Jun 14, 2016

சீனாவில் இஸ்லாம் அறிமுகம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் மதீனாவில் இஸ்லாமிய அரசு அமைக்கப்பட்ட பிறகு உலகின் எல்லா பாகங்களிலும் ஆட்சி செய்த அரசர்களுக்கு இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்து கடிதம் எழுதினார்கள். அதன்படி அன்று சீனாவை ஆட்சி செய்த "டாங்" பேரரசிற்கும் கடிதம் எழுதினார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவிற்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து மூன்றாம் கலீஃபா ஹஜ்ரத் உதுமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் அதாவது கி.பி. 650ல் இஸ்லாமிய அரசின் அதிகாரப்பூர்வ குழு சீனாவிற்கு அனுப்பப்பட்டது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மாமா ஹஜ்ரத் ஸஃதுபின் அபிவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தலைமையில் சென்ற அந்தக் குழு சீனாவின் டாங் பேரரசர் குவாஸாங் அவர்களை சந்தித்து ஒரிறை கொள்கையை ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்கள்.

இஸ்லாமிய அரசின் அதிகாரப்பூர்வ குழுவிற்கு உரிய மரியாதையையும் கண்ணியத்தையும் கொடுத்து வரவேற்ற குவாஸாங், முஸ்லிம்கள் விரும்பியவாறு சீனாவில் ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கு இடமளித்து உதவி செய்தார்.

ஹஜ்ரத் ஸஃது பின் அபிவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மேற்பார்வையில் கட்டப்பட்ட அந்தப் பள்ளிவாசல் இன்றும் கேண்டன் நகரில் மெமோரியல் மஸ்ஜித் என்று அழைக்கப்பட்டு மிகக் கம்பீரமாக காட்சியளிக்கிறது.ஹஜ்ரத் ஸஃது பின் அபி வக்காஸ் அவர்களது அதிகாரப்பூர்வ வருகைக்கு முன்பாகவே அரபு வணிகர்கள் மூலம் இஸ்லாம் சீனாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாறு முழுவதும் சில்க்ரோடு வணிகத்தோடும் அரபு மக்கள் வந்து சேரும் இடமாகவும் இந்த சிங்ஜியாங் மாகாணம் விளங்கியது. உலகின் பல்வேறு பகுதிகளின் மக்களும் வியாபார நிமித்தமாக குடியேறியதால் பலவிதமான கலப்பு இனங்கள் சிங்ஜியாங் மாகாணத்தில் உருவானது.

1949 வரை சுயாட்சி பெற்ற தனிநாடாக சோவியத் யூனியனின் ஆதரவோடு கிழக்கு துருக்கிஸ்தான் என்ற பெயரில் விளங்கி வந்தது. இன்றைய சிங்ஜியாங் மாகாணம் முழுவதும் கிழக்கு துருக்கிஸ்தானாக இருந்தது.
 
1949ல் ஏற்பட்ட உள்நாட்டுப் போர் மூலம் சிங்ஜியாங் பகுதியை தன்னோடு இணைத்துக் கொண்டது சீன குடியரசு. இந்த இணைப்பை ஏற்காத சிங்ஜியாங் மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். சீன குடியரசின் ஆக்கிரமிப்பை எதிர்த்து அன்றிலிருந்து இன்று வரை கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் என்ற அமைப்பு அந்த மக்களின் விடுதலைக்காக போராடி வருகிறது. இந்த அமைப்பின் தலைவர்கள் இப்போது தஜக்கிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் வசித்து வருகின்றனர்

2009 இல் இடம்பெற்ற மோதல்

சீனாவின் வடமேற்கு எல்லைப் புறமாகாணமாக சிங்ஜியாங்க் உள்ளது. இதன் தலைநகரான உரும்கியில் கடந்த 2009 ஜூலை மாதம் 5 ஆம் தேதியன்று இரண்டு இனங்கள் கொடூரமான ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் 184 பேர் கொல்லப்பட்டனர். பல நூறு பேர் படுகாயமடைந்தனர்.

மோதலுக்கான காரணம்:

1949 வரை கிழக்கு துர்கிஸ்தானாக இருந்த சிங்ஜியாங் பகுதியில் 95 விழுக்காடு மக்கள் முஸ்லிம்கள். உய்குர், கிர்கிஸ், உஸ்பெக், டாடார், ஸாலா போன்ற துருக்கிக் மொழி பேசும் முஸ்லிம் இனங்களும், டங்ஸயாங், பாவோன் என்ற மங்கோலிய இன முஸ்லிம்களும் தாஜித் என்ற ஈரானிய இன முஸ்லிம்களும் சைனிஸ் ஹாய் இன முஸ்லிம்களுமாக 95 விழுக்காடு முஸ்லிம்கள் தான் இந்த மாகாணத்தில் வாழ்ந்தனர். 4 சதவீத ஹான் இன மக்களும் வாழ்ந்து வந்தனர். இதில் உய்குர் இன முஸ்லிம்கள் தான்பெரும்பான்மையினர். 1949 வரை இந்த நிலைதான் இருந்தது.
சிங்ஜியாங் முஸ்லிம்கள் அந்த மண்ணின் மைந்தர்கள். அவர்கள் கைவினை கலைஞர்கள். கைவினை பொருட்கள் செய்வதில் வல்லுனர்கள். சிங்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம் பெரும்பான்மையை குறைக்க வேண்டும் என்ற சதிதிட்டத்தின் காரணமாக முஸ்லிமல்லாத ஹான் இன மக்களை சிங்ஜியாங் பகுதியில் குடியமர்த்த திட்டமிட்டது சீன அரசு.

சிங்ஜியாங் மாகாணத்தில் இயற்கை வளங்கள் அபரிமிதமாக உள்ளன. இன்றைய தேதியில் சீனாவின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் 40 விழுக்காடு சிங்ஜியாங்கில் தான் கிடைக்கிறது. எண்ணெய் வளமும் எரிவாயு வளமும் சீனாவின் 60 விழுக்காடு தேவையை பூர்த்தி செய்கிறது. இன்னும் பருத்தி, கால்நடை வளர்ப்பு, காற்றாலை, கம்பளி, வேளாண்மை என்று சீன பொருளாதாரத்தின் முதுகெலும்பாக சிங்ஜியாங் மாகாணம் திகழ்கிறது. இப்படிப்பட்ட மண்ணிற்கு சொந்தமான மக்களின் பெரும்பான்மை எண்ணிக்கையை குறைத்தால் தான் அங்கே உள்ள வளங்களை சுரண்ட முடியும் என்ற காரணத்தால் புதிதாக தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்றவற்றில் முஸ்லிம்களைப் புறக்கணித்து ஹான் இன மக்களை நியமித்தது.

உய்குர் முஸ்லிம்களிடம் உள்ள கைவினை பொருட்கள் தயாரிக்கும் திறனை பயன்படுத்தி விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை உய்குர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சிங்ஜியாங் பகுதியில் தொடங்காமல் மத்திய சீனாவில் உள்ள ஒரு மாகாணத்தில் விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை உருவாக்கினர். பிறகு இந்த மக்களை சிங்ஜியாங் மாகாணத்திலிருந்து மத்திய சீனாவிற்கு வேலை தேடி புலம் பெயர செய்தனர். தங்களது மண்ணின் வளங்களை சுரண்டத்தான் இந்த புலம்பெயர்தல் என்ற சூழ்ச்சியை அறியாத உய்குர் முஸ்லிம்கள் லட்சக்கணக்கில் வேலை தேடி புலம்பெயர்ந்தனர்.

பல்வேறு பகுதியில் இருந்து புலம் பெயர்ந்து வந்த ஹான் இன மக்களை வைத்து சிங்ஜியாங் பகுதியின் வளங்கள் அனைத்தையும் சீன அரசு உறிஞ்சி வருகிறது. 1947ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 95 விழுக்காடாக இருந்த முஸ்லிம்கள் 2004 கணக்கெடுப்புபடி 45 விழுக்காடாகவும் ஹான் இனத்தவர் 45 விழுக்காடாகவும் மாறிப்போயினர்.

வேலைதேடி சீனாவின் மத்திய மாகாணத்திற்கு குடிபெயர்ந்த முஸ்லிம்கள் உலகளவில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலின் காரணமாக சீன விளையாட்டுப் பொருட்களை அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தடை செய்ததின் விளைவாக அவர்கள் பணியாற்றிய ஏறக்குறைய ஒரு லட்சம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

அதிர்ச்சியுற்ற முஸ்லிம்கள் தங்களது சொந்த மண்ணிற்கு வந்த போது தான் சிங்ஜியாங் மாகாணத்தில் எல்லா முக்கிய பொறுப்புகளிலும் ஹான் இனத்தவர் அமர்ந்திருப்பது தெரிந்தது. ஒரு பக்கம் வேலை வாய்ப்பற்று வறுமையில் மண்ணின் மைந்தர்கள் வாட, மறுபக்கம் அவர்களின் வளங்களை எல்லாம் ஹான் இனத்தவர் சுரண்ட, இரு சமூகத்தாருக்கும் சம வாய்ப்பளிக்க வேண்டிய சீன கம்யூனிஸ்டு அரசு ஹான் இனத்தவர் பக்கம் ஒரு தலைபட்சமாக நடக்க, மோதல் முற்றி கலவரமாகி உயிர்பலி ஏற்பட்டுள்ளது.

1949ல் சிங்ஜியாங் பகுதியைக் கைப்பற்றியதிலிருந்து சீன கம்யூனிஸ்ட் அரசு முஸ்லிம்கள் மீது மத ரீதியான தாக்குதலையும் தொடுத்து வருகிறது. முஸ்லிம் ஆண்கள் தாடி வைக்கக் கூடாது, பெண்கள் புர்கா அணியக் கூடாது 18 வயது நிரம்பியவர்கள் தான் பள்ளி வாசலுக்கு செல்லவேண்டும், அரசு அச்சடித்து தரும் குர் ஆனைத்தான் முஸ்லீம்கள் ஓத வேண்டும் என்ற முஸ்லிம்கள் தங்கள் உயிரே போனாலும் ஏற்றுக் கொள்ள இயலாத இத்தகையை ஒடுக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது சீன அரசு. ஆனால் இந்த செய்திகள் எல்லாம் அவ்வளவு எளிதாக வெளியே வருவதில்லை.

பாலஸ்தீனத்தில் அரபு மக்களின் நிலப்பரப்பை ஆக்கிரமித்து யூதர்களை இஸ்ரேல் அரசு குடியமர்த்துவது போல ஈழத்தில் தமிழ் மக்களையெல்லாம் அகதி முகாமில் அடைத்துவிட்டு தமிழர்களுக்கு சொந்தமான பகுதிகளில் சிங்களர்களை இலங்கை அரசு குடியமர்த்துவது போலத்தான் சீன அரசு மண்ணின் மைந்தர்களைப் புலம் பெயர செய்து பிற மக்களை குடியமர்த்தி வளங்களை தேசியம் என்ற பெயரால் சுரண்டி வருகிறது. போதாக் குறைக்கு உய்குர் மக்களின் மொழியான துருக்கிக் என்ற அரபி வரி வடிவம் கொண்ட மொழியையும் சிதைத்து அவர்களது கலாச்சாரத்தையும் சிதைத்து வருகிறது. தொடர்ந்து சீன அரசிற்கு எதிராக புரட்சிகள் சிங்ஜியாங் பகுதியில் நடைபெற்று வருகின்றன. இன்ஷா அல்லாஹ் அது ஒரு நாள் நிச்சயம் வென்றே தீரும்!.

கட்டுரையாசிரியர்: C.M.N.ஸலீம்,

No comments:

Post a Comment