
தற்போது, ஐரோப்பிய நாடுகளை சுற்றி புதிய "பெர்லின் மதில்கள்" எழுப்பப் பட்டு விட்டதால், அகதிகள் வருகையும் குறைந்து விட்டது. உலகத் தொலைக்காட்சிகளும் தமது கவனத்தை வேறு பக்கம் திருப்பி விட்டன. ஐரோப்பிய நாடுகளின் கனவான்கள் "தாராள மனப்பான்மையுடன்" அகதிகளை வரவேற்றதாக பிரச்சாரம் செய்து ஓய்ந்து விட்டார்கள்.
ஜெர்மனியில் புதிதாக திறக்கப் பட்ட அகதி முகாம்கள் பல எரிக்கப் பட்டன. ஒரு சம்பவத்தில் அகதி ஒருவர் பலியானார். நெதர்லாந்தில் புதிதாக அகதி முகாம்கள் அமைப்பதற்கு, சில இடங்களில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். உள்ளூராட்சி சபைகளில் அகதிகளுக்கு முகாம் அமைப்பது பற்றிய விவாதங்கள் நடந்த நேரம், உள்ளூர் மக்கள் கூட்டம் நடக்க விடாமல் தடுத்து இடையூறு செய்தார்கள். வெளிநாட்டவர்கள் பற்றிய அறியாமையால் ஏற்படும் அச்சவுணர்வை வெளிப்படுத்தினார்கள்.
மேற்படி தகவல்களை எந்தவொரு சர்வதேச ஊடகமும் கண்டுகொள்ளவில்லை. (உள்நாட்டு ஊடகங்களில் மட்டுமே தெரிவிக்கப் பட்டன.) அது மட்டுமல்ல, தஞ்சம் கோரிய அகதிகளில், மிகக் குறைந்த அளவினரை மட்டும் ஏற்றுக் கொண்டு விட்டு, எஞ்சிய அகதிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடுவார்கள். மீறி இருந்தால், விசாவைப் பறித்து விடுவார்கள். தடுப்பு முகாம்களுக்குள் வைத்திருந்து திருப்பி அனுப்புவார்கள். அந்தத் தகவல்களும் எந்த ஊடகத்திலும் வரப் போவதில்லை.
"மேற்கு ஐரோப்பியர்களுக்கு எவ்வளவோ தாராள மனசு!"

ஜெர்மனி அகதிகளை ஏற்றுக் கொள்வதில் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாக, ஜெர்மனியைப் புகழும் பல கட்டுரைகள் தமிழகப் பத்திரிகைகளில் வந்திருந்தன.
(பார்க்க:ஆண்டுக்கு 5,00,000 அகதிகளுக்கு புகலிடம்: ஜெர்மனி அறிவிப்பு
அகதிகளை நெகிழவைத்த ஜெர்மனியின் வரவேற்பு
ஜெர்மனியின் சர்வதேசியத்துக்கு வாழ்த்துகள்)
பல நண்பர்கள் அவற்றை சுட்டிக் காட்டி, உண்மை நிலவரம் என்னவென்று கேட்டிருந்தார்கள். வழக்கம் போலவே, ஊடகங்கள் தெரிவிப்பதற்கும், உண்மை நிலவரத்திற்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.
பிரிட்டனை விட ஜெர்மனி பெருமளவு அகதிகளை ஏற்றுக் கொள்கின்றது என்பது உண்மை தான். பெரும்பாலான தமிழர்கள், காலனிய அடிமைத்தனம் காரணமாக பிரிட்டனுக்கு செல்ல விரும்புவதுண்டு. பிரிட்டனின் முன்னாள் காலனி நாடுகளை சேர்ந்த அகதிகள், பிற ஐரோப்பிய நாடுகளை விட பிரிட்டனை விரும்புவார்கள்.
பிரான்சின் கலே பகுதியில், யூரோ சுரங்க ரயில் பாதைக்கு அருகில் முகாமிட்டுள்ள அகதிகள் பிரிட்டனுக்கு ஒரு தலையிடியாக இருந்தனர். சுரங்க ரயில் பாதை மூலம் நடந்து செல்ல முயன்ற சில அகதிகள் விபத்தில் சிக்கி மரணமடைந்தனர். அப்படி இருந்தும், பிரிட்டிஷ் அரசு, தனது நாட்டிற்குள் அகதிகளை வர விடாமல் தடுப்பதற்காக, பெருமளவு நிதியை பாதுகாப்புக்கு செலவிட்டது.
பிரிட்டனுக்கு செல்லும் அகதிகள் விவகாரம் பூதாகரமாக உருவெடுத்த நிலையில் தான், கிரேக்க தீவுகளில் ஆயிரக் கணக்கான சிரிய அகதிகள் வந்திறங்கினார்கள். அவர்கள் கிரீசில் இருந்து, மாசிடோனியா, செர்பியா, ஹங்கேரி வழியாக ஜெர்மனிக்கு சென்றனர்.
துருக்கி கடற்கரையில் இறந்து ஒதுங்கிய அய்லான் என்ற குழந்தையின் படம், உலக ஊடகங்களின் கவனத்தை கவர்ந்த பின்னர் தான், ஜெர்மனி எல்லைகளை திறந்து விட்டது. இதன் மூலம், ஜெர்மன் அதிபர் அங்கெலா மெர்கல், தன் மீதான நல்லெண்ணத்தை உயர்த்திக் கொண்டமை தனிக் கதை.
பிரிட்டனோடு ஒப்பிடுகையில், ஜெர்மனியில் அகதிகளுக்கான வசதி வாய்ப்புகள் அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. இத்தாலியில் கூட, அகதிகளுக்கு பாதுகாப்பும், பராமரிப்பும் கிடைப்பதில்லை. அதனால், லிபியா மூலம் இத்தாலி வந்தடைந்த ஆயிரக் கணக்கான அகதிகள், ஜெர்மனி போன்ற வட ஐரோப்பிய நாடுகளை நோக்கி இடம்பெயர்ந்தனர்.
ஜெர்மனி மட்டுமல்ல, நெதர்லாந்து, பெல்ஜியம், மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகள், அகதிகளை மனிதாபிமான அடிப்படையில் வரவேற்கின்றன. யாரையும் தெருவில் படுக்க விடுவதில்லை. படுப்பதற்கு கட்டிலும், மூன்று வேளை உணவும், கைச் செலவுக்கு பணமும் கொடுக்கின்றன.
முதலில், மேற்கு ஐரோப்பிய நாடுகள், தஞ்சம் கோருவோரை அகதிகள் என்று அழைப்பதில்லை என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் வெறும் "தஞ்சக் கோரிக்கையாளர்கள்" மட்டும் தான், அகதிகள் அல்ல! அதாவது, அவர் அகதியா இல்லையா என்பது தெரியாத நிலையில் இருக்கிறார் என்று அர்த்தம். ஒவ்வொரு அகதிக்கும் தனித்தனியாக விசாரணை நடக்கும். சிலநேரம் இரண்டு, மூன்று தடவைகள் விசாரிப்பார்கள். அகதி என்பதை நிரூபிக்குமாறு ஆதாரம் கேட்பார்கள். (அரசியல் காரணங்களினால் பாதிக்கப் பட்டவராக இருக்க வேண்டும்.)
அகதிகளுக்கான விசாரணைக் காலகட்டம் மாதக் கணக்கு அல்லது வருடக் கணக்காகலாம். விசாரணைகளின் முடிவின் பின்னர், குறைந்தது பத்து சதவீதமானோரை மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். (ஒன்றில் "உண்மையான" அகதியாக அங்கீகாரம், அல்லது வதிவிட அனுமதி) அவர்களை மட்டும் நாட்டில் தங்க அனுமதிப்பார்கள்.
எப்போதுமே, பெரும்பாலான அகதிகளின் தஞ்சக் கோரிக்கைகள் நிராகரிக்கப் படுவது வழமை. அந்த துரதிர்ஷ்டசாலிகள், தாயகம் திரும்ப வேண்டும் என்று வற்புறுத்தப் படுவார்கள். உத்தரவை மீறி தங்கி இருந்தால், சட்டவிரோதிகள் ஆக்கப் படுவார்கள். அதற்குப் பின்னர், திடீரென ஒரு நாள் பொலிஸ் வந்து விலங்கு மாட்டி நாடு கடத்தி விடும்.
இருபது வருடங்களுக்கு முன்னர், ஒரு ஐரோப்பிய நாட்டில் தஞ்ச மனு நிராகரிக்கப் பட்ட அகதி, இன்னொரு ஐரோப்பிய நாட்டில் மீண்டும் தஞ்சம் கோர முடிந்தது. ஆனால், டப்ளின் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின்னர், அது சாத்தியமில்லாமல் போனது. அது மட்டுமல்ல, ஏற்கனவே "பாதுகாப்பான" ஐரோப்பிய நாட்டில் வந்திறங்கிய அகதியை, அந்த நாடு பொறுப்பேற்க வேண்டும் என்று டப்ளின் ஒப்பந்தம் வலியுறுத்துகிறது. பல வருடங்களாக, ஜெர்மனி வந்த அகதிகளில் எத்தனையோ பேர், முதலில் வந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப் பட்டிருக்கிறார்கள். தற்போது வந்து சேர்ந்துள்ள சிரிய அகதிகளும் திருப்பி அனுப்பப் பட மாட்டார்கள் என்று சொல்ல முடியாது.
இருப்பினும், அகதிகளின் விண்ணப்பம் பரிசீலிக்கப் படும் வரையில், தற்காலிகமாக வசிப்பதற்கு ஏற்ற வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறார்கள். அகதிகள் தங்குவதற்கான தற்காலிக இருப்பிடங்கள், வசதிகளற்ற முகாம்கள் ஆகும். அவை பெரும்பாலும் நகரங்கள், கிராமங்களில் இருந்து தொலைவில் இருக்கும். சில இடங்களுக்கு பஸ் போக்குவரத்து கூட இருக்காது. அருகில் உள்ள கடைக்கு செல்வதற்கும், நான்கு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டி இருக்கலாம்.
சிலநேரம், பழைய சிறைச்சாலைகளில் கூட, அகதிகளை தங்க வைக்கிறார்கள். நகர்ப் பகுதிகளில், புதிதாக வரவிருக்கும் அகதி முகாம்களுக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது ஆங்காங்கே நடக்கிறது. ஜெர்மனியில் சில இடங்களில், அகதிகள் குடியேறுவதற்கு முன்னரே கட்டிடங்களுக்கு தீ வைத்துள்ளனர். நெதர்லாந்தில் ஒரு அகதி முகாமுக்கு அருகில், பெரிய சத்தம் போடும் நைட்ரேட் வெடிகுண்டு வீசினார்கள்.

மேலும், மேற்கு ஐரோப்பிய நாடுகள், சில தவிர்க்கவியலாத காரணங்களினால் தான், பெருமளவு அகதிகளை நாட்டுக்குள் வர விட்டனர். அதே நேரம், எல்லைகளில் சோதனைகள் தீவிரமடைந்ததன. "பயண முகவர்கள்" என அழைக்கப்படும், அகதிகளை கடத்திக் கொண்டு வருவோர், நூற்றுக்கணக்கில் கைது செய்யப் பட்டனர். அதன் மூலம், அகதிகள் வருகையை தடுக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
பெரும்பாலான அகதிகள் ஜெர்மனியை நோக்கி வந்தாலும், விரைவில் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினாலும் பங்கிடப் படவுள்ளனர். பல வருட காலமாக, ஐரோப்பிய நாடுகளை அவ்வாறு செய்வதற்கு ஜெர்மனி வற்புறுத்தி வந்துள்ளது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மட்டுமே அகதிகள் பங்கீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும், துருக்கிக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், இனிமேல் புதிதாக அகதிகள் வருவதை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. துருக்கி மூலமாக பெருமளவு அகதிகள் வந்த படியால், அந்த நாட்டுடன் சில ஒப்பந்தங்களைப் போட்டுள்ளனர். அதன் படி, துருக்கியில் உள்ள அகதி முகாம்களில் வசதிகள் அதிகரிக்கப் படும். அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் துருக்கி மொழி கற்பதற்கும், வேலை வாய்ப்பிற்கும் வழி ஏற்படுத்திக் கொடுக்கப் படும். இதற்காக மில்லியன் கணக்கான யூரோக்களை, ஐரோப்பிய ஒன்றியம் செலவிடவுள்ளது.
அதன் அர்த்தம், துருக்கி அகதிகளுக்கான பாதுகாப்பான நாடாக அறிவிக்கப் பட்டுள்ளது. இனிமேல் ஓர் அகதி துருக்கி வந்த பின்னர், பிற ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சம் கோர முடியாது. இதன் மூலம், ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவிருக்கும் அகதிகளின் நோக்கம் நிறைவேறப் போவதில்லை. அவர்கள் இனிமேல் துருக்கி போன்ற எல்லையோர நாடுகளிலேயே தங்க வைக்கப் படுவார்கள்.
No comments:
Post a Comment