நியூயோர்க் டைம்ஸ் மே 15 அன்று தனது முகப்புப் பக்கத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் பராக் ஒபாமாவின் ஜனாதிபதி பதவிக்காலத்தில் ஒரு முக்கியமான மைல்கல் எட்டப்பட்டிருப்பது பற்றி கவனத்தை ஈர்க்கிறது: “புஷ் அல்லது வேறு எந்த அமெரிக்க ஜனாதிபதியை விடவும் அதிகமான காலம் அவர் போரில் ஈடுபட்டிருந்திருக்கிறார்.” ஒபாமா தனக்கு முன்பிருந்தவரது சாதனையை மே 6 அன்று விஞ்சியிருந்தார். 


ஆயினும் இன்னும் எட்டு மாத காலம் வெள்ளை மாளிகையில் அவர் இருப்பார் என்பதால், இன்னுமொரு சாதனையையும் அவர் எட்டவிருக்கிறார். டைம்ஸ் எழுதியது: “ஒபாமாவின் பதவிக் காலம் முடிகின்ற வரையிலும் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா தொடர்ந்து போரில் ஈடுபட்டிருக்குமாயின் - சிரியாவுக்கு 250 கூடுதல் சிறப்பு நடவடிக்கை துருப்புகளை அனுப்பவிருப்பதாக ஜனாதிபதி சமீபத்தில் அறிவித்திருப்பதை கொண்டு பார்த்தால் இது ஏறக்குறைய நிச்சயமான ஒன்று தான் - அமெரிக்க வரலாற்றிலேயே இரண்டு முழுப் பதவிக் காலமும் தேசத்தை போரில் ஈடுபடுத்தி வைத்திருந்த ஒரே ஜனாதிபதி என்ற ஒரு அபூர்வமான மரபை அவர் ஏற்படுத்தி விட்டுச் செல்வார்.”


தனது சாதனைப் பயணத்தின் பாதையில், திரு.ஒபாமா, ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, லிபியா, பாகிஸ்தான், சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய மொத்தம் ஏழு நாடுகளில் ஆபத்துமிக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வை செய்திருக்கிறார். இந்தப் பட்டியல் துரிதமாய் விரிந்து கொண்டிருக்கிறது, ஏனென்றால் அமெரிக்கா, ஆபிரிக்காவில் தனது இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது. போகோ ஹராம் கிளர்ச்சியை ஒடுக்கும் முயற்சிகள் நைஜீரியா, கேமரூன், நைஜர் மற்றும் சாத் ஆகிய நாடுகளில் அமெரிக்கப் படைகளை கட்டியெழுப்புவதை உள்ளடக்கியிருக்கின்றன.


இந்த டைம்ஸ் கட்டுரையை எழுதியிருக்கும் மார்க் லாண்ட்லர், ஒபாமா 2009 இல் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் என்பதை எந்த நகைமுரண் உணர்வுமின்றிக் குறிப்பிடுகிறார். மாறாக, “ஒரு போர்-எதிர்ப்பு வேட்பாளராக அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சித்தவராக” அவர் ஜனாதிபதியை சித்தரிக்கிறார்.... “வெள்ளை மாளிகையில் தனது முதலாம் ஆண்டு முதலாகவே இந்த மாற்றமுடியாத [போர் பற்றிய] யதார்த்தத்துடன் அவர் மல்லுக்கட்டி வந்திருக்கிறார்...”


”ஆப்கானிஸ்தானிற்கு 30,000 கூடுதல் துருப்புகளை அனுப்பும் உத்தரவை வழங்கும் முன்பாக ஆர்லிங்டன் தேசியக் கல்லறைகளின் நடுவே” ஒபாமா ஒரு நடை சென்று வந்தார் என லாண்ட்லர் தனது வாசகர்களுக்குக் கூறுகிறார். ”போர் சில சமயங்களில் அவசியமானதாக இருக்கிறது, சில மட்டத்தில் போர் மனித முட்டாள்தனத்தின் ஒரு வெளிப்பாடாகவும் இருக்கிறது என்ற இரண்டு ஒத்துப்போகாததாய் தோன்றுகின்ற உண்மைகளுக்கு” மனிதகுலம் இணங்கிச் செல்ல வேண்டியதாய் இருக்கிறது என்று ஒபாமா 2009 நோபல் பரிசை பெற்றுக் கொண்டபோது இயலாமையுடன் புலம்பிய உரையின் ஒரு பத்தியை லாண்ட்லர் நினைவுகூர்ந்தார்.


இதில் ஒபாமாவின் பதவிக்காலத்தில், முட்டாள்தனம் தான் மேலோங்கியிருந்தது என்பது தெளிவு. ஆயினும் லாண்ட்லரின் மாவிரர் அங்கே ஒன்றும் செய்ய இயலாதிருந்தார். தனது போர்கள் “முடிப்பதற்கு மிகவும் சிக்கல்மிகுந்தவையாக கடினமாக இருந்தன” என்பதை ஒபாமா கண்டார்.


சிறப்பு போர் நடவடிக்கையாளரான சார்லஸ் கீட்டிங் IV ISIS படைகளுடனான ஒரு துப்பாக்கிச் சண்டையில் சமீபத்தில் மரணமடைந்தார் என்ற செய்தி ஈராக்கில் அமெரிக்க படைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பது குறித்து ஒபாமா கூறுவதுடன் முரண்படுகிறது. டைம்ஸ் வார்த்தைகளை கவனமாய் தேர்ந்தெடுத்து எழுதுகிறது, கீட்டிங்கின் மரணமானது “ஈராக்கிய படைகளுக்கு ஆலோசனையளிப்பதையும் உதவி செய்வதையும் மட்டுமே அமெரிக்கர்கள் செய்து கொண்டிருந்தனர் என்ற நிர்வாகத்தின் வாதத்தை ஒருபோதுமே நம்பமுடியாததாக்கியது.” வெளிப்படையான வார்த்தைகளில் இதைச் சொல்வதென்றால், ஒபாமா அமெரிக்க மக்களிடம் பொய் கூறி வந்திருக்கிறார்.


உள்ளார்ந்த நேர்மையின்மை தவிர, ஒபாமா குறித்த டைம்ஸின் சித்தரிப்பில் உண்மையான துன்பியலுக்கு தேவையானதாக இருக்கும் அத்தியாவசியமான கூறு இல்லாதிருக்கிறது: அதாவது ஜனாதிபதியின் நடவடிக்கைகளை தீர்மானித்த, அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட புறநிலை சக்திகளை அடையாளம் கண்டு கூறுதல். அமைதியை நேசிக்கும் இந்த மனிதர், ஜனாதிபதியாக ஆனதால், ஆளில்லா விமானக் கொலைகளை தனது சிறப்புத் தன்மையாக ஆக்க நேர்ந்ததற்காகவும் ஒரு அறநெறிரீதியான சாத்தானாக மாறத் தள்ளப்பட்டதற்காகவும் தனது வாசகர்களை கண்ணீர் வடிக்கச் செய்ய லாண்ட்லர் விரும்புகிறார் என்றால், ஒபாமாவின் இந்த “துன்பகரமான” விதியை தீர்மானித்த வரலாற்று சூழ்நிலைமைகளை அடையாளம் கண்டுகொள்வதற்கு அவர் முயற்சி செய்திருக்க வேண்டும்.ஆனால் இந்த சவாலை டைம்ஸ் தவிர்த்து விடுகிறது. ஒபாமாவின் போர் புரியும் சாதனையை கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையினது ஒட்டுமொத்தப் பாதையுடனும் தொடர்புபடுத்திக் காட்டுவதற்கு அது தவறி விடுகிறது. ஒபாமா 2009 இல் பதவியில் கால் வைக்கும் முன்பாகவே, அமெரிக்கா 1990-91 முதல் அமெரிக்க-ஈராக் போர் முதலாகவே ஏறக்குறைய தொடர்ச்சியானதொரு அடிப்படையில் போரில் ஈடுபட்டு வந்திருந்தது. 1990 ஆகஸ்டில் குவைத்தை ஈராக் இணைத்துக் கொண்டது தான் முதலாம் வளைகுடாப் போருக்கான போலிசாட்டாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் குவைத் அரசருடன் ஈராக் ஜனாதிபதி சதாம் குசைனின் மோதலுக்கு அமெரிக்கா காட்டிய வன்முறையான எதிர்வினை என்பது பரந்த உலக நிலைமைகள் மற்றும் கணிப்பீடுகளினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.


சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் நிலையில் இருந்தது தான் - இறுதியில் 1991 டிசம்பரில் அது கலைக்கப்பட்டது - அமெரிக்க இராணுவ நடவடிக்கை நிகழ்ந்த வரலாற்று உள்ளடக்கமாக இருந்தது. ஜனாதிபதி முதலாவது புஷ் ஒரு “புதிய உலக ஒழுங்கின்” துவக்கத்தை அறிவித்தார். 1917 இல் நடந்த முதலாவது சோசலிசப் புரட்சியின் விளைபொருளான சோவியத் ஒன்றியம் குறிப்பாக 1945 இல் இரண்டாம் உலகப் போர் முடிந்ததன் பின்னர் அமெரிக்க இராணுவ வலிமையை பிரயோகிப்பதற்கு ஒரு தடையாக இருந்தது. மேலும், வரலாற்று அர்த்தத்தில் ரஷ்யாவின் 1917 போல்ஷிவிக் புரட்சியுடன் பிணைந்ததாய் இருந்த 1949 இல் நடந்த சீனப்புரட்சியின் வெற்றியானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாதையில் மேலும் அதிகமான முட்டுக்கட்டைகளை இட்டது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பையும், அதனுடன் சேர்த்து சீனாவில் 1989 ஜூன் மாதத்தில் தியானன்மென் சதுக்கத்தில் நடந்த படுகொலைகளை தொடர்ந்து முதலாளித்துவம் கட்டுப்பாடேதுமற்று மீட்சி செய்யப்பட்டதையும், அமெரிக்காவின் மேலாதிக்கத்தை ஸ்தாபிக்கும் நோக்குடன் உலக புவியரசியலை பாரியளவில் மாற்றியமைப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமெரிக்க ஆளும் வர்க்கம் கண்டது. அமெரிக்கா தனது மிகப்பெரும் இராணுவ வல்லமையை தாட்சண்யமில்லாமல் பயன்படுத்துவதன் மூலமாக ஒரு நீண்ட காலத்தில் வீழ்ச்சியடைந்து போயிருந்த அதன் உலகளாவிய பொருளாதார நிலையை தலைகீழாக்கி விட முடியும் என்பதான நம்பிக்கையில் உயரடுக்குகளிடம் இருந்து இந்த நடவடிக்கைக்கு மிகப்பெரும் ஆதரவு கிட்டியது.


1992 பிப்ரவரியில் பாதுகாப்புத் துறை வரைவு செய்த பாதுகாப்புக் கொள்கை வழிகாட்டல் ஆவணம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க அபிலாசைகளை சந்தேகத்திற்கிடமின்றி வலியுறுத்திக்கூறியது. ”எதிர்காலத்தில் மூலோபாய நோக்கங்களை அபிவிருத்தி செய்கின்ற மற்றும் பிராந்திய அல்லது உலக மேலாதிக்கத்தின் ஒரு தற்காப்பு நிலைப்பாட்டை உருவாக்குகின்ற நாடுகளோ அல்லது கூட்டணிகளோ உருவாக்கும் சாத்தியம் தோன்றலாம். எதிர்காலத்தில் அத்தகைய உலகளாவிய போட்டியாளர் ஒன்று தோன்றுவதை நிகழாமல் தடுப்பதன் மீது மறுகவனம் குவிப்பதே இப்போது நமது மூலோபாயமாக இருக்க வேண்டும்.”


1990கள் அமெரிக்காவின் இராணுவ வல்லமை தொடர்ச்சியாக பயன்படுத்தப்படுவதை கண்டது, மிகக் குறிப்பாய் யூகோஸ்லேவியாவின் கலைப்பில். பால்கன் அரசுகள் மீது திணிக்கப்பட்ட மூர்க்கத்தனமான மறுசீரமைப்பு சகோதரர்களுக்கு இடையிலான ஒரு உள்நாட்டுப் போரை தூண்டியதுடன். இது கொசோவோ மாகாணப் பிரிவினையை ஏற்கச் செய்ய சேர்பியாவை நிர்ப்பந்திக்கிற அமெரிக்க தலைமையிலான 1999 ஆம் ஆண்டு குண்டுவீச்சுப் பிரச்சாரமாக உச்சம் பெற்றது. அந்த தசாப்தத்தில் நடந்த மற்ற முக்கிய இராணுவ நடவடிக்கைகளில் சோமாலியாவிலான தலையீடு (அது ஒரு பேரழிவில் முடிந்தது), ஹைட்டி மீதான இராணுவ ஆக்கிரமிப்பு, சூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான குண்டுவீச்சு, மற்றும் ஈராக் மீதான தொடர்ச்சியான குண்டுவீச்சு காலகட்டங்களும் அடங்கும்.


செப்டம்பர் 11, 2001 சம்பவங்கள் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற ஒரு பிரச்சார சுலோகத்தை தொடக்க சந்தர்ப்பத்தை வழங்கியது. இந்த சுலோகம் மத்தியகிழக்கிலும், மத்திய ஆசியாவிலும் மற்றும் அடிக்கடி ஆபிரிக்காவிலும் இராணுவ நடவடிக்கைகளுக்குமான சகல-நோக்க நியாயப்படுத்தலை வழங்கியது. 2002 இல் அமெரிக்கா ஏற்றுக் கொண்ட “முன்கூட்டித்தாக்கும் யுத்தம்” என்ற புதிய கோட்பாட்டை அடியொற்றி அமெரிக்காவின் இராணுவ மூலோபாயம் திருத்தப்பட்டது. நிலவும் சர்வதேச சட்டத்தை மீறிய இந்த கோட்பாடு, அமெரிக்க நலன்களுக்கு அச்சுறுத்தலின் - இராணுவரீதியான அச்சுறுத்தல் மட்டுமல்ல, பொருளாதாரரீதியானதாக இருந்தாலும் கூட - ஒரு சாத்தியத்தை வழங்கக் கூடும் என்று அனுமானிக்கப்படுகின்ற உலகின் எந்த ஒரு நாட்டின் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று தீர்ப்பளித்தது.


ஜனாதிபதி இரண்டாம் புஷ்ஷின் நிர்வாகம் 2001 இலையுதிர் காலத்தில் ஆப்கானிஸ்தான் படையெடுப்புக்கு உத்தரவிட்டது. 9/11 ஐத் தொடர்ந்த உரைகளில் புஷ் “21 ஆம் நூற்றாண்டின் போர்கள்” என்ற சொல்லாடலைப் பயன்படுத்தினார். இந்த விடயத்தில் அவர் துல்லியமாகவே கூறினார்.


“பயங்கரவாதத்தின் மீதான போர்” ஆனது ஆரம்பத்தில் இருந்தே உலகெங்கும் முடிவில்லாத இராணுவ நடவடிக்கைகளின் வரிசையாகவே சிந்திக்கப்பட்டது. ஒரு போர் அத்தியாவசியமாகவும் தவிர்க்கவியலாமலும் அடுத்த போருக்கு இட்டுச் செல்வதாய் இருந்தது. ஆப்கானிஸ்தான் போர் ஈராக் படையெடுப்புக்கான ஒத்திகையாக நிரூபணமானது. இராணுவ நடவடிக்கைகளுக்கான தொடுஎல்லை விரிந்துகொண்டே போனது. 


புதிய போர்கள் தொடங்கப்பட்டன, பழைய போர்கள் தொடரப்பட்டன. சிடுமூஞ்சித்தனத்துடன் மனித உரிமைகள் என்னும் போலிக்காரணங்கள் கையிலெடுக்கப்பட்டு லிபியாவுக்கு எதிரான போரை நடத்துவதற்கும் மும்மார் கடாபியின் ஆட்சியை தூக்கிவீசுவதற்கும் பயன்படுத்தப்பட்டது. அதே இரட்டைவேட சாக்கு சிரியாவில் ஒரு பினாமிப் போரை ஏற்பாடு செய்வதற்கும் பிரயோகிக்கப்பட்டது. மனித உயிர்கள் மற்றும் துயரங்களின் விடயத்தில் இந்தப் போர்கள் ஏற்படுத்திய பின்விளைவுகள் கணக்கிலடங்காதவை.


உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் மூலோபாய தர்க்கமானது மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் இரத்தம்பாயும் நவகாலனித்துவ நடவடிக்கைகளைக் கடந்த மோதல்களுக்கு இட்டுச் சென்றிருக்கிறது. அமெரிக்காவின் புவிஅரசியல் அபிலாசைகள் சீனா மற்றும் ரஷ்யா உடன் அபாயம் பெருகிய மோதல்களுக்கு இட்டுச் சென்றிருக்கின்றன. இன்னும் சொன்னால், நடந்து கொண்டிருக்கும் பிராந்தியப் போர்கள் அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய ஆசியக் கூட்டாளிகளுக்கும் ரஷ்யா மற்றும் சீனாவுக்கும் இடையில் துரிதமாய் தீவிரப்பட்டுச் செல்லும் மோதலின் உள்ளார்ந்த பாகங்களாகி கொண்டிருக்கின்றன.


ஒபாமாவின் பதவிக்காலத்தை முடிவற்ற போர்களின் ஒரு காலமாக ஆக்கிய அமெரிக்க மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகளில் அடித்தளத்தைகொண்டுள்ள ஆழமான புறநிலைக் காரணங்கள் குறித்து நியூஜோர்க் டைம்ஸ் அதிகம் எதுவும் குறிப்பிடவில்லை. அதேபோல, அடுத்து வெள்ளை மாளிகையில் அமரவிருப்பவர் யாராயிருந்தாலும் - அவர் பெயர் கிளிண்டன் என்றாலும், டிரம்ப் என்றாலும், அல்லது சாண்டர்ஸே என்றாலும் - அவர் இதையே தான் என்பது மட்டுமல்ல, இதனினும் மோசமானதையே தரமுடியும் என்பது குறித்த முன்கூட்டிய எச்சரிக்கையையும் அது தன் வாசகர்களுக்கு வழங்கவில்லை. போர் பிரச்சினை என்பது இந்தத் தேர்தலில் “குறிப்பிடமுடியாத மிகப்பெரும் ஒன்றாய்” இருக்கிறது.


Sources From Khaibar Thalam

 
Reactions:

0 comments:

Post a Comment

வாசித்தவர்கள்

Blog Archive

தொகுப்புகள்

'அஷ் ஷாமில்' (சிரியா) Central African மத்திய ஆபிரிக்க china Concepts Dangerous Concepts Documentaries Economic System Muslim Ummah அபூபக்ர் (ரழி) அமெரிக்கப் போர்கள் அமெரிக்கா அல்-அக்ஸா ஆப்கான் இந்தியா இஸ்ரேல் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய அழைப்புப் பணி இஸ்லாமிய ஆட்சி இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இஸ்லாமிய எழுச்சி இஸ்லாமிய கல்வி இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய மாதம் இஸ்லாமிய வரலாறு இஸ்லாம் ஈராக் ஈரான் உக்ரேன் உம்மத் எகிப்து(Egypt) ஐரோப்பா ஓமன் கட்டார் கருக்கலைப்பு கலிஃபாக்கள் வரலாறு காசா காலித் பின் வலீத் (ரலி) காவிகள் காஷ்மீர் கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் கிலாபத் குவைத் குழந்தைகள் கென்யா கொலம்பஸ் சவூதி (Saudi Arabia) சஹாபாக்கள் சிறப்புக் கட்டுரைகள் சீனா செர்பியா தமிழ் நாடு துருக்கி (Turkey) தேசியவாதச் சிந்தனை நபி தோழர்கள் நவீன பிரச்சனைகள் பங்களாதேஷ்(Bangladesh) பர்மா பஹ்ரைன் பாகிஸ்தான் பாலஸ்தீன் பாஜக பெண்கள் மீதான வன்முறைகள் பெண்ணியம் பொதுவனவை பொருளாதார அடியாள் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் அமைப்பு மிதவாத முஸ்லிம் மியன்மார் முதல் உலகப்போர் முஸ்லிம் இராணுவங்கள் முஸ்லிம் உம்மாஹ் யூதர்கள் ரஷ்யா லண்டன் லிபியா லெபனான்( Lebanon) வியட்நாம் ஜப்பான் ஜனநாயகம் ஜிஹாத் ஜெர்மன் ஜெனரல்
Powered by Blogger.

Map IP Address
Powered byIP2Location.com

Follow by Email

Enter your email address:

Delivered by FeedBurner

இஸ்லாமிய மறுமலர்ச்சி

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

About Me

My photo
“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) islamic.uprising@gmail.com