Jul 11, 2016

மதீனாவில் குண்டுவெடிப்பு! தொடர்‬:-02


உலகில் உள்ள அத்தனை பயங்கரவாத இயக்கங்களுக்கும் சில அரசியல் இலக்குகள் உள்ளன. பயங்கரவாதம் என்பது அந்த இலக்குகளை அடைவதற்கான வழிமுறை மாத்திரமே. ஒரு கிலாபாவை நிறுவுதல் அல்லது ஷரீஆவுடைய ஆட்சியை அமைத்தல் அல்லது வெளிநாட்டு ஆக்கிரமிப்பு இராணுவங்களை முஸ்லிம் நிலங்களில் இருந்து விரட்டுதல் அல்லது முஸ்லிம் நாடுகளில் உள்ள சர்வாதிகார ஆட்சியார்ளகளைப் பதவியிறக்கம் செய்தல் என்ற ஏதாவது ஒன்றை ISIS இன் அரசியல் இலக்குகளில் ஒன்றாகக் கொள்ளலாம். அவ்வாறானதொரு தோற்றப்பாட்டையே மீடியாக்கள் உருவாக்கி இருக்கின்றன.

பொதுவாகவே எவ்வளவுதான் நியாயமான அரசியல் இலக்குகளாக இருந்தாலும் அவற்றைப் பயங்கரவாதம் என்ற வழிமுறையூடாக அடைந்து கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் எந்த முயற்சிகளையும் சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், அதே சமூகத்தினால் இலக்குகளுக்கும் வழிமுறைகளுக்கும் இடையிலான வேறுபாட்டைப் பிரித்து அறியமுடிவதில்லை என்பதால் பயங்கரவாதம் என்கின்ற வழிமுறையை எதிர்க்கின்ற அச்சமூகம் பயங்கரவாதத்தின் உயர்ந்த இலக்குகளையும் எதிர்க்க ஆரம்பிக்கும். ISIS என்ற இந்தப்பயங்கரவாத இயக்கத்திற்கு மீடியாக்களில் வழங்கப்படும் அதிகூடிய நேரஒதுக்கீடு, மற்றும் ISIS ஐ ஜிஹாத், கிலாபா போன்ற இஸ்லாமிய சிந்தனைகளோடு தொடர்புபடுத்திக்காட்டல் என்பவற்றின் மூலமாக இஸ்லாத்தின் எதிரிகள் இதனையே சாதித்துள்ளார்கள்: ISISஇன் பயங்கரவாதத்தை எதிர்க்கின்ற மக்கள் ஜிஹாத், கிலாபா போன்ற இஸ்லாமிய சிந்தனைகளையும் தற்போது எதிர்க்க ஆரம்பித்துள்ளார்கள். ISISஇன் எதிரிகளாகச் சித்தரிக்கப்பட்ட மேலைத்துவக் காலனித்துவ சக்திகளையும் அவற்றின் உள்நாட்டு முகவர்களையும் அவர்கள் அங்கீகரிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

எனவேதான் ISIS என்ற இந்த இயக்கம் முஸ்லிம் நாடுகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடாது என்று விரும்புகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளின் கைப்பொம்மையா? என்று சந்தேகிக்கவேண்டி இருக்கின்றது. உண்மையிலேயே அவ்வாறு சந்தேகிப்போர் நிறையப்பேர் இருக்கின்றார்கள். இருப்பினும் இவர்கள் விடுகின்ற இமாலயத்தவறு என்னவெனில், முஸ்லிம் தேசங்களைத் தொடர்ந்து அடிமைத்துவத்தில் வைத்திருக்கவேண்டும் என்கின்ற அந்த இலக்கை அடைவதற்காக ISIS ஐ ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் – அல்லது அவ்வாறு பயன்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள் எனத் தாங்கள் நம்பும் - அந்தத் தீய சக்திகளைக் கண்டிக்காமல், ISIS என்ற அந்தக் கருவியைக் கண்டிப்பதாகும். அவ்வாறு செய்வதனால், உண்மையான குற்றவாளிகள் விமர்சனங்களிலிருந்து தப்பி விடுகின்றார்கள். ISIS மீது உண்டாக்கப்படும் வெறுப்பு இறுதியில் கிலாபா மற்றும் ஷரீஆ போன்றவற்றின் மீதான வெறுப்பாக மாறிவிடுகின்றது.

இஸ்லாமிய உலகில் இன்று எத்தனையோ அரசியல் / அறிவியல் இயக்கங்கள் இருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் இந்த அரசியல் / அறிவியல் இயக்கங்களின் இலக்குகளும் ISIS போன்ற இயக்கங்களின் இலக்குகளும் ஒன்றாக அமைவதும் உண்டு. ஒரு உதாரணத்திற்கு கிலாபா என்கின்ற இலக்கையே எடுத்துக்கொள்ளலாம். இது எல்லா முஸ்லிம்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு இலக்கு. ஆனால், ISISஐ முதலில் வெறுத்து, பின்னர் அந்த வெறுப்பின் தொடராய் கிலாபாவையும் வெறுப்பதற்குப் பழக்கப்படுத்தப்பட்ட மக்களால் கிலாபா என்ற உயர்ந்த இலக்கைப் பயங்கரவாதம் அல்லாத அறிவியல் / அரசியல் வழிமுறைகளுக்கூடாகப் பெற்றுக்கொள்ளலாம், அவ்வாறு அதைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கும் இயக்கங்கள் இருக்கின்றன, அவ்வாறன இயக்கங்களுக்கு தாம் ஆதரவு வழங்கவேண்டும் என்ற உண்மைகள் புரிவதில்லை.

(தொடரும் இன்ஷா அல்லாஹ்)

Mohamed Faizal

No comments:

Post a Comment