Jun 1, 2011

இஸ்லாமிய பூமி (தாருள் இஸ்லாம்), நிராகரிப்பின் பூமி (தாருள் குப்ர்) என்பவற்றிற்கிடையிலான வேறுபாடு: பகுதி 01

முன்னைய காலத்தில் மிகத்தெளிவாக முஸ்லிம்களால் புரிந்துகொள்ளப்பட்டு ஒழுகப்பட்ட இஸ்லாத்தினுடைய மிக முக்கிய எண்ணக்கருக்கள், சிந்தனைகள், விளக்கங்கள் எல்லாம் இன்றைய சூழலில் மிக மேலோட்டமான புரிதல்களுடன், அல்லது குறைபாடுடைய விளக்கத்துடன் அல்லது முற்றாகவே கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவது வேதனையளிக்கிறது. இவற்றுள் ஒன்றுதான் இஸ்லாமிய பூமி (தாருள் இஸ்லாம்), நிராகரிப்பின் பூமி (தாருள் குப்ர்) என்பவற்றிற்கிடையிலான வேறுபாட்டை வரையறை செய்து விளங்கிக் கொள்ளுதலாகும்.

இன்று முஸ்லிம் உலகில் காணப்படும் நாடுகளின் நிலை குறித்து புரிந்து கொள்வதற்கு தாருள் குப்ர், தாருள் இஸ்லாம் என்பவை குறித்த தெளிவு மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் சில நேரங்களில் மக்கள் உணர்ச்சிவசப்பட்டு இந்நாடுகள் குறித்த நிலைப்பாட்டுக்கு வந்துவிடுவதுண்டு. மாறாக இந்நாடுகளின் உண்மை நிலை என்ன என்பது குறித்து ஷரிஆவின் நிழலில் நோட்டமிடுவதை இவர்கள் மேற்கொள்வதில்லை. எனவேதான் சூடான் இன்றுவரையும் “தேசிய அரசு – Nation state” ஆக காணப்படும் நிலையில் கூட ஹஸன் அல் துராபி சூடானின் ஆட்சியில் அமர்ந்தபோது அதனை இஸ்லாமிய அரசு என பலர் அழைத்தனர். அதேபோன்றுதான் ஆயத்துல்லாஹ் கொமெய்னி ஈரானியப்புரட்சியின் மூலம் தாருள் குப்ரை தாருள் இஸ்லாமாக மாற்றிவிட்டார் என முந்தியடித்துக்கொண்டு பலர் வாதிட்டனர். ஆனால் உண்மையில் ஈரானிய அரசியலமைப்புக்கூட முற்றிலும் இஸ்லாத்திற்கு முரணானதாகும்.

முஸ்லிம் உலகில் புகழ்பெற்ற நபர்கள் உட்பட பல இஸ்லாமிய இயக்கங்கள் கூட தாருள் குப்ர், தாருள் இஸ்லாம் என்பவற்றை வரையறை செய்வதில் மிக மேலோட்டமான பாங்கை கையாள்வதை நாம் காண்கிறோம். இந்நிலை சிந்தனை ரீதியான பாதிப்பிலிருந்து ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மாஹ்வும் தப்பிவிடவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. நாமும் கிலாபத்திற்காகத்தான் முயற்சிக்கிறோம், நாமும் இஸ்லாமிய அரசைத்தான் ஏற்படுத்தப்பாடுபடுகிறோம் எனக்கூறுபவர்கள் கூட உண்மையில் இவை குறித்த தௌ;ளத்தெளிவான விளக்கத்தையோ, அல்லது வரையறையையோ புரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். சிலர் கிலாபத்தை உருவாக்குவோம் என்பதை ஒரு சுலோகமாகப் பாவிக்கிறார்களேயொழிய அதனை நடைமுறையில் அடைந்து கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுவதை காணக்கிடைப்பதில்லை. கிலாபத் என்றால் என்ன தாருள் இஸ்லாம் என்றால் என்ன என்பது குறித்து புரிந்து கொள்ளாது அதனை ஏற்படுத்த முனைகின்றோம் எனக்கூறுவது தொழுகையின் து}ண்கள் (அர்கான்) என்ன அதற்கான நிபந்தனைகள் (சுரூத்) என்ன என்பவை குறித்து அறியாமல் நாங்கள் தொழுகையை நிலைநாட்டப்போகிறோம் எனக்கூறுவதற்கு ஒப்பானதாகும்.

மோசடிமிக்க இன்றைய முஸ்லிம் நாடுகளை தாருள் குப்ர் என அழைப்பதற்கே சிலர் வெட்கப்படும் நிலையைப்பார்க்கிறோம். வேடிக்கை என்வென்றால் குப்பார்கள், குப்ரைக் கொண்டு ஆட்சி நடாத்தும் இந்தியா போன்ற நாடுகளைகூட தாருள் குப்ர் என்று அழைப்பதற்கு சிலர் தயங்குவதுதான்.
எனவேதான் தாருள் இஸ்லாம் மற்றும் தாருள் குப்ர் என்பவற்றிற்கிடையிலான வேறுபாட்டையும், அதன் வரைவிலக்கணத்தையும், அது தொடர்பான ஷாரீஆ ஆதாரங்களையும் விளக்குவது இன்றைய காலப்பரிவில் மிகவும் முக்கியமானது எனக் கருதுகின்றோம்.

வரைவிலக்கணம்

‘தார்’ (பன்மை: தியார்) என்பதற்கு அரபு அகராதியில் தங்குமிடம்(மஹல்லு), வீடு, வதிவிடம், நிலம்(பலத்) என்பவை போன்ற பல அர்த்தங்கள் உண்டு. இஸ்லாமிய ஷாரீஆவின் பரிபாஷையில் தாருள் இஸ்லாம் என்பதற்கு “ முற்றுமுழுதாக இஸ்லாமிய சட்டங்களைக்கொண்டு ஆட்சி செய்யப்பட்டுவருகின்ற, அதன் பாதுகாப்பு (அமன்) இஸ்லாத்தின் பாதுகாப்பினால் (அதாவது: நாட்டிற்குள்ளும், வெளியிலும் முஸ்லிம்களின் பாதுகாப்பு இஸ்லாமிய அதிகாரபீடத்தினாலும் வழங்கப்பட்டுவரும்) மாத்திரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலமாகும். அது பெரும்பான்மையாக முஸ்லிம் அல்லாதவர்களை கொண்ட நாடாக இருந்தாலும்கூட” எனப்பொருளாகும்.

தாருள் குப்ர் என்பது “ குப்ர் சட்டங்களைக்கொண்டு ஆட்சி செய்யப்படுகின்ற, அதன் பாதுகாப்பு இஸ்லாத்தின் பாதுகாப்பினால் வழங்கப்படாத நிலமாகும். இந்நிலம் பெரும்பான்மையாக முஸ்லிம்களைக் கொண்ட நிலமாக இருந்தாலும்கூட. ”

ஆகவே தாருள் குப்ர் என்பதும், தாருள் இஸ்லாம் என்பதும் நிலத்தை அடிப்படையாக்கொண்டோ, அல்லது அதன் குடிமக்களை அடிப்படையாகக்கொண்டோ வரையறை செய்யப்படுவதில்லை. மாறாக அந்த நிலத்தின் சட்டங்களையும், அதன் பாதுகாப்பையும் அடிப்படையாகக்கொண்டே அவை வரையறை செய்யப்படுகின்றன. ஆகவே எங்கே ஆட்சியும், பாதுகாப்பும் இஸ்லாத்தைக்கொண்டு முழுமையாக இருக்கின்றதோ அது தாருள் இஸ்லாம். எங்கே ஆட்சியும், பாதுகாப்பும் நிராகரிப்பைக்கொண்டிருக்கிறதோ அது தாருள் குப்ர். இங்கே இன்னுமொரு கேள்வியும் எழலாம். அது தாருள் ஹர்ப் (யுத்திற்கான நிலம்) குறித்தது. தாருள் ஹர்ப் என்பதும் தாருள் குப்ர் என்பதும் அதன் பாவணையைப்பொறுத்து வேறுபடுகிறதேயோழிய அவை ஒன்றையே குறிப்பிடுகின்றன. ஏனெனில் இஸ்லாமிய ஆட்சி முழு உலகிலும் பரப்பப்பட்டு நிலைநாட்டப்படும் வரை அதற்கான போராட்டம் தொடரும் என்பதால் இஸ்லாம் ஆட்சி செலுத்தாத பூமிகளை தாருள் குப்ர் என்று அழைப்பதைப்போலவே தாருள் ஹர்ப் என்றும் அழைப்பதுண்டு. எனினும் இஸ்லாமிய பூமியை நேரடியாக ஆக்கிரமித்துள்ள நாடுகளுக்கும், ஆக்கிரமிப்பில் ஈடுபடாத நாடுகளுக்குமிடையே அந்நிலங்களை வரையறை செய்வதிலே வேறுபாடு காணப்படுகிறது. உதாரணமாக இஸ்லாமிய பூமியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் போன்ற நாடுகளை தாருள் ஹர்ப் பிஃலன் (நிதர்சன யுத்த பூமி) என்றும், முஸ்லிம் நிலங்களை ஆக்கிரமிக்காத அல்லது முஸ்லிம் நிலங்களுடன் நேரடியாக யுத்தத்தில் ஈடுபடாத ஏனைய குப்ர் நாடுகளை தாருள் ஹர்ப் ஹீக்மன் ( சட்ட ரீதியான யுத்த பூமி) என்றும் வகைப்படுத்தப்படும். மேற்குறிப்பிட்ட வரைவிலக்கணங்கள் இஸ்லாமிய ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்டவையும், இஸ்லாமிய வரலாற்றில் அறிஞர்களால் கலந்துரையாடப்பட்டவைகளுமாகும்.

தொடர்ந்து வரும்..

Sources from warmcall.blogspot.com

No comments:

Post a Comment