இந்த முஹர்ரம் புத்தாண்டில் எம்மில் பலர் ஆசுரா நோன்பினை நோற்கும் பேற்றினைப்பெற்றிருப்போம். அத்தினம் பிர்அவ்வின் கொடுங்கோண்மையின் கீழ் அடிமை ஊழியம் செய்து வாழ்ந்த பனீ இஸ்ரேயில் சமூகம் தமது அடிமை விலங்கொடித்து முன்னேறிய தினம்.
 
அத்தினம் அண்ட சராசரங்களை கட்டிக்காக்கும் அல்லாஹ்(சுபு) வழங்கிய வாக்குறுதியை உண்மையாக எதிர்பார்த்து, அதன் மீது தூய்மையாக நம்பிக்கை கொள்வதின் விளைவை நிலைநிறுத்திய தினம்.
 
அத்தினம் இறைவனை நிராகரிக்கும் வலிமைமிக்க, ஈவிரக்கமற்ற, சர்வாதிகாரி ஒருவன், வரலாற்றில் மிகவும் அடிமட்டத்திலிருந்த, ஈமான் கொண்ட அடிமைச் சமூகத்தின் காலில் சரிந்து விழுந்த உயரிய சம்பவத்தை நினைவூட்டும் தினம்.
 
அல்லாஹ்(சுபு) அல்குர்ஆனில் சுட்டிக்காட்டும் இந்த மகத்தான உதாரணத்தில் தமது வரலாற்றில் அதலபாதாளத்தை அடைந்திருக்கும் இன்றைய முஸ்லிம் உம்மத்திற்கும் மிகத் தெளிவான வழிகாட்டல்கள் இருக்கின்றன.
 
பிர்அவ்ன் பனீ இஸ்ரவேலர்களின் ஆண்குழந்தைகளை கொலை செய்யுங்கள் என அறிவித்த வேளையில் அல்லாஹ்(சுபு) அந்த சமூகத்தில் பிறந்த குழந்தையான முஸா(அலை) அவர்களை பிர்அவ்னின் மாளிகையில், அவன் மனைவியின் மடியிலேயே எவ்வாறு வளர்த்தெடுத்தான் என்பது எமக்குத்தெரியும். பின் தவறுதலாகச் செய்த கொலையொன்றிற்கு தண்டிக்கப்படுவேன் எனப்பயந்து எகிப்பதிலிருந்து தப்பித்தோடிய முஸா(அலை), மத்யனில் தஞ்சம் புகுந்ததையும் நாம் அறிவோம். பின் அவரை தனது இறைத்தூதராய்த் தேர்ந்தெடுத்து அவர் யாரின் தண்டனையை பயந்தாரோ அவனின் அரசவைக்கே அனுப்பி வைத்து, பிர்அவ்னை வரம்பு மீறாதே என எச்சரிக்கச் சொன்னதையும், பனீ இஸ்ரவேலர்களை விடுதலை செய் என விண்ணப்பிக்கச் சொன்னதையும் நாம் அறிவோம்.

நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான். (28:4)
 
பிர்அவ்ன் தன்னை கடவுள் என அறிவித்து ஆகப்பெரிய அத்துமீறலை செய்த வேளையிலேயே அவனை நோக்கி மூஸா(அலை) இவ்வாறு அனுப்பப்படுகிறார். அதற்கு முன்னரே தனது இராணுவமயப்பட்ட அரசின் அசுர பலத்தால் மூஸா(அலை) த்தின் சமூகத்தை முழுமையாக அடிமைப்படுத்தி, அவர்களை கொலை செய்து, சித்திரவதை செய்து, கற்பழித்து, அவர்களின் உழைப்பைச் சுரண்டி, அவர்களின் முதுகுகளின் மீது ஏறி நின்று தனது சுகபோக அரியாசனத்தை அவன் வடிவமைத்திருந்தான். இத்தகைய ஒரு அரசியற் பின்னணியிலேயே ஹாரூன்(அலை) அவர்களையும் அழைத்துக்கொண்டு, மூஸா(அலை) சத்தியத் தூதுடன் அவனின் அரண்மனைக்குள் நுழைகிறார்கள்.
 
“நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான். நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம் (20:43-44)
 
அவர்களின் அழைப்போ எக்குழப்பமுமற்றது. மிகச் சாதாரணமானது. அவர்களின் அழைப்பு வாழ்வின் யதார்த்தைப்பற்றிப்பேசியது. அவர்களின் அழைப்பு தூய்மையின்பாலும், நன்மையின்பாலும் வரச்சொன்னது.  அவ்வழைப்பு மன்னிப்பின்பாலும், விமோசனத்தின்பாலும் பிர்அவ்னுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. அவ்வழைப்பு முழுச் சமூகத்தையும் சத்தியத்திலும், நீதியிலும், சமாதானத்திலும் கட்டியெழுப்பும்படி சிபாரிசு செய்தது. எனினும் வழமையான கோடுங்கோலர்களைப்போலவே பிர்அவ்னும் சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கும், தனது அத்துமீறலிருந்து திரும்புவதற்கும் சம்மதிக்க மாட்டேன் என்றான். மூஸா(அலை)வின், ஹாரூன்(அலை)இன் தூது சாதாரணமாகத் தோன்றினாலும், தனது ஆளுகையையும், தமது அரசின் பலக்கட்டமைப்பையும், தான் ஆளும் மக்களையும் தன்கறிந்திருந்த பிர்அவ்ன் இந்த அழைப்பு தனது ஆட்சியின் நியாயாதிக்கத்தை இல்லாது செய்து மக்களை புரட்சி செய்யத் தூண்டிவிடும் என்பதை ஐயமற உணர்ந்திருந்தான்.
 
மக்களின் ஆதரவும், அடிபடிதலுக்கான தயார்நிலையும் இல்லாதுபோனால் தனது சம்ராஜ்ஜியம் தடம்புரண்டுவிடும் என உணர்ந்த பிர்அவ்ன் மூஸா(அலை) இன் தூதுக்கு மக்கள் செவிசாய்க்காத ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை புரிந்து கொண்டான். அவரையும் அவரின் இறைச்செய்தியையும் எல்லி நகையாட நினைத்தான். அவர் முன்வைத்த அறிவார்ந்த சவாலுக்கு பதிலளிக்காது அவரை ஒரு குற்றவாளியாகவும், துரோகியாகவும் மக்கள் மனதில் இடம்பெறச் செய்ய நினைத்தான். இதனூடாக தனது அத்துமீறலை மறைத்துவிடலாம் எனக் கற்பனை செய்தான்.
 
(ஃபிர்அவ்ன்) கூறினான்: நீர் குழந்தையாக இருந்தபோது நாம் உம்மை எங்களிடம் வைத்து வளர்க்கவில்லையா? இன்னும், உம் வயதில் பல ஆண்டுகள் எங்களிடத்தில் நீர் தங்கியிருக்கவில்லையா? (எனக் கூறினான்.) ஆகவே, நீர் செய்த (கூடாத கொலைச்) செயலையும் செய்துவிட்டீர்; மேலும், நீர் நன்றி மறந்தவராகவும் ஆகிவிட்டீர்” (என்றும் கூறினான்). (26:18-19)
 
இவ்வாறு மாபாதகங்களின் முழுவடிவமாக இருந்த தனது குற்றங்களை மறைப்பதற்கு மூஸா(அலை) தவறுதலாக செய்த கொலையை திரும்பவும் விசாரணைக்கு எடுத்தான். மேலும் அவரை தனது குடும்பம் பாலகப்பருவத்திலிருந்து வளர்த்தெடுத்ததிற்கு செஞ்சோற்றுக் கடன் தீர்க்காது தனது ஆட்சிக்கெதிராக மக்களை தூண்டிவிடும் ஓரு நன்றிகெட்ட மனிதராக மக்களிடம் அறிமுகப்படுத்தி, மூஸா(அலை) நியாயமாக வாதத்தை மழுங்கடித்து அதனை வேறொரு திசைக்கு திருப்புவதற்கு முயன்றான் என அல்குர்ஆன் அவனது சூழ்ச்சியை குறிப்பிடுகின்றது. இந்தக்கட்டத்தில் மூஸா(அலை) அவனை வாயடைக்கச்செய்யும் விதமாக எவ்வாறு ஒரு அடிப்படைத்தர்க்கத்தை முன்வைத்தார்கள் என்பதை அல்குர்ஆன் அழகாக ஞாபகமூட்டுகிறது.

“பனூ இஸ்ராயீல்களை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இது நீ எனக்குச் சொல்லிக் காண்பிக்கக் கூடிய பாக்கியமாகுமா?” (26:22)
 
மூஸா(அலை) வாதத்தை திசை திருப்பும் பிர்அவ்னின் கைங்கரியத்திற்கு விலைபோகவில்லை. மாறாக அவன் ஏற்படுத்த விரும்பும் வாதத்திற்கான தளத்திற்கு சென்று அவர் வாதிக்க விரும்பவுமில்லை. மாறாக பிர்அவ்ன் முன்வைத்த வாதத்தையே அவனுக்கு எதிராக திருப்பும் முகமாக அவன் பனீ இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் கொடுமையின் பால் அனைவரினதும் கவனத்தை திருப்பினார்கள். அதாவது நீ என்னை உன் மாளிகையில் வைத்து வளர்த்தெடுத்தாக கூறுகிறாயே, நீ பனீ இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்தாது இருந்திருந்தால், உனது ஆட்சி மோகத்திற்காக அவர்களின் ஆண்குழந்தைகளை கொல்லதிருந்திருந்தால் நான் உனது மாளிகையை மிதித்திருக்க வேண்டிய நிலையே ஏற்பட்டிருக்காது. நான் எனது அன்னையின் மடியில் சந்தோசமாக வளர்ந்திருப்பேனே என்பதை நினைவூட்டி குற்றங்களிலெல்லாம் ஆகப்பெரிய குற்றத்தை நீதான் செய்திருக்கிறாய் என துணிச்சலாக தனது எதிர்வாதத்தை முன்வைத்தார்கள்.
 
பிர்அவ்னின் இந்த பித்தலாட்டத்திற்கும் இன்றைய நவயுக பிர்அவ்ன்களான சடவாத முதலாளித்துவ அரசுகளின் தலைவர்களின் கையாலாகாத்தனத்திற்கும் எந்தவொரு வேறுபாடுமில்லை. இஸ்லாம் முன்வைக்கும் நேர்மையான கேள்விகளுக்கு பதிலளிக்காது மக்களின் திசையை வேறுபக்கம் திருப்ப முயல்வதும் இஸ்லாத்தின் கீர்த்தியை கேவலப்படுத்த நினைப்பதுமே அவர்களிடம் காணப்படும் பெரும் ஆயுதமாக அவர்கள் கருதுகின்றார்கள். எவ்வாறு பிர்அவ்ன் தன்னை அனைவரினதும் இரட்சகனாக நிறுவ முற்பட்டானோ அதேபோல இந்த உலகில் எது சரி, எது பிழை என்ற தீர்மானத்தை நிர்ணயிக்க தமக்குத்தான் முழு அதிகாரம் இருப்தாக இந்த சடவாத தலைவர்களும் வாதிடுகின்றனர். பிரபஞ்சம், மனிதன் அவனது வாழ்வு தொடர்பான் உண்மையான யதார்த்தங்களை மூடி மறைத்து இறைவனின் இறைமையை மறுதளித்து, அவனுக்கு இருக்கும் சட்டமியற்றும் அதிகாரத்தை மறுதளித்து தம்மால் இறைச்சட்டங்களின் தலையீடின்றி இந்த உலகை நிர்வகிக்க முடியும் என்ற அசட்டுத்துணிவுடன் பிர்அவ்னின் முன்மாதிரியை இவர்களும் பின்பற்றுகின்றனர்.
 
எவ்வாறு பிர்அவ்ன் பனீ இஸ்ரவேலர்களை தனது அடிமைகளாக நடாத்தினானோ, அதேபோலவே தமது ஏகாதிபத்திய சுரண்டல் நிகழ்ச்சித்திட்டத்துடன் முஸ்லிம் உலகிலும் புகுந்திருக்கும் அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவ காலனித்துவ நாடுகள் அதனை காலனிகளாக அடிமைப்படுத்தியுள்ளன. தமது நேரடி, மறைமுக ஆக்கிமிப்பை நிறுவுவதற்கு நேரடியாகவும், தமது முஸ்லிம் பெயர்தாங்கி கங்காணிகளினது கரங்களினாலும் மில்லியன் கணக்கான மக்களை கொன்றொழித்துள்ளனர். வளைகுடா யுத்தத்ததை தொடர்ந்து ஈராக்கிற்கு எதிராக விதிக்கப்பட்ட மருத்துவ, பொருளாதார தடைகளினால் மாத்திரம் அரை மில்லியன் குழந்தைகள் இறந்தன. இது தொடர்பாக அந்நாள் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மெடலின் அல்பிரைட் என்ற பெண்பேயிடம் கேட்கப்பட்டபோது அது தமது இலக்கிற்காக செலுத்தக்கூடிய ஒரு விலைதான் என ஈவிரக்கமற்று பதில் சொன்னதை நாம் மறந்திருக்க மாட்டோம். பின்பு 2003இல் சதாம் ஹ}சைனை வீழ்த்துவதற்காக இடம்பெற்ற  அமெரிக்க-பிரித்தானிய கூட்டுப்படையெடுப்பு மாத்திரம் குறைந்தது ஒரு மில்லியன் உயிர்களை பலியெடுத்தது என 'The Lancet' என்ற பிரித்தானிய மருத்துவச் சஞ்சிகை தெரிவித்தது.
 
எனினும் ஒரு முஸ்லிம் இந்த உலகில் ஒரு குற்றத்தை இழைத்து விட்டால் மாத்திரம் அதனை பெரும் பூதமாக பூதாகரப்படுத்தி அதற்கெதிராக முழு உலகையும் அணிதிரட்டும் முயற்சியை இவர்கள் செய்வதற்கு பின்நிற்பதில்லை. எவ்வாறு பிர்அவ்ன் மூஸா(அலை) அவர்கள் தவறுதலாகச்  செய்த கொலைக்குற்றத்தை பூதாகரப்படுத்தி பேசி தனது கொடுங்கோலை நியாயப்படுத்த நினைத்தானோ அது போலவே இவர்களும் ஒரு முஸ்லிம் எதிர்விளைவாகச் செய்யும் செயலை மாத்திரம் அதன் காரணிகளைக்கூட ஆராயாது, அதனை தனிமைப்படுத்தி, பெரிதாக்கிக்காட்டி அதற்குள் தாம் செய்யும் அட்டூழியங்களை அனைத்தையும் மறைக்க நினைக்கின்றனர்.
 
மறுபக்கத்தில் பிர்அவ்ன் எவ்வாறு தான் மூஸா(அலை)க்கு செய்த உபகாரத்தை சொல்லிக்காட்டினானோ அதற்கு ஒப்பாக, இந்த முதலாளித்து அரசுகளும், முஸ்லிம்கள் அவர்களின் தேசங்களில் அடைக்கலம் புகுந்து வாழும்போது செய்த உபகாரத்தையும், முஸ்லிம் உலகிற்கு தாம் வழங்கும் உதவிகளையும் இலஞ்சமாகப்பெற்றுக்கொண்டு தம்மை அனுசரித்துப்போகுமாறு வெட்கம் கெட்டுக் கோருகின்றனர்.
 
எவ்வாறு பனீ இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்தாது, அவர்களின் குழந்தைகளை கொல்லும் கொள்கைளை பிர்அவ்ன் பின்பற்றாது இருந்திருந்தால் மூஸா(அலை) பிர்அவ்னின் மாளிகைக்குள் வளரவேண்டி ஏற்பட்டிருக்காதோ அதேபோல, உண்மையில் இந்த காலனித்துவ மேற்குலகின் தலையீடு முஸ்லிம் உலகில் இல்லாதிருந்திருந்தால் மேற்குலகின் (IMF, World Bank, etc.) பிச்சைக்காசுக்காக காத்திர வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டிருக்காது. பொருளாதார மீட்சிக்காக மேற்குலகில் அடைக்கலம் புக வேண்டிய கேவலமும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்காது. எமது தேசங்களை ஆக்கிரமித்து, காலனித்துவப்படுத்தி, மக்களை அடிமைப்படுத்தி, வளங்களை கொள்ளையடித்து, எமது அரசான கிலாஃபத்தை நிர்மூலமாக்கி, எம்மீது தமது முகவர்களை ஆட்சியாளர்களாக நியமிக்காது இருந்ததிருந்தால் மேற்குலகின் பக்கம் கூட நாம் தலை வைத்து படுத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
 
பின்பு பிர்அவ்ன் சதித்திட்டம் தீட்டினான்...அல்லாஹ்(சுபு)வும் தனது திட்டத்தை பூர்த்தியாக்கினான்...
 
ஆயினும் (மிஸ்ரு) பூமியில் பலஹீனப் படுத்தப்பட்டோருக்கு நாம் உபகாரம் செய்யவும், அவர்களைத் தலைவர்களாக்கிவிடவும் அவர்களை (நாட்டுக்கு) வாரிசுகளாக்கவும் நாடினோம். இன்னும், அப்பூமியில் அவர்களை நிலைப்படுத்தி ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் இவர்களைப்பற்றி எ(வ் விஷயத்)தில் பயந்து கொண்டிருந்தார்களோ அதைக் காண்பிக்கவும் (நாடினோம்).(28:5-6)
 
அல்குர்ஆனின் நிழலில் இன்றைய முஸ்லிம் உம்மத்திற்கெதிரான முதலாளித்துவ உலகின் சதித்திட்டங்களை ஆய்வு செய்யும் போது, மூஸா(அலை) அவர்களின் வரலாறு எமது போராட்டத்தில் நாம் எவ்வாறு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை எச்சரிக்கிறது. உண்மையான, நேர்மையான போராட்டத்தை எதிர்கொள்ள சக்தியற்ற கொடுங்கோலர்கள் எப்போதும் தீட்டும் சதித்திட்டங்களின் பாரதூரங்கள் பற்றியும், மக்களின் கவனத்தை சத்தியத்திலிருந்து திசை திருப்பும் முயற்சிகளையும் நாம் நன்குணர வேண்டும் என்ற பாடத்தையும் இந்த வரலாறு எமக்கு கற்றுத்தருகிறது.
 
மிக நுணுக்கமான திட்டங்களாக, எதிர்கொள்ளவே முடியாத அபாரமான முயற்சிகளாக இஸ்லாத்தின் எதிரிகளின் திட்டங்கள் விதம் விதமாகத் தென்பட்டாலும், அவை  அனைத்தும் பல்லாயிரம் வருடங்களாக திரும்பத்திரும்ப முயற்சிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்ட முயற்சிகள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. இறுதியில் ஈமானில் புடம்போடப்பட்ட இறைவிசுவாசிகளுக்கு முன்னால் அவை அனைத்தும் தடம்புரண்டு  அல்லாஹ்(சுபு) திட்டமே வெல்லும் என்ற உண்;மையையே மூஸா(அலை) அவர்களின் வரலாறும், ஆசுரா தினமும் எமக்கு ஒரு சிறந்த போராட்டப்பாடமாக முன்வைக்கிறது.
 
அல்லாஹ(சுபு) அல்குர்ஆனின் வெளிச்சத்தில் எமது போராட்டப்பாதைகளை நிர்ணயிக்க எமக்கு  என்றென்றும் வழிகாட்டுவானாக!
Reactions:

0 comments:

Post a Comment

வாசித்தவர்கள்

Blog Archive

தொகுப்புகள்

'அஷ் ஷாமில்' (சிரியா) Central African மத்திய ஆபிரிக்க china Concepts Dangerous Concepts Documentaries Economic System Muslim Ummah அபூபக்ர் (ரழி) அமெரிக்கப் போர்கள் அமெரிக்கா அல்-அக்ஸா ஆப்கான் இந்தியா இஸ்ரேல் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய அழைப்புப் பணி இஸ்லாமிய ஆட்சி இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இஸ்லாமிய எழுச்சி இஸ்லாமிய கல்வி இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய மாதம் இஸ்லாமிய வரலாறு இஸ்லாம் ஈராக் ஈரான் உக்ரேன் உம்மத் எகிப்து(Egypt) ஐரோப்பா ஓமன் கட்டார் கருக்கலைப்பு கலிஃபாக்கள் வரலாறு காசா காலித் பின் வலீத் (ரலி) காவிகள் காஷ்மீர் கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் கிலாபத் குவைத் குழந்தைகள் கென்யா கொலம்பஸ் சவூதி (Saudi Arabia) சஹாபாக்கள் சிறப்புக் கட்டுரைகள் சீனா செர்பியா தமிழ் நாடு துருக்கி (Turkey) தேசியவாதச் சிந்தனை நபி தோழர்கள் நவீன பிரச்சனைகள் பங்களாதேஷ்(Bangladesh) பர்மா பஹ்ரைன் பாகிஸ்தான் பாலஸ்தீன் பாஜக பெண்கள் மீதான வன்முறைகள் பெண்ணியம் பொதுவனவை பொருளாதார அடியாள் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் அமைப்பு மிதவாத முஸ்லிம் மியன்மார் முதல் உலகப்போர் முஸ்லிம் இராணுவங்கள் முஸ்லிம் உம்மாஹ் யூதர்கள் ரஷ்யா லண்டன் லிபியா லெபனான்( Lebanon) வியட்நாம் ஜப்பான் ஜனநாயகம் ஜிஹாத் ஜெர்மன் ஜெனரல்
Powered by Blogger.

Map IP Address
Powered byIP2Location.com

Follow by Email

Enter your email address:

Delivered by FeedBurner

இஸ்லாமிய மறுமலர்ச்சி

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

About Me

My photo
“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) islamic.uprising@gmail.com