Mar 14, 2014

அகபா ஒப்பந்தம்

ஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக்கில் அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து ஓர் உறுதியேற்பு ஒப்பந்தத்தைச் செய்து கொடுத்தார்கள். 

அதுவே முதலாம் அகபா ஒப்பந்தமாகும். அவ்வொப்பந்தத்தில் கீழ்வரும் அம்சங்கள் இடம் பெற்று இருந்தன:

1,அவர்கள் அல்லாஹ் (சுபு) வுக்கு இணையாக யாரையும் எதனையும் கருதக் கூடாது.

2, திருடக் கூடாது.

3, விபச்சாரம் செய்யக் கூடாது.

4, தமது குழந்தைகளைக் கொல்லக் கூடாது.

5, ஒருவரின் கற்பு குறித்து அவதூறோ பழிச்சொல்லோ கூறக்கூடாது.

6,நன்மையான அம்சங்களில் அல்லாஹ் (சுபு) வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்யக் கூடாது.

7,யார் இந்த அம்சங்களையெல்லாம் முறையாகப் பேணுகிறாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்கும்.

8, யார் இவற்றைப் பேணாமல் ஒப்பந்தத்துக்கு மோசடி செய்கிறாரோ அல்லது முழு விருப்பம் இல்லாமல் உள் நோக்கத்துடன் நிறைவேற்ற முன்வருகிறாரோ அவர் தொடர்பான விவகாரம் அல்லாஹ் (சுபு) வின் பக்கம் விடப்படும்.அவன் நாடினால் தண்டிப்பான்; அவன் நாடினால் மன்னிப்பான்.
இவ்வொப்பந்தம் முடிந்து ஹஜ்ஜுடைய காலமும் கடந்த பிறகு அவர்கள் அனைவரும் மதீனா திரும்பினார்கள்.

இரண்டாம் அகபா ஒப்பந்தம்....!


அப்போது காலம் நபித்துவத்தின் 12 ஆம் ஆண்டு. கி.பி.622.

ஏராளமானோர் ஹஜ்ஜில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள். அந்த ஹாஜிகளுக்கிடையில் மதீனாவைச் சேர்ந்த 73 ஆண்களும் 2 பெண்களுமாக 75 முஸ்லிம்கள் இருந்தார்கள்.

பனூ மாஜின் பின் நஜ்ஜார் சந்ததியைச் சேர்ந்த நஸீபா பிந்த் கஅப் உம்மு அம்மாரஹ் என்ற பெண்மணி ஒருவர்; பனூ ஸலமா சந்ததியைச் சேர்ந்த முனீஃஉ என்பவரின் தாயாரான அஸ்மா பிந்த் அம்ரு பின் அத்தீ என்ற பெண்மணி மற்றொருவர்.

இவர்கள் அனைவரையும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இரகசியமாகச் சென்றடைந்தார்கள்.

இரண்டாம் பைஅத் (உறுதியேற்பு ஒப்பந்தம்) குறித்து அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அந்த 75 முஸ்லிம்களிடம் பேசினார்கள். அவர்கள் அனைவரும் அதற்கு அழகான முறையில் தயாராகி இருந்ததை அறிந்து கொண்டார்கள்.

ஆகையால் 'அய்யாமுத் தஷ்ரீக்'கின் மத்திய நாளின் நள்ளிரவில் அகபாவில் (மீண்டும்) சந்திப்பது என்று வாக்களித்தார்கள்.

(அப்போது அந்த) முஸ்லிம்களுக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:- (அகபாவில் நாம் சந்திக்கும் போது) நீங்கள் அரைகுறை உறக்கத்தில் இருக்கக் கூடாது; (நான் பேசுவதை) மறைவிலிருந்து கவனிக்கக் கூடாது!

அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட குறிப்பிட்ட அந்நாளில் இரவின் மூன்றில் முதல் பகுதி கழிந்து விட்ட பின்னர் நள்ளிரவில், விவகாரம் வெளியே கசிந்து விடக் கூடாது என்பதால் அந்த முஸ்லிம்கள் அனைவரும் அரவமில்லாமல் இரகசியமாகச் சென்று அகபாவை அடைந்து மலையடிவாரத்தில் அமர்ந்து கொண்டார்கள். அவர்களுடன் (முன்னர் கூறிய ) இரண்டு பெண்களும் அமர்ந்து இருந்தார்கள்.

அவர்கள் அனைவரும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வருகையை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது சிறிய தந்தை அப்பாஸுடன் வந்தார்கள். அப்பாஸ் அப்போது முஸ்லிமாகி இருக்கவில்லை. தமது சகோதரரின் மகன் என்ற பாச உணர்வின் காரணமாகவே அவர் வந்திருந்தார். (அங்கு வந்தவுடன்) அவரே முதலில் பேசினார். அவர் கூறினார்:-

கஜ்ரஜ் கூட்டத்தினரே! முஹம்மத் எங்களிடம் எப்படி இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்தே இருக்கிறீர்கள்; எமது கூட்டத்தைச் சேர்ந்தோர் முஹம்மதுவுக்கு உதவியும் பாதுகாப்பும் அளிக்கின்றனர். எனவே (முஹம்மதாகிய) இவர் இவரது கூட்டத்தினரிடத்தில் கண்ணியமும் இவரது ஊரில் உதவியும் பாதுகாப்பும் பெற்றவராகவே இருக்கிறார்.

(இவருக்கு நாங்கள் பலவிதமான ஆலோசனைகளைச் சொன்னோம்.ஆனால் அவற்றையெல்லாம்) நிராகத்துவிட்டு உங்களோடு சேர்ந்து கொள்வதையும் உங்களைக் கண்காணித்து நிருவகித்து (இஸ்லாத்தின் போராளிகளாக) வளர்த்தெடுப்பதையும் தெரிவு செய்து கொண்டார்.

எனவே இவருக்கு நீங்கள் (தற்போது) அளிக்கும் வாக்குறுதிகளை (எப்போதும்) நிறைவேற்றுபவர்களாகவும் இவருக்கு எதிராகச் செயல்படுவோருக்கு எதிராக நீங்கள் இவருக்கு (எப்போதும்) உதவி புரிபவர்களாகவும் இருப்பீர்களானால் அது உங்களையும் நீங்கள் சுமந்திருப்பதையும் சார்ந்ததாகும்.

நீங்கள் இவரை விட்டு (இங்கிருந்து) வெளியேறிய பிறகு இவருக்கு அளிக்கும் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு மோசடி செய்வீர்களேயானால் (தற்போது இவருக்கு வாக்குறுதி எதுவும் அளிக்காமல்) இப்போதே இவரை விட்டுவிடுங்கள் என்று கூறினார்.

அப்பாஸுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த மக்கள் அவரிடம் கூறினார்கள்:- நீர் சொல்வதைக் கேட்டோம்; அல்லாஹ் (சுபு) வின் தூதரே, (இனி) நீங்கள் பேசுங்கள்; உமது 'ரப்'புக்கும் உமது ஆன்மாவுக்கும் விருப்பமானதை (எங்களிடமிருந்து) எடுத்துக் கொள்ளுங்கள்!

(அவர்கள் இவ்வாறு கூறிய பிறகு) அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் வசனங்களில் சிலவற்றை ஓதியும் இஸ்லாத்தின் பக்கம் ஆர்வத்தைத் தூண்டி எழுச்சியுரையாற்றிய பிறகும்
பேசத்தொடங்கினார்கள்:-

உங்களது பெண்களையும் குழந்தைகளையும் (எவையெல்லாம் தீண்டிவிடாமல் தடுத்துப் ) பாதுகாப்பீர்களோ அவையெல்லாம் (என்னைத் தீண்டிவிடாமல்) தடுத்து எனக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நான் உங்களிடம் பைஅத் (உறுதியேற்பு ஒப்பந்தம்) கோருகிறேன்.

(அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கோரிய) உடனே பராஉ (ரலி) அவர்கள் பைஅத் செய்வதற்காக (தனது கரத்தை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கரத்தை நோக்கி) நீட்டிச் சொன்னார்:-

அல்லாஹ் (சுபு) வின் தூதரே! (இதோ) எம்முடைய பைஅத்! அல்லாஹ் (சுபு) வின் மீது சத்தியமாக, நாங்கள் யுத்தத்தின் குழந்தைகள்; மேலும் 'ஹல்கா'வாசிகள்! யுத்தத்தையும் ஹல்காவையும் தலைமுறைத் தலைமுறையாக நாங்கள் வாரிசுரிமையாக விட்டுச் செல்வோம்!

பராஉ (ரலி) அவர்கள் தமது பேச்சை முடிப்பதற்குள்ளாக அபுல் ஹைதம் பின் தைஹான் (ரலி) அவர்கள் இடைமறித்துச் சொன்னார்கள்:-

அல்லாஹ் (சுபு) வின் தூதரே! எங்களுக்கும் சில மனிதர் (யூதர்) களுக்கும் இடையில் (சமாதான) ஒப்பந்தம் இருக்கிறது. அதை நாங்கள் இரத்துச் செய்து விடுகிறோம். அதை நாங்கள் இரத்துச் செய்து விட்ட நிலையில் அல்லாஹ் உங்களுக்கு வெற்றியளித்து உங்களது (குரைஷிக்) கூட்டத்தினரின் பக்கம் மீ (ண்டு சென்று அவர்களை ஆ) ள்வதற்கு உங்களுக்கு வாய்ப்பளித்தால் நீங்கள் எங்களைக் கைவிட்டு விடுவீர்களா?

(அபுல் ஹைதம் (ரலி) அவர்கள் இப்படிக் கேட்டவுடன்) அண்ணல் நபி (ஸல்) அவர்கள் புன்சிரிப்பை உதிர்த்துவிட்டுச் சொன்னார்கள்:-

இல்லை! இரத்தத்துக்கு இரத்தம்! அழிவுக்கு அழிவு! உங்களில் நான்! எம்மில் நீங்கள்! உங்களிடம் போர் புரிபவர்களை எதிர்த்து நான் போர் புரிவேன்! உங்களோடு உடன்படிக்கை செய்து கொள்வோருடன் நானும் உடன்படிக்கை செய்து கொள்வேன்!

(அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியவுடன் அவர்களிடம்) பைஅத் செய்வதற்காக அந்தக் கூட்டம் முண்டியடித்தது!

அந்தக் கூட்டத்தை இடை மறித்து அப்பாஸ் பின் உப்பாதா (ரலி) அவர்கள் சொன்னார்கள்:- 

கஜ்ரஜ் கூட்டத்தினரே! இவருக்கு பைஅத் செய்வதன் பொருளை (என்னவென்று) நீங்கள் அறிவீர்களா? (அதன் பொருள் என்னவென்றால்) கருப்பர்கள் மற்றும் சிவப்பர்களுக்கு எதிராக யுத்தம் புரிவதற்காக நீங்கள் இவருக்கு பைஅத் செய்து கொடுக்கிறீர்கள்! (என்று பொருளாகும். பைஅத்துக்குப் பிறகு அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் இணைந்து நீங்கள் நடத்தப் போகும் யுத்தங்களில்) உங்கள் பொருளாதாரம் அழிந்து போவதையும் உங்களின் சிறப்புமிக்க மனிதர்கள் கொல்லப்படுவதையும் நீங்கள் ஒரு பொருட்டாகக் கருதுவீர்களாயின் ( பைஅத் ஏதும் செய்து கொடுக்காமல்) இவரை விட்டு விடுங்கள்; அதை இப்பொழுதே செய்து விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்தால் அல்லாஹ் (சுபு) வின் மீது சத்தியமாக அது இவ்வுலகிற்கும் மறு உலகிற்குமான உங்களது பங்களிப்பாக அமையும்;

உங்கள் பொருளாதாரம் அழிவதைவிட, உங்களின் சிறப்புமிக்க மனிதர்கள் கொல்லப்படுவதைவிட இவருக்கு நீங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுதான் குறிக்கோள் எனக் கொள்வீராயின் இவரது (கரத்தை பைஅத் செய்வதற்காகப்) பிடித்துக் கொள்ளுங்கள்! அல்லாஹ் (சுபு) வின் மீது சத்தியமாக அது இவ்வுலகிலும் மறு உலகிலும் (உங்களுக்குச்) சிறந்ததாக அமையும்!

அப்பாஸ் பின் உப்பாதா (ரலி) அவர்களின் கூற்றுக்கு அந்தக் கூட்டம் பதிலளித்தது:-

எங்கள் பொருளாதாரம் அழிவதைவிட, எங்களது சிறப்புமிக்க மனிதர்கள் கொல்லப்படுவதைவிட (அண்ணல் நபி (ஸல்) அவர்களாகிய) இவர்களையே நாங்கள் பற்றிக் கொள்வோம்!

(இவ்வாறு கூறிவிட்டு) மேலும் அந்தக் கூட்டத்தினர் கேட்டார்கள்:- அல்லாஹ் (சுபு) வின் தூதரே! நாங்கள் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் எங்களுக்கு என்ன கிடைக்கும்?

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மன நிறைவு கொண்டவர்களாக அதற்கு பதிலளித்தார்கள்:- சொர்க்கம்!

(அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொர்க்கம் கிடைக்கும் என்று சொன்ன உடனே) அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பக்கம் அந்தக் கூட்டத்தினர் (பைஅத் செய்வதற்காக தங்களது கரங்களை) நெருக்கியடித்துக் கொண்டு நீட்டினார்கள்; அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்களின் புனிதக் கரத்தை விரித்தார்கள்; அந்தப் புனிதக் கரத்தைப் பற்றிக் கொண்டு அந்தக் கூட்டத்தினர் சொன்னார்கள்:-

எங்களுக்குச் சிரமமானவற்றிலும் எளிதானவற்றிலும் எங்களுக்கு மகிழ்ச்சியானவற்றிலும் வெறுப்பானவற்றிலும் எங்களுக்குப் பாதகமானவற்றிலும் அல்லாஹ் (சுபு) வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்க (ளின் கட்டளைக) ளுக்குச் செவியேற்போம்; கட்டுப்படுவோம்! மேலும் (அரசு நிருவாக) அதிகாரம் பெற்றுள்ளோரிடம் அதிகார (த்திற்காக) த் தர்க்கம் புரிய மாட்டோம் என்றும் நாங்கள் எங்கு இருப்பினும் சத்திய (மார்க்கமான இஸ்லா) த்தை (ப் பட்டவர்த்தனமாகக்) கூறுவோம் என்றும் அல்லாஹ் (சுபு) வினுடைய விசயத் (தைக் கூறுவ) தில் பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அஞ்சமாட்டோம் என்றும் பைஅத் செய்து கொடுத்தோம்!

பைஅத் செய்து முடிந்த பின்னர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-

உங்களிலிருந்து ஆற்றல்மிக்க 12 கண்காணிப்பாளர்களை எனக்குத் (தெரிவு செய்து) தாருங்கள்; அவர்களின் கூட்டத்தார்களிடத்தில் நிகழ்பவற்றிற்கு அவர்கள் பொறுப்பாளர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக!

அந்தக் கூட்டத்தினர் கஜ்ரஜிலிருந்து 9 நபர்களையும் அவ்ஸிலிருந்து 3 நபர்களையும் தேர்வு செய்தார்கள்; அந்தக் கண்காணிப்பாளர்களுக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- ஈஸா பின் மர்யம் (அலைஹிமஸ்ஸலாம் ) அவர்களுக்கு 'ஹவாரிய்யீன்கள்' பொறுப்பாளர்களாக இருந்ததைப்போல உங்களின் கூட்டத்தினரிடத்தில் நிகழும் விவகாரங்களுக்கு நீங்களே பொறுப்பாளர்கள்!

அந்தக் கண்காணிப்பாளர்கள் சொன்னார்கள்:- ஆம்!

பின்னர் அந்தக் கூட்டத்தினர் தங்களின் (தற்காலிகத்) தங்குமிடங்களுக்குச் சென்று (சிறிது நேரம் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அதன்) பின்னர் வாகனங்களில் பயணித்து மதீனா திரும்பினார்கள்.

இந்நிகழ்வுக்குப் பிறகு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (பெருங்கூட்டமாகச் செல்லாமல்) தனித்தனியாகப் பிரிந்து (இரகசியமாக) வெளியேறி மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றுவிடுமாறு முஸ்லிம்களுக்கு உத்தரவிட்டார்கள். முஸ்லிம்கள் தனி நபர்களாகவும் ஓரிருவர் இணைந்தும் (இரகசியமாக) ஹிஜ்ரத் செல்லத் தொடங்கினார்கள்.

No comments:

Post a Comment