பிரஸல்ஸ் குண்டு வெடிப்புக்கள் எம்மை எத்திசையில் செலுத்த வேண்டும்?


மார்ச் 22ஆம் திகதி 2016 பெல்ஜியத் தலைநகர் குண்டு வெடிப்புக்களால் அதிர்ந்தது. தாக்குதல்கள் 31 பேர்களின் உயிர்களைக் குடித்தது. அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்படுவதை அது முஸ்லிமாக இருந்தாலும், இல்லாது விட்டாலும் இஸ்லாம் முற்றாகத் தடை செய்கிறது. இன்று உலகின் பிரபல அரசியல்வாதிகளும், ஊடகங்களும் அங்காராவிலும், இஸ்தான்புல்லிலும் குண்டுவெடிப்புக்களில் இறந்த உயிர்கள் பற்றி அலட்டிக்கொள்ளாதது போல அல்லது பஷார் அல் அஸதினால் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் உயிர்கள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதை கண்டும் காணாது இருப்பது போல இஸ்லாம் இதனைப் பாரபட்சத்துடன் நோக்குவதில்லை. மாறாக பல்வேறு பின்னணிகளைக் கொண்ட அரசியல்வாதிகளும், மேற்குலக ஊடகங்களும் அப்பாவி மக்களின் கொலைகளை பயன்படுத்தி தமது ஈனத்தனமான அரசியல் ஓட்டங்களை எடுப்பதற்காக முயற்சிப்பதை நாம் வழமைபோலவே பிரசல்ஸ் தாக்குதல் சம்பவத்திலும் காண்கிறோம்.

தமது நாட்டுக்குள் அகதிகளை ஏற்றுக்கொள்வது, முஸ்லிம்கள் தமது நாட்டில் நிலைகொண்டு வாழ்வது போன்ற விடயங்களில் அவர்களிடம் காணப்படும் குரோதமான மனோநிலையை இத்தகைய சம்பங்களின்போது அவர்கள் எடுக்கின்ற நிலைப்பாடுகள் தோலுரித்துக் காட்டுகின்றன. அவர்கள் முஸ்லிம்கள் எங்கே, யாருடன் தமது விசுவாசத்தை வைத்திருக்கிறார்கள் என்ற கேள்விக்கணைகளைத் தொடுத்து தமது சமூகத்திற்கு மத்தியில் பீதியான ஒரு மனோநிலையை தோற்றுவிக்க முயன்று வருவதும் தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. இவ்வாறு பீதியை அதிகரிப்பதன் ஊடாக சாதாரண பொதுமக்களை தீவிரப்படுத்தி அவர்களுக்கு மத்தியில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்புகின்ற முனைப்பிலா இவர்கள் இருக்கிறார்கள் என்ற நியாயமான கேள்வியும் இங்கே எழுகின்றது.

ஏறத்தாழ அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தீவிரவாதத் தாக்குதல்கள் எங்கும் நடக்கலாம் என்ற புரளியைக் கிளப்பி விடுவதிலும், மக்களை தொடர்ந்தும் அச்சத்தில் வைத்துக் கொள்வதிலும் அக்கறை காட்டுவதை நாம் காண்கிறோம். குறிப்பாக இஸ்லாத்திற்கு எதிரான உலகளாவிய போரின் முக்கிய பங்காளியான பிரித்தானியா இதனை முன்னின்று செய்கிறது. ஐக்கிய இராஜ்ஜியத்தின் முன்னாள் உள்துறைச் செயலாளர் ஜோன் ரீட் “ தீவிரவாதிகள் பிரித்தானியாவின் பாதுகாப்பு வேலிகளை கடந்து பிரஸல்ஸில் நடந்த தாக்குதல்களைப்போல இங்கேயும் தாக்குதல்கள் நடாத்துவார்கள்” என பொறுப்பற்ற முறையில் சில தினங்களுக்கு முன் பிபிசிக்கு தெரிவித்த கருத்தும், அடுத்த தாக்குதல் பிரித்தானியாவில்தான் என மக்கள் மத்தியில் பீதியைக் கிளறிவிடும் ஏனைய பிரித்தானிய அரசியல்வாதிகளின் கருத்துக்களும் இதற்கு நல்ல உதாரணங்களாகும்.

இத்தகைய பொறுப்பற்ற போலிப்பிரச்சாரங்கள் உள்நாட்டுக்குள் தமது வங்குரோத்து அரசியல் நடாத்துவதற்கும், இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதி;ராக சர்வதேச மட்டத்தில் மேற்குலகு ஏற்படுத்தி வந்த எதிர்மறையான தோற்றப்பாட்டை மென்மேலும் வலுப்படுத்தி முஸ்லிம் உலகில் தாங்கள் வீசும் குண்டுகளுக்கும், தமது தலையீடுகளுக்கும் நியாயாதிக்கத்தை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

முஸ்லிம்களின் நம்பிக்கைகள், விழுமியங்கள், அடையாளங்களை குறிவைத்து சிதைக்கும் நோக்கில் மேற்குலக நாடுகள் பலவற்றில் அமூல்படுத்திவரும் அல்லது அமூல்படுத்த எத்தணிக்கும் அரசாங்க நிகழ்ச்சி நிரல்களுக்கு இந்த தீவிரவாத தாக்குதல்களை நல்ல சாட்டாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இஸ்லாத்தின் அதி முக்கிய அம்சங்களில் கூட சமரசம் செய்யும்படி நிர்ப்பந்திக்கின்ற இவர்கள் எந்தளவு தூரத்திற்கு நீஙகள் இஸ்லாத்தை பின்பற்ற ஆரம்பிக்கிறீர்களோ அந்தளவு தூரத்திற்கு எமது சமூகத்திற்கு ஒரு அபாய சமிஞ்ஞையாக மாறி வருகிறீர்கள் என்ற உளவியல் அழுத்தத்தை சாதாரண முஸ்லிம்கள் மத்தியில் அநுதினமும் ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்த அரசியல் திருகுதாளங்கள் அனைத்தும் இத்தகைய தீவிரவாத தாக்குதல்கள் அனைத்துக்கும் அடிப்படைக் காரணமான மேற்குலகின் அயோக்கியத்தனமான வெளிவிவகாரக் கொள்கை பற்றிய நேர்மையான விமர்சனத்தையும், வாதங்களையும், குறிப்பாக கடந்த தசாப்பத்தில் மத்திய கிழக்கிலும், முஸ்லிம் உலகிலும் அவர்கள் ஏற்படுத்திய படு பயங்கரமான சூழல் பற்றிய கருத்தாடல்களையும் திசை திருப்புவதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சிகளாகும்.

உலகில் கவனத்தை அவர்கள் எவ்வளவு தான் திருப்பினாலும், எம்மீது பௌதீக மற்றும் உளவியல் அழுத்தங்களை எவ்வளவுதான் திணித்தாலும் முஸ்லிம்கள் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். அதுதான் நாம் எமது அடையாளத்தையும், தீனுல் இஸ்லாத்தையும் சமரசம் செய்யாது வாழ்கின்ற அதேநேரம் எமது தீனையும், எமது உம்மத்தையும் உண்மையில் பாதுகாக்கக் கூடிய கிலாஃபா ராஷிதாவை உலகில் மீண்டும் தோற்றுவிக்க கடுமையாக முயற்சிக்க வேண்டும் என்பதை நாம் தெளிவாக உணர வேண்டும். அவ்வாறு நபிவழியில் தோன்றக்கூடிய கிலாஃபாவால் மாத்திரம்தான் முஸ்லிம் உலகிலும், உலகின் ஏனைய பகுதிகளிலும் அமைதியையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும். வரலாறு இந்த உண்மைக்கு சான்று பகர்வதை யாரும் மறுக்க முடியாது.

ஸஹாப்பாக்களின் காலத்திலிருந்து 90 வருடங்களுக்கு முன் உத்மானிய கிலாஃபா நிர்மூலமாக்கப்படும் வரை மத்திய கிழக்கும், அரபுலகமும் பொதுவாக அமைதியான சூழலிலேயே இருந்தது. மேற்குலகுடன் அதற்கு இருந்த உறவு அரசுகளுக்கிடையிலான உறவு என்ற அளவில் இருந்ததேயொழிய அந்நிய தலையீடுகளின் ஊடாகவோ, காலணித்துவத்தின் ஊடாகவே, வேவு வேலைகளின் ஊடாகவோ இருக்கவில்லை. எப்போது மேற்குலக காலணித்துவம் எமது நாடுகளில் தடம்பதித்ததோ அன்றிலிருந்து இன்று வரை எமது தேசங்கள் ஸ்திரமற்ற நிலையிலும், பிளவுபட்ட நிலையிலுமே இருக்கின்றன. நிரந்தரமான மேற்குலகத் தலையீடுகள், முகவர்களின் ஆட்சிகள், அவர்களின் கூலிப்படைகளின் அடக்குமுறைகள் என எமது மக்களின் தலையெழுத்து அழிவாகவும், அவலமாகவும் மாறிவிட்டது. எமது நிலங்களின் பொதுவாழ்வில் இஸ்லாத்தின் வகிபாகம் முற்றாக மறுக்கப்பட்ட ஒரு சூழலில் முஸ்லிம் உலகிலும் சரி, உலகின் ஏனைய பிராந்தியங்களிலும் சரி மனித குலத்திற்கு அமைதியான நல்வாழ்வு எட்டாக்கனியாக மாறிவிட்டது. மேற்குலக சித்தாந்தம் மிகக்குறுகிய காலத்திலேயே உலகை தலைமை தாங்குவதற்குரிய தனது அறிவார்ந்த தகுதியை இழந்து விட்ட நிலையில் பலப்பிரயோகம் மாத்திரமே அதற்கு இருக்கின்ற இறுதி ஆயுதம். நேரடி யுத்தங்களையும், வன்முறைகளும் பாவித்து தமது ஆதிக்கத்தை நிறுவ வேண்டிய நிர்ப்பந்தத்தில் அவர்கள் இருக்கின்றார்கள். விளைவு, தீவிரவாதத்தையும், வன்முறைகளையும் தமது நாடுகளுக்குள்ளும் அவர்கள வரவழைத்துக் கொள்கிறார்கள். அவ்வாறு வரவழைக்கப்பட்டவைகள் தான் 9/11, 7/7, தொடக்கம் பிரஸல்ஸ் தாக்குதல்கள் வரைக்கும்.

எனவே முஸ்லிம்கள் அவர்களின் பலகீனத்தையும், அவர்களின் தோல்வி மனப்பான்மையின் பிரதிபலிப்புக்களையும் நன்கு உணர வேண்டும். அவர்கள் தமது தீய அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக எங்கள் மீது பிரயோகிக்கின்ற அழுத்தங்களைக் கண்டு அஞ்சி நாம் அடிபணிந்து விடக்கூடாது. மாறாக இஸ்லாமிய சித்தாந்தத்தின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் அதன் அறிவாhந்த பலத்தின் மீது நம்பிக்கை வைத்து இந்த அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டும். நெருக்கடிகள் அதிகரிக்க அதிகரிக்க இஸ்லாத்தை பின்பற்றுவதிலும், அதனை உயர்த்திப் பிடிப்பதிலும் நாம் முன்னிற்க வேண்டும். எமது அசைக்க முடியாக நம்பிக்கையும், அதன் அடிப்படையில் எழும் உத்வேகமும் பிற சமூகங்களைக்கூட இஸ்லாத்திற்குள் உள்ளிழுக்கக்கூடிய வழிகளைத் திறந்து விடவேண்டும். உலகை உய்விக்க இருக்கின்ற ஒரேயொரு அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாம் மாத்திரம்தான் என்ற நம்பிக்கையை அது எல்லோரிலும் ஏற்படுத்த வேண்டும்.

மேலும் எது இந்த உலகில் வந்து விடக்கூடாது என்று அனைத்து சக்திகளும் முயற்சிக்கின்றனவோ அந்த ஒளி முஸ்லிம் உலகில் நேர்வழிபெற்ற கிலாஃபத்தின் வடிவில் பிரகாசிக்கும் வரையில் இன்றைய வன்முறைச் சூழலை மாற்ற முடியாது. இன்றைய உலக அவலங்களை நீக்க முடியாது. எனினும் வாக்களிக்கப்பட்ட அல்லாஹ்(சுபு) இன் ஒளியின் பிரவாகத்தை யாரால்தான் தடுத்து நிறுத்த முடியும்!

அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான். (61:08)