்று. அதற்கு தீவிரவாதச் சாயம் பூசும் முயற்சியை நாம் முற்றாக நிராகரிக்க வேண்டும்.

ஒருபுறம் கிலாஃபா என்பது ஒரு சில தரப்பினர் மாத்திரம் தூக்கிப்பிடிக்கும் கோட்பாடு, இஸ்லாம் என்ற ஒரு பெரிய பரப்பில் அது சிறு கூறு, இன்றைய களநிலவரத்திற்கு பொருந்தாத ஒரு பழைய வேலைத்திட்டம் என்ற ஒரு கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது. மறுபுறம் கிலாஃபா என்ற வேலைத்திட்டம் தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் அடைக்களம் புகுந்திருக்கும் ஒரு சிந்தனை, கனவு அல்லது இலட்சியம் என்ற ஒரு கருத்து உலகெங்கும் பரப்புரை செய்யப்படுகிறது. இதில் இலங்கையும் விதிவிலக்கல்ல.

எனினும் இஸ்லாத்தை பொருத்தவரையில் கிலாஃபா என்பது எமது தீனை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் அதனை உலகெங்கும் காவிச்செல்வதற்கும் இஸ்லாம் வரையறுத்துள்ள நிறைவேற்று அலகு என்பதை நாம் சந்தேகமறப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அலகு இல்லாத நிலையில் இஸ்லாம் எமது அரசியல், பொருளாதார, சமூக வாழ்வில் முற்றாக ஆளுமையிழந்து வெறும் ஆன்மீக கிரிகைகளுக்கும், ஒழுக்க வழிகாட்டலுக்குமான வெறும் போதனைகளின் தொகுப்பாக மாறிவிடும். கிலாஃபா என்ற இந்த அதிகார அலகுதான் இஸ்லாமிய பூமியின் எல்லைக்குள் வாழும் முஸ்லிம்களினதும், முஸ்லிம் அல்லாதோர்களினதும் அனைத்து விவகாரங்களையும் மேற்பார்வை செய்வதிலும், பாதுகாப்பு வழங்குவதிலும் பொறுப்பு வகிப்பதால் அதனை மீள நிறுவுவதை விட எமக்கு வேறு வழி கிடையாது.

நிச்சயமாக நாம் தாம் “தவ்ராத்”தை யும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்; இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும், அறிஞர் (அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்; முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம். (அல் மாயிதா 5:44)


எனவே இஸ்லாமிய ஆட்சியியலில் கிலாஃபா என்ற கோட்பாடு தொன்றுதொட்டு வந்த அனைத்து (ஏற்றுக்கொள்ளப்பட்ட) சிந்தனை வட்டங்களாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயமாகும். கிலாஃபா என்பது எத்தகைய சவால்களை முஸ்லிம் உம்மத் சந்தித்த போதிலும் தொடர்ந்தேர்ச்சையாக நடைமுறைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்த ஒரு விடயம் என்பதற்கு எமது வரலாறு சான்று பகர்கிறது.

எனவே எம்மில் பலர் தற்போது நினைப்பதைப்போல் அது வெகு சாதாரணமான விடயம் கிடையாது. அதனால் தான் இமாம் அபு ஹனீபா (ரஹ்) கிலாஃபாவை உம்முல் பராயித் - கடமைகளுக்கெல்லாம் தாய் என அழைத்தார்கள். அதனால்தான் இமாம் ஷாபி அதனை – பர்ள் அஸாஸி – கடமைகளுக்கெல்லாம் அடிப்படைக்கடமை என சொன்னார்கள்.

எனவே கிலாஃபா நோக்கிய பணியை அல்லது சிந்தனையை யாரும் தீவிரவாதமாக சித்தரிக்க நினைத்தால் அதனை முற்றாக நாம் நிராகரிக்க வேண்டும். அத்தகைய தீய சிந்தனை எம்மையும் தொற்றிக்கொண்டால் அது ஒரு அபாயக்குறி என்பதில் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.


பகுதி - 01 / பகுதி - 03

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Sources From
Darul Aman.Net