Mar 23, 2016

பால் சமத்துவ போராட்டங்கள் வெறும் பித்தலாட்டமே தவிர வேறில்லை!

   
 
சில தினங்களுக்கு முன் உலகெங்கிலும் சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்பட்டதை நாம் அறிவோம். ஐக்கிய நாடுகள் சபை “சமத்துவத்திற்காக உறுதிமொழி பூணுவோம்” என்ற கருப்பொருளில் இவ்வருடத்திற்கான சர்வதேச மகளிர் தினத்தை கடந்த மார்ச் 8ம் திகதி ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில், நடைமுறை ரீதியிலான காத்திரமான  செயற்பாடுகளின் மூலமாக சமூக மட்டத்தில் பால் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை அதிகரிக்கும்படி தனது ஆதரவாளர்களை அது வேண்டி நின்றது. இந்நிகழ்வு, ஐ. நா வின் “2030 இல் 50:50 உலகம்: பால் சமத்துவத்திற்காக களமிறங்குவோம்” என்ற சர்வதேச வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகும். இந்த வேலைத்திட்டம் பிரதானமாக பால் சமத்துவத்திற்கான கொள்கைகளை தத்தமது நாடுகளில் அமூல்படுத்துவதற்கான சர்வதேச அரசுகளின் அர்ப்பணிப்பை புதுப்பித்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டது.
 
இவ்வாறு உயர்ந்த இலக்குகளும், நோக்கங்களும் கொண்டு இயங்குவதாகத் தென்படும் இந்த பால் சமத்துவ நிகழ்ச்சி நிரலின் உண்மை நிலை என்ன என்பதை நாம் உணர்ந்திருத்தல் அவசியமாகும். இந்த பால் சமத்துவம் என்ற கோரிக்கை மேற்குலக சடவாத வாழ்வொழுங்கின் அடக்குமுறையால் ஒடுக்கப்பட்ட பெண்ணினத்தை உய்விக்கும் மருந்தாக நம்பப்பட்டு, பின்னர் பெண்ணுரிமைப் போராட்டத்தின் போதைப் பொருளாக மாறிப்போன ஒரு மேற்குலக கோட்பாடு என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.  ஆண்களுக்கு நிகரான சமத்துவத்தை, சமூக வகிபாகத்தை பெண்களும் பெற்றுக்கொள்வதன் ஊடாக பெண் சமூகத்தின் கண்ணியமும், வாழ்க்கைத் தரமும் மேன்மை பெறும் என்ற போலியான ஒரு கற்பனையில் பலனற்ற போராட்டங்களில் பெண்களை பல சதாப்தங்களாக அலையவிட்ட பெருமைதான் இந்த கோட்பாட்டிற்கு இருக்கிறது.
 
ஓர் நூற்றாண்டு காலத்தைத் தாண்டுகின்ற, மேற்குலகிலும், உலகம் பூராகவும் இடம்பெறுகின்ற பால் சமத்துவத்திற்கான போராட்டங்களினால் அல்லது சர்வதேச பட்டயங்கள் பலவற்றில், பால் சமத்துவம் வலியுறுத்தப்பட்டிருப்பதினால், அல்லது மேற்கிலிருந்து கிழக்கு வரை உலகின் பல்வேறு தேசங்களில் அரசியலமைப்புக்களின் ஊடான உத்தரவாதங்கள் அதற்காக வழங்கப்பட்டிருப்பதினால், உலகில் மில்லியன் கணக்கான பெண்கள் வன்முறையாலும், துஸ்பிரயோகங்களினாலும், வறுமையாலும், கல்வியின்மையாலும், சுகாதார வசதியின்மையாலும்  கொடுங்கோல் ஆட்சியாளர்களாலும் வாடி வதங்குவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. சர்வதேச மற்றும் தேசிய சட்டங்களில் வலியுறுத்தப்பட்டுள்ள பால் சமத்துவத்தைக் கொண்டு உலகில் ஒவ்வொரு 3 பெண்களிலும் 1 பெண் வன்முறையால் பாதிக்கப்படுவதையோ அல்லது அமெரிக்காவில் மாத்திரம் ஒவ்வொரு நாளும் 3 பெண்கள் தனது துணைவரினால் அல்லது முன்னாள் துணைவரினால் கொடூரமாகக் கொல்லப்படுவதையோ அல்லது ஐரோப்பாவில் ஒவ்வொரு 10 பெண்களில் 1 பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதையோ கட்டுப்படுத்த முடியவில்லை.
 
மேற்குலக காலணித்துவ யுத்தங்களினால் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பல இலட்சம் முஸ்லிம் பெண்கள் காவு கொள்ளப்பட்ட வேளையில் அல்லது சிரியாவில் இலட்சக்கணக்கான சகோதரிகள் கொடுங்கோலன் பஷாரால்  பலியாக்கப்பட்டு வரும் வேளையில் இந்த பால் சமத்துவ ஏற்பாடுகளினால் பலன் ஏதும் கிட்டவில்லை. மேலும் இந்த முரண்பாடுகளினால் அகதிகளாக்கப்பட்ட மில்லியன் கணக்கான பெண்களுக்கு அடைக்களத்தை அவை வழங்கவில்லை.  அவற்றால் மத்திய ஆப்பிரிக்க பெண்களையோ, மியன்மார் பெண்களையோ மனிதப்படுகொலையிலிருந்து காக்க முடியவில்லை. அல்லது அவர்கள் இந்த நரவெறியாட்டத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியில் நடுக்கடலில் மூழ்கி தத்தளித்தபோது உதவிக்கரத்தை அவை நீட்டவில்லை. கத்தியால் குத்த வருகிறார்கள் என்று சாட்டுச் சொல்லி, பலஸ்தீன யுவதிகளை காவலரண்களில் அருகே வைத்து யூத சியோனிச சிப்பாய்கள் ஒவ்வொருவராய் சுட்டு வீழ்த்தியபோது கவசமாக அவை முன்வந்து நிற்கவில்லை. மத்திய ஆசியா கொடுங்கோல் அரசுகளும்;, சீனாவின் கம்யூனிச அரசும் முஸ்லிம் பெண்களின் இஸ்லாமிய ஆடைகளை களைந்து, அவர்களை பலவந்தமாக கருத்தடை செய்து அல்லது கருக்களைப்பு செய்து வரும்போது அவர்களை மீட்டெடுக்க இவற்றால் முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் உலகெங்கும் உணவு, குடிநீர், சுகாதார வசதி, வைத்திய வசதி மற்றும் கல்வி வாய்ப்பின்றி தவிக்கும் சுமார் 700 மில்லியன் பெண்களுக்கும், பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலையிலுள்ள சுமார் 85 மில்லியன் சிறுமிகளின் வாழ்வுக்கு ஒளிர்வூட்டவும் இந்த பால் சமத்துவ வியூகங்களால் முடியவில்லை.
 
எனவே பால் சமத்துவத்திற்கான போராட்டங்களினாலோ, வேலைத்திட்டங்களினாலோ அவலங்களுக்கு உள்ளாக்கப்படும் சாதாரணப் பெண்களின் வாழ்வில் எத்தகைய மாற்றங்களும் ஏற்படவில்லை என்பதே உண்மையாகும். இதற்கு பிரதான காரணம் உண்மையில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான முக்கிய காரணமாக பால் சமத்துவமின்மை என்ற பிழையான எடுகோளின் அடிப்படையில் அப்பிரச்சனைகள் அணுகப்படுவதாகும். ஆணுக்கு நிகர் பெண் என்ற வாதம் யதார்த்தத்திற்கு முரணானதும், அவரவருக்குரிய சரியான வகிபாகத்தை வழங்க மறுப்பதுமாகும். உண்மையில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான அடிப்படைக் காரணம் இன்று உலகில் நடைமுறையிலுள்ள முதலாளித்துவ, தாராண்மைவாத, தேசியவாத கோட்பாடுகளும், அவற்றின் மீது கட்டமைக்கப்பட்ட மனிதன் வகுத்த அரசுகளும், வாழ்வொழுங்குகளுமாகும் என்பதை பால் சமந்துவ போராளிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
 
தாராண்மைவாத சுதந்திரத்தின் பெயரால் பெண்களை இலாப நோக்கத்திற்காக மோகப்பொருளாகவும், காம களியாட்ட கருவியாகவும் பயன்படுத்தும் முதலாளித்துவ அரசுகள் எவ்வாறு பெண்களின் கண்ணியம் காக்கப்போகிறது? ஏழையை விட செல்வந்தனை கட்டி அரவணைத்துப் பாதுகாக்கும் முதலாளித்துவ முறைமையின் கீழ் எவ்வாறு பெண்களின் பொருளாதார உரிமைகள் வழங்கப்படப்போகிறது? பயங்கரவாதம் என்ற முகத்திரையை பயன்படுத்தி எத்தகைய அரசியல் மாற்றுக் கருத்துக்களையும் அடக்கியாளும் சர்வாதிகார அரசுகளின் கீழ் வாழ்ந்து வரும் பெண்களுக்கு பால் சமத்துவப்போராட்டங்கள் எவ்வாறு அரசியல் வலுவூட்டல் செய்யப்போகிறது?
 
எனவே உண்மையில் முஸ்லிம் நாடுகளிலுள்ள பெண்களின் வாழ்வு மேன்பட வேண்டுமானால் அதற்கு ஒரு பொறிமுறையுள்ள அடிப்படை மாற்றம் அவசியமாகும். அதற்கு தனது பெண்களின் கண்ணியம் காப்பதை தனது முழு முதற்கடமையாகக் கொள்ளக்கூடிய கிலாஃபா ராஸிதா நபி(ஸல்) வழிமுறையில் முஸ்லிம் உலகில் நிலைநாட்டப்பட வேண்டும். இந்த கிலாஃபா முறைமை பெண்களில் உரிமைகளை தூய்மையாகக் காத்த, அதன் கீழ் வாழ்ந்த ஒவ்வொரு குடிமகனினதும் வாழ்வாதாரத்தை தனது நீதியான பொருளாதார ஒழுங்கினூடாக உறுதிப்படுத்திய புகழ்பெற்ற வரலாறைக் கொண்டது. எனவே யார் யாரெல்லாம் பெண்களின் நல்வாழ்வை இலக்காகக் கொண்டு இயங்குகிறார்களோ, பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு ஒரு முடிவு கிட்ட வேண்டும் என்று உண்மையாகவே விருப்புகிறார்களோ அவர்கள் அனைவரும் மீண்டும் இப்புவியில் கிலாஃபா ராஷிதாவை நிலைநாட்டுவதற்கு ஒத்துழைப்பதே ஒரே வழியாகும். மாறாக பால் சமந்துவம் என்ற இந்த பித்தலாட்டத்தில் தமது காலத்தை கழிப்பது இறுதியில் பெருத்த ஏமாற்றத்தையே தரும் என்பதே நிதர்சனமாகும்

No comments:

Post a Comment