Jul 11, 2016

மதீனாவில் குண்டுவெடிப்பு! தொடர்‬:-05

இறுதியில் நீங்கள் ஒரு பெரிய பொல்லால் அடித்துக் கொல்லப்படுவீர்கள்.


பயங்கரவாதம் என்ற பதப்பிரயோகத்தின் குளறுபடிகள்.
பயங்கரவாதம் என்ற சொல் பொதுவாக முஸ்லிம்களால் நிகழ்த்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வன்முறைச் சம்பவங்களுக்கு மாத்திரமே பிரயோகிக்கப்படுகின்றன. பின்வரும் உதாரணத்தை நோக்குவோம்:
அமெரிக்காவில் இடம்பெற்ற ஒக்கலஹாமா குண்டுவெடிப்பின் போது 168 பேர் கொல்லப்பட்டு 680க்கும் மேற்பட்டோர் காயங்களுக்கு ஆளானார்கள். அதேபோல் அமெரிக்காவின் பாஸ்டன் மரதன் குண்டுவெடிப்பின் போது வெறும் 3 பேர் மாத்திரம் கொல்லப்பட்டார்கள்.
இந்த பாஸ்டன் மரதன் குண்டுவெடிப்பு அரசியல்வாதிகளாலும் மீடியாக்களாலும் ஒரு பயங்கரவாதச் செயல் என்று கண்டிக்கப்பட்டது. ஆனால், அதிக கொடுமை மிக்க ஒக்கலஹாமா குண்டுவெடிப்போ ஒரு வெறும் குற்றச்செயல் என்ற சொற்பிரயோகத்தைப் பயன்படுத்தியே அழைக்கப்பட்டது. ஏனெனில், ஒக்கலஹாமா குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர் முஸ்லிமல்லாத ஒரு வெள்ளைக்கார அமெரிக்கவன். பாஸ்டன் மரதன் குண்டுவெடிப்பு சந்தேகநபரோ ஒரு முஸ்லிம்.
பயங்கரவாதம் என்ற சொல்லை முஸ்லிம்களால் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் வன்முறைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துகின்றார்கள். இதன் மூலம் முஸ்லிம் அல்லாதோரால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அத்தனை மகா பயங்கரவாதங்களும் ஒரு சாதாரண, போலீஸ் நிலையைப் பதிவுகளுக்குள் அடங்குகின்ற அன்றாட நிகழ்வுகளில் ஒன்று போல் சித்தரிக்கப்படுகின்றது. எனவே, பயங்கரவாதம் எனும் பதத்தைப் பயன்படுத்தப்படுவதாக இருந்தால் அது வன்முறை புரிவோரின் இன மத அடையாளங்களுக்கு அப்பால் பயன்படுத்தப்படவேண்டும். ஈராக்கில் அமெரிக்காவும், மியன்மாரில் அவர்களின் இராணுவ-தீவிர பெளத்த கூட்டமைப்பும், சிரியாவில் அசாத்தும் ரஷ்ய இராணுவமும் புரியும் வன்முறைகள் எல்லாமே பயங்கரவாதம் என்று அழைக்கப்படல் வேண்டும். இல்லையேல் அப்பதம் வழக்கிலிருந்து விலக்கப்படவேண்டும்.

அமெரிக்க ஆக்கிரமிப்புகளுக்கும் பயங்கரவாதத்திற்குமிடையான தொடர்பு.

அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு முன்னதான மற்றும் பின்னரான இரண்டு ஈராக்குகளையும் எடுத்துக்கொண்டால், ஆக்கிரமிப்புக்குப் பின்னரான ஈராக்கினுள்ளேயே வன்முறைக்குழுக்களும் வன்முறைகளும் தோற்றம் பெற்றன. ஆக்கிரமிப்புக்கு முன்னதான ஈராக் பாதுகாப்பும் இன மத ஐக்கியம் நிறைந்ததாகவும், அபிவிருத்தியில் உச்சநிலையத் தொட்டதாகவுமே இருந்தது.
அமெரிக்க-ஐரோப்பிய காலனித்துவ இராணுவங்கள் முஸ்லிம் தேசங்களில் உள்ள ஆளுகைக் கட்டமைப்புகளைச் சிதைக்கின்றபோது அங்கே ஒரு வலு-வெற்றிடம் தோன்றுகின்றது. இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக புதிய புதிய ஆயுதக்குழுக்கள் உருவாகுகின்றன. அது தவிர்க்க முடியாதது. அது இயற்கையானது.
ஜெர்மனிய நாட்சிக்கள் பிரான்ஸ் நாட்டை ஆக்கிரமித்தபோது பிரான்ஸ் நாட்டுக்குள்ளும் அவ்வாறான ஆயுதக்குழுக்கள் தோற்றம் பெற்றன. நாட்சிச எதிரிகளையும் அவர்களின் உள்ளூர் ஒத்துழைப்பாளர்களையும் விரட்டுவதற்காக வன்முறையை ஒருவழியாக இவர்கள் கருதினார்கள். இருப்பினும் எவரும் இந்த வன்முறைக் குழுக்களையோ பிரான்ஸிய சமூகத்தையோ குற்றம் சொல்லவில்லை. மாறாக, எல்லாவற்றிற்கும் அடிப்படைக்காரனமான ஜெர்மனிய நாட்சிக்களையே குற்றம் பிடித்தார்கள்.
ஆனால் அமெரிக்க-ஐரோப்பிய காலனித்துவ ஆதிக்கத்தின் நேரடி விளைவாக முஸ்லிம் தேசங்களில் வன்முறைக் குழுக்கள் தோற்றம் பெறுகின்றபோது, வெறுமனே அந்தக் குழுக்களும் அந்நாட்டு முஸ்லிம் மக்களுமே குற்றம் பிடிக்கப்படுகின்றார்கள். அடிப்படைக்காரனமான அமெரிக்க-ஐரோப்பிய காலனித்துவ சக்திகள் தப்பித்துக்கொள்கின்றார்கள்.
சர்வதேச அரச பயங்கரவாதிகளை விட்டுவிட்டு, அவர்களின் பயங்கரவாதத்தைத் தினமும் அனுபவிக்கின்ற, பாதிப்புக்குள்ளான முஸ்லிம் சமூகத்தைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பது வெறும் கோழைத்தனம். குறைந்தபட்சம் நான்கு வார்த்தைகள் கொண்டாவது முஸ்லிம்களுக்கு எதிரான அமெரிக்க-ஐரோப்பியப் பயங்கரவாதத்தைக் கண்டிக்கும் மனநிலையை முஸ்லிம்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு முதலில் எவ்வாறு வெளிநாட்டு ஆக்கிரமிப்பு உள்நாட்டிலே வண்முறைக்குழுக்களின் பிறப்பிற்குக் காரணமாய் அமைகின்றது என்பதை எமது சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.
இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரிகள் முஸ்லிம்களை நோக்கி பயங்கரவாதம் என்ற பதத்தைத் திரும்பத்திரும்ப உபயோகிக்கப்பதற்கு இரண்டு பிரதான காரங்கள் இருப்பதாகக் கொள்ளலாம்: ஒன்று கவனக்கலைப்பு; மற்றையது முஸ்லிம்களுக்கு எதிரான அமெரிக்க-ஐரோப்பியப் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தலும், முஸ்லிம்கள் மீதான மேலதிக பயங்கரவாதக் கட்டவிழ்ப்பிற்கான காரணிகளைத் தோற்றுவித்தலும்.

கவனக்கலைப்பு:

பொதுவாகவே மனிதர்களில் பெரும்பாலோனோர் இருக்கின்ற ஆதாரங்களை ஆராய்ந்து அல்லது வாதப்பிரதிவாதங்களைப் பரிசீலனை செய்து அதன் விளைவாக முடிவுகளுக்கு வருவதில்லை. அதிகாரத்தில் உள்ளோர் (இது அரசியல் அதிகாரமாக இருந்தாலும் சரி ஆன்மீக அதிகாரமாக இருந்தாலும் சரி) அவர்கள் எடுக்கின்ற முடிவுகளை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்வார்கள்.
இன்றைய மேலைத்தேய உலகும் அவர்களுடைய மீடியாக்களும் மிகப்பெரும் அதிகார வர்க்கங்கள். இந்த அதிகார வர்க்கங்கள் முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் அது ஒரு தேவவாக்கு போல், குரானிய வசனம் போல் அப்படியே பெரும்பாலோனோரால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. எந்தவிதமான ஒப்பீடுகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. எனவே அமெரிக்க-ஐரோப்பிய உலகு (முஸ்லிம்) பயங்கரவாதத்தைக் கண்டிக்கும் போது, அதன் பக்கவிளைவாய், கண்டனம் செய்கிற அமெரிக்க-ஐரோப்பிய உலகு பயங்கரவாதத்தை விட்டும் மிகவும் தூரமானவர்கள் என்ற ஒரு மாயை தோற்றுவிக்கப்படுகின்றது. அமெரிக்க-ஐரோப்பியப் பயங்கரவாதத்தை விட்டும் உலகின் கவனம் கலைக்கப்படுகின்றது. இது ஒருவகையான பிர்அவுனிய மாயாஜாலமே! இந்தக் கவனக்கலைப்பில், இந்த பிர்அவுனிய மாயாஜாலத்தில் அதிகமான முஸ்லிகளும் சிக்குண்டு போயுள்ளார்கள்.
அடுத்ததாக...
நச்சுப் பாம்புகளாகச் சித்தரிக்கப்படும் ஒரு சமூகம் இறுதியில் பெரிய பொல்லால் அடித்துக் கொல்லப்படும். இது ஒரு வரலாற்று உண்மை.
இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான பொய்யான நச்சுப் பிரச்சாரங்களை முஸ்லிம்கள் எதிர்கொள்ளவில்லையெனில், முஸ்லிம்கள் அமெரிக்க-ஐரோப்பியப் பயங்கரவாதத்தின் பாதிப்புக்களைத் தினமும் அனுபவிப்பவர்கள் என்கின்ற உண்மையை நாம் உலகுக்கு எடுத்துக் காட்டவில்லையெனில், அமெரிக்க-ஐரோப்பிய அரசுகளே அதிபெரிய பயங்கரவாதத்தின் ஊற்றிடம் என்பதை உலகுக்கு உணர்த்தவில்லையெனில் முஸ்லிம்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிப்புகளையும் அநீதிகளையும் அரச பயங்கரவாதங்களையும் தொடர்ந்து அனுபவித்துக்கொண்டே இருப்பார்கள்.
எனவே பயங்கரவாதம் பற்றிய ஆழமான அகலமான புரிதலை முஸ்லிம் சமூகம் எட்டவேண்டிய ஒரு மாபெரும் தேவை உள்ளது.
அந்தத் தேவையை எட்டச் செய்வதற்கான ஒரு சிறு முயற்சியே இந்தக் கட்டுரைகள். இதை அங்கீகரிக்குமாறு அல்லாஹ்வை வேண்டியவனாக....


Mohamed Faizal

No comments:

Post a Comment