'கிலாஃபா' விடயத்தில் சமரசம் செய்ய முஸ்லிம்கள் ஒரு கனமும் சம்மதிக்க மாட்டார்கள் பகுதி - 01

 
 
IS இயக்கத்துடன் இணைந்து அண்மையில் சிரியாவில் கொல்லப்பட்ட சப்ராஸ் நிலாம் முஹ்சினின் செய்தி இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட கனம் முதல் நாடெங்கும்  ஒரு பரபரப்பு ஏற்படுத்தப்பட்டதை நாம் அறிவோம். பிரதான ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் கிலாஃபா, இஸ்லாமிக் ஸ்டேட், ஷரீயா, ஜிஹாத், டெரரிஸம் போன்ற பதங்கள் அதிகம் பந்தாடப்பட்டதையும் அறிவோம்.

அல்-கய்தா, தலிபான் போன்ற இயக்கங்கள் இலங்கையில் இயங்குவதற்கான எந்தவொரு சான்றுகளும் இல்லாத நிலையில் கூட அவற்றை இலங்கையில் தடைசெய்ய வேண்டும் என்ற  கோரிக்கையை சில வருடங்களுக்கு முன்னர் பொதுபலசேனா போன்ற பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் முன்வைத்ததை நாம் மறந்திருக்க மாட்டோம். எவ்வாறேனும் உலகளாவிய முஸ்லிம் தீவிரவாதத்துடன் இலங்கை முஸ்லிம்களையும் தொடர்புபடுத்தி அதனை வைத்து அரசியல் செய்ய எதிர்பார்த்திருக்கும் சக்திகளுக்கு வாயில் அவள் கிடைத்ததைப்போல் முஹ்சினின் விவகாரம் மாறும் என்பது வியப்புக்குரிய விடயமல்ல.
இலங்கையில் மாத்திரமல்லாது அரபுலகில் கடந்த இரு தசாப்த காலமாக தீவிரமாக வளர்ந்து வந்த இஸ்லாமிய எழுச்சியின் விளைவு, செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பின்னான கொந்தளிப்பான நிலை, ஆப்கான், ஈராக் ஆக்கிரமிப்பிற்கு எதிராக இடம்பெற்ற முஜாஹிதீன்களின் தொடர் போராட்டங்கள், இடையிடையே 'இஸ்லாமிய அரசை' எமது கட்டுப்பாட்டு பகுதிகளில் பிரகடனப்படுத்துகிறோம் என்ற அறிவிப்புக்கள், இவ்வியக்கங்கள் ஹூதூத் தண்டனைகளை ஆங்காங்கே வழங்கிய பரபரப்புக்கள் என அனைத்தும் ஒன்று சேர்ந்து ஷரீயா, இஸ்லாமிக் ஸ்டெட் போன்ற பதங்கள் உலகின் அனைத்து மட்டங்களிலும் அவதானத்தை ஈர்த்தன. இது தொடர்பாக எழுதுவதும், பேசுவதும் தமக்கு கிடைத்த மிகப்பெரும் ஊட்டச்சத்தாக கருதிய உலக ஊடக முதலைகள் அதனை ஊதிப்பெருப்பித்தன. மேலும் கிலாஃபா, இஸ்லாமிக் ஸ்டேட் போன்ற சொற்கள் மீது முஸ்லிம் உம்மத்திடம், குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களிடம் இருக்கும் ஈர்ப்பைப் புரிந்து கொள்ளும் எவரும் ஆளுக்கோர்  தலைப்பாகையை கட்டிக்கொண்டு தம்மை அமீருல் முஃமீனீன்களாக, அல்லது கலீஃபாக அறிவிக்கும்  போக்கும் எதிர்வுகூறப்பட்டதுதான்.

இத்தகைய ஒரு சூழலில் தான் திடீரென ஈராக்கிலும், சிரியாவிலும் கணிசமான பிராந்தியத்தை தமது ஆயுதப்பிடிக்குள் கொண்டுவந்த ISIS இயக்கம் தனது தலைவரான அபு பக்ர் அல் பக்தாதியை        தன்னிச்சையாக கலீஃபாவாக அறிவித்தது.  இந்த அறிவிப்பு கிலாஃபத்தை தமது கனவாகக்கொண்டு இயங்கிய பல துடிப்புள்ள முஸ்லிம் இளைஞர்களை அதன் பக்கம் கவர்ந்திழுத்தது. இந்த அறிவிப்பை வழமைபோல் தமது நவ காலனித்துவ நிகழ்ச்சி நிரலுக்கு சாதகமாக பயன்படுத்துவது எவ்வாறு என்ற தீவிர இலக்குடன் மேற்குலகு இயங்க ஆரம்பிக்க, மறுபுறம் தமது புலமையை காட்ட முண்டியடிக்கும் அவதானிகள் இந்த மாற்றம் குறித்து பல்வேறு  ஆய்வுகளையும், ஊகங்களையும் எழுதிக்குவிக்கித்தனர். இஸ்லாமிய சிந்தனையாளர்களும், இயக்கங்களும் தம் மீதும் யாராவது தீவிரவாத சேறு பூசிவிடுவார்களோ என்ற விழிப்புடன் அதிகமாக இது குறித்து பேச ஆரப்பித்துள்ளனர். இவ்வாறு இன்று முஸ்லிம் உலகிலும், அதற்கு வெளியிலும் கிலாஃபா, கலீஃபா, இஸ்லாமிய அரசு பற்றிய எதிரும் புதிருமான தகவல்கள் மக்களை வந்தடைகின்றன. இவை கிலாஃபா பற்றிய ஒரு வாதத்தை ஏற்படுத்தி அது குறித்த ஒரு அலையை ஏற்படுத்தியிருந்தாலும், 'கிலாஃபா' என்ற கோட்பாடு பற்றிய புரிதலில் மிக அதிமான குழப்பத்தை ஏற்படுத்தி வருவது கவலையான விடயம்.

ஊடகங்களும், உலகளாவிய கருத்தாளர்களும் இந்த சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு 'கிலாஃபா' என்ற எண்ணக்கருவை ஒரு தீவிரவாத சிந்தனையாக பரப்புரை செய்ய முனைகின்றனர். முஸ்லிம்களே தமக்குள்ளால் இஸ்லாமிய ஆட்சி என்ற சிந்தனையையே கேள்விக்குட்படுத்தும் அல்லது முற்றாகவே மறுதளிக்கும் அளவிற்கு அவர்களின் மனோபாவத்தை கொண்டுவருவதற்கு மிகவும் அதிகளவான பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படுவது வெளிப்படையாகத் தெரிகின்றன. இந்த சூழலில் உள்ளீடு எதும் இல்லாத, பெயரளவிலான, வெற்றுக் கிலாஃபா பிரகடனங்களை எதிர்ப்பதும், மறுப்பதும் எவ்வாறு முக்கியமோ, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைக்கும் குப்ரிய சக்திகளின் நிகழ்ச்சி நிரலை தோலுரிப்பது எவ்வாறு முக்கியமோ, அதனைவிடவும் 'கிலாஃபா' என்ற கோட்பாட்டையும் அது இஸ்லாத்தில் வகிக்கும் உயரிய வகிபாகத்தையும் முஸ்லிம்களின் மனதில் ஆழமாக நிலைகொள்ளச் செய்வது மிகவும் முக்கியமாகும். கிலாஃபா இஸ்லாத்தின் அடிப்படைக்கோட்பாட்டுடன் தொடர்பானது. அதனை புரக்கணிப்பதும், எதிர்த்து நிற்பதும் எக்காரணத்தைக் கொண்டும் தாண்டக்கூடாத விளிம்பு.

இவ்வுண்மை இஸ்லாமிய மூலாதாரங்களிலும், முஸ்லிம்களின் நெடிய வரலாற்றிலும் ஆழப்பதிந்துள்ளமை கண்கூடு. முஸ்தபா கமாலின் தீய கரங்களால் கிலாஃபாவிற்கு சமாதிகட்டப்பட்டது முதல் கிலாஃபா என்ற மந்திரச் சொல்லுக்கு உலகளாவிய முஸ்லிம்களிடம் இருக்கும் அரசியல், ஆன்மீக அந்தஸ்தத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்த எகிப்த்தின் மன்னர் பாரூக், மக்காவின் ஷெரீப் ஹூசைன், ஜோர்தானின் மன்னர் ஹூசைன் மேலும் ஈரானில், சூடானில் என பலர் இதற்கு முன்னரும் முனைந்ததை நாம் அறிவோம். தம்மை உய்விக்க ஏதேனும் வராதா என ஏங்கிக்கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு இவ்வறிவிப்புக்கள் ஆரம்பத்தில் ஒரு உத்வேகத்தைக் கொடுத்தாலும் அதன் சாயம் வெளுக்க வெளுக்க கிலாஃபத்தை எதிர்பார்த்து ஏமாறுவதே  எமது வழக்காகிவிட்டது என முஸ்லிம்கள் மத்தியில் மனச்சோர்வையும், கிலாஃபா தொடர்பான ஆழமான சிந்தனைக் குழப்பத்தை இவை ஏற்படுத்தி விடுகின்றன.

உண்மையான கிலாஃபாவின் மீள்வருகையை எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்க முடியாது என தம் கண்களில் எண்ணெய் ஊற்றி காவல்காக்கும் உலக வல்லரசுகள் இத்தகைய போலி இஸ்லாமிய ஆட்சிகள் இடைக்கிடையே வந்து போவதை அனுமதிக்கும்  சூட்சுமத்தை இதற்கு முன்னரும் செய்திருக்கிறார்கள். அதனூடாக இந்த இஸ்லாமிய ஆட்சிகளின் இயலாமையையும், அநீதிகளையும் முஸ்லிம்களின் மனதில் ஆழமாக வேறூண்றச் செய்வதினூடாக  கிலாஃபா நோக்கிய பயணங்களும், வேலைத்திட்டங்கள் நடைமுறைக்குதவாத விடயங்களாக  காட்டுவதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளனர்.

எனவே இந்த நயவஞ்சக சதுரங்கத்தில் எமது சிந்தனைகள் பலியாக முன்னர் கிலாஃபா என்ற எண்ணக்கரு தொடர்பாக நாம் சில முக்கிய நிலைப்பாடுகளை எடுத்தாக வேண்டும்.

பகுதி - 02 /

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Sources From
Darul Aman.Net