'ஹிஸ்புத் தஹ்ரீர்' வழிகேடான இயக்கமா !?

 
(ஒரு இஸ்லாமிய அரசியல் இயக்கம் தவறாக குற்றம் சாட்டப்படுகிறது . அந்த இயக்கம் பற்றிய விமர்சன நோக்கம் தூய்மை ஆனதல்ல . அதை புரியப்படுத்தவே இந்தப்பதிவு. ) 

 ஆத்திரத்தோடு அணுகினால் நிரபராதியும் குற்றவாளி ஆகிவிடுவான் அனுதாபத்தோடு அணுகினால் குற்றவாளியும் நிரபராதி ஆகிவிடுவான் .எனவே விமர்சனங்களை ஆத்திரமும் இல்லாமல் அனுதாபமும் இல்லாமல் பூரண தேடலோடு சமர்ப்பிப்பது தான் உண்மையான விமர்சனத்துக்கு அழகு . 

 ஹிஸ்புத்தஹ்ரீர் இயக்கம் பற்றிய சிலரது விமர்சனங்களில் சரியான தேடலோ ,தெளிவான ஆதரங்களோ இல்லை .மாறாக நுனிப்புல் மேய்ந்த கருத்துக்களும் ஆதாரங்கள் அற்ற குற்றச் சாட்டுமே தெரிகின்றது . ஹிஸ்புத் தஹ்ரீர் தொடர்பாக அவர்களின் எந்த புத்தகத்தை முழுதாக வாசித்து இந்தக் குற்றங்களை கண்டார்கள் !? 

தாம் சார்ந்த இயக்கம் தொடர்பான பக்கச் சார்பும் ,அந்த இயக்கவியலின் நகர்வுக்கு ஹிஸ்புத் தஹ்ரீரின் கருத்துக்களால் பாதகம் ஏற்படும் என்ற பயத்தின் காரணமாகவா இத்தகு விசமப் பிரச்சாரத்தை செய்கிறார்கள் ? எது எப்படியோ கேள்வி கேட்டவர்களே களைத்துப் போகும் அளவுக்கு பதில் கொடுத்த பழைய சரக்குகளை அல்லவா தூசி தட்டி மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள் !?

சரி விடயத்துக்கு வந்தால் 1956 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜோர்தானிய பார்லிமென்ட் விவகாரத்தில் இருந்து வருவோம் . இந்த விவகாரத்தை விமர்சித்த போது சிலரின் தேடலின் தரம் எனக்கு புரிந்தது . இந்த நிகழ்வு வெளிப்படையாகவும் ,பகிரங்கமாகவும் நிகழ்ந்தது .
 
 
அந்த ஜோர்தானிய தேர்தல் வரை அங்கு பார்லிமெண்டில் நுழைவதற்கு யாப்புகள் ,நிபந்தனைகள் ,சத்தியப் பிரமாணம் என்ற எந்த நிபந்தனைகளும் இருக்கவில்லை .இந்த சாதகத்தை பயன்படுத்தி இஸ்லாமும் ,இஸ்லாமிய சரீயாவும் மட்டுமே முஸ்லீம் உம்மத்தின் ஒரே தீர்வு என்பதை பிரச்சாரப்படுத்த ஒரு கருவியாக விடயத்தை பயன்படுத்தியது அவ்வளவுதான் . 

ஆனால் ஜோர்தானிய அதிகாரம் இந்த நிகழ்வுக்கு பின் தனது பலவீனத்தை புரிந்து யாப்புகள் ,நிபந்தனைகள் , சத்தியப்பிரமாணம் ,சட்டங்கள் என இறுக்கமான கட்டமைப்பினால் அந்த தாகூத்தின் மாளிகைக்கு செல்லும் பாதைகளை மூடியது . சட்டமியற்றும் அதிகாரத்தை அல்லாஹ் அல்லாத வேறு எந்த ஒன்றுக்கும் கொடுத்து நிற்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட மாட்டோம் என்ற தெளிவான முடிவோடு ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற இஸ்லாமிய அரசியல் இயக்கம் ஜோர்தானில் மட்டுமல்லாமல் எந்த ஒரு பகுதியிலும் இத்தகு நடவடிக்கைகளை செய்யவில்லை . மேலும் ஹிஸ்புத்தஹ்ரீர் கப்ரு வேதனையை மறுக்கிறது ! என்ற குற்றச் சாட்டும் ஆதார மற்றது . இதுவும் ஆழ்ந்த தேடல் அற்ற முடிவாகும் . 

 
இன்னும் திருத்தமாக சொன்னால் வஹி மூலம் தெளிவாக நிரூபிக்கப்பட்ட எந்த முடிவையும் ஹிஸ்புத்தஹ்ரீர் என்றும் எங்கும் மறுக்கவில்லை . இன்னும் மறைவான வற்றின் மீது ஈமான் கொள்வது மற்றும் இஸ்லாத்தின் நம்பிக்கை கோட்பாட்டை நிறுவுவது தொடர்பில் அல்குர் ஆன் ,மற்றும் முதவாதிரான ஹதீஸ் களையே ஆதாரமாக எடுப்போம் என்ற ஹிஸ்புத் தஹ்ரீரின் முடிவு அவர்களாக சுயமாக எடுத்த ஒன்றல்ல . இது இஸ்லாமிய அறிஞ்சர்கள் மத்தியில் இன்றுவரை கருத்து வேறுபாடு கொண்ட விடயமாகும் . 

அந்தவகையில் ஆஹாத் ஆன ஹதீஸ்களை அகீதாவை நிறுவ மற்றும் , ஈமான் பற்றிய உறுதிப்பாட்டை செய்வதற்கும் பயன்படுத்த முடியாது என்ற கருத்தை இமாம் இப்னு தைமியா மற்றும் இமாம் சாபி உட்பட பல இமாம்கள் கொண்டிருக்கிறார்கள் .இது அகீதா தொடர்பாக ,ஈமான் தொடர்பாக மயக்கமற்ற தெளிவான உறுதிப்பாட்டை வேண்டிய முடிவாகும்.
நல்லது ,சிறந்தது , மிக சிறந்தது ,அதிசிறந்தது என்ற அடிப்படையில் முடிவுகளை வலுப்படுத்த இத்தகு தரப்படுத்தல் அவசியமாகின்றது . இந்த அடிப்படையில் ஹிஸ்புத் தஹ்ரீரை வழிகேடு என தீர்ப்பளித்தால் அவர்களின் முடிவுகளின் மூலம் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள பல இமாம்களை ,முஜ்தஹித்களை வழிகேடர்களாக அறிவிக்க வேண்டியிருக்கும் . 

மேலும் சஹாபாக்கள் யார் !? எனும் விடயத்திலும் ஹதீஸ் துறை இமாம்களுக்கும் பிக்ஹ் துறை இமாம்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடு உள்ளதை மறைத்து எதோ புதிதாக ஹிஸ்புத் தஹ்ரீர் இத்தகு வரைவிலக்கணத்தை கொண்டுவந்தது போல் பேசுவது தீவிரமான இயக்க வெறியோடு கூடிய காழ்ப்புணர்ச்சி ஆகும் . தவிர வாதம் விவாதம் விதண்டா வாதம் , காப்பி அடித்து எழுதுதல் என்ற நிலைகளை கடந்து அவர்கள் பற்றிய தேடலை செய்வது சிறந்தது . மேலும் எவ்வளவு தான் தெளிவு படுத்தினாலும் குறை தேடியே பிழைப்பு நடத்தும் சிலருக்கு திருப்தி ஏற்படாது என்பது வரலாறு சொல்லும் உண்மை.

ஆட்டைக்கடித்து ,மாட்டைக் கடித்து மனிதனை கடிக்கும் இந்த சாதிகள் இப்போது தமக்குத் தாமே வழிகேட்டு பட்டம் கொடுத்து வருவதும் இவர்களின் நோயையும் பண்பையும் எடுத்துக் காட்டும் நிஜங்களாகும் .