Showing posts with label தீனார். Show all posts
Showing posts with label தீனார். Show all posts

Sep 8, 2013

தங்கம் மற்றும் வெள்ளியை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய நாணய முறை





இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காலத்தில் தங்கம், வெள்ளி ஆகியவையே செலாவணி நாணயமாக இருந்தது. அக்கால முஸ்லீம்கள் பைசாந்திய தீனாரையும், பாரசீக திர்ஹத்தையும் தங்கள் நாணயமாகக் கொண்டிருந்தனர். இவ்வழக்கம் உமைய்யா கலீ ஃபாக்களில் ஒருவரான அப்துல் மலிக் பின் மார்வான் ஆட்சிக்கு வரும் வரை தொடர்ந்தது. இவர் புதிய நாணயத்தை, இஸ்லாம் வரையறுத்த பிரத்தியேக (தங்க ஏற்பு நிறை- Gold Standard) முறையைக்கொண்டு வடிவமைத்தார். இஸ்லாம் கூறும் தீனார் மற்றும் திர்ஹத்தின் முறையை அடிப்படையாகக் கொண்டு தங்க,வெள்ளி நாணயங்கள் அச்சடிக்கப்பட்டது. தங்கம் மற்றும் வெள்ளியின் அடிப்படை அளவிலும் ஷரிஆ கூறும் தீனார் மற்றும் திர்ஹத்தின் மதிப்பை நிகராகக் கொண்டு இந்நாணயம் உருவாக்கப்பட்டிருந்தது.

இஸ்லாம் நமக்கு கட்டளையிடும் இந்த சட்டமானது தங்கம் மற்றும் வெள்ளியின் அடிப்படையிலேயே பெறுமதியை வரையறுத்தது. ஒரு பொருளின் மதிப்பையோ அல்லது உழைப்பின் கூலியையோ தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களின் அளவே தீர்மானித்தது. தங்கம், வெள்ளியை பதுக்கிவைப்பதைத் தடுத்த இஸ்லாம், அவற்றின் பயன்பாட்டை பற்றிய மாற்ற முடியாத சட்டங்களை இயற்றியது. ஸகாத் எனப்படும் கடமையானது தங்கம், வெள்ளி நாணயத்திலேயே குறிப்பிடப்பட்டிருந்தது.ஸகாத்திற்கான நிஸாப் எனப்படும் அளவு,தீனார் மற்றும் திர்ஹத்தின் அளவில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. திய்யா(இரத்த ஈட்டுத்தொகை- blood money) எனப்படும் தண்டனைக் கட்டணம் ஓராயிரம் தீனாருக்கு சமமான தங்கம் எனவும், பன்னிரெண்டாயிரம் திர்ஹத்திற்கு நிகரான வெள்ளி எனவும் குறிக்கப்பட்டிருந்தது. திருட்டிற்கான தண்டனையான கைகள் வெட்டப்படுவதற்கு களவாடப்பட்ட பொருளின் குறைந்த அளவு 1.25 தீனார் தங்கம் எனவும், மூன்று திர்ஹம் வெள்ளி எனவும் இஸ்லாம் வரையறை செய்தது.

இறைத்தூதர்(ஸல்)அவர்களின் ஆட்சிக்காலத்தில் நாணயப்பரிமாற்றமும்,பொருட்களின் மதிப்பும், உழைப்பின் ஊதியமும் தங்கம், வெள்ளியைக் கொண்டே அமையப்பெற்றிருந்தது. ஆகவே இஸ்லாம் தங்கம், வெள்ளி இவ்விரண்டை மட்டுமே நாணயமாகக் கருதுகிறது. எனவே இஸ்லாமிய அரசு தங்கம், வெள்ளியையே தனது நாணயமாகக் கொள்ள வேண்டும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காலத்திலும், பின்னர் நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் ஆட்சி காலம் முதல் உஸ்மானியா கலீஃபாக்கள் ஆட்சிக்காலம் வரை இருந்தது போன்றே, இஸ்லாமிய அரசு தீனார் மற்றும் திர்ஹத்தை நேர்த்தியான வடிவில் அச்சிட வேண்டும். இதைச் செயல் படுத்துவதன் மூலமே நாணயம் சார்ந்த பொருளாதார சிக்கல்களையும், பணவீக்க விகித பிரச்சனைகளையும் தீர்க்க முடியும். அயல் நாட்டு நாணயமாற்று வேற்றுமை விகிதத்தை நிலைப்படுத்தவும், பன்னாடு சார்ந்த வணிகத்தை மேம்பாடு அடையச் செய்யவும் தங்கம், வெள்ளி நாணயங்கள் பெரிதும் துணை புரியும். தங்கம் மற்றும் வெள்ளியின் படியளவைக்கொண்டே அமெரிக்க டாலரின் ஒப்பீட்டிற்குரிய கட்டண அளவைக்குறைத்து அதன் தாக்கத்தை பன்னாட்டு வணிகத்தில் குறைக்க அல்லது அழிக்க முடியும். இஸ்லாம் கூறும் இத்தகைய நாணய முறையை முஸ்லிம் நாடுகள் முற்றாக நிராகரித்துவிட்டு மேற்கத்திய முறையை பின்பற்றுவதால் பண வீக்கத்தையும், மாபெரும் பொருளாதார வீழ்ச்சியையும் பரிசாகப் பெற்றுள்ளனர்.

இஸ்லாம் கடமையாக்கியுள்ள தங்கம் மற்றும் வெள்ளியை அடிப்படையாகக் கொண்ட நாணயமுறையை மீண்டும் வர இருக்கின்ற இஸ்லாமிய அரசால் மட்டுமே நடைமுறைப்படுத்தி பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த இயலும்.